நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினரின் கடமையும் தெரிவதில்லை. முக்கியத்துவமும் புரிவதில்லை. இன்றைய பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கூட அது தெரியாது என்பதுதான் கொடுமை. மேசையைத் தட்டுவதோடும் கமிஷன் வாங்குவதோடும் அவர்களது கடமை முடிந்துவிடுவதில்லை. நீண்டகால நோக்கில் சிந்தனை செய்யக் கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க முடியுமானால் அதன் விளைவுகளும் பலன்களும் காலங்காலத்துக்கு இருக்கும்.
உதாரணத்துக்கு எங்கள் ஊரைச் சொல்லலாம். கீழ் பவானித் திட்டம் என்று கேள்விப்பட்டிருக்கக் கூடும். பவானிசாகர் அணையிலிருந்து ஒரு கால்வாயை வெட்டி அதை காங்கேயம் வரைக்கும் கொண்டு போகிறார்கள். கிட்டத்தட்ட இருநூறு கிலோமீட்டர் தொலைவு. இந்த கால்வாய்க்குத் வடக்கே இருக்கிற பகுதியெல்லாம் பச்சைப் பசேல் என்றிருக்கும். தெற்கே இருக்கிற பகுதியெல்லாம் காய்ந்து தீய்ந்து கருவாடாய்க் கிடக்கும். (படத்தைப் பெரிது படுத்தினால் தெளிவாகத் தெரியும். பாம்பு மாதிரி வளைந்து கிடக்கிறது கீழ்பவானி கால்வாய். அதன் வடகேயும் தெற்கேயும் வித்தியாசத்தைப் பார்க்கலாம்). கால்வாய்க்கு வடக்கில் இருக்கும் பகுதியும் ஈரோடு மாவட்டம்தான். தெற்கில் இருக்கிற பகுதியும் ஈரோடு மாவட்டம்தான். ஏன் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் இன்னொரு கண்ணுக்கு வெண்ணையும் வைத்தார்கள்? மனிதன் வெட்டிய கால்வாய்தான் இது. இன்னும் சற்று தெற்கே நகர்த்தி வெட்டியிருந்தால் இன்னும் சில ஆயிரம் ஏக்கர் பயன் பெற்றிருக்கும் அல்லவா?
1949 ஆம் ஆண்டில் அனுமதி பெறப்பட்ட இந்தத் திட்டம் ஏன் அதற்கு முன்பாக நீண்டகால விவாதத்திற்குள்ளானது? எதனடிப்படையில் கால்வாய்க்கான இன்றைய பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள்? இதற்கு மாற்றாக வேறு எந்தப் பாதைகளை முடிவு செய்து வைத்திருந்தார்கள் என்கிற ஆதி அந்தத்தையெல்லாம் தேடினால் இணையத்தில் சொற்பமாகத்தான் தகவல்கள் கிடைக்கின்றன. ஏதேனும் பழங்கால ஆவணங்களைத் தேடிப்பிடித்தால் துல்லியமான விவரங்களைப் பெற முடியும். அதைச் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக உள்ளூர் பெரியவர் ஒருவரிடம் பேசிய போது ஒரு விஷயத்தைச் சொன்னார். அவருக்கு எண்பது வயது இருக்கும்.
