Apr 11, 2016

நம்பத்தான் வேண்டும்

தென்றல் இதழ் பற்றித் அறிந்திருக்கக் கூடும். அமெரிக்காவில் மட்டும் அச்சுவடிவில் கிடைக்கக் கூடிய இதழ். கடந்த பதினாறு ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு வெளியில் அச்சு வடிவில் கிடைப்பதில்லை என நினைக்கிறேன். ஆனால் இணையத்தில் இலவசமாகவே வாசிக்கலாம். அந்த இதழில் ஒரு நேர்காணல் வந்திருக்கிறது. ‘இவனுக்கெல்லாம் நேர்காணலா?’ என்று சந்தேகமாக இருக்குமே- இருக்கும் இருக்கும். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்- நேர்காணல் வாங்கினார்கள். 

ஏப்ரல் மாத இதழில் வந்திருக்கும் நேர்காணல்தான் இது. பிறந்தாள் பரிசு.


அவர்கள் கேட்ட போது ‘பதில் சொல்லுறேன். ஆனா வெளிப்படையா இருக்குதான்னு கவனிங்க..ஏதாச்சும் பந்தா காட்டுகிற மாதிரி நான் பேசினால் சொல்லிவிடுங்கள்’ என்று சொல்லியிருந்தேன். ‘நானெல்லாம் அந்தக் காலத்துலேயே....’ என்று ஆரம்பித்துவிடக் கூடாது அல்லவா?

எங்கேயாவது பந்தா பாண்டி எட்டிப் பார்த்திருக்கிறானா என்று வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். ஏதாவது குற்றங்குறை இருப்பின் இங்கே எப்படி வேண்டுமானாலும் திட்டலாம். தவறில்லை. ஆனால் நேர்காணலை வாசித்துவிட்டு தென்றல் இதழின் இணைப்பில் சென்று ‘மணிகண்டன் நல்லவன் வல்லவன் நாலும் தெரிந்தவன். ஆஹா ஓஹோ’ என்றெல்லாம் பின்னூட்டங்களை எழுதி அமெரிக்க வலையுலகத்தையே அரண்டு போகச் செய்து அடுத்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளாராக இவனைத்தான் நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்யச் செய்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

தென்றல் இதழின் இணைப்பைத் திறந்து பாருங்கள். சொன்னால் வெட்கக் கேடு- ஒரு பின்னூட்டம் கூட இல்லை. பிறகு குடியரசுக் கட்சிக்காரனும், ஜனநாயகக்கட்சிக்காரனும் நம்மை எப்படி மதிப்பான்? அவர்கள் மதிப்பது இருக்கட்டும். வீட்டில் மதிப்பார்களா? சாயந்திரம் வீட்டுக்குச் சென்றால் தோசை மட்டும்தான் வரும். ‘சட்னி இல்லை; வேணும்ன்னா பொடியைத் தொட்டுக்க’என்ற பதில் வேண்டுமானால் வரும். 

என் பிரச்சினை எனக்கு. ஆகவே தாய்மார்களே, பெரியோர்களோ, வாக்காளப் பெருங்குடி மக்களே...அக்காங்!
                                                     **
தென்றல் இதழுக்கும் நேர்காணலை நிகழ்த்திய திரு.அரவிந்த் அவர்களுக்கும் நன்றி. 
                                                 **

