May 29, 2016

சென்னையில் ஒரு நாள்

நேற்று சென்னை கே.கே.நகர் பகுதியில் சுற்றுகிற வேலை. சாலிக்கிராமம், வடபழனி எனப் பரவலாக. நாய்க்கு வேலையும் இல்லை ஆனால் நிற்க நேரமுமில்லை என்பார்கள். அப்படித்தான். மாலை நான்கு மணிக்கெல்லாம் வந்த வேலை முடிந்துவிட்டது. பக்கத்திலயேதான் டிஸ்கவரி புக் பேலஸ். ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்ற போது ஜீவகரிகாலனும் வேடியப்பனும் ஏதோ திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். கரிகாலன் சிக்கினால் ஒரு நல்ல ஓட்டுநர் சிக்கிய மாதிரி. பைக்கின் பின்பக்கமாக அமர்ந்து எங்கே செல்லச் சொன்னாலும் சொல்வார். அவர் கணையாழியின் துணை ஆசிரியராக இருக்கிறார். கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் சென்னைப் பிரிவையும் சமாளித்துக் கொள்கிறார். ‘கணையாழியில் தொகுப்பு புத்தகங்கள் கொண்டு வர்றோம். நானூறு பக்கத்துல ஒரு புஸ்தகம். ப்ரூப் பார்க்கணுங்க’ என்றார். ‘வந்து பார்த்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டு பைக்கில் ஏறிக் கொண்டேன்.

உமாபதி அரங்கம்தான் முதல் இலக்கு. காலச்சுவடு புத்தக வெளியீடு. சல்மா, தேவிபாரதி, யுவன் சந்திரசேகர் என்று நான்கைந்து எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. எல்லோரையும் விட அசோகமித்திரன் வருகிறார். அவர் பேசுவதைக் கேட்க வேண்டும். பக்கத்தில் அமர்ந்திருந்த கார்ட்டூனிஸ்ட் பாலா அ.மி பேசுவதையும் அவரது உடல்மொழியையும் பார்த்துவிட்டு ‘ஒரு குழந்தை மாதிரியே தெரியுதுல்ல’ என்றார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. வயது ஏற ஏற குழந்தைகளாக மாறிக் கொண்டேயிருக்கிறோம். பக்குவமிக்க குழந்தைகளைக் கொஞ்சத் தோன்றுகிறது. மற்ற குழந்தைகள் குறும்பு செய்கிறார்கள். அசோகமித்திரன் கொஞ்சத் தோன்றுகிற குழந்தை. தொடக்கத்திலிருந்து இன்று வரை அவர் எழுதிய இருநூற்று சொச்சம் சிறுகதைகளையும் சேர்த்து ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். 1450 ரூபாய். வெளியீட்டு அரங்கில் தொள்ளாயிரத்து ஐம்பது ரூபாய்தான். ஆனால் ஐநூறு ரூபாய்தான் கையில் இருந்தது. கரிகாலனிடம் கேட்டேன். ‘நூறு ரூபாய்தாங்க இருக்கு’ என்றார். இந்த ஆளை எல்லாம் பதிப்பாளராக வைத்துக் கொண்டு என்ன செய்வது?

மீண்டும் திரும்பி வந்த போது டிஸ்கவரியில் உமா மோகனின் கவிதைத் தொகுப்பு வெளியீடு. இரண்டு அரங்கிலும் சுமாரான கூட்டம்தான். வாசகசாலை என்ற அமைப்பினர் ஒரு நாள் கருத்தரங்கை நேற்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே நல்ல கூட்டம் என்றார்கள். இத்தகைய புத்தகம், வாசிப்பு சம்பந்தமான கூட்டங்களுக்குச் செல்கிறவர்களை சென்னை முழுக்கவும் கணக்கெடுத்தால் இருநூற்று முப்பது நான்கு பேர்கள் இருக்கக் கூடும். ஒரே நாளில் இத்தனை கூட்டங்களை நடத்தினால் அவர்கள் எங்கேதான் போவார்கள்? இன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட நூற்று பதினேழு கூட்டங்கள் நடைபெறும் போலிருக்கிறது. யார் மெஜாரிட்டி வாங்குவார்கள் என்று தெரியவில்லை. மாலையில் நேரமிருந்தால் குருநாதரின் புத்தக வெளியீட்டுக்குச் செல்லலாம் என்றிருக்கிறேன். மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் 5.30 மணிக்கு கவிதைத் தொகுப்பை வெளியிடுகிறார்கள். ‘இன்னைக்கு என்ன ப்ளான்’ என்று கரிகாலனுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறேன். பதிலையே காணோம். எப்படி அனுப்புவார்?

நேற்று மதியத்திலிருந்து சாப்பிடவே இல்லையாம். மாலையில் ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு எதிரில் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அயோக்கியப்பயல்கள் ஒரு கொத்து புரோட்டாவை நூற்று இருபது ரூபாய்க்கு விற்கிறார்கள். வயிற்றில் ஒட்டுமா? சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ‘ஏங்க நான் கிளம்பட்டுமா?’ என்றார். அதுக்கு மேலாக பிடித்து வைத்திருந்தால் கணையாழி பாவம் பிடித்துக் கொள்ளும். தனிமரம் ஆகியாகிவிட்டது. நள்ளிரவு வரை காலத்தை ஓட்டியாக வேண்டும். ஏதாவது திரையரங்கு பக்கத்தில் இருக்குமா என்று துழாவியதில்தான் மேற்சொன்ன நகர்வலம். கமலா தியேட்டரில் டிக்கெட் இல்லை. பங்கஜம் தியேட்டரில் காட்சி இல்லை. ஏவிஎம்மில் ‘கத சொல்லப் போறோம்’ என்ற படம் ஓடிக் கொண்டிருந்தது. அதுக்கு ஒரு அக்கப்போர். வெளியில் ஆட்டோவில் அமர்ந்திருந்தவனிடம் ‘அண்ணா இங்க எத்தன ஸ்கீரின் இருக்கு?’ என்றதற்கு- அவன் என்ன கடுப்பில் இருந்தானோ- முறைத்துப் பார்த்துவிட்டு - தெரியாது என்றான்.

