May 2, 2016

தேர்தலில் சமூக ஊடகங்கள்

சமீபத்தில் ஒரு மானுடவியல் கருத்தரங்கில் பார்வையாளராக கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. கருத்தரங்கில் கட்டுரை வாசித்த பேராசிரியர் ஒருவர் ‘நாம் சமூக ஊடகங்களின் யுகத்தில் (Social media era) வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்பதை அழுத்தம் திருத்தமாகவும் திரும்பத் திரும்பவும் வலியுறுத்திச் சொன்னார். மக்களின் மனநிலையில் அலையை உண்டாக்குவதில் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன என்ற அர்த்தத்தில் அந்த பேராசிரியர் பேசினார். அது சரியான வாதம்.  கடந்த பத்தாண்டுகளாகவே அப்படியான சூழல்தான். பெரும்பாலான கார்போரேட் நிறுவனங்கள் சமூக ஊடகங்களின் வழியாகச் செய்யப்படுகிற விளம்பரங்கள் மற்ற எந்த ஊடகத்தைவிடவும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. சமூக ஊடக மனநிலை குறித்தான ஆராய்ச்சிகள் விரிவான அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய ஆராய்ச்சிகளுக்காக பன்னாட்டு நிறுவனங்களும் கல்விக் கூடங்களும் பெருமளவிலான தொகையைச் செலவிடுகின்றன. சமூக ஊடகங்களில் செய்யப்படுகிற விளம்பரங்கள் வெறும் பொருட்களுக்கான விளம்பரங்களாக மட்டும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அரசியல் விளம்பரங்களாகக் கூட இருக்கலாம். Branding என்பதில் இன்றைய சூழலில் சமூக ஊடகங்கள்தான் மிக முக்கியமானவையாக இருக்கின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உருவாக்கப்பட்ட ‘மோடி அலை’ மிகச் சிறந்த உதாரணம். மோடியின் பிரதாபங்களை அடுக்கி எழுதப்பட்ட கட்டுரைகளும் அவரைப் போன்ற சிறந்த, அரசியல் சாதுரியம் மிக்க தலைவர் இந்த நாட்டில் வேறு யாருமில்லை என்கிற பிம்பத்தை உருவாக்கும் சலனப்படங்கள், குரல் பதிவுகள் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் எதிர்கொண்ட என்னைப் போன்ற சாமானியர்கள் சர்வசாதரணமாக ‘மோடிதான் உசத்தி’ என்று நம்பத் தொடங்கினார்கள். அப்படி உண்டாக்கப்பட்ட அலையில்தான் முழுமையான பலத்துடன் பா.ஜ.க அரியணை ஏறியது என்பது வரலாறு. இந்த அலையில் சமூக ஊடகங்கள் மட்டுமே மோடியை பிரதமராக்கின என்று சொல்லவில்லை. ஆனால் அவற்றுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருந்தது என்பதை மறுக்க முடியாது. இந்தப் பக்கமா அந்தப்பக்கமா என்று மதில் மேல் நின்று கொண்டிருப்பவர்களை ஒரு பக்கமாகத் தள்ளிவிடுவதில் சமூக ஊடகங்களுக்கு நிகர் சமூக ஊடகங்கள்தான்.

இந்தப் பின்ணனியில்தான் எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சமூக ஊடகங்களின் பங்களிப்பு குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. தேர்தல் நெருங்குவதற்கு முன்பாகவே சமூக ஊடகங்கள் கோதாவில் இறங்கிவிட்டன. மீம்ஸ், நக்கல் நையாண்டி கருத்துக்கள் கடந்த சில மாதங்களாகவே தூள் கிளப்பிக் கொண்டிருந்தன. எங்கள் ஊர்ப்பக்கம் விசாரித்தால் தொகுதியில் இருக்கும் இரண்டரை லட்சம் வாக்காளர்களில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேராவது தங்களது அலைபேசியில் வாட்ஸப் வைத்திக்கிறார்கள் என்கிறார்கள். இது மிகைப்படுத்தப்பட்ட கணிப்பாக இருந்தாலும் கூட ஐம்பதாயிரம் பேர் என்று வைத்துக் கொள்ளலாம். தொகுதி பற்றிய செய்திகள், வேட்பாளர் குறித்தான தகவல்கள் என எதுவாக இருந்தாலும் இந்த வலையமைவில் வெகு வேகமாகப் பரவுகிறது. இலக்கியச் சுவை, பொருட் சுவையுடன் எழுதப்பட்ட குறிப்புகளை விடவும் இயல்பாக, நகைச்சுவை மற்றும் ஏளன தொனிகளில் எழுதப்படுகிற குறிப்புகள் மிகச் சாதாரணமாக விவாதப் பொருட்களாகின்றன. இந்த விவாதங்கள்தான் இப்பொழுது வேட்பாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கின்றன. 