விளையாட்டாக ஆரம்பித்ததுதான். சமூகப்பணிக்கான விதையாக முளைத்து, செடியாய் வளர்ந்திருக்கிறது. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், கல்வி ஆலோசகர் வா.மணிகண்டன். 2005 முதலே ‘பேசலாம்’ என்ற தலைப்பில் வலைப்பதிவு தொடங்கி அதில் எழுதி வந்தார். நாளடைவில் இவரது சுவாரஸ்யமான எழுத்துக்களுக்கென்று ஒரு வாசவட்டம் குழுமிவிட்டது. நட்புவட்டம் இந்தியாவுக்கப்பாலும் விரிவடைந்தது. அதன் உதவியுடன் சிறு சிறு பண உதவிகளைச் செய்யத் தொடங்கினார். அது இன்றைக்கு ‘நிசப்தம் அறக்கட்டளை’ ஆக வளர்ந்து நிற்கிறது. கல்வி, மருத்துவம், மழை வெள்ள நிவாரண உதவிப் பணிகள் என்று இதுவரை கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டிருக்கிறது நிசப்தம். மரக்கடையில் வேலை செய்யும் சாதாரண மனிதர் முதல் வெளிநாடுகளில் வேலை செய்யும் மென்பொருள் வல்லுனர்கள் வரை பலர் அளித்த நன்கொடைகளைக் கொண்டு நடக்கிறது. எப்படிச் சாத்தியமானது என மனம் திறக்கிறார் மணிகண்டன். வாருங்கள், கேட்கலாம்.


நிசப்தம் அறக்கட்டளை ஆரம்பிப்பதற்கு உந்துதலாக இருந்தது எது?

அறக்கட்டளை தொடங்குகிற எண்ணம் எதுவுமில்லாமல்தான் இருந்தேன். அவ்வப்போது சில உதவிகளைச் செய்து கொண்டிருந்த போது ஒரு கிராமத்துத் தச்சரின் மகன் ரோபோடிக்ஸில் கலக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு ஜப்பானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும் ஆனால் பணமில்லாததால் தவித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். முயற்சித்துப் பார்க்கலாம் என்று முந்தின நாள் இரவில் அந்த மாணவன் குறித்து நிசப்தம் தளத்தில் எழுதினேன். மற்றவர்களிடமிருந்து பணத்தை வாங்கி நாம் கொடுப்பதைவிடவும் அந்த மாணவனுடைய வங்கிக் கணக்கையே நேரடியாகக் கொடுத்துவிடுவது உசிதம் என்று தோன்றியது. நமக்கு எதுக்கு வம்பு என்கிற பயம்தான் முக்கியக் காரணம்.  எழுதிய அடுத்த நாள் காலையில் அவனது கணக்குக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வந்திருந்தது. வாயடைத்துப் போனேன். அதே போலத்தான் ஒரு சலவைத் தொழிலாளியின் மகளுக்கும். பொறியியல் படிப்புச் செலவுக்கு உதவச் சொல்லி எழுதிய அடுத்த நாள் அவர்களது வங்கிக் கணக்கில் சேர்ந்த பணத்தைப் பார்த்து அரண்டு போனார்கள். எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. தலை கீழாக நடந்து கொண்டிருந்தேன். இந்த உலகம் என்னையும் நம்புகிறது என்று உணர்ந்து கொண்ட தருணங்கள் அவை. 

சந்தோஷமாக இருந்தாலும் பயனாளிகளிடம் தேவைக்கு அதிகமாக பணம் சேர்கிறது என்பதால் அவற்றை ஏதாவதொருவிதத்தில் ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் நிசப்தம் அறக்கட்டளை. வீட்டில் எல்லோரும் பயமூட்டினார்கள். பண விவகாரம் எப்படியும் பிரச்சினையைக் கொண்டு வந்து சேர்த்துவிடும் என்பதுதான் அவர்களது தயக்கம். மத்தியதரக் குடும்பத்தில் உருவாகக் கூடிய எளிய பயம் அது. எனக்கும் அந்த பயமும் தயக்கமும் இருந்தது. ஒவ்வொரு மாதமும் சிறு தொகையை மட்டும் எனது செலவுக்காக வைத்துக் கொண்டு சம்பளப் பணத்தின் பெரும்பகுதியை தம்பியிடம் கொடுத்துவிடுகிற ஆள் நான். அடுத்தவர்களின் நன்கொடையைக் கையாள முடியுமா என்கிற சந்தேகம் இல்லாமல் இல்லை. ஆனால் வெளிப்படையாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது என நம்பினேன். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பதையும் யாருக்கெல்லாம் உதவி செய்திருக்கிறோம் என்ற பட்டியலை (பேங்க் ஸ்டேட்மெண்ட்டை) அப்படியே எடுத்து நிசப்தம் தளத்தில் பதிவு செய்யத் தொடங்கிய பிறகு யாருக்கும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. பண விஷயத்தில் வெளிப்படைத்தன்மை என்பது பெரும்பலம்.


