May 10, 2016

பிடிப்பு

சபரிநாதனுக்கு மூன்றரை வயதாகிறது. அவனுடைய அப்பா உதவி இயக்குநராக இருக்கிறார். தர்மபுரிக்காரர். எதிர்காலக் கேமிரா கனவுகளோடு சென்னையில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களில் இவரும் ஒருவர். சொற்ப வருமானம். அவருடைய முதல் குழந்தைதான் சபரிநாதன். 

குழந்தைக்கு ஆரம்பத்திலிருந்தே நிறையக் குறைபாடுகள். சுற்றிலும் நடப்பதைச் சரியாக கவனிப்பதில்லை. உன்னிப்பாகப் பார்ப்பதில்லை. பேசுவதில்லை என்று வரிசையாகச் சேர்ந்திருக்கிறது. மருத்துவர்களிடம் காட்டியிருக்கிறார்கள். குழந்தைக்கு மையோபதி என்று சொல்லியிருக்கிறார்கள். தசை நார்களில் ஏற்படும் குறைபாடு இது.

கிட்டத்தட்ட 65% உடல் ஊனம் எனச் சான்று அளித்திருக்கிறார்கள். குழந்தையால் நடக்க முடியாது. படுக்கையைவிட்டு நகர முடியாது. பார்வைக் குறைபாடும் இருக்கிறது.இதுவரை வீட்டிலேயே வைத்து பாதுகாத்திருக்கிறார்கள். முன்னேற்றம் எதுவுமில்லை. அரசு மருத்துவமனைகளில் இருக்கக் கூடிய குறைந்தபட்ச வசதிகள்தான் இதுவரைக்கும் குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறது. யாரோ திருநெல்வேலியில் உள்ள மையோபதி காப்பகம் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். குழந்தையை எடுத்துச் சென்று காட்டிய பிறகு சிகிச்சைக்கான வழிமுறைகளை காப்பகத்தில் விளக்கியிருக்கிறார்கள். ஆறு மாத சிகிச்சை அது. அறை வாடகை, சிகிச்சைச் செலவு என எல்லாமும் சேர்த்து அறுபத்தெட்டாயிரம் ரூபாய் ஆகும்.

ஜீவகரிகாலனும், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனும்தான் விமல் பற்றியும் அவரது குழந்தை பற்றியும் சொன்னார்கள். விமல் முதன் முறையாக வந்து பார்த்த போது குழந்தையின் அனைத்து மருத்துவ ஆவணங்களையும் எடுத்து வந்திருந்தார். விசாரித்துவிட்டு உதவுகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு வாரம் அவகாசம் கேட்டிருந்தேன். தகவல்களைச் சேர்க்க மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. கடந்த சனிக்கிழமையன்றுதான் சந்திக்க முடிந்தது. 

‘உங்களால் எவ்வளவு சமாளிக்க முடியும்?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டேன். அவர் வெளிப்படையாகக் கேட்கவேயில்லை. 

‘எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுங்க..மிச்சத்தை என் உயிரைக் கொடுத்தாவது புரட்டிவிடுவேன்’ என்றார். கிட்டத்தட்ட பெரும்பாலான பயனாளிகள் இப்படித்தான் சொல்கிறார்கள்.

திருநெல்வேலியில் இயங்கும் மையோபதி காப்பகம் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் இதைத் தவிர பெரிய மாற்றுவழிகள் இல்லை போலிருக்கிறது- அதுவும் விமலின் வருமானத்திற்குட்பட்டு. மாதம் ஏழு அல்லது எட்டாயிரம் ரூபாய் வரைக்கும் விமல் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு அல்லது மூன்றாயிரம் ரூபாயை குழந்தைக்காக ஒதுக்க முடியும் என்றார். மேலும் தேவைப்படுகிற பணத்தை நண்பர்கள் மூலமாகக் கடனாகப் பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை இருப்பதாகச் சொன்னார்.


நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து முப்பதாயிரம் ரூபாய்க்கு காசோலையைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜூன் மாதத்திலிருந்து சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள். இன்னுமொரு முப்பத்தெட்டாயிரம் ரூபாயை அவர் சமாளித்துக் கொள்ள வேண்டியிருக்கும். டிஸ்கவரி புக் பேலஸ் கடைக்கு வரச் சொல்லி வேடியப்பன் மூலமாக காசோலையை வழங்கினோம். 

‘மீதத் தொகையை சமாளித்துக் கொள்ள முடியுமா?’ என்ற போது ‘முடியும்’ என்றார். 

விமலின் இரண்டாவது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. ‘மூத்தவனை எப்படியாவது காப்பாத்திடணும் சார்’ என்பதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். காசோலையைக் கொடுத்துவிட்டு  ‘ஒண்ணும் பயப்படாதீங்க’ என்றேன். மூன்றரை வயதுக் குழந்தை அது. எப்படியாவது சுயமாக இயங்கும்படி செய்துவிட்டாலும் கூட போதும். அதைச் செய்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. விமலும் அதையேதான் சொன்னார்.

‘இவன் இந்த வலியைத் தாங்கிக் கொள்வான் என்றுதான் நமக்கான வலிகளும் துன்பங்களும் வந்து சேர்கின்றன. அதனால் நம்முடைய எந்தவொரு சுமையையும் நம்மால் சமாளித்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை மட்டும் தளரவிடவே கூடாது. எவ்வளவு பெரிய இக்கட்டிலும் அந்த நம்பிக்கை மட்டும்தான் நமக்கான ஒரே பிடிப்பு’ - இதைத்தான் விமலிடம் சொன்னேன். குடும்பத்தின் பெரும் வலியைத் தனது தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு சிரிக்கிற எந்தவொரு மனிதனுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும் என நம்புகிறேன். 

2 எதிர் சப்தங்கள்:

Unknown said...

I think the Myopathy clinic in Tirunelveli dist is the below


"Mayopathy Unit of Jeevan Foundation, the Institute for Muscular Dystrophy & Research Center was established in 2010. It is a non-profit organization registered under the Tamil Nadu Trust Act. Located amidst a serene and soothing environment in Veeravanallur, a small hamlet in Tiruvelneli district of Tamil Nadu makes the work more encouraging and inspiring."

http://www.jeevanfoundation.com/mayopathy/

SiSulthan said...

திருநெல்வேலி மயோபதி சிகிச்சை நிலையம் நம்பிக்கையானது. ஓரளவு நல்ல பன் தரும் மாற்று சிகிச்சை.