May 27, 2016

ஒருத்தி

ஒருத்தி. ஒருத்திதான். அவளுக்கு பெயர்தான் குறைச்சலா? வெங்காயம். ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு அழைத்திருந்தாள். வீடு வாங்கியிருப்பதாகவும் அலுவலகத்தில் தன்னை வேலையைவிட்டு அனுப்பிவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அழுதாள். பொண்ணு அழுதால்தான் நெஞ்சு உருகிவிடுமே. நெஞ்சுதான். ‘இதுக்கெல்லாம் அழுவாத..நான் ஆச்சு..ரெஸ்யூம் அனுப்பு’ என்று கேட்டிருந்தேன். உண்மையிலேயே பரிதாபமாகத்தான் இருந்தது. யாராவது உதவி என்று கேட்டால் பணம் கூட கொடுத்துவிடலாம். சிரமமில்லை. ஆனால் வேலை வாங்கிக் கொடுக்கிற வேலை இருக்கிறது பாருங்கள்- படு  மொக்கை. ‘எங்க கம்பெனியில ஃப்ரெஷர்ஸ் எடுக்கறதே இல்லை’ என்பார்கள். ‘அந்த டொமைன்ல ஓப்பனிங் இல்லை..வந்தா சொல்லுறேன்’ என்பார்கள். 'Hiring freeze' என்பார்கள். இப்படி ஏதாவதொரு காரணம் இருக்கும்.

அவளுடைய விவரங்களை நான்கைந்து பேர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். ஒவ்வொருத்தராகக் கழித்துக் கட்டிக் கொண்டே வர இவள் அவ்வப்போது அழைத்து ‘ஏதாச்சும் கிடைச்சுதா?’ என்பாள். வீட்டில் இருக்கும் போது பெண்களிடமிருந்து அழைப்பு வந்தால் எனக்கு கை கால் உதறல் எடுத்துவிடும். ஒன்றும் தப்புத் தண்டா இல்லைதான் என்றாலும் உள்துறை அமைச்சரிடமிருந்து நூறு கேள்விகள் வரும். நூற்றியெட்டு துணைக்கேள்விகள் வரும். ஒரு பதிலோடு இன்னொரு பதில் சிக்கிக் கொள்ளாமல் பிசிறடிக்காமல் அதிகபட்ச கவனத்தோடு பதில் சொல்ல வேண்டும். எவனால் ஆகும்? அதனால் பெண்களின் பெயர் அலைபேசியில் மின்னும் போதே ‘அது ஏதோ வெட்டி நெம்பர்’ என்று சொல்லிவிட்டு கவனத்தைச் சிதறடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அப்பேர்ப்பட்ட நெருப்புக் குழிக்குள் நின்றுதான் அவளுக்கு ஒன்றிரண்டு முறை பதில் சொன்னேன். பதில் சொல்லாமல் விட்டு தனக்கு வேலை கிடைக்காத விரக்தியில் செத்துத் தொலைந்துவிடுவாளோ என்றுதான் அவளிடம் பேசினேன் என்று சொன்னால் மட்டும் நம்பவா போகிறீர்கள்? ‘கடலை போட்டேன்னு உண்மையை ஒத்துக்கோ’ என்று யாராவது கேட்பீர்கள். அப்படியே இருக்கட்டும்.

‘நாலஞ்சு பேர்கிட்ட சொல்லிட்டேன்..ஒருத்தனும் மதிக்க மாட்டேங்குறான்’ என்று சொல்லிவிட்டு அதுவரை பதில் சொல்லாத ஒன்றிரண்டு பேரை அழைத்து ‘ஏம்ப்பா அந்தப் பொண்ணுக்கு ஏதாச்சும் வேலை கிடைக்குமா’ என்று கேட்டால் ‘இவன் ஏன் இவ்வளவு பறக்கிறான்? ஒருவேளை சின்ன வீடா இருக்குமோ’ என்கிற கோணத்திலேயே பார்த்துக் கடுப்பேற்றுவார்கள். கடைசியில் பசவராஜ் மிஞ்சினார். நல்ல மனுஷன். மேலாளரிடம் பேசி, இயக்குநரிடம் பேசி ஒரு வழியாக சமாளித்து வைத்திருந்தார். 