முதலாவது திட்டகமிஷனால் ஒன்பதரைக் கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இரண்டாண்டுகளுக்குப் பிறகு வேலை தொடங்கப்பட்ட கீழ்பவானித் திட்டத்தில் கால்வாயின் பாதையை சற்று தெற்கே நகர்த்தி நம்பியூர் சுற்றுவட்டாரமெல்லாம் பயன்படும்படிதான் ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் அந்தச் சமயத்தில் காங்கேயம் பன்னாடிகள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். கால்வாயின் பாதையைத் தெற்கே நகர்த்தினால் பயன்பெறக் கூடிய விவசாய நிலங்களின் அளவு அதிகரிக்கும் அதனால் நீரின் தேவை அதிகரித்து கடைமடையை நீர் அடையாது என்று முடிவு செய்து கால்வாயை சற்று வடக்கே மாற்றிவிட்டார்கள். அப்பொழுது நம்பியூர் பகுதியில் கிணற்றுப் பாசனம். நீர் வளம் சுமாராக இருந்தது. அந்தக் காலத்தில் இதையெல்லாம் யோசிக்கிற ஆளுமைகள் நம்பியூர் பகுதியில் யாருமில்லை. அப்படியே இருந்திருந்தாலும் ‘நமக்குத்தான் கிணறு இருக்கே’ என்று இந்தத் திட்டத்தைப் பற்றி அசிரத்தையாக இருந்துவிட்டார்கள். காலம் ஓடியது. கிணறுகள் வற்றின. ஆழ்குழாய் கிணறுகளை அமைத்தார்கள். ஆரம்பத்தில் நன்றாக இருந்த ஆழ்துளைக் கிணறுகளும் வற்றின. இப்பொழுது பங்குனி சித்திரையானால் நிலமே வறண்டு பாலையாகிவிடுகிறது. கடும் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இன்னமும் இருபதாண்டுகளுக்குப் பிறகு நிலைமையை யோசித்துக் கூட பார்க்க முடியாது.
அந்தக் காலத்தில் நம்பியூர் பகுதியைச் சார்ந்தவர்கள் யாரேனும் குரல் கொடுத்துப் போராடியிருந்தால் அப்பகுதி மக்கள் இன்றைக்கும் காய்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. 1955ல் இத்திட்டம் முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட அறுபதாண்டுகளுக்குப் பிறகான தலைமுறையும் வருந்திக் கொண்டிருக்கிறது. இன்னமும் எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதிக்குத் தீர்வு கிடைக்கும் என்று தெரியாது. ஒருவேளை தீர்வே இல்லாமலுக் கூடப் போகலாம். காலகாலத்திற்குமான வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம். இப்பொழுது கடைமடைக்கெல்லாம் தண்ணீர் செல்ல வாய்ப்பில்லை. தண்ணீர் பற்றாக்குறை. பெருந்துறை பகுதிக்கே தண்ணீர் போதாமல் இருக்கிறது. அந்தப் பக்கத்து அமைச்சர்கள் வாய்க்கால் முழுவதும் கான்கிரீட் போட்டு விடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். கூமுட்டைகள். எங்கள் பகுதி மக்கள் பதறினார்கள். கான்க்ரீட் அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் கிடுகிடுவெனெ கீழே போய்விடும். நல்லவேளையாக பொன்னியின் செல்வி அந்த அமைச்சர்களை டம்மியாக்கினார். விவசாயிகள் தப்பித்தார்கள். இல்லையென்றால் இன்னுமொரு ஐம்பதாண்டுகளில் எங்கள் பகுதியும் நம்பியூர் ஆகியிருக்கக் கூடும்.
இதையெல்லாம் விரிவாகப் பேசினால் நமக்கு சட்டமன்ற உறுப்பினரின் முக்கியத்துவம் புரியக் கூடும்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் நினைத்தால் காலங்காலமாக அந்தப் பகுதி மக்களை நன்றாக இருக்கச் செய்ய முடியும் அல்லது நாசமாகவும் போகச் செய்ய முடியும். இரண்டுமே அந்தச் சட்டமன்ற உறுப்பினரின் கைகளில்தான் இருக்கிறது. தங்கள் பகுதிக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன? தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் யாவை? அதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையெல்லாம் கணிக்கக் கூடிய தொலை நோக்குப் பார்வை எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருக்கிறது? விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியே பார்வை இருந்தாலும் அந்தத் திட்டத்துக்கான நிதி ஆதாரத்தை போராடி வாங்கக் கூடிய வல்லமை அல்லது சுயமாகத் திரட்டக் கூடிய திறமை எத்தனை எம்.எல்.ஏக்களிடம் இருக்கிறது? சொற்பத்திலும் சொற்பம். அப்படியே திரட்டினாலும் கமிஷன் அடிக்காமல் மக்கள் நலனை நினைத்து வேலையை முடித்துக் கொடுக்கிறவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்? ரொம்பக் கஷ்டம்.
