Apr 28, 2016

என்ன செய்யப் போகிறோம்?

கோழி முட்டையிட்டிருக்கிறது. கோழிக்காரர் ஒவ்வொரு நாளும் முட்டையை எடுத்து அலமாரியில் வைத்திருந்தாராம். திடீரென்று அலமாரிக்குள்ளிருந்து கோழிக்குஞ்சு சத்தம் கேட்டிருக்கிறது. பதறிப் போய் அலமாரியைத் திறந்தால் அடை வைக்காமலே முட்டை குஞ்சாக மாறியிருக்கிறது. இது கதையில்லை. இந்தக் கோடையில் உண்மையிலேயே நடந்திருக்கிறது. அவ்வளவு சூடு. கோழிப்பண்ணை இன்குபேட்டர்களில் முட்டையிலிருந்து குஞ்சு பொறிக்க வைக்க 99 முதல் 102 பாரன்ஹீட் வெப்பத்தை பராமரிப்பார்கள். இப்பொழுதுதான் சராசரி வெப்பநிலையே சாதாரணமாக நூறைத் தாண்டுகிறது. அப்புறமென்ன? முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளியே வந்து விட்டது. இப்படியெல்லாம் முட்டை குஞ்சானது. குஞ்சு ரோஸ்ட் ஆனது போன்ற செய்திகளையெல்லாம் படிக்கும் போது நமக்கு என்ன ஆகுமோ என்று திக்கென்றிருக்கிறது. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு!


சிரிப்பதற்கு எதுவுமில்லை. ஊரெல்லாம் மிகக் குரூரமாக காயத் தொடங்கியிருக்கின்றன. கடந்த ஆண்டு பெய்த மழையில் சற்றே தம் கட்டிய விவசாயிகள் இப்பொழுது பதறுகிறார்கள். ‘இனியும் இந்த வெயில் அடித்தால் தாங்காது’ என்கிறார்கள். வெயில் நமக்கு வெறும் சூடு மட்டும்தான். ஏஸியும் மின்விசிறியும் காத்துவிடக் கூடும். ஆனால் விவசாயிகளுக்கு அது நெருப்பு. எங்கள் ஊர்ப் பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பிப் பிழைக்கும் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் சொட்டு நீர் பாசனம் அமைத்திருக்கிறார்கள். வெயில் காலம் ஆனால் நிலத்தடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்து விடுகிறது. ஆனால் வெயிலின் கடுமை காரணமாக பயிர்களுக்கு பாய்ச்ச வேண்டிய நீரின் அளவு அதிகமாகிறது. இல்லையென்றால் பயிர்கள் காயத் தொடங்குகின்றன. அதனால்தான் இப்பொழுதெல்லாம் பங்குனி, சித்திரை வந்தாலே பதற்றமாக இருக்கிறது. 

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலை இந்த மாதம் பெங்களூரில் பதிவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட அத்தனை ஊர்களிலும் இதுதான் நிலைமை. தமிழகத்தின் வேலூர், கர்நாடகத்தின் கலபுரகி ஆகிய ஊர்களில் வெப்பநிலை சாதாரணமாக 115 டிகிரியைத் தொடுகிறது. ஒவ்வோராண்டும் சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்து ஆடப் போகிறது என்கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் தெற்காசியா மக்கள் வாழும் தகுதியை இழந்த நிலப்பரப்பாக மாறிவிடும் என்றொரு குறிப்பை வாசித்தேன். எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அளவு கடந்த கார்பன் உமிழ்வு, வாகனப் பெருக்கம், வனப்பரப்பின் சுருக்கம் என ஏகப்பட்ட காரணிகள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் வாழ்ந்த இந்த பூமியை கடந்த நூறாண்டில் மட்டும் மிக மிக மோசமாக குதறியிருக்கிறோம். வளர்ச்சி என்ற பெயரில் இருக்கிற அத்தனை வளங்களும் கருணையே இல்லாமல் சுரண்டப்படுகின்றன. வாழ்வதற்கான உழைப்பு என்ற நிலை மாறி சம்பாதிப்பதற்கான உழைப்பு என்ற நிலையை அடைந்ததன் விளைவு இது. 