உள்ளே கேண்டீனில் இருந்தவரிடம் ‘சார் என்ன படம் ஓடுது?’ என்றேன். ‘உங்களுக்கு என்ன படம் வேணும்?’ என்றார். லோலாயம் பிடித்த மனுஷன். 

‘இறைவி’

‘அது ஜூன் 3 தான் ரிலீஸ்’

‘இது நம்ம ஆளு’

‘இங்க ஓடல’

‘இங்க என்ன படம் ஓடுது சார்?’

‘உங்களுக்கு என்ன படம் வேணும்?’ மறுபடியும் அதே கேள்வி அதே பதில்.

‘அடேய்ய்ய்ய்’ என்று நினைத்துக் கொண்டேன். அமைதியாகிவிட்டேன்.

‘அதான் வெளியே அம்மாம்பெரிய பேனர் இருக்குல்ல?’ என்றார். ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகள் இருக்கக் கூடும் என்று நினைத்தது அவ்வளவு பெரிய தவறா? ‘நான் படமே பார்க்கலை விடுங்க’ என்று திரும்பினேன். என்னவோ சத்தம் போட்டார். நான் கிளம்பி வந்துவிட்டேன்.  சென்னையில் நூறு ரூபாய் இருந்தால் படம் பார்த்துவிட முடிகிறது. பெங்களூரில் அநியாயக் கொள்ளை. ஏவிஎம்மில் கூட ஐம்பது ரூபாய்தான் விலை. ஆனால் கேண்டீன்காரர் சங்காத்தத்தில் தவறிவிட்டது.

வேறு என்னதான் செய்வது?

ஏ.வி.எம்மில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நான்கைந்து கேரவேன்கள் நின்று கொண்டிருந்தன. ஒரு காலத்தில் ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கள் ஊரில் கேரவேனை எல்லாம் பார்த்ததில்லை. கவுண்டமணி, சத்யராஜ் எல்லாம் சீட்டு ஆடிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். முரளி, பார்த்திபன் மாதிரியானவர்கள் கடலை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். காற்றாட அமர்ந்திருப்பார்கள். இங்கேதான் கேரவேன். ஒருவேளை அங்கேயும் இந்தக் காலத்தில் ஷூட்டிங் நடந்தால் இப்படித்தான் இருக்குமோ என்னவோ? ஒரு ஷாட் முடிந்ததும் உள்ளே வந்து புகுந்து கொள்கிறார்கள். நான்கைந்து வண்டிகள் நின்று கொண்டிருந்தன. நடிகனுக்கு ஒன்று, நடிகைக்கு ஒன்று- அப்புறம் இரண்டு பேருக்கும் சேர்ந்து ஒன்றிரண்டு போலிருக்கிறது. உள்ளே ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ- எந்திரம் முறைந்து கொண்டேயிருக்கிறது. அத்தனைக்கும் சேர்த்து ஜெனரேட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது. டீசல், புகை, சத்தம். மார்கெட் இல்லாத நடிகன் என்கிறார்கள். அவரே கூட வெளியில் அமர மாட்டாராம். அவ்வளவு அதுப்பு.

என்ன இருந்தாலும் சினிமாக்காரன் சினிமாக்காரன்தான். பத்து மணி வரைக்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வேணி அழைத்தாள். சொன்னேன். ‘வெட்கமா இல்லையாங்க? அவங்களை வாயைத் திறந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?’ என்றாள். ‘இன்னும் ஒரு நடிகையும் வெளியில் வரலை’ என்றேன். ‘த்தூ’ என்றாள்.

‘உனக்கு தெரியுமா? அண்ணாவுக்கும் பத்மினிக்கும் தொடர்பு இருக்கான்னு யாரோ விசாரிச்ச போது நான் முற்றும் துணிந்த முனிவனும் இல்லை அவர் படிதாண்டா பத்தினியும் இல்லைன்னு சொன்னாராம்’ என்றேன். அந்த நேரத்தில் அந்த டயலாக் தேவையில்லைதான். உண்மையாகவே அண்ணா சொன்னதா என்றும் தெரியாது. அந்தச் சமயத்தில் மனதில் தோன்றியது. சொல்லிவிட்டேன்.  

‘அண்ணாதுரை சம்சாரத்து பேரு என்ன?’ என்றாள்.

‘ராணி’

‘ராணி பத்தி எனக்குத் தெரியாது; ஆனா வேணி பத்தி உங்களுக்குத் தெரியும்ல’ என்றாள். இவள் எல்லாம் பஞ்ச் வசனம் பேசுகிறாள். அதற்கு மேல் என்ன பேசுவது? அமைதியாகிக் கொண்டேன். திங்கட்கிழமை காலையில் ஊருக்கு போகும் போது சுனாமி வராமல் இருக்கக் கடவது என்று காளியம்மனை வேண்டிக் கொள்கிறேன்.

2 எதிர் சப்தங்கள்:

ilavalhariharan said...

அது பத்மினி இல்லை.....பானுமதி என்று தான் கேள்வி....இதுக்கெல்லாம் ப்ருப்ப் வேணுமா ன்னு கேக்கறதுஂகாதில் விழுதே..

Sindhai said...

அண்ணா பத்மினி கிசுகிசு இல்ல சார் அது... அண்ணா பானுமதி கிசுகிசு