கேட்டால் விதி என்று விட்டுவிடுவோம். ஜனநாயகத்தின் சதி என்று சொல்வோம். அப்படியெல்லாம் இல்லை. நம்மிடம்தான் புரிதல் இல்லை. ரேஷனில் அரிசி கிடைப்பதில்லை; குழாயில் நீர் வருவதில்லை எனபதெல்லாம் பிரச்சினைகள்தான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் இதற்கெல்லாம் எம்.எல்.ஏ அவசியமில்லை. உள்ளூர் கவுன்சிலர் கூட பார்த்துக் கொள்ளலாம். எம்.எல்.ஏ என்பவர் தன் வாழ்நாளில் ஒரேயொரு திட்டத்தையாவது சரியாகக் கணித்து போராடிப் பெற்றுத் தருகிற ஆளாக இருக்க வேண்டும். அது கல்லூரியாகவும் இருக்கலாம். வேளாண்மைக் கூடமாக இருக்கலாம். ஏதாவதொன்று. ஆனால் அடுத்தடுத்த சந்ததிகள் பயன்படும்படியான திட்டமாக இருக்கட்டும். இப்பொழுதெல்லாம் தொகுதியில் தலை காட்டினால் ‘நல்ல அணுகுமுறை உள்ள எம்.எல்.ஏ’ என்று சான்றிதழ் கொடுத்துவிடுகிறோம். வீட்டு விஷேசங்களுக்கு வந்து போனால் ‘அட்டகாசம்’ என்று மீண்டுமொருமுறை வாய்ப்பளிக்கிறோம். அதுதான் சிக்கல். இதெல்லாம் கடமையே இல்லை. வெறும் கண் துடைப்பு.
சட்டமன்ற உறுப்பினரின் கடமை பற்றிய புரிதல் மக்களுக்கு இல்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வாக்கு வாங்கிவிட முடியும் என்று எம்.எல்.ஏவாக விரும்புகிறவர்கள் கணக்குப் போடுகிறார்கள். சட்டமன்றத்தில் லாவணி பாடினால் போதும் என்று கட்சித் தலைமை நினைக்கிறது. அத்தனை இடத்திலும் தவறு இருக்கிறது. பிறகு எப்படி விளங்கும்? அடிப்படையான புரிதல் உண்டாகாமல் எந்தவிதமான மாறுதலுக்கும் வாய்ப்பில்லை என்பதுதான் நிஜம். சாமானிய மக்கள்தான் பணத்தை வாங்கிக் கொண்டு தவறாக வாக்களிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. படித்தவர்கள், புரிந்தவர்களே கூட தவறான முடிவெடுக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. மேம்போக்கான காரணங்களை வைத்துக் கொண்டு தமது வாக்கை யாருக்குச் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். ஜனநாயகம் என்பது மிகச் சரியான அமைப்பு. அதை நாம்தான் புரையோடச் செய்திருக்கிறோம். அதனால் அதன் மீதான நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. ஒரு காலத்தில் நிச்சயமாக மாறக் கூடும். ஆனால் அதற்கான அடிகளை நாம்தான் எடுத்து வைக்க வேண்டும்- மெதுவாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும்.
12 எதிர் சப்தங்கள்:
Well said Manikandan. We should "Think before Ink", particularly for Thiruvarur constituency.
கேட்டால் விதி என்று விட்டுவிடுவோம். ஜனநாயகத்தின் சதி என்று சொல்வோம். அப்படியெல்லாம் இல்லை. நம்மிடம்தான் புரிதல் இல்லை.//
sariyaanathoru purithalodu sinthiththu munnokkich sellum thangalukku vazthukkal.
என்னதான் இருந்தாலும் உலகில் குறிப்பாக மேலைநாடுகளில் எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத ஒரு விடயத்தை, அதாவது 93 வயதில் தள்ளுவண்டியில் அமர்ந்தவாறே, குழப்பங்களும், தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகளும் நிறைந்த தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்துக்கு மீண்டும், மீண்டும் முதலமைச்சராக வர முயல்வதற்கு, எதையுமே சிந்திக்காமல் வாக்களிக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இளிச்சவாய்த்தனத்தின் மீது அவருக்குள்ள அளவு கடந்த நம்பிக்கை தான் காரணமென சிலர் கூறினாலும் கூட, கலைஞர் கருணாநிதி அவர்களின் "தில்' ஐ யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது.
பெரியவர்கள் சொல்ல கேட்டது. பழையகோட்டை பட்டக்கார்கள் கீழ்பவானி வாய்க்கா வெட்ட காசு கொடுத்ததாகவும், அவர்கள் கேட்டா பவானியாத்துல தண்ணி தொறக்கறத நிறுத்திட்டு வாய்க்கால தண்ணி தொறந்தொடனுமாம்.
இப்ப மெயின் வாய்க்கா இருக்கற இடத்தவுட தெக்கால மேட இருக்குது அதனால கொப்பு (கிளை) வாய்க்கா வரல. மெயின் வாய்க்கா நம்பியூர் பக்கம் வராததுக்கு இது கூட காரணம் சொல்றாங்க.
சரியாதான் சொல்லியிருக்கீங்க!
Well said Sandilyan. 👌
கீழ்பவானி திட்டத்தின் மூளையாக "காளிங்கராயன் கால்வாய்[வாய்கால்]" ஐ கூறுவார்கள் அந்த பகுதி பெரியவர்கள்.
காவிரி பவானி என இரண்டு முக்கிய ஆறுகள் இருந்தும் கோவை ஜில்லா வறண்ட பகுதியாகவே இருந்தது காரணம், அந்த மாவட்டத்தின் நில அமைப்பு. பெய்யும் மழை எல்லாம் "வீணாக ஆற்றில் கலந்தது".
மேலே ஜெயக்குமார் கூறியது போல நிலவியல் அமைப்பு ஒரு முக்கிய காரணி. அணை இருப்பது பள்ளத்தில் திடீரென மேட்டுக்கு தண்ணீரை கால்வாய்மூலம் கொண்டு செல்வது கடினம். கீழ்பவானி திட்டத்தின் பாசனப்பரப்பு கிழக்கு நோக்கி செல்லச்செல்ல வடதிசையில் அதிகரிக்கும் நிலவியல் வரைபடத்தில் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
அன்று இருந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மூளை உள்ளவர்களே! நாம்தான் மூளையற்றவர்களை மாறி தேர்ந்தெடுத்து இப்போது ஈரோட்டில் காளிங்கராயன் வாய்க்காலை கான்கிரீட் வாய்க்காலாக மாற்றிவிட்டார்கள்.
கருணாநிதியைப் பார்க்கும் போது மோம்மர் கடாஃப்பியின் ஞாபகம் வந்து தொலைக்கிறது!
Hi......very gud article......effective points....I am happy that people like u are interested in pointing the loop holes and teaching the public like me....may ur efforts bring in fertility .....
ஜனநாயகம் என்பது மிகச் சரியான அமைப்பு. அதை நாம்தான் புரையோடச் செய்திருக்கிறோம். அதனால் அதன் மீதான நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. ஒரு காலத்தில் நிச்சயமாக மாறக் கூடும். ஆனால் அதற்கான அடிகளை நாம்தான் எடுத்து வைக்க வேண்டும்- மெதுவாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும்.
http://www.news18.com/news/india/bengaluru-will-be-unlivable-in-five-years-warns-iisc-study-1237706.html
Good article Mani anna. I also heard almost same thing about this canel.
Post a Comment