கடைசியாகத்தான் ‘அந்தப் பொண்ணுக்கு என்ன பிரச்சினை?’ என்றார். 

‘வீட்டில் கடன் ஆகிடுச்சாம்...வேலையை விட்டு அனுப்பிடுவாங்க போலிருக்கு..அதான் வேற வேலையை வாங்கிட்டா தப்பிச்சுடலாம்ன்னு நினைக்கிறாள்’ என்றேன். 

‘புருஷன் வேலைக்கு போறதில்லையா?’ என்றார். பெண்கள் என்றால் மட்டும் அவனவனுக்கு ஆயிரம் குறுக்குக் கேள்விகள். 

‘இல்ல சார்...அவன் சரியில்ல போலிருக்கு..ரொம்ப அழுதா’ என்றேன். ‘பாவமா இருந்துச்சு சார்’ என்று ஒரு வரியைக் கூடுதலாகச் சேர்த்துச் சொன்னேன். என்னைப் போலவேதான் அவரும் நம்பிக் கொண்டார்.

‘சரி எல்லாம் பேசியாச்சு. திங்கட்கிழமை நேர்காணலுக்கு கூப்பிடுவாங்க..சும்மா ஃபார்மாலிட்டிதான்...தைரியமா இருக்கச் சொல்லுங்க’ என்றார். இதை அவளிடம் நேரடியாகச் சொல்லவில்லை. ஒழுங்காகத் தயாரித்துக் கொண்டு நேர்காணலுக்குச் செல்ல அறிவுறுத்தியிருந்தேன். தனது நிறுவனத்தில் வருடாந்திர சம்பளமாக மூன்றரை லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறாள்.  ‘வேலை கிடைச்சுடும்ல’ என்று இரண்டு மூன்று முறை கேட்டாள். அவ்வளவு பதற்றம்.

நேர்காணல் முடிந்துவிட்டது. வேலைக்கான கடிதம் வரும் வரைக்கும் அதே அக்கப்போர். ‘எப்போ லெட்டர் அனுப்புவாங்க’ என்று தாளித்துத் தள்ளினாள். அவள் பிரச்சினை அவளுக்கு. கடிதம் வந்துவிட்டால் ஒருவேளை நிம்மதியாக இருக்கக் கூடும். பசவராஜை ஒரு முறை அழைத்துக் கேட்டேன். எல்லாம் முடிந்துவிட்டதாகச் சொன்னார். ஆண்டு வருமானம் ஏழு லட்சம் என்று கடிதம் அனுப்பி வைத்துவிட்டு பசவராஜ் அழைத்தார். அவர்தான் அழைத்திருந்தாரே தவிர அவள் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. தொலைந்து போகிறாள் என்று கண்டுகொள்ளாமல் விட்டிருந்தேன்.

ஒரு வாரம் கழித்து பசவராஜ் மீண்டும் அழைத்தார். ‘அந்தப் பொண்ணு எதுவுமே பதில் சொல்லலைன்னு ஹெச்.ஆர்ல சொல்லுறாங்க..கேட்டு பார்க்குறீங்களா?’ என்றார். வழக்கமாக இதையெல்லாம் மனித வளத்துறை ஆட்களே நேரடியாகப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் பசவராஜ் அத்தனை அழுத்தம் கொடுத்திருக்கிறார். அதனால் அவரைக் கேட்கிறார்கள். அவர் என்னிடம் கேட்கிறார். அழைத்தேன்.

‘ஆஃபர் வந்துடுச்சாமே?’ 

‘ஹே..ஸாரி ஸாரி...சொல்லணும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்...ஸாரி’

‘அது பரவாயில்லை..நீ எதுவுமே சொல்லலைன்னு பசவராஜ் கூப்பிட்டாரு’

‘எங்க டீம்ல அசோக், ரவின்னு ரெண்டு பசங்க இருக்காங்க...அவங்களுக்கும் ஏதாச்சும் பார்க்க முடியுமா?’ என்றாள். குழப்பமாக இருந்தது.