உண்மைதான். ஆனால் நீங்கள் ஒரு தனி நபர். உங்கள் மீது இவ்வளவு பேர் நம்பிக்கை வைத்து உதவுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

உண்மையாகவே எனக்கும் தெரியவில்லை. அறக்கட்டளையின் நிதியிலிருந்து தொகை எதையும் நான் எடுத்துக் கொள்வதில்லை. பயனாளிகளைப் பார்ப்பதற்காகவோ அல்லது அறக்கட்டளைப் பணிக்காக எந்த ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் சொந்தச் செலவுதான். அறக்கட்டளை சம்பந்தமாக எதையும் மறைப்பதும் இல்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதிவிடுகிறேன். அதே போல ஒவ்வொரு மாதமும் பேங்க் ஸ்டேட்மெண்ட்டை அப்படியே நிசப்தம் தளத்தில் பதிவிடுகிறேன். இவையெல்லாம்தான் நம்பிக்கையை உருவாக்கியிருக்க வேண்டும். இது என்னுடைய அனுமானம்தான். சரியான பதிலை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். 

உங்கள் இளமைப் பருவம் குறித்து தெரிந்து கொள்ளலாமா?

சொந்த ஊர் கரட்டடிபாளையம். ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சற்றே பெரிய கிராமம். வாய்க்காலும் வயலுமாக செழிப்பான ஊர். படித்து வளர்ந்ததெல்லாம் அருகாமை டவுனான கோபிச்செட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில்தான். நூறாண்டு கண்ட பள்ளி அது.  அம்மாவும் அப்பாவும் அரசு ஊழியர்களாக இருந்தார்கள். அதனால் ஒழுங்காகப் படிக்கச் சொல்லி அழுத்தம் இருந்து கொண்டேயிருந்தது. என்றாலும் திருட்டுத்தனமாக குருவி பிடித்தேன். வாய்க்காலில் குதித்து விளையாடினேன். முயல் வேட்டையாடினேன். அப்புறம் என்னனென்னவோ செய்தேன். அந்தத் திருட்டுத்தனங்கள் பால்யத்தை பால்யமாகவே காத்தன.

சாயந்திரம் அலுவலகம் முடித்து வரும் அம்மாவின் மங்கல வாழ்த்துக்கும் மண்டைக்கொட்டுக்கும் பயந்து எண்பது சதவீத மதிப்பெண் வாங்குகிற அளவுக்கு படித்தேன். அது ஓரளவுக்கு மரியாதையான மதிப்பெண்தான் என்றாலும் ஏகப்பட்ட பேர்கள் அதைவிட அதிக மதிப்பெண்கள் வாங்கி என்னைச் சுமாராகப் படிக்கும் மாணவன் பட்டியலில் சேர்த்திருந்தார்கள். தமிழ்நாட்டில் ப்ளஸ் டூவில் முதல் பிரிவு படித்தவர்களில் முக்கால்வாசிப் மாணவர்கள் பொறியியல் குட்டையில் விழும் பருவம் தொடங்கியிருந்தது. அதனால் நானும் மூக்கைப் பிடித்துக் கொண்டு எட்டிக் குதித்தேன். சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி நன்றாக முக்கியெடுத்தது. நல்ல கல்லூரிதான் என்றாலும் பி.ஈ முடித்த போது என் மீது எனக்கு நம்பிக்கை வந்திருக்கவில்லை. இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள் - ‘வேலைக்கு போகச் சொல்லி வற்புறுத்துவார்கள்’ என்று பயந்துதான் எம்.டெக் படிப்பிலேயே சேர்ந்தேன். அப்பாவுக்கு அது பெரும் செலவு. ஆயினும் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் உலகத்தின் சாளரங்களைத் திறந்து காட்டியதாகச் சொல்ல வேண்டும். வேலை, சம்பளம் என்று வாய்த்தவுடன் எல்லோருக்கும் நடக்கக் கூடியது எனக்கும் நிகழ்ந்தது- மனைவி பெயர் வேணி. மகன் பிறந்தான். இப்பொழுது அம்மா, அப்பா, தம்பியின் குடும்பம் நாங்கள் என கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். எனது அத்தனை வேலைகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டு என்னைத் தண்ணீர் தெளித்து விட்டிருக்கிறார்கள்.

சென்னைப் பெருவெள்ளத்தின் போது செய்த பணிகள் குறித்தும், சமீபத்தில் கடலூரில் செய்த சமூகப் பணிகள் குறித்தும் சொல்லுங்கள்...

சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவலாம் என்று  நிசப்தம் தளத்தில் எழுதிய பத்தே நாட்களில் கிட்டத்தட்ட அறுபது லட்ச ரூபாய் பணம் வந்தது. பணம் பிரச்சினையே இருக்காது என்று தெரியும். நம்பிக் கொடுக்கிறார்கள். உலகின் எங்காவது ஒரு மூலையிலிருந்து தமது உழைப்பில் விளைந்த காசை ஏதோவொரு நம்பிக்கையில் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்குத் துளி பங்கம் வந்தாலும் கூட மனிதனாக இருப்பதற்கே லாயக்கற்றவனாகிவிடுவேன் என்று உணர்ந்திருக்கிறேன். அதுதான் பயமாக இருந்தது. சரியான மனிதர்களுக்கு உதவி போய்ச் சேர வேண்டும் எனக் கங்கணம் கட்ட வேண்டியிருந்தது. வந்திருக்கும் பணத்தை வைத்து அரிசி, பருப்பு, சர்க்கரையில் ஆரம்பித்து பற்பசை வரை முப்பது பொருட்கள் அடங்கிய மூட்டை ஒன்றை முதற்கட்டமாக வழங்கினோம். ஒவ்வொரு மூட்டையும் ஆயிரம் ரூபாய் மதிப்பு பெறும். மொத்தம் ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

இரண்டாம் கட்டமாக பெரிய காட்டுப்பாளையம்- இந்த ஊரின் தலித் குடியிருப்பு மழை வெள்ளத்தில் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அந்த தொண்ணூற்றைந்து குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ஆடு, மாடுகள், முந்திரி உடைக்கும் எந்திரம் உள்ளிட்டவற்றை- கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய்க்கு வழங்கினோம்.

மூன்றாம் கட்டமாக முந்நூறு குடும்பங்களுக்கு ட்ரில்லிங் எந்திரம், மருந்து தெளிக்கும் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள்- அந்தப் பொருளை வைத்துக் கொண்டு தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்கிற வகையிலான பொருட்கள் இவை - கிட்டத்தட்ட இருபது லட்ச ரூபாய்க்கு கொடுத்திருக்கிறோம்.

கணக்குப் போட்டால் சற்றேறக்குறைய நாற்பது லட்ச ரூபாயை நெருங்கியிருக்கிறது. வெள்ள நிவாரணப் பணிகளை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். ஜூன் மாதத்தில் கல்விக் கட்டணமாகக் கொடுப்பதற்காக கணிசமான தொகையை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி நிசப்தம் அறக்கட்டளையின் வழியாக செய்யப்படுகிற கல்வி மருத்துவ உதவிகளை வழக்கம் போலவே தொடரலாம். 

இப்பணிகளின்போது நீங்கள் எதிர்கொண்ட நடைமுறைச் சிக்கல்கள் என்ன, எப்படிச் சமாளித்தீர்கள்?

ஒவ்வொரு நிகழ்வின் போதும் ‘அப்படியாமா இப்படியாமா..அப்படி நடக்குதாமா..இப்படி ஆகுதாமா’ என்று தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காத மற்றவர்கள் நம்மை பயமூட்டிவிடுவதுதான் மிகப்பெரிய நடைமுறைச் சிக்கல். சின்னச் சின்னப் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் ஏகப்பட்ட பேர் பின்னாலிருந்து வேலை செய்து கொடுக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் என்று ஏதாவதொரு பக்கத்திலிருந்து உதவி வந்துவிடுகிறது.

எந்தவொரு காரியத்தையும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் ஏதாவது பயமிருந்து கொண்டேதான் இருக்கும். துணிந்து ஆரம்பித்துவிட்டால் அவையவை தானாக நடக்கின்றன. இதுதான் அனுபவப்பூர்வமாக உணர்ந்த உண்மை.

அறக்கட்டளை உதவிகளின் போது நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் ஏதாவது?

அப்படி நிறைய நடப்பதுண்டு. தனிமையில் அவற்றை நினைத்து கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். ஆனால் அந்தச் சம்பவங்களை வெளிப்படையாகச் சொல்வது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. அப்படிச் சொல்வது உதவி பெற்ற அந்த எளிய மனிதர்களை அப்பட்டமாக்கிக் காட்டிவிடுவது போலாகிவிடக் கூடும் என தயங்குகிறேன்.

நற்பணிகளில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பற்றி...

ஆயிரக்கணக்கானவர்கள்! நன்கொடை வழங்குபவர்கள், பயனாளிகளுக்கும் எனக்குமிடையில் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர்கள், திட்டப்பணிகளை செயல்படுத்தித் தரும் தன்னார்வலர்கள், மனோரீதியிலான ஆதரவளிக்கும் வாசகர்கள் என்று துல்லியமாகக் கணக்குப் போட முடியாத எண்ணிக்கை இது. கிட்டத்தட்ட ஓர் இயக்கம் போல வளர்ந்திருக்கிறது. ஆனால் இயக்கம் என்று சொல்லிக் கொள்வதில்லை. அப்படிச் சொல்ல வேண்டியதுமில்லை. செய்கிற வேலைகளில் மனது வெகு திருப்தியாக இருக்கிறது.

இதுபோன்ற பணிகளுக்கு குடும்பத்தின் உறுதுணையும் அவசியம் அல்லவா? அதுபற்றி...

நிச்சயமாக. கூட்டுக் குடும்பம் என்று சொன்னேன் அல்லவா? அது பல விதங்களில் நல்ல விஷயம். எனக்கு பெரிய குடும்பப் பொறுப்பு என்று எதுவுமில்லை. திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் அலுவலகம். வார இறுதி நாட்களில் அறக்கட்டளை என்று ஒதுக்கி வைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் பயப்பட்டார்கள். வீட்டிலேயே தங்குவதில்லை என்று தயங்கினார்கள். பிறகு பயனாளிகளை அவர்கள் நேரில் சந்திக்கும் போதெல்லாம் நெகிழத் தொடங்கினார்கள். சரியான பாதையில் போகிறான் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். அதனால் இப்பொழுதெல்லாம் கண்டு கொள்வதில்லை. ‘இந்த வாரம் எந்த ஊருக்கு?’ என்று கேட்பதோடு சரி. எந்த ஊராக இருந்தாலும் பேருந்தை விட்டு இறங்கியவுடன் தனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு மனைவி விட்டுக் கொடுத்துவிடுகிறாள்.

ஒரு கவிஞராக இன்றைய கவிதைச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கவிதை எழுதி சில வருடங்கள் ஆகிவிட்டன. எக்ஸ்.கவிஞர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். கவிதை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் தனித்த மனநிலை வேண்டும். இப்பொழுது அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறேன். அவ்வப்போது வாசிக்கிறேன். ஆனால் அவ்வளவு உவப்பாக இல்லை. தமிழ் கவிதையுலகில் ஏதோ மிகப்பெரிய தடை இருக்கிறது.

