Apr 27, 2016

பொம்பளை வாசம்

கோணப்பண்ணனுக்கு இன்றைய கணக்குக்கு அறுபது வயது இருக்கக் கூடும். இதுவொரு மனக்கணக்குத்தான். யாரும் தேதி குறித்தெல்லாம் வைத்திருக்கவில்லை. அது என்ன கோணப்பண்ணன்? இந்தக் கேள்வியை இதுவரைக்கும் யாருமே கேட்டதில்லை. நேரில் பார்த்தாலே தெரிந்துவிடும். பிறந்ததிலிருந்தே கால்கள் இரண்டும் வளைந்திருந்தன. அப்பனும் ஆத்தாவும் வேறு ஏதோவொரு பெயரைத்தான் வைத்திருந்தார்கள். ஆனால் ஊர் தனக்குப் பிடித்த பெயரை வைத்துக் கொண்டது. தொடக்கத்தில் கோணைக்காலன் என்றுதான் அழைத்தார்கள். அது மருவித்தான் கோணப்பன் என்றானது. அதன்பிறகு அவரை விட இளையவர்கள் பெயருக்குப் பின்னால் அண்ணன் விகுதி சேர்த்து கோணப்பண்ணன் ஆக்கிவிட்டார்கள். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை என எல்லாவற்றிலும் கோணப்பண்ணன்தான். அவரும் அலட்டிக் கொள்வதில்லை.

கோணப்பனை படிக்க வைத்தார்கள். உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பிலேயே வாத்தியாரின் மண்டையை உடைத்துவிட்டதாக சொல்லிவிட்டு கெக்கேபிக்கே என்று சிரிப்பார். அதன் பிறகு கோணப்பனுக்கு பிழைப்பே ஆடுகள்தான். மண்டை உடைத்த வைபவத்திற்கு பிறகு ஆரம்பத்தில் தோட்டங்காட்டு வேலைக்குத்தான் அனுப்பினார்கள். ஆனால் வேலை செய்வது அவ்வளவு சுளுவாக இல்லை. வளைந்த கால்களை வைத்துக் கொண்டு மண்வெட்டி பிடிப்பது சரிப்பட்டு வராது என்றுதான் இரண்டு வெள்ளாட்டுக்குட்டிகளை வாங்கிக் கொடுத்தார்கள். ஆனால் மேய்ப்பதும் கூட லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. அவை அங்கேயும் இங்கேயும் இழுத்துக் கொண்டு ஓட அவற்றின் பின்னால் ஓடுவதும் கோணப்பண்ணனால் இயலவில்லை. பார்க்கும் வரை பார்த்துவிட்டு வீட்டிலேயே பட்டி போட்டு கோணப்பண்ணனே தீவனம் அறுத்து வந்து போடத் தொடங்கினார். வாய்க்காலில் தண்ணீர் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி. வெயிலாக இருந்தாலும் சரி மழையாக இருந்தாலும் சரி. கருக்கு அரிவாளை இடுப்பில் செருகிக் கொண்டு காலையிலேயே கிளம்பிவிடுவார். புல்லும் செடியும் அறுத்து ஊனாங்கொடியைப் பிடுங்கி கட்டாக்கி தலையில் சுமந்து கொண்டு வீடு திரும்பும் போது பொழுது சாய்ந்துவிடும். வெற்றுடம்பில் வியர்வை மின்னிக் கொண்டிருந்த கோணப்பண்ணனிடம் முப்பது வெள்ளாடுகள் சேர்ந்திருந்தன. அப்பனும் ஆத்தாளும் மேலோகம் சேர்ந்திருந்தார்கள்.