‘முதல்ல நீ சேர்ந்துடு..அதுக்கு அப்புறம் நீ அவங்களை சேர்த்துவிடலாம்’ என்று சொல்லிவிட்டு ‘எப்போ பதில் சொல்லுற?’ என்றேன்.

தனது மேலாளரிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் ஒரு வாரத்தில் சொல்வதாகச் சொன்னாள். அதன் பிறகு நான் மறந்துவிட்டேன். பசவராஜூம் மறந்திருக்கக் கூடும். இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. கடந்த வாரத்தில் அழைத்த பசவராஜ் அதே பல்லவியைப் பாடினார். வெட்டி வம்பை இழுத்துக் கொண்டேன் என்று நினைத்து அவளை அழைத்தேன்.

‘எங்க ஆபிஸ்லேயே ப்ரோமோஷன் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்றாள். எனக்கு பற்கள் நற நறத்தன. எதுவுமே கேட்கவில்லை. துண்டித்துவிட்டேன். அதன் பிறகு பசவராஜ் அழைக்கும் போதெல்லாம் தவிர்த்தேன். பசவராஜ் நிறுவனத்திலாவது விட்டுத் தொலையலாம். அவளையே தொங்கிக் கொண்டிருந்தார்கள். நேற்றும் பசவராஜ் ‘கடைசியா ஒரு தடவை கேட்டுடுங்க..எனக்காக’ என்றார். அந்த மனுஷனைக் கெஞ்சுகிற நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டுவிட்டேன்.

கூப்பிட்டவுடன் ‘ஹே..குட் நியூஸ்...ப்ரோமோஷன் கிடைச்சுடுச்சு..அவங்க கொடுத்ததைவிட நல்ல சம்பளம்’ என்றாள். கோபம் உச்சத்துக்கு ஏறிவிட்டது. வேறொரு நிறுவனத்தில் வேலைக்கான கடிதத்தை வாங்கிக் கொண்டு சொந்த நிறுவனத்தில் அதைக் காட்டி ‘அவன் இவ்வளவு கொடுக்கிறான்..நீ அதைவிட அதிகமா கொடுத்தா இருக்கிறேன். இல்லைன்னா போறேன்’ என்று மிரட்டுவது மென்பொருள் துறையில் வாடிக்கைதான். ஆனால் அதை சுயமாகச் செய்ய வேண்டும். வீடு கட்டினேன், கடன் ஆகிவிட்டது, புருஷன் சரியில்லை என்றெல்லாம் அளந்து நம்ப வைத்து கழுத்தறுத்தால் கோபம் வராமல் என்ன செய்யும்? அவள் சொன்னதை நான் நம்பி, நான் சொன்னதை பசவராஜ் நம்பி, அவர் சொன்னதை மேலாளர் இயக்குநரெல்லாம் நம்பி....

மனதுக்குள் கண்ட கண்ட கெட்டவார்த்தைகள் புரண்டன. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ‘என்னையெல்லாம் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?’ என்றேன். அவள் எதுவும் பேசவில்லை. இவள் கேட்டதற்காக அந்தப் பரதேசிகள் அசோக், ரவிக்கும் வேலை வாங்கிக் கொடுத்திருந்தால் அவர்களும் பெரிய பன்னாக எடுத்து வாயில் வைத்துவிட்டுப் போயிருப்பார்கள். பசவராஜை அழைத்து எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொன்னேன். கடுப்பாகிவிட்டார்.  ‘சரி தொலையட்டும்’ என்றார். வேறு என்ன சொல்ல முடியும்? அவரிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று கூடத் தெரியவில்லை. நேரில் பார்த்து ஒரு பிரியாணி வாங்கிக் கொடுத்துதான் சமாளிக்க வேண்டும்.