பொதுவாகவே நம்முடைய தேர்தல் களத்தைப் பொறுத்த வரையிலும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் நிச்சயமாக வென்று விடுவார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். காலங்காலமாக உருவேறியிருக்கும் நம்முடைய மூடநம்பிக்கையின்படி ‘ஜெயிக்கிற கட்சி அல்லது ஜெயிக்கிற வேட்பாளருக்குத்தான்’ வாக்களிப்பார்கள். தோற்கப் போகிற வேட்பாளருக்கு வாக்களித்தால் ஒரு வாக்கு வீணாகப் போய்விடும் என்கிற சிந்தனை துளிர்த்திருக்கும் தமிழகத்தில் வெல்லப் போகிற வேட்பாளர் யாரென்றே கணிக்க முடியாத சூழலை உருவாக்குவதில் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய பங்களிப்பைச் செலுத்துவதாகத்தான் தோன்றுகிறது. ‘அவர் ஜெயிச்சுடுவாருன்னுதான் நினைச்சேன்...ஆனா வாட்ஸப்புல தோத்துடுவாருன்னு வந்துச்சு’ என்கிறார்கள். யார் எழுதியிருப்பார்கள், எந்த அடிப்படையில் எழுதியிருப்பார்கள் அதற்கான தரவுகள் என்ன என்றெல்லாம் பெரியதாக அலட்டிக் கொள்ளாத சாமானிய மனிதர்கள் இத்தகைய செய்திகளை முழுமையாக நம்புகிறார்கள்.

பக்கத்து தொகுதியைச் சார்ந்த ஒரு வேட்பாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது தனது பரப்புரையின் முதல் பத்து நாட்களில் வெல்லப் போகிற வேட்பாளர் யார் என்கிற பொதுக் கணிப்பில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டால் அதற்கடுத்த பத்து நாட்களில் மக்களின் மனநிலையை எளிதாக மாற்றிவிட என்றார். அவரது புரிதல் ஆச்சரியமாக இருந்தது. அவர் வெல்வதற்குத் தேவையான அந்தக் குழப்பததையும் தெளிவையும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக் உருவாக்கி விட முடியும் என்பது அவர் வாதம். ஆனால் அந்த வேட்பாளர் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றை விடவும் வாட்ஸப்பை நம்புகிறார். அவரது நம்பிக்கை சரிதான். ஃபேஸ்புக், ட்விட்டர் என மற்றவற்றைவிடவும் உள்ளூர் பிரச்சாரத்தில் வாட்ஸப்தான் மிக முக்கியமான பங்களிப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. நாம் சொல்ல விரும்புகிற செய்தியானது நேரடியாக ஒவ்வொரு மனிதரையும் அடைகிறது. சற்றே வலு மிகுந்த செய்தியாக இருந்தால் அதை அவர் தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் பகிர்கிறார். ஒருவர் தோராயமாக பத்து குழுக்களிலாவது உறுப்பினராக இருக்கிறார். ஒரு செய்தியை அவர் ஐந்து குழுக்களுக்கு அனுப்பினாலும் கூட வினாடி நேரத்தில் அந்தச் செய்தி நூறு பேரைச் சென்றடைகிறது. நூறு பேரில் ஐம்பது பேர் வாசிப்பதாகக் கணக்குப் போட்டாலும் கூட அது உருவாக்கக் கூடிய தாக்கம் மிக முக்கியமானதாக இருக்கும். 

வாட்ஸப் உள்ளூர் பரப்புரைக்கு வலு சேர்க்கிறது என்றால் மாநில அளவிலான தாக்கத்தை உண்டாக்க வேண்டுமானால் வாட்ஸப் மட்டும் போதுமானதில்லை. சமூக ஊடகங்களின் அத்தனை வடிவங்களும் அவசியமானதாக இருக்கின்றன. ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வலைப்பதிவுகளிலும் எழுதப்படுகிற செய்தி குறிப்பிட்ட தொகுதி குறித்து மட்டுமில்லாமல் பொதுவானவையாக இருக்கும் போது அவை பிறரால் விரும்பப்பட்டு பகிரப்படுகின்றன. விவாதங்களை உருவாக்குகின்றன. தமிழகத்தின் கட்சித்தலைமைகள் சமூக ஊடகங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துகின்றன என்று சொல்ல முடியவில்லை. பெரும்பாலான பதிவுகள் தனிமனிதர்களால் எழுதப்படுகின்றவையாக இருக்கின்றன. எழுதியவர்களின் பின்புலத்தை ஆராயக் கூடிய நடுநிலையான சாமானியர்கள் ‘இது கட்சிக்காரன் பதிவு’ என்கிற முடிவுக்கு வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் பரப்புரை நிறுவனங்கள் வழியாக கசியவிடப்பட்ட செய்திகள் நடுநிலையான பதிவுகளைப் போலவே இருக்கும். மிக நுட்பமாக மோடியைப் பிரதானப்படுத்தியிருப்பார்கள். ராகுல் காந்தியை ஒன்றும் தெரியாத குழந்தையாக்கியிருப்பார்கள். தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியாவது அத்தகையதொரு அணுகுமுறையைக் கையாளக் கூடும் என எதிர்பார்த்தேன். ஆனால் என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் அப்படியெதுவும் நிகழ்வதாகத் தெரியவில்லை- பெரும்பாலானவை கட்சி சார்ந்த தனிநபர்களின் பதிவுகளாகத்தான் பெருமளவில் இருக்கின்றன அல்லது கட்சிகளைச் சாராதவர்கள் தங்களுக்கு விருப்பமான அணி ஒன்றை ஆதரித்து எழுதுகிறார்கள்.

