May 27, 2016

மூன்றாம் நதி - முதல் விமர்சனம்

வணக்கம்.

நான் அப்செரன் ஃபெர்ணாண்டோ. சென்னையிலிருந்து எழுதுகிறேன். அமேசான் நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்க மையத்தில் வேலையில் இருக்கிறேன்.

எனக்கு பார்வை இல்லை. 

சில மாதங்களுக்கு முன்பாக திருப்பதி மகேஷ் மூலமாக நிசப்தம் அறிமுகமானது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரைக்கும் நிசப்தம் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அதன் வழியாக உங்களின் முதல் நாவலும் அதே சமயத்தில் மிகச் சிறந்த நாவலுமான மூன்றாம் நதியின் ஒலி வடிவத்தை அழகான வெகுமதியாகக் கிடைக்கப்பெற்றிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். நாவலை எங்களுக்கு ஏற்ற வடிவில் வழங்கியதற்காக மனப்பூர்வமான நன்றி. ஒலிவடிவமானது துல்லியமாகப் புரிந்து கொள்ளுகிற வகையில் இருக்கிறது.

இத்தகையதொரு முன் முயற்சிக்காக நன்றி. இதை நீங்கள் தொடர வேண்டும். ஏனென்றால் உங்களுக்கும் உங்களுடைய எழுத்துக்களுக்காகவும் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று உறுதியாகச் சொல்வேன்.

நாவல் பற்றியதொரு சிறு குறிப்பு :

மூன்றாம் நதி உண்மையிலேயே மனதைத் தொடுகிற நாவலாக இருக்கிறது. நாவல் எங்கு எப்படித் தொடங்குகிறதோ அங்கு அப்படியே முடிவதை இந்த நாவலில் நான் விரும்பும் அற்புதமான அம்சமென்று சொல்வேன். உங்களின் கதை சொல்லும் உத்தியானது நேரடியாகவும் இலக்கியப் பூர்வமாகவும் ஏகப்பட்ட விவரங்களை நாவல் நெடுகவும் அவிழ்க்கிறது. நாவலின் வழியாக பெங்களூரின் இன்னொரு முகத்தைப் பார்க்க முடிந்தது. தங்களின் அட்டகாசமான வர்ணனையானது தொண்ணூறுகளின் பெங்களூரை முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

நவீனத்துக்கும் பழமைக்கும் இடையில் தள்ளாடுகிற தலைமுறையின் கச்சிதமான உதாரணமாக பவானி இருக்கிறாள். பணத்துக்கும் நிலத்துக்குமான அடிமைத்தனத்தை பால்காரர் காட்டுகிறார். தனது பழைய காதலைப் பற்றி கணவனிடம் சொல்லுமிடத்தில் ‘சும்மா வெளியே கூட்டிட்டு போயிருக்கான். முத்தம் கொடுத்திருக்கான். அவ்வளவுதான்’ என்று பவானி சொல்லுமிடத்தை ரசித்தேன். எதையெல்லாம் கலாச்சாரம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோமோ அதை நாகரிகமும் வளர்ச்சியும் வெகு இயல்பாக மென்று துப்பிவிடுகிறது.

Totally மூன்றாம் நதி stream of tears!

நன்றி.

அன்புடன்,
அப்செரன் ஃபெர்ணாண்டோ.


அன்புள்ள அப்சரென்,

வணக்கம்.

நாவலுக்கான ஒலி வடிவம் தேவை என்பது திருப்பதி மகேஷின் எண்ணம். அதை ஒலிக்கோப்பாக மாற்றிக் கொடுத்ததும் அவர்தான். அவருக்குத்தான் நன்றி உரித்தாகும்.

என்னுடைய முதல் நாவல் இது. வெளியான பிறகு நாவலுக்கான முதல் விமர்சனம் உங்களுடையது. இதை மிகச் சிறப்பான பரிசாக உணர்கிறேன். எந்தப் பரிசுகளையும் விடவும் முகம் தெரியாதவர்கள் வாசித்துவிட்டு எழுதுகிற கடிதங்கள்தான் வெகுமதி என்பது வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை. வெயில் காய்ந்த பகலொன்றின் மாலையில் விசிறியடிக்கும் சாரலுடன் கூடிய மழையைப் போல இந்தச் சிறுகுறிப்பை உணர்கிறேன். மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

நிச்சயமாக முந்தைய புத்தகங்களை ஒலி வடிவில் மாற்றுவதற்கான முயற்சிகளைச் செய்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள். தொடர்பிலும் இருங்கள். ஒரு நாள் நேரில் சந்தித்து பேசுவோம்.

மிக்க அன்புடன்,
மணிகண்டன். 

0 எதிர் சப்தங்கள்: