Apr 12, 2016

கட்சியா? வேட்பாளரா?

திமுகவா? அதிமுகவா? இந்தக் கேள்வியை வைத்துக் கொண்டு இணையத்தில் அலைந்தால் மண்டை காய்ந்துவிடும். அதிமுகவுக்கு எதிர்ப்பே இல்லாதது போல அம்மா கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள். திமுகவின் ராஜதந்திரம் பலித்துக் கொண்டிருப்பதாக ஐயா கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள். மாற்று சக்திதான் வெல்லும் என்றும் ம.ந.கூவினர் பேசுகிறார்கள். குழப்பிவிட்டு கும்மியடிக்கிறார்கள். உண்மையில் சூழல் அப்படியில்லை. சாமானிய மனிதர்கள் என்று நாம் கருதுகிற கட்சி சார்பற்ற மனிதர்கள் பெரும்பாலான மனிதர்கள் ஒரேவிதமான பதிலைத்தான் சொல்கிறார்கள். ஜெயலலிதா அரசின் மீது கடும் அதிருப்தியை வைத்திருக்கிறார்கள். ஆனால் ‘மக்கள்கிட்ட அந்தம்மாவுக்கு அதிருப்தியில்லை’ என்று ஆரம்பிக்கிறார்கள். 

‘உங்களுக்கு அதிருப்தி இல்லையா?’ என்று குறுக்குக் கேள்வியைக் கேட்கும் போது ‘எனக்கு அதிருப்தி இருக்கு’ என்கிறார்கள். பிறகு எப்படி மக்கள் மத்தியில் ஜெயாவுக்கு அதிருப்தியில்லை என்கிறார்கள்? ஊடகங்கள்தான் மிக முக்கியமான காரணம். அதிமுக ஆட்சியின் மீதான எதிர்ப்புணர்வை வெளிப்படையாக எழுதக் கூடிய கட்சி சார்பற்ற ஊடகங்கள் கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம். அதனால் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை போன்றதொரு மாயை உருவாகியிருக்கிறது. அரசு செயல்படவில்லை, பால், பேருந்து, மின்கட்டணங்கள் உயர்ந்திருக்கின்றன, ஊழல் மலிந்திருந்தது, டாஸ்மாக் கட்டுப்படுத்தப்படவேயில்லை, தொழில்துறையில் நிலவிய மந்தத் தன்மை என பல காரணங்களினால் இந்த அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புணர்வு இருந்தாலும் அதை யாரும் வெளிப்படையாக எழுதுவதும் பேசுவதுமில்லை. ‘அந்தம்மாவை பகைச்சுக்க முடியாது’ என்கிற மனநிலைதான் புரையோடிக் கிடக்கிறது. அதனால்தான் அதிமுகதான் திரும்பவும் ஆட்சியமைக்கும் என்ற நினைப்பு உருவாகியிருக்கிறது. 

உண்மையில் இந்த நினைப்பு திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘அவங்க மேல அதிருப்தி இல்ல’ ‘அவங்க பணம் செலவு பண்ணுவாங்க’ ‘அவங்களுக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறிடும்’ இப்படி ஆளாளுக்கு பேசுகிறார்கள். இந்த பிம்பங்களை திமுகவும் உடைக்கப்போவதில்லை ம.ந.கூவும் உடைக்கப் போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. அதிமுகவின் மீதான எதிர்ப்புணர்வு ஒரு பக்கம் என்றால் திமுகவின் மீது நம்பிக்கை உருவாகியிருக்கவில்லை என்பதும் நிஜம். கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் மத்தியில் தனது நம்பிக்கையை நிலைநாட்டும் வேலையை திமுக செய்திருக்கவில்லை. கடந்த நான்கைந்து சட்டமன்றத் தேர்தல்களாக நிலவிய ‘இது இல்லைன்னா அது’ என்கிற மனநிலை இன்றைக்கு இல்லை. குழப்பமான மனநிலைதான். ‘இது சரியில்லை...ஆனா வேற வழியில்லை’ என்கிற மனநிலை என்று வேண்டுமானால் சொல்ல முடியும். 

தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கக் கூடும். ஏதாவது அலையடித்தால் இந்த குழப்பமான மனநிலையில் மாறுதல் உண்டாகும் வாய்ப்பிருக்கிறது. அந்த அலைக்குத்தான் கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்சியும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட அலை எதுவும் உருவாகி விடக் கூடாது என்றுதான் விரும்புகிறேன். 1989 ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சியமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் அல்லது அவர்கள் என்று பெருமொத்தமாக தமிழக மக்கள் தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள். வேட்பாளரைப் பார்ப்பதைவிடவும் ‘இந்த முறை திமுக ஜெயித்துவிடும் அதனால் திமுக வேட்பாளருக்கு வாக்களிப்போம்’ என்றுதான் குத்தினார்கள். வெல்லக் கூடிய கட்சியில் வேட்பாளராக நின்றவர்கள் எம்.எல்.ஏக்கள் ஆனார்கள். அந்த நிலை இனிமேலாவது மாறட்டும். ‘இந்த அஞ்சு வருஷம் அவங்களா...அடுத்த அஞ்சு வருஷம் நாம்தான்’ என்கிற திமிரின் மீது சம்மட்டி அடி விழ வேண்டும். இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் குழப்பமான சூழலே நிலவட்டும். தவறு எதுவுமில்லை. கட்சியைப் பார்த்து வாக்களிக்காமல் வேட்பாளரைப் பார்த்து வாக்களிப்பதற்கான மனநிலை மக்களிடையே உருவாவதற்கு ஒரு வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமையட்டும்.

எங்கள் தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஏ.செங்கோட்டையன் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஐந்து வருடங்களாக டம்மியாக்கி வைக்கப்பட்டிருந்த அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டவுடன் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். வண்டி நிறைய சால்வைகளை நிரப்பிக் கொண்டு எதிர்ப்படுகிறவர்களுக்கெல்லம் போர்த்திவிட்டு ‘மாப்பிள்ளை நல்லா இருக்கியா?’ ‘பங்காளிங்ககிட்டயெல்லாம் சொல்லிடு’ என்கிறார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களில் இப்படி வாய் நிறையப் பேசுவதைத் தவிர வேறு எதையும் செய்யாதவர் அவர். பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வாசலில் அம்மையாருக்காக காத்திருந்த போது வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். தனிப்பட்ட முறையில் என்னை அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த முறை நேரில் பார்த்த போது அம்மாவிடம் (இது எங்கள் அம்மா) ‘ஜெயில்ல என் கூடவேதான் இருந்தான்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அப்பாவுக்கு செங்கோட்டையன் என்றால் பாசம். ‘அவருக்கு எதிரா எதையும் எழுதிடாத’ என்றார். அது சரி என்று நினைத்துக் கொண்டேன்.

கோபி தொகுதி அவரைத் திரும்பத் திரும்பச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தது. தொழிற்சாலை, அரசுக் கல்லூரி, பாலிடெக்னிக், வேளாண்மை தொழில் வளர்ச்சிக்கான கட்டிடங்கள் என்று எதையுமே செய்யாத அரசியல்வாதியாகவே காலத்தை ஓட்டிவிட்டார். ஆனால் எல்லோரிடமும் நன்றாகப் பேசுவார். அது மட்டும் போதுமா? நீண்டகாலத் தொலை நோக்குப் பார்வை இல்லாத எந்தவொரு மனிதரையும் நாம் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்கிறார்கள். சரவணன் நம்பியூருக்குப் பக்கத்தில் சொக்குமாரிபாளையத்துக்காரர். ஐந்து வருடங்கள் ஈரோடு மாவட்ட சேர்மேனாக இருந்தவர். சில வருடங்களுக்கு முன்பாக அந்த ஊர் வழியாகச் செல்லும் போது ‘இதான் சேர்மேனோட வீடு’ என்றார்கள். எட்டிப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. கால்வாசி கட்டப்பட்டு அப்படியே கைவிடப்பட்ட வீடு அது. பணம் இல்லாமல் கட்டி முடிக்காமல் விட்டுவிட்டதாகச் சொன்னார்கள். இத்தனைக்கும் அப்பொழுது அவர் பதவியில் இருந்தார். சாதாரண கவுன்சிலர் கூட பங்களாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சரவணன் அவ்வளவு ‘பிழைக்கத் தெரியாத மனுஷன்’. அந்த கட்டிமுடிக்கப்படாத வீடு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் சரவணன் மாதிரியான நேர்மையாளர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி அவர்கள் வெல்ல வேண்டும் என விரும்புகிறேன்.  

‘சரவணனுக்கு வாய்ப்பிருக்குங்களா?’ என்று உள்ளூரில் கேட்டால் பெரும்மொத்தமாக எதைச் சொல்கிறார்களோ அதையேதான் சொல்கிறார்கள். ‘சரவணன் நல்ல மனுஷன்....ஓட்டு வாங்குவாரு...ஆனா ஜெயிக்கற அளவுக்கு செலவு பண்ண சரவணன்கிட்ட பணம் இல்லைங்க...’ - பணம் இருந்தால்தான் வெல்ல முடியும் என்கிற மனநிலைக்கு நாம் வந்து சேர்ந்துவிட்டோம். எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் சரி. அவனிடம் பணம் வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு அவமானம்? இந்த அவமானத்தை துடைத்தாலே நம்முடைய ஜனநாயகம் ஓரளவு வெற்றியடைந்தது மாதிரிதான். 

இப்பொழுதெல்லாம் நேர்மையும் ஒழுக்கமும் இருக்கிற மனிதர்கள் யாருமே இல்லை என்கிறோம். அப்படி ஒரு ஆளைக் கண்டுபிடித்துவிட்டால் ‘அந்த ஆளுகிட்ட பணம் இல்லை’ என்கிறோம். முரட்டுத்தனமாக கட்சி அரசியல் பேசாமல் வேட்பாளர்களின் அடிப்படையில் நம் வாக்கு இருக்கட்டும். எந்தத் தொகுதியாக இருந்தாலும் சரி- எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே! கட்சியைத் தாண்டி வேட்பாளரைப் பார்த்து வாக்களிக்கும் மனநிலை உருவாவதற்கான வாய்ப்பு அமையட்டும்.

சரவணன் மாதிரியான ஆட்கள் நின்றால் அவருக்கு வாக்களிப்பதில் தயக்கம் எதுவுமில்லை. ஒருவேளை காங்கிரஸில் வேறு யாரையாவது நிறுத்தினால்? கஷ்டம்தான். வேறு வேட்பாளர்களைத் தேடிப் பார்க்கலாம். கிடைக்கவில்லையென்றால் வாக்களிப்பதற்காக பெங்களூரிலிருந்து ஊருக்குச் சென்று வருகிற செலவை மிச்சப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

20 எதிர் சப்தங்கள்:

Carfire said...

குருமந்தூர் தாண்டுனா ஒரு வறட்டு பிரதேசம் இருக்குறதே அவரு கண்ணுக்கு தெரியாது. கோவிலுக்கு பத்தாயிரம் நன்கொடை கொடுக்க மட்டுமே இந்த பக்கம் வர்றாரு. என்னத்த சொல்ல.

Unknown said...

திரு மணி
உங்கள் கருத்தை ஒப்புக்கொள்கிறேன் அதற்காக வோட் போடாமல் இருக்கவேண்டாம் நோட்டா இருக்கு அதுக்கு போடலாமே

சேக்காளி said...

//வேட்பாளர்களைத் தேடிப் பார்க்கலாம். கிடைக்கவில்லையென்றால் வாக்களிப்பதற்காக பெங்களூரிலிருந்து ஊருக்குச் சென்று வருகிற செலவை மிச்சப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.//
ஒருத்தருமே நோட்டு குடுக்கலேன்னா நோட்டோ வுல ஓட்டை போடுங்க ன்னு அதுக்கு ஒரு சின்னம் வச்சிருக்காகளாமுல்ல. வந்து அதுக்காகவாவது ஓட்டை போட்டுட்டு போலாமுல்ல.

சேக்காளி said...

//‘அவருக்கு எதிரா எதையும் எழுதிடாத’ என்றார்//
அந்த "சங்கு" பழமொழி ஞாவத்துக்கு வந்துட்டு போவுது.

ADMIN said...

பணமில்லைன்னா ஜெயிக்க முடியாது. அந்த மனநிலைக்கு மக்களை முதலில் தள்ளியதும் ஒரு பெரும் கட்சிதான். பணத்தையும், இலவசத்தையும் மக்களுக்கு , நாய்களுக்கு பிஸ்கட் போடுவது போல போட்டு ஓட்டு வாங்கும் தந்திரத்தை கையாண்டவர்கள்தானே...? அவர்கள். நீங்கள் கூறுவதுபோல ஏதாவது அலை அடித்தால் தான் உண்டு.. எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற...அதுவும் கூட பரிதாபத்தின் அடிப்படையில் தான் ஓட்டு விழும். இந்த முறை மக்களும் கொஞ்சம் தெளிந்த மாதிரிதான் இருக்கிறார்கள். பார்ப்போம்..என்ன நடக்கிறதென..!

Anonymous said...

ODU MEEN ODA URU MEEN VARUMALAVUM KATHIRUKUMAAM KOKKU.. it's not advisiable to judje the people.. with current status... when people with more power and status.. they will change and more harm to public.. one or two exceptions.. wishes saravanan will be one of the exceptions...but he may need to get permission from delhi to all his good doing...

Anonymous said...

தமிழினத்தை கருவறுத்த காங்கிரசுக்கு வோட்டா?!!!!!!!!!

Anonymous said...

நாம் தமிரழைப்பற்றி ஏன் எழுதுவதில்லை கள்ள மௌனம்.....

Vaa.Manikandan said...

இன்றைய தேதியில் சீமான் பற்றி எனக்கு பெரிய நம்பிக்கை எதுவுமில்லை. கோபியில் பேசும் போது பெரியாரை வெகுவாக உயர்த்திப் பேசினார். தஞ்சைக் கோவிலில் நாம் தமிழர் வரைவறிக்கைக்கு பூஜைகள் செய்கிறார். நான் நாத்திகவாதியில்லை. ஆனால் அவரது கொள்கைகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை. தலித் படுகொலைகளைப் பற்றிய அவரது கருத்துக்கள் என்ன? ஆணவக் கொலைகளில் நாம் தமிழர் அமைப்பின் கொள்கை நிலைப்பாடு என்ன என்பது குறித்தெல்லாம் விவாதிக்கத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் அவசியமா என்றுதான் புரியவில்லை.

http://www.nisaptham.com/2012/11/blog-post_28.html

Unknown said...

Hello Manikandan, "Nisaptham" is the first web page I am seeing every morning. I like most of your writings except your open support for DMK. Even in this write up you missed the "Nadhi Mulam" Thirumangalam formula. Sorry, that I have not written anyother comments from the day I have started to read your blog. But I could not control when seeing the support for DMK. One of the main reason for TN's current status is the longevity of the one of the leader. Otherwise political scenario might have been changed long back.

Vaa.Manikandan said...

திமுகவை ஆதரிக்கிறேன் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். ஒரு திமுகக்காரனாவது நான் திமுக அபிமானி என்று ஏற்றுக் கொண்டால் அரசியல் குறித்து எழுதுவதையே நிறுத்திவிடலாம் :) நாம் எந்தப் பக்கம் இருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் புரிதல் மாறுபடுகிறது. திமுகவை நான் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதனால் அதிமுகவை ஆதரித்து எழுத வேண்டும் என்று அர்த்தமில்லை. அதிமுகவை எதிர்க்கும் போது திமுகவை ஆதரிக்கிறான் என்றும் திமுகவை எதிர்க்கும் போது அதிமுகவை ஆதரிக்கிறான் என்றும் binary ஆக புரிந்து கொள்வதுதான் இங்கே துரதிர்ஷ்டம். திமுகவை ஆதரித்து எழுதியதை ஆதாரத்துடன் நீங்கள் சொன்னால் என்னுடைய கருத்தை அதற்கு ஏற்ப முன்வைக்கிறேன்.

Vaa.Manikandan said...

திருமங்கலம் பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாயா என்று கேட்பதற்கு முன்பாக ‘திருமங்கலம்’ என்று நிசப்தத்திலேயே தேடினால் கூட ஏதாவது குறிப்பு கிடைத்திருக்கும். நம்பிக்கையில்லையென்றால் இந்த இணைப்பில் பார்க்கவும்.

http://www.nisaptham.com/2016/02/blog-post_26.html

ஒருவன் மேல் முத்திரை குத்துவது எளிது. ஆனால் புரிந்து கொள்வது கஷ்டம். தொடர்ந்து வாசிக்கிறவர்கள் புரிந்து கொள்ளக் கூடும்.

Anonymous said...

காங்கிரசுக்கு வாக்கு செலுத்துவேன் என்று ஒருவர்
அதுவும் படித்தவர் சொல்கிறார் என்றால் அவரின்
அரசியல் பார்வை தான் என்ன?

பொன்.முத்துக்குமார் said...

// பணம் இருந்தால்தான் வெல்ல முடியும் என்கிற மனநிலைக்கு நாம் வந்து சேர்ந்துவிட்டோம். எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் சரி. அவனிடம் பணம் வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு அவமானம்? //

நீங்கள் சொல்வது, கொழுத்த லாபம் பார்க்கவேண்டி முதலீடாக போட தேவைப்படும் பெரும்பணத்தை என்று புரிந்துகொள்கிறேன்.

அப்படி இல்லாமல் நேர்மையாகக்கூட தேர்தலில் போட்டியிட கணிசமாக பணம் தேவைப்படும் நிலையை அவமானமாக பார்க்கவேண்டுமென்பதில்லை. இவ்வுலகில் எதற்கும் விலையுண்டு எனும்போது வாக்கு பெற (கவனிக்கவும், “வாங்க” அல்ல) செலவு செய்ய பணம் தேவை என்ற நிலை இருப்பதை எதற்கு அவமானமாக நினைக்கவேண்டும் ? அட, எந்த செலவும் இல்லை, வெறுமனே தொகுதியில் இருக்கும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நேரில் சந்தித்து மட்டுமே வாக்கு கேட்க எவ்வளவு செலவாகும் என்று யோசித்துப்பாருங்கள்.

அப்படியானால் பணமிருப்பவர்கள் மட்டும்தான் தேர்தலில் நிற்க முடியுமா ? கட்சி சாராதவர்கள் எனில் அதுதான் உண்மை, கசப்பானதாக இருப்பினும். கட்சி சார்ந்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சி, கூட்டம் போட்டு கட்சி அபிமானிகளிடம் வசூல் செய்தும், வணிக நிறுவனங்களின் ஸ்பான்ஸர் பெற்றும் பணம் திரட்டிக்கொள்ளலாம். அமெரிக்காவில் நடப்பது பெரும்பாலும் இப்படித்தான்.

அப்படி இல்லாத பிரபல தன்னார்வலர்கள் - சகாயம், ட்ராஃபிக் ராமசாமி போன்றவர்கள் - எனில், அவர்கள் தங்களது பிரபலத்தையும், நேர்மை, எளிமை போன்ற குணங்களையும் முதலீடாகச்செய்து தொழில் நுட்பம் மூலம் (வலைதளங்கள், வாட்ஸப், முகநூல், தொலைபேசி) மூலம் தொடர்ச்சியாக பொதுமக்களோடு தொடர்பில் இருந்து - இப்படி ஏதாவது செய்யவேண்டியதுதான். ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் வெல்ல நமது ஜனநாயகம் இன்னும் முதிரவேண்டும்.

அதுவரை ?

காசேதான் கடவுளடா-தான் :)

Jaikumar said...

Nadhimulam is not Thirumangalam. Kummidipoondi is nathi mulam.
Heard a lot about Saravanan from my dad. Booked tickets 1 week back.

kailash said...

Mani : I can clearly tell you , you are not a DMK supporter you have always written against DMK :-) . KA Sengaottaiyan has been MLA from 1989 till date , he was powerful minister in all ADMK ministries except the last one , till as a constituent you are saying he dint do much . Atleast now people should awake and vote for the candidate who will atleast make an attempt to think for constituency instead of attending marriage and grahapravesam . My constituency Madhuravoyal has got good candidates ADMK is exception , sitting communist MLA , Cong Candidate mostly redient association leader , PMK s Dilli Babu and ADMKs Benjamin ( Chennai Corp. Deputy Mayor ) . All are well known persons except ADMK rest of them have either stood for people and did for people . We need atleast 30 to 40% of good candidates in assembly to change the way assembly functions and brings in more to the constituency .

Anonymous said...

The ground reality is confusion among voters to whom they vote? The previous
regime of DMK is notorious for corruption even at grassroot level. That
defeated them in the last Assembly election. The public anger against them
lasted even up to Parliament elections in 2014 in which AIADMK sweeped the polls.
Now the socalled third front which is a bundle of contradictions may never
win, but will certainly spoil the chances of both DMK and AIADMK in certain
constituencies. So this 2016 elections is different from previous elections.

Anonymous said...


//காங்கிரசுக்கு வாக்கு செலுத்துவேன் என்று ஒருவர்
அதுவும் படித்தவர் சொல்கிறார் என்றால் அவரின்
அரசியல் பார்வை தான் என்ன?
//

கிழிஞ்சுது...அவர் எங்க அப்படிச் சொன்னார்...? தகுதியான வேட்பாளர்களுக்கு அவர்கள் எந்தக் கட்சியானாலும் ஒட்டுப் போடலாம் என்றுதான் சொல்கிறார். சரவணன் அப்படித்தான் தெரிகிறார்...என்ன காங்கிரசுக்காரராய்ப் போய் விட்டார்! அதனால் என்ன?

Anonymous said...

//காங்கிரசுக்கு வாக்கு செலுத்துவேன் என்று ஒருவர்
அதுவும் படித்தவர் சொல்கிறார் என்றால் அவரின்
அரசியல் பார்வை தான் என்ன?
//

கிழிஞ்சுது...அவர் எங்க அப்படிச் சொன்னார்...? தகுதியான வேட்பாளர்களுக்கு அவர்கள் எந்தக் கட்சியானாலும் ஒட்டுப் போடலாம் என்றுதான் சொல்கிறார். சரவணன் அப்படித்தான் தெரிகிறார்...என்ன காங்கிரசுக்காரராய்ப் போய் விட்டார்! அதனால் என்ன?

நல்லவராய் இருந்தால் ஏன் தமிழினத்தை கருவறுத்த காங்கிரஸில் இன்னும் இருக்கிறார். *என்ன காங்கிரசுக்காரராய்ப் போய் விட்டார்!* ஒருவர் வெறும் இருபது முப்பது வருடங்கள் ஒரு கட்சியில் இருப்பதாலேயே நான் காங்கிரஸ்காரன், திமுககாரன், அதிமுககாரன் என்று உளவியல் ரீதியான அடிமையாகி, மாற்று கட்சிகாரருக்கு பெண் கொடுப்பதற்கு கூட தயங்குகிற, தன் கட்சி என்ன அநீதி செய்தாலும் சகித்து கொள்கிற ஒருவரை திரு மணிகண்டன் ஆதரிக்கிறார். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டு ஜாதியத்தில் ஊறிய அதை விட்டு வெளி வர முடியாமல் தவிக்கும் சாமானிய மனிதர்களை ஜாதி வெறியர்கள் என விமர்சிகிறார்.

Ram said...

சரவணன் தான் வேட்பாளர். நீங்கள் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும்.