11 எதிர் சப்தங்கள்:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

பெண் என்றால் பேயும் இறங்கும்( எழுத்துப் பேய் பிடித்த ) நீங்கள் இறங்கியது பெரிய விசயம் இல்லை சார். ஆனால் இதே இது ஒரு நண்பர் செய்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் ? அப்படி யோசிங்க சார்.( எனக்கு என்ன சந்தேகம்ன்னா மூணாவது நதி புத்தகக தலைப்புக்கும் இதுக்கும் எதுவும் பாதிப்பு இருக்கா ?)

Sekar M said...


I have been in same situation before. but for me that was a boy not a girl.

so i scold him with very bad words. then i was satisfied.

i don't know what people are thinking !!!

Bagath said...

sari.. namakku oru velai pakka mudiyumaa

Unknown said...

Very embrassing moment

Jaypon , Canada said...

That demon killed your kind gesture. Tomorrow if someone in dire need of help approach you, you would definitely think twice.

Aravind said...

hi ஸார்.
first time i am writing a comment.
corporate culture has converted our people into terrible selfish people like this.
i worked in IT for 3 years upto 2011, the most sad days for employers is you can believe, its their yearly increment announcement day.
all will peep their eyes into others emails and feel very jealous or sad.
they never care whether this salary hike can take care of their life requirement or not.
this mentality drives our world into distruction i am afraid.
ஸரி இருக்கட்டும். உங்க கம்பனியில ஓரு MD போஸ்ட் பேஸி வைய்யுங்கள்
பேங்கில பேரம் பேஸனும்.

Unknown said...

I have experienced the same Mani. You reflect most of life experiences. முன் ஜென்ம சம்பந்தம் ஏதேனும் இருக்குமோ?

சேக்காளி said...

அவ பேரு "ஜெயந்தி" யா மணி?

Dev said...

மணி சார், நான் கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக எப்படியாவது நம்பர் வாங்கிவிடவேண்டுமென்று என்னென்னமோ ட்ரை பண்ணி பாக்கிறேன். இன்னும் தேறவில்லை. ஆனா ஊரில் இருக்கும் எல்லோருக்கும் (எல்லா இளம் பெண்களுக்கும் ) த்ரேரிதிருக்கிறதே.. அடடடே !!!. இனிமேல் அதிரடிதான். ஹச எஸ் ஆர் -ல இப்படி இப்படி ஒரு ஆள் இருக்காரே .. வீட்ட காமின்கப்பா -நு தேடி Hom மினிஸ்டர் -ட kamபிளைன்ட் பண்ணிரலாம்.

BTW, I don't say it's uncommon and I will be surprised to know if this situation is new to you. 3.5 to 7 is a big jump. I don't think any company would give an 100% hike. So there are other obvious reasons.

வெட்டி ஆபீசர் said...

அந்த பொண்ணு என்னதான் அப்புடி பண்ணி இருந்தாலும் இப்படி ஒருமையில பேசி இருக்க வேண்டாம்...


அப்புடின்னு மொக்கையா ஆரம்பிக்காம...இந்த மாதிரி ஆளுங்கள செருப்பால கூட அடிக்கலாம்னு சொல்லுவேன்...

ஒரு குறைந்தபட்ச மரியாதை கூட தெரியாத ஜென்மங்கள்...அதிலும் நம்ம ஆட்கள் இருக்காங்களே....அப்பப்பா...காசை மொதல்ல வச்சு மனுஷங்கள தூர தூக்கி எரிஞ்சுடுவாங்க...

இதே மாதிரி நானும் பட்டு இருக்கேன்...அடுத்த முறை இதே மாதிரி ஒரு உதவிய கேட்டு அதே ஆள் கிட்ட போக முடியுமா? அவருக்கு எவ்ளோ பெரிய அவமானம்?

சும்மாவா சொன்னாங்க பாத்திரம் அறிந்து பிச்சையிடுனு ?

Catherine Augustine said...

I too had the same experience Sir. The guy was a junior in my team and I suggested his name to my husband who was one among the interview panel. He didnt do well, but still my husband chose him. The other members in the board understood that the candidate has been selected under influence. But later, he didnt join . and when I asked him why , he said he attended the interview to get practice ...