உங்கள் வாழ்வில் மறக்க முடியாத மனிதர் என்று யாரைச் சொல்வீர்கள் ஏன்?

முப்பத்து நான்கு வயதுதானே ஆகிறது? படிப்பு, திருமணம், குடும்பம் என்கிற சராசரியான வாழ்க்கையிலிருந்து இப்பொழுதுதான் வெளியில் வந்திருக்கிறேன். சொல்லப் போனால் வாழ்க்கையே இப்பொழுதுதான் தொடங்குகிறது. இதுவரை எதிர்கொண்ட மனிதர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம்தான். இன்னும் பதினைந்து ஆண்டுகள் கழித்து இந்தக் கேள்விக்கு பதில் சொல்லட்டுமா? 

கடந்த ஆண்டு அமெரிக்கா வந்திருந்தீர்கள் அல்லவா, அமெரிக்க அனுபவம் பற்றிய  சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

அமெரிக்காவே சுவாரஸ்யம்தான். அடிக்கடி வாயைப் பிளந்து கொண்டிருந்தேன். ஒரு வார இறுதி நாளன்று டென்வரில் தங்கியிருந்த ஏங்கில்வுட் என்கிற இடத்திலிருந்து நகரத்தின் பதினாறாவது தெரு வரைக்கும்- கிட்டத்தட்ட இருபத்தைந்து கிலோமீட்டர் நடந்தேன். தன்னந்தனியாகத்தான். அப்பொழுது குளிர்காலம் தொடங்கியிருக்கவில்லை. அருமையான பருவம். கிட்டத்தட்ட ஒரு நாளே கரைந்தது. வீடுகளையும், தெருக்களையும், அந்த ஊரின் பிச்சைக்காரர்களையும், கஞ்சா புகைப்பவர்களையும் நடந்தால் மட்டுமே அருகாமையில் பார்க்க முடியும் என்று தோன்றியது. ஆனால் ஒரே பிரச்சினை என்னவென்றால் சாலையில் மனித நடமாட்டமே இருப்பதில்லை. தனித்துக் கிடப்பது போன்ற ஒரு மனநிலை உருவாகிவிடுகிறது. 

இன்னொரு சமயம் ட்வின் சிட்டீஸ் தமிழ்ச்சங்கத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். பெங்களூர் தமிழ்க் குழந்தைகளை விடவும் அமெரிக்க தமிழ் குழந்தைகள் தமிழ் படிப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. மற்றொரு நாள் டென்வரின் விவசாயிகளிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. பயிர் செய்யும் காலத்தில் விதைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அறுவடையின் போது மீண்டும் விவசாயம் பார்க்கிறார்கள். Part time farmers. ஆனால் இந்தியாவில் விவசாயி முழுநேரமும் விவசாயியாகவே இருக்கிறான். கடன்காரன் ஆகிறான். இந்திய விவசாயியின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாம் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன எனத் தோன்றியது. 

இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக டென்வர் மாகாணத்தின் தலைமையிடத்தில் நிகழ்ந்த மரபு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டேன். இருபது பேர் கூட போராட்டத்தில் இல்லை. வேடிக்கை பார்க்கத்தான் சென்றிருந்தேன். பேச சொன்னார்கள். பேசினேன். இப்படி எவ்வளவோ சுவாரஸியமான விஷயங்கள் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் விடவும் சில சுவாரஸியமான சம்பவங்களும் உண்டு. ஆனால் அதை உங்களிடம் தனியாகத்தான் சொல்ல முடியும்.

கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான உதவிகளில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள். பள்ளிகளின் தரம், மாணவர்களின் மேம்பாடு, ஆசிரியர்களின் திறன் பற்றி நீங்கள் என்ன அவதானிக்கிறீர்கள்?

அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தனித்து இயங்குகிறவர்களாக (Independent) இருக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்தே அவர்களாகக் குளித்து, அவர்களாக உண்டு, அவர்களாக பள்ளிக்கு கிளம்பிச் செல்கிறார்கள். விதிவிலக்குகள் இருந்தாலும் இதுதான் பொதுவான நிலை. ஆனால் நகர்ப்புற அல்லது தனியார் பள்ளிகளுக்கு இது வாய்ப்பதில்லை. குளித்து விட வேண்டும். உணவூட்டி விட வேண்டும். வீட்டு வாசலில் வந்து நிற்கும் வாகனத்தில் ஏற்றிவிட்டு வர வேண்டும். மாலை நான்கு மணிக்கு ஒன்றாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு பொடிக் குழந்தைகள் சாரிசாரியாக நடந்து வீட்டுக்குச் செல்வதை அரசுப் பள்ளிகளில் இயல்பாகப் பார்க்க முடிகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் இது சாத்தியமில்லை. ஓரளவு காசு சேரச் சேர அதீதமான பயத்தை தேடிக் கொள்கிறோம். ‘பைப் தண்ணியைக் குடிச்சா சளி புடிச்சுக்கும்’ என்பதில் ஆரம்பித்து ‘மண்ணில் விளையாடினால் பூச்சி வந்துடும்’ வரைக்கும் எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். எட்டாம் வகுப்புக் குழந்தை கூட சாலையைத் தனித்து தாண்டிவிட முடியுமாமல் தவிக்கிறது.

அதே போல ‘அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பொறுப்பற்றவர்கள்; யாரையும் கண்டுகொள்வதில்லை’ என்பதெல்லாம் பொதுமைப்படுத்தப்பட்ட வாதம். பெரும்பாலான அரசு மற்று அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். நேரடியாகவே பார்த்திருக்கிறேன். பிறகு எங்கே தேங்கிப் போய்விடுகிறார்கள் என்று கேட்டால் - exposure என்று சொல்லலாம். நகர்ப்புற, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைக்கக் கூடிய நவீன வசதிகள் அரசு மற்றும் உதவி பெறும் ஆசிரியர்களுக்குக் கிடைப்பதில்லை. வெளிப்புற ஆலோசகர்கள், பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி போன்றவை அளிக்கப்பட்டால் பெரும்பாலான கிராமப்புற/அரசுப் பள்ளிகள் பின்னியெடுத்துவிடுவார்கள் என்று தைரியமாக நம்பலாம்.

எதிர்காலத் திட்டங்கள் என்ன?

கடந்த வருடம் என்னை அழைத்து ‘அடுத்த வருடம் என்ன செய்யப் போவதாக உத்தேசம்’ என்று கேட்டிருந்தால் என்னால் சரியான பதிலைச் சொல்லியிருக்க முடியாது. அதே போலத்தான் இன்றைக்கும். அடுத்த வருடம் குறித்துக் கேட்டால் அப்படித்தான். ‘போகிற போக்கில் போய்க் கொண்டேயிருப்போம்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் செய்கிற வேலையை மனசாட்சிக்கு பங்கமில்லாமலும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செய்து கொண்டிருக்க வேண்டும். அது நம்மை சரியான இடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

‘இதனை இதனால் இதன் முடிக்கும் என்றாய்ந்து’தான் ஒவ்வொரு வேலையும் நம்மிடம் வந்து சேர்கிறது என முழுமையாக நம்புகிறேன். அதனால் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. கால் போன போக்கில் போய்க் கொண்டேயிருக்கலாம். வழியெங்கும் அன்பை விதைத்தல் தவிர சத்தியமாக வேறொன்றையும் யோசிக்கவில்லை. 