நீங்களும் நானும் பேசிக் கொண்டிருந்தால் எதுவும் நடக்கப் போவதில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் யுகம் இது. ஒரு நாளைக்கு சராசரியாக இருபத்தைந்து லட்சம் மரங்களை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானவை தொழிற்சாலைகளுக்குச் செல்கின்றன. வீடு கட்ட, சாலையை அகலப்படுத்த என்ற பிற காரணங்களினாலும் மரம் வெட்டுதல் நிகழ்கிறது. ஒரு நாளைக்கு இருபத்தைந்து லட்சம் மரங்களை வெட்டுகிறோம் என்றால் ஒவ்வொரு வருடமும் எவ்வளவு மரங்களை வெட்டுவோம்? கணக்குப் போட்டுக் கொள்ளலாம். ‘மரத்தை வெட்டுவதை நிறுத்து’ என்று நாம் சொன்னால் யாரும் கேட்கப் போவதில்லை.  ‘நீ வண்டி ஓட்டுறதை நிறுத்திட்டு பேசு’ என்பார்கள். வாகனங்கள் வெளியிடும் புகை சூழலின் வெப்பநிலையை அதிகமாக்குகிறது. தொழிற்சாலைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அதீதமான விளக்குகள், மின்விசிறிகள், குளிரூட்டிகள் போன்ற தனிமனித மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் போது மின் உற்பத்தியின் அளவை அதிகரித்து சூழலை மாசாக்குகிறோம். விழாக்களில் கட்டப்படும் சீரியல் விளக்குகள், அலங்கார விளக்குகள் என எல்லாவற்றிலும் ஏதாவதொரு வகையில் சூழலை மாசாக்குகிறோம். குடிநீரை பாட்டிலில் வாங்கிக் குடித்து நிலத்தை மாசடையச் செய்கிறோம். துணி துவைப்பதிலிருந்து, நீச்சல் குளம் வரைக்கும் நம்முடைய சொகுக்குக்காவும் வசதிக்காகவும் நீர் உபயோகத்தை அதிகரிக்கிறோம். இப்படி நம்முடைய ஒவ்வொரு செயலிலும் தவறுகளைச் செய்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி கை நீட்டுவதில் எந்த அர்த்தமுமில்லை.

நாம் துரும்பையாவது கிள்ளிப் போடுகிறோமா என்று முதலில் யோசிப்போம். ‘அய்யோ வெயில் பயங்கரமப்பா’ என்று சொல்லிவிட்டு இருபத்து நான்கு மணி நேரமும் ஏஸி வேண்டும் என்கிற மனநிலையிலிருந்து வெளியில் வர வேண்டும். ‘உலகமே இப்படித்தான் இருக்கு..நான் ஒருத்தன் மட்டும் ஒழுக்கமா இருந்தா சரியாகிடுமா’ என்று நாமாகவே நினைத்துக் கொள்வதில்தான் முக்கால்வாசி பிரச்சினைகள் தொடங்குகின்றன. நம்மிலிருந்து மாற்றம் ஆரம்பிக்க முடியும்.

ஒவ்வொரு வருடமும் பங்குனி சித்திரையில் பதறிவிட்டு அடுத்தடுத்த மாதங்களில் வேறொரு பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுகிறோம். இத்தகைய பணிகளில் நீண்டகால திட்டமிடலும் செயல்பாடும் அவசியம். பிறந்தநாளின் போதும் திருமண நாளின் போதும் ஒரு செடியை நடுவோம் என்று முடிவு செய்தாலும் கூட போதும். திருமண நாளைக் கொண்டாடுவதில் உடன்பாடில்லை என்றால் பிறந்தநாளையாவது கொண்டாடலாம். வருடம் ஒரு மரம் என்றாலும் கூட இறப்பதற்குள் முப்பது அல்லது நாற்பது மரங்களை உருவாக்கிவிட முடியும். ஒரு மனிதர் சராசரியாக இருபத்தைந்து மரங்களை உருவாக்கினால் நிலைமை முற்றாக மாறிவிடும். அதெல்லாம் நடைமுறைச் சாத்தியமில்லை என்றாலும் நம்மால் ஆளுக்கு ஐந்து மரங்களை உருவாக்க முடியும். அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்த எண்ணத்தை உருவாக்கலாம். கோடிக்கணக்கான மரங்கள் வெட்டிக் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான மரங்களையாவது வளர்த்து பூமியின் ஆயுளை ஒன்றிரண்டு நாள் அதிகமாக்கலாம்.