கோணப்பண்ணனுக்கு நெஞ்சில் கட்டுக்கட்டாக சதை திரண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. மீசையும் கட்டையாக மாறியிருந்தது. பாவாடையை மாராப்பாக ஏற்றிக் கட்டிக் குளிக்கும் பெண்களை வாய்க்காலில் பார்க்கும் போதெல்லாம் குறுகுறுத்தது. ஆனால் ஆனால் நொண்டியைக் கட்டத்தான் ஒருத்தியும் வாய்க்கவில்லை. இவருக்காக பெண் வீட்டில் பேசுவதற்கும் ஒருவருமில்லை. சலித்துப் போய் நாவல் மரத்தடியில் தனித்துக் கிடந்த போதெல்லாம் தனிமை நெட்டித் தள்ளியது. எவளிடமாவது கண்ணசைவு காட்டுகிற தெம்பு மனதுக்கு இல்லை. பொறுத்துக் கொள்கிற இறுக்கம் உடலுக்கும் இல்லை. தெனவெடுத்துக் கிடந்தது. அதனாலேயே வாய்க்கால் பக்கமாக புல் அறுக்கப் போவதைக் குறைத்துக் கொண்டார். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் உடல் குலுங்கி அடங்கியது. துவைத்து, குளித்து பெண்கள் கிளம்பிச்சென்றுவிட்ட அந்தியில் மட்டுமே வாய்க்காலில் கால் நனைக்கத் தொடங்கினார்.

என்னதான் மனதையும் உடலையும் கட்டுப்படுத்த முயன்றாலும் அவை கேட்பதாக இல்லை. கோணப்பண்ணனின் இடுப்பில் மழைக்காகிதத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட ஏதாவதொரு நடிகையின் படம் இருந்து கொண்டேயிருந்தது. காமம் தீயாகச் சுடுகிற தருணங்களில் யாருமில்லாத புதர் ஓரம் ஒதுங்குவது வாடிக்கையாகியிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல அடுத்தவர்களிடம் கோணப்பண்ணனின் பேச்சுவார்த்தையே குறையத் தொடங்கியது. ‘உனக்குன்னு ஒருத்தி பிறக்காமலா போயிருப்பா?’ என்று கேட்டுக் கேட்டு வெறுப்பேற்றினார்கள். அவர்களிடம் பதில் சொல்வதைக் குறைப்பதற்காக பேச்சைக் குறைத்தார். வருடங்கள் கரையக் கரைய அதுவே பழக்கமாகிப் போனது. இப்பொழுதெல்லாம் அதிகம் பேசுவதில்லை. வெறுங்காலில் இடுப்பில் அரை முழ வேட்டியைக் கட்டிக் கொண்டு நடப்பதும் புல்லுக்கட்டு சுமப்பதுமாகவுமே இருந்தார். மாதம் ஒரு கிடாயை பக்கத்து கசாப்புக்கடையில் விற்றால் போதும். அந்த மாதத்திற்கான தேவையைச் சமாளித்துக் கொள்ளலாம். அப்படித்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. 

தண்ணிவாக்கியிடம் மட்டும் அவ்வப்போது பேசுவார். அதுவும் இவராகப் பேசுவதில்லை. அவன்தான் இவரைப் பார்க்கும் போதெல்லாம் வாரிக் கொண்டிருந்தான். ‘புதர்ப்பக்கம் போனீங்களா கோணப்பண்ணா?’ என்று கேட்டுவிட்டு வேகமாக மிதிவண்டியை மிதித்துவிடுவான். தண்ணிவாக்கிக்கு வேலையே வயலில்தான். அவனது கண்களிலிருந்து தப்பிப்பது சாத்தியமேயில்லை. எப்பொழுதாவது பார்த்திருக்கக் கூடும். அவன் இப்படிச் சீண்டும் போதெல்லாம் வக்கனையாகக் கேட்டுவிடுவார். ஆனால் இவர் யோசித்து அந்த வார்த்தையைச் சொல்வதற்குள் அவன் வெகு தூரம் போயிருப்பான். வார்த்தைகள் காற்றில் கரைந்து கொண்டிருக்கும். 