“வாசிக்கிறோம்; புத்தகம் எழுதுகிறோம், நான்கு பேர் நம் எழுத்தை வாசிக்கிறார்கள் என்ற அத்தனையையும் தாண்டி இது போன்ற காரியங்கள் காலாகாலத்துக்கும் நிம்மதியைத் தந்து கொண்டிருக்கும். அது போதும். எழுத்து வழியாகச் செய்ய முடிகிற முக்கியமான காரியம் இது என்று நினைக்கிறேன்” என்கிறார் மணிகண்டன்.

தொகுப்பு: அரவிந்த்.
இணையத்தில் : தென்றல்

13 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//தென்றல்//
பாஸ்போட்டு விசா எல்லாம் இருந்தா தான் அங்க (தென்றல்)கதவ தொறப்பாங்களாம்.

சேக்காளி said...

//சில சுவாரஸியமான சம்பவங்களும் உண்டு//
அந்த டேட்டிங் சமாசாரமா மணி?

Vaa.Manikandan said...

உங்ககிட்ட ஈமெயில் ஐடி இல்லையா? பாஸ்போர்ட் இல்லையாமா..விஸா இல்லையாமா....

ADMIN said...

அருமை.. எப்பொழுதும் போலவே நேர்காணலும் இயல்பாகவே இருந்தது. வாழ்த்துகள்!

சேக்காளி said...

#சதுரங்கன் : அடேய் சேக்காளி ஒங் கமெண்டுக்கு பதில் கமெண்டெல்லாம் வா மணிகண்டன் எழுத ஆரம்பிச்சுட்டாரு.இத பாத்தா அவரு அமெரிக்க சனாதிபதி ஆன ஒடனேயே துணை சனாதிபதியா ஒன்னை அறிவிச்சிருவாரோ ன்னு கெதக்கு ன்னு இருக்கு.

Avargal Unmaigal said...

அங்கே ஒரு கருத்து போடுறதுக்கு எல்லா பெர்ஷனல் மேட்டரை எல்லாம் கேட்கிறாங்க மணிகண்ட

Avargal Unmaigal said...

ஜஸ்ட் இமெயில் ஐடி கேட்டு இருந்தால் ஒகே ஆனால் பல விபரங்கள் கேட்கிறார்கள் அதில் நாம் பொய்யான விபரங்கள் கூட கொடுக்கலாம். அப்படி விபரம் கொடுத்துதான் கருத்து சொல்லனும் என்றால் யாரும் சொல்ல மாட்டார்கள்...

Unknown said...

EXCELLENT. Matured Response.

Added points for the QUESTION : உண்மைதான். ஆனால் நீங்கள் ஒரு தனி நபர். உங்கள் மீது இவ்வளவு பேர் நம்பிக்கை வைத்து உதவுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்

Many volunteers are spread across the world who has affectionate towards poor, willing to afford Money but no time. Others can afford time and no money, few can do both. However, all the cases, they search for responsible person or weapon, through which they can help others as a team. This indicates that humanity never dies. Establishing "TRUST" is a primary factor in social service and NISAPTAM did it 100% in all provided opportunities. Most importantly we are all connected through "Tamil".

Mohanapriya said...

அருமையான நேர்காணல். உள்ளதை உள்ளபடியே கூறும் தங்களின்
எழுத்து மிகவும் இயல்பானவை. உங்கள் எழுத்து மற்றும் அறக்கட்டளையின் செயல்கள்
மன நெகிழ்வை தருகின்றன. தங்களின் பணி மேன்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

BalajiMurugan said...

அருமையான நேர்காணல்... உணர்வுகளை தென்றலிடம் தெரியப்படுதியாகிவிட்டது....

viswa said...

அங்கே போய் முட்டிக்கொள்வதைவிட இங்கேயே சொல்லிவிடுகிறேன் நகைச்சுவை பன்னீரை தெளிப்பதில் சுஜாதாவின் வீட்டுக்கதவை நெருங்கிவிட்டீர்கள்
விஸ்வநாதன்

Venkatesh said...

Mani entha panthavum illai pettiyil

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

இனி மணி சாரும் ” ரோல் மாடலாக பேசப்போகிறார்கள்.