May 27, 2016

பள்ளி- இணையம்

நேற்று ஒரு ப்ளஸ் டூ முடித்த மாணவியிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. தஞ்சைக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தை சார்ந்தவர். கட்-ஆஃப் நூற்று அறுபது சொச்சம். தாழ்த்தப்பட்ட பிரிவு. எம்.பி.பி.எஸ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பேசினார். இந்த மதிப்பெண்ணுக்கு மருத்துவப்படிப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் நேரடியாகச் சொன்னால் வருத்தப்பட வைத்துவிட்ட மாதிரி ஆகிவிடும். ‘போன வருஷம் கட்-ஆஃப் எல்லாம் பார்த்தியாம்மா?’ என்ற போது ‘150க்கே கிடைச்சதுன்னு சொன்னாங்க சார்’ என்றார். அவசர அவசரமாக இணையத்தில் தேடினால் அப்படியெல்லாம் எதுவுமில்லை. எஸ்.சி பிரிவு மாணவர்கள் என்றாலும் கூட மருத்துவப்படிப்பில் சேர 190க்கு மேலாக தேவைப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணிடம் தவறான தகவலை யாரோ சொல்லி தவறான நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்தவுடன் சிறிய அளவிலான ஒரு ஆய்வைச் செய்து பார்ப்பது வழக்கம். நமக்கு எந்தப் பலனுமில்லையென்றாலும் இப்படியான மாணவர்கள் யாராவது பேசினால் அவர்களிடம் பேசுவதற்கு பயன்படும். இப்படியெல்லாம் அளப்பதனால் வருடாவருடம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் என்னிடம் பேசுவதாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. சராசரியாக ஆறே முக்கால் மாணவர்கள். முக்கால் என்பது மாணவர் அல்லது மாணவியின் சார்பாக அம்மாவோ அப்பாவோ பேசுவது. 

தமிழகம் முழுவதுமே, குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடம் கல்லூரிகள் மற்றும் படிப்புகள் குறித்தான புரிதல்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றுக்கும் உதவாத கல்லூரிகளில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமப்புற மாணவர்களுடன் ஒப்பிடும் போது நகர்ப்புற மாணவர்கள் சில படிகள் மேலே நிற்கிறார்கள். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே அவர்களுக்கு இணையத்தில் புழக்கமிருக்கிறது. தகவல்களைச் சேகரித்துவிடுகிறார்கள். கிராமப்புற மாணவர்களின் நிலைமைதான் சிரமம். ‘நான் சில படிப்பெல்லாம் சொல்லுறேன். நெட் வசதி இருந்தா அது பத்தி கொஞ்சம் தேடிப் பார்க்கிறியா?’ என்ற கேள்வியை அந்தப் பெண்ணிடம் கேட்ட போது பக்கத்திலிருக்கும் ப்ரவுசிங் செண்டருக்குச் சென்று அங்கே இருப்பவர்களின் உதவியுடன் விசாரிப்பதாகச் சொன்னாள். அதெல்லாம் சரிப்பட்டு வராது. நாமாகவே அமர்ந்து தேட வேண்டும்.

பெண்ணுக்கு கணிதத்தில் ஆர்வமில்லை. கணிதம் இல்லாத பாடங்களாக யோசித்துக் கொண்டிருக்கிறாள். கணிதத்தை உள்ளடக்கிய பொறியியல், இளங்கலை கணிதம், வேதியியல் போன்ற படிப்புகள் மீது விருப்பமில்லை என்றால் உயிரியல் சம்பந்தப்பட்ட படிப்புகள் என்னென்ன இருக்கின்றன என்று மாணவராகவே அலச வேண்டும். முடிவெடுக்க வேண்டுமானால் மற்றவர்கள் உதவலாமே தவிர அலசுகிற வேலையை அவர்கள்தான் செய்ய வேண்டும். 

மருத்துவம், விவசாயம் தவிர மற்ற படிப்புகளைப் பற்றிய விவரங்கள் அவளிடமில்லை. அத்தகைய படிப்புகள் நிறைய இருக்கின்றன. மீன்வளத்துறை சம்பந்தமான படிப்புகள், வனத்துறை சம்பந்தமான படிப்புகள் என்று கணிதத்தைச் சேர்க்காத பாடப்பிரிவுகள் நிறைய உண்டு. விவசாயக் கல்லூரியில் சேர்வதாக இருந்தாலும் கூட பி.எஸ்.சி அக்ரி மட்டும்தான் படிப்பு என்றில்லை- உணவு பதப்படுத்துதலில் ஆரம்பித்து பட்டு வளர்ப்பு, தேனி வளர்ப்பு என்று சகட்டு மேனிக்கு இருக்கின்றன. அரசாங்க வேலை வாய்ப்புகள் நிறைந்த துறையாக தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். அலசுவதற்கென நிறைய படிப்புகள் இருக்கின்றனதான். ஆனால் விண்ணப்ப விநியோகம் பல கல்லூரிகளில் கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்தை நெருக்கிக் கொண்டிருக்கின்றன. அலசி ஆராய்ந்து கொண்டிருக்க நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.