காமமும் தனிமையும் மட்டுமே கோணப்பண்ணனின் பெரும் பிரச்சினைகளாக உருமாறியிருந்தன. வெளிப்படையாக பேச முடியாத பிரச்சினை. ஆனால் இவரைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் ஊர் உருமாறிக் கொண்டேயிருந்தது. தொண்டுப்பட்டிகளாகவும் காலியிடங்களாகவும் கிடந்தவையெல்லாம் வீடுகளாகவும் கடைகளாகவும் மாறிய போதும் கோணப்பண்ணனின் குடிசையும் ஆடு அடைக்கும் பட்டியும் அப்படியே கிடந்தன. ஆட்டு புலுக்கைகளின் கவிச்சை அக்கம்பக்கத்தவர்களை முகம் சுளிக்கச் செய்தாலும் எதுவும் பெரிதாகக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியே காட்டினாலும் கோணப்பண்ணன் செவி மடுப்பாரா என்கிற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது. அமைதியாக விட்டுவிட்டார்கள். ஆடுகள் இணை சேரும் போதெல்லாம் கோணப்பண்ணன் உள்ளுக்குள் புழுங்குவார். விலங்குகளுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் கூட தனக்கில்லை என்பது பெரும் வேதனையாக இருந்தது. மார்கழி மாதத்து நாய்களைப் பார்க்கும் போது தானாக கைகள் கற்களைத் துழாவின. அவற்றை பிரித்து அனுப்பிவிட்டுத்தான் இடத்தை விட்டு நகர்வார். பஞ்சாயத்துக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் பெண்கள் கமுக்கமாக சிரித்துக் கொள்வார்கள்.

இந்த இடத்தில் லலிதாவின் கதையைச் சொல்லிவிட வேண்டும். லலிதா ஊருக்குள் வந்ததிலிருந்தே அவளைப் பற்றிய பேச்சுக்கள் றெக்கை கட்டியிருந்தன. வெளியூர்க்காரி. அவள் பணத்துக்கும் அரிசிக்கும் பருப்புக்கும் கூட முந்தி விரிப்பதாக பேச்சு உலவியது. கோணப்பண்ணன் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது சைக்கிளை நிறுத்திய தண்ணிவாக்கி எதையெல்லாமோ பேசிவிட்டு யதேச்சையாகத்தான் சொன்னான். ‘உன்ரகிட்டத்தான் பணம் இருக்குதுல்ல..ஒருக்கா கதவைத் தட்டிட்டு வா போ’ என்றான். அது காயத்தில் குளிர்நீரை ஊற்றியது போல சுளீரென்றிருந்தது. அதுவரைக்கும் கோணப்பண்ணனுக்கு லலிதா விவகாரம் தெரியாது. வெகு யோசனைக்குப் பிறகுதான் முடிவுக்கு கதவைத் தட்டினார். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. நள்ளிரவை நெருங்கும் சமயத்திலும் அவள் மல்லிகையோடுதான் அமர்ந்திருந்தாள். கதவைத் திறந்தவள் ஏதோவொரு அசூசையை முகத்தில் காட்டியவளாக ‘ஒரு பெரிய மனுஷன் வர்றதா சொல்லியிருக்காப்ல..இன்னொரு நாளைக்கு வா’ என்றாள். அது பிச்சை எடுப்பவனை துரத்துவது போல இருந்தது. ஆனால் தானும் ஒருவகையில் பிச்சைக்காரன்தான் என்ற நினைப்பில் திரும்பினார். அவளது முகமும் வார்த்தைத் தொனியும் அவரை வெறுப்பேற்றியிருந்தது. ‘வேசி முண்டை’ என்று திட்டியபடியே வந்து படுத்துக் கொண்டார். அதன் பிறகு அவளது வனப்பும் மல்லிகை வாசனையும் திரும்பத் திரும்ப வெறியேற்றினாலும் அவளிடம் செல்லக் கூடாது என்ற வீராப்பு தடுத்துக் கொண்டேயிருந்தது. ஆறு மாதத்தில் லலிதா ஊரைக் காலி செய்திருந்தாள். உள்ளூர் பெண்களே அவளைத் துரத்தியடித்ததாகச் சொன்னார்கள்.