எல்லாவற்றையும் யாரோ வந்து ஆரம்பித்து வைப்பதில்லை. நாமே ஆரம்பிக்கலாம். பேசிவிட்டு விட்டுவிட முடியாது. நல்ல விதைகளைச் சேகரித்து வைக்கலாம். வீட்டுக்கு எதிரிலோ அருகாமையிலோ இடம் ஒன்றைப் பார்த்து வைக்கலாம். வெயில் முடிந்து மழைக்காலம் தொடங்கும் போது ஒரு விதையை நடுவோம். ஒரு செடியை வளர்ப்போம். அது போதும். வீட்டுக்கு முன்பாக ஒரு மரம் இருந்தால் பாதி வெப்பம் குறைந்தது போல இருக்கும். பொதுநலத்திலும் ஒரு சுயநலம்தான். நம்மால் இயன்றதைச் செய்துவிட்டு அடுத்தவர்களை நோக்கி விரல் நீட்டுவோம். இல்லையென்றால் கோடையில் நூறு டிகிரியைத் தொடும் வெப்பநிலைமானிகள் மற்ற பருவங்களிலும் நூறைத் தாண்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஒவ்வொரு நாளும் வெயிலில் நடக்கும் போது இதைத் தெளிவாகவே உணர முடிகிறது. 

9 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//மக்கு என்ன ஆகுமோ என்று திக்கென்றிருக்கிறது. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு!//
இம்புட்டு வெயிலுலேயும் குசும்ப பாத்தியளா.

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் கூட சூழல் மாறும்!

Avargal Unmaigal said...

வட நாட்டில் ஒரு மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இப்படிதான் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மரம் எனு வளர்த்து இப்ப அந்த கிராமமமே பசுமையாக இருக்கிறதாம்

தமிழக புதுக்க்கோட்டையில் விதைக்"கலாம் என்ற பெயரில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மரச் செடிகளை நட்டு வளர்த்துவருகிறார்கள்.


இப்படி ஒவ்வொருத்துவரும் செய்து வந்தால் பெரும் மாற்ரம் ஏற்படும் என்பது நிச்சயம்..


இங்கு நான் பயணம் செய்யும் போது பார்த்து வியப்பது சாலை ஒரங்களில் வளர்ந்து இருக்கும் மரங்களை பார்த்துதான்

Anonymous said...

சிறிது காலம் முன்னர்தான் வரலாறு காணாத மழை கண்டோம். வந்த மழை எங்கே சென்றது?

Anonymous said...

Correct Sekku.. sema kusumbu....

ADMIN said...

சரிதான்...நம்மிலிருந்தே ஆரம்பிப்போம். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மரங்களை வெட்டும் நிலையில், ஒருவர் தன் வாழ்நாளில் 5 மரங்களை வளர்ப்பதன் மூலம் எப்படி ஈடு செய்ய முடியும்? மரம் வளர்ப்பதோடு, தேவையில்லாமல் மரங்களை அழிப்பதிலிருந்தும் காக்க வேண்டும். இது கட்டாயம் இல்லையென்றால் ஓட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றிய கதையாகிவிடும்.

நாச்சியப்பன் said...

It is almost sixty years since India adopted SI system of units. It is very unfortunate that even university educated engineers like yourself use non-standard units like Fahrenheit. Do you know use of non-standard units in professional practices may lead to serious consequences (like the Canadian air lines that crash landed due to incorrect fuel on board). Nisaptham should lead in educating its readers to use only standard units. The movement has to influence the journalists as well. It is important to note that the common man is ready to accept changes - for example with-in seven years since SI units was introduced whole India changed from Paise (one/sixty) to Naye Paise (one/hundred parts). Similarly we must discourage the use of feet, cubic feet and Fahrenheit etc. Only use Meters, Liters and Celsius etc.

Vinoth Subramanian said...

//திருமண நாளைக் கொண்டாடுவதில் உடன்பாடில்லை என்றால் பிறந்தநாளையாவது கொண்டாடலாம்.// Why? wedding days will lead to two new tree where as, birthday will help us to plant only one. The more wives a person has, the more trees can be planted. Am I not correct?

Ravi said...

For some reason I always understand better if temperature is mentioned in Fahrenheit!