மருத்துவம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கடுத்து கால்நடை மருத்துவம், பல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா? இல்லையென்றால் அடுத்தது என்ன படிப்பு என்கிற தெளிவை பள்ளிகளும் ஆசிரியர்களும்தான் உருவாக்க வேண்டும். முடியாத காரியமாகவெல்லாம் தெரியவில்லை. மேல்நிலைப்பள்ளிகளில் இணைய வசதியை உருவாக்கிக் கொடுப்பது முதல் படியாக இருக்கும். ப்ளஸ் ஒன்  மற்றும் ப்ளஸ் டூ படிக்கும் சமயத்தில் வாரத்தில் ஒரு மணி நேரம் இணையத்தைப் பயன்படுத்துகிற வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்து எப்படி இணையத்தில் மேய்வது என்பதைக் கற்றுக் கொடுத்துவிட்டால் மாணவர்கள் தேடத் தொடங்குவார்கள். அவர்களுக்காக விவாதிப்பார்கள். குறைந்தபட்சமான புரிதல் இருந்தாலும் கூட போதும். தமிழகத்தின் உட்புறங்கள் அந்தளவிற்கான புரிதல் கூட இல்லை என்பதுதான் அவலநிலை. 

ஆறு மாதத்திற்கு முன்பாகவே எத்தனை மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரி கிடைக்கும் என்கிற புரிதலில் இருக்கும் மாணவர்களுக்கு முடிவு வந்த பிறகும் கூட தமக்கு எம்.பி.பி.எஸ் கிடைத்துவிடும் என்கிற தவறான நம்பிக்கையில் இருக்க வாய்ப்பில்லை. தயாராகிக் கொள்வார்கள். கிராமப்புற மாணவர்களை நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனி மருத்துவத்திற்கு தேசிய அளவிலான தேர்வு வரப்போகிறது. பொறியியல் படிப்புக்கும் வராது என்று சொல்ல முடியாது. அப்படி தேசிய அளவிலான தேர்வுகள் என்கிற சூழல் வந்துவிட்டால் வெறும் படிப்பை மட்டுமே வைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாது. மாணவர்களுக்குத் தகவல்கள் தேவை. விவரங்கள் அவசியம். இணையம் மட்டுமே ஒரே வாய்ப்பு. அதைச் சரியாக அமைத்துக் கொடுக்கிற பணியை புதிய அரசு மேற்கொள்ளும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம். ஏமாந்தால் தமிழகம் கல்வியில் படுகுழியில் விழுந்துவிடும்.

சில பெற்றோர்கள் கூட பேசுகிற போது தங்களுக்கு எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவு கிடைக்கும் என்கிற குழப்பம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு பெரியதாக குழம்பத் தேவையில்லை. கடந்த ஆண்டு ஒவ்வொரு பாடத்திலும் நூறு மதிப்பெண்கள் எத்தனை மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் தோராயமான முடிவுக்கு வந்துவிடலாம். 

2015 ஆம் ஆண்டு இயற்பியலில் இருநூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் 124 பேர். இப்பொழுது அந்த எண்ணிக்கை 5 ஆகக் குறைந்திருக்கிறது. கணிதத்தில் கடந்த ஆண்டு 9710 பேர் இருநூறுக்கு இருநூறு. இந்த ஆண்டு 3,361 பேர். ஆக, இந்த இரண்டு பாடங்களும் இந்த ஆண்டு கடினமானதாக இருந்திருக்கிறது. வேதியியலிலும் உயிரியலிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இருநூறு மதிப்பெண்கள் வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அவை மிகப்பெரிய வித்தியாசமில்லை. அதனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த ஆண்டு கட் ஆஃப் குறைவதற்கான நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த ஆண்டு 165 மதிப்பெண்ணுக்குக் கிடைத்த கல்லூரியும் பாடப்பிரிவும் இந்த ஆண்டு 162 மதிப்பெண்ணுக்கே கிடைக்கலாம். கடந்த ஆண்டு 162 மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது என்று தேடலாம். இப்படியானதொரு சிறு அலசலைச் செய்தால் நம்முடைய மதிப்பெண்ணுக்கு என்ன கல்லூரி, பாடப்பிரிவு கிடைக்கும் என்கிற உத்தேசமான முடிவுக்கு வந்துவிடலாம். அதன் பிறகு பாதிக் குழப்பம் தெளிந்துவிடும். 

1 எதிர் சப்தங்கள்:

ABELIA said...

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க...கிராம்புற மாணவர்களுக்கு இணையத்தில் மேயவும் கற்றுக்கொடுக்க வேண்டும். அதன் மூலம் நிறைய அப்பாவி மாணவர்களின் நம்பிக்கை வலுப்படும்.