தேர்தல் சமயங்களில் சமூக ஊடகங்களில் கட்சி சார்ந்த தனிமனிதர்களின் பதிவுகளும் கட்டுரைகளும் மூர்க்கத்தனமான ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கும் போது அது வெளியிலிருந்து பார்க்கிறவர்களை அசூயை அடையச் செய்கிறது. இவை விவாதங்களுக்கான திறப்பு எதையும் உருவாக்குவதில்லை என்பதை ஒரு வகையில் துரதிர்ஷ்டமானது என்றுதான் சொல்ல வேண்டும். சமூக ஊடகங்களின் அரசியல் விவாதங்களைப் பொறுத்தவரையிலும் நாம் இன்னமும் முழுமையான பக்குவத்தை அடைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. நிறைய பொய்யான தகவல்களும் முதிர்ச்சியற்ற கருத்துக்களும் சாதாரணமாகத் தூவப்படுகின்றன. நாமும் கருத்துச் சொல்லிவிட வேண்டும் என்றோ அல்லது நம்முடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும் என்றோதான் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். காலப்போக்கில் இத்தகைய முசுடுத்தனங்கள் குறைந்து பக்குவமான சூழலை நோக்கி நகரும் போது சமூக ஊடகங்களின் தாக்கம் மிகப் பிரம்மாண்டமானதாக மாறக் கூடும்.

ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்காளர்கள் சமூக ஊடகங்களோடு ஏதோவொரு விதத்தில் இணைப்பில் இருக்கிறார்கள் என்ற போதிலும் இவ்வளவு விரைவாகவும் நெருக்கமாகவும் வாக்காளர்களை அடையும் சமூக ஊடகம் உத்தியை அத்தனை வேட்பாளர்களும் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் நிதர்சனம். பெரும்பாலான வேட்பாளர்களுக்கு இதன் நுட்பம் புரியவில்லை அல்லது அவர்களுக்காக இந்த ஊடகத்தில் பணிபுரிவதற்குத் தோதான ஒரு குழுவை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. அந்தவகையில் தமிழகத் தேர்தலில் சமூக ஊடகங்கள் நிரப்ப வேண்டிய இடம் மிகப் பெரியதாக இருக்கிறது. ஆனால் இதுவரையிலான வேறு எந்தத் தேர்தலையும் விடவும் இம்முறை சமூக ஊடகங்களின் தாக்கம் மிக மூர்க்கமாக இருக்கிறது என்பதையும் கவனிக்க முடிகிறது. அடைந்தது கையளவு; அடையாதது கடலளவு.

ஆனால் ஒன்று- தமிழகத் தேர்தலைப் பொறுத்த வரையிலும் என்னதான் சமூக ஊடகங்களின் தாக்கம் இருந்தாலும் அதையெல்லாம் தின்று தீர்க்கிற பலம் பணத்துக்கு இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. ஒருவேளை தேர்தல் ஆணையமும் அரசு எந்திரமும் விழிப்புடன் இருந்து பணப் பட்டுவாடா தடுக்கப்படுமெனில் சமூக ஊடகங்கள், பத்திரிக்கைகள் போன்றவை தேர்தலின் முடிவை திசை மாற்ற வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் பணத்தை வாங்கிக் கொண்டு குல தெய்வத்தின் மீது சத்தியம் செய்து கொடுத்தவர்கள் சத்தியத்தை துளியும் மீறாமல் காசு கொடுத்தவர்களின் சின்னத்தில் விரலை வைத்து அழுத்தித் தள்ளிவிட்டு வருவார்கள். உருவாக்கப்படுகிற பெரிய அலை கூட பணத்தின் காலடியில் நாயைப் போல சுருண்டு படுத்துக் கொள்ளும்.

(மே’2016 காலச்சுவடு இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை)

2 எதிர் சப்தங்கள்:

Unknown said...

If any of you don't know what Modi Mastan did last election, you can see that what Stalin do now. We all know how much it cost to advertise in Sun network, now every second atleast in one of the sun network tv election advertisement for DMK is ongoing. Even in NDTV DMK advertisement's where there, also on NDTV paid news on evry alternate day broadcasted. This is what Manikandan saying what Modi did in last election.Mudiatuum Dravida Iyakangal Vidiyattum Thamizhagam. think before ink.

ADMIN said...

கடைசியில் சொன்னீங்களே..அதுதான் நடக்கப் போகிறது.!
மக்களின் அறியாமை, சிந்திக்கும் திறன் இல்லாமை...
போன்றவைகள்தான் பணத்திற்காக ஓட்டுப்போட வைக்கின்றன..!