அடங்காத காமமும் தீராத பெண் மோகமும் கோணப்பண்ணனை அழுத்திக் கொண்டேயிருந்தது. உலகத்தில் பொம்பளை வாசமே இல்லாமல் ஒரு ஆண் வாழ்ந்திருக்க முடியுமா என்பது கோணப்பண்ணனுக்கு பெரும் சந்தேகமாக இருந்தது. எதையுமே நினைக்காத வரைக்கும் மனம் கொந்தளிப்பதில்லை. ஒன்றை நினைக்கத் தொடங்கினால் அந்த நினைப்பே மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துவிடுகிறது. எல்லை மீறுவதில் தவறொன்றுமில்லை என்கிற முடிவுக்கு வந்த போது அறுபதைத் தொட்டிருந்தார். ஆனால் அதுவொன்றும் சாமானியக் காரியமாக இல்லை. உடலில் முறுக்கமிருந்தாலும் நரை தட்டியிருந்தது. மீசை வெளுத்திருந்தது. பற்கள் வெற்றிலைக் காவியேறியிருந்தன. தனக்கு காமத்தைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையுமில்லை என்றும் இதற்கான வழியொன்றைக் காட்ட வேண்டும் என்றும் கடவுளை வேண்டிக் கொண்டார். இயற்கையின் எல்லாவிதமான விளையாட்டுக்களிலும் இதுவும் ஒன்று என்று கலங்கிக் கொண்டேயிருந்தார்.

சமீபமாக கோணப்பண்ணன் பற்றி ஒன்றிரண்டு பேர் பேசத் தொடங்கினார்கள். வாய்க்காலில் அவர் அத்து மீறுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கோணப்பண்ணன் எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. இந்தப் பேச்சு எழும்பி ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. வெள்ளிக்கிழமை வாய்க்கால் ஓரத்தில் கோணப்பண்ணனை அடித்துக் கொன்றிருந்தார்கள். குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவியொருத்தியின் பாவாடையை உருவியதாகப் பேசிக் கொண்டார்கள். கரையில் அவரது உடல் கிடந்தது. கொல்லப்பட்டு வெகு நேரமாகியிருக்கக் கூடும். வாய் பிளந்திருந்தது. பற்கள் உடைந்திருந்தன. கண்கள் வீங்கிக் கருத்துக் கிடந்தது. அடையாளமே தெரியவில்லை. ‘இந்த வயசுலயுமா?’ என்று யாரோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். காவலர்கள் வந்து கூட்டத்தை விலக்கினார்கள். உள்ளூர் மணியகாரர் தண்டல்காரர்கள் சொல்லச் சொல்ல பிணத்தின் அடையாளங்களைக் குறித்துக் கொண்டிருந்தார். தண்ணிவாக்கி மட்டும் நம்பாமல் அழுது கொண்டிருந்தான். ‘திருப்பூர் பனியன் கம்பெனிக்காரன் எடத்தை வெலைக்குக் கேட்டு கொடுக்க மாட்டீனு சொல்லிட்டாராம்...அதுக்குன்னு அடிச்சே கொன்னுட்டீங்களேடா’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். அவனது பேச்சை அந்த இடத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை. 

எதற்காக கோணப்பண்ணன் செத்துப் போனார் என்பது அநேகமாக அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடும் அல்லது அவரை அடித்துக் கொன்ற அடையாளம் தெரியாத சிலருக்கும் தெரிந்திருக்கலாம். சவ ஊர்தி வந்து சேர்ந்தது. கோணப்பண்ணின் உடல் மீது துணியைப் போர்த்தி ஸ்ட்ரெச்சரில் ஏற்றினார்கள். கோணப்பண்ணனின் திறந்த வாயில் ஒரு ஈ ஆடிக் கொண்டிருந்தது. அவரது ஆடை விலகிய போது அங்கேயிருந்த பெண்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் அல்லது திருப்புவது போல நடித்தார்கள்.

5 எதிர் சப்தங்கள்:

venkat said...

உங்களின் நீண்ட கால இலக்கியப் பரிச்சயம் எனக்கு புரிகிறது. கதையின் முடிவை வாசகரின் யூகத்திற்க்கே விட்டு விட்டீர்கள். விதவை மறுமணம் பற்றி பெரியார் சொன்னது நினைவிற்கு வருகிறது. இயற்கையான காமத்தை, செயற்கையான சமூக கட்டமைப்புகளால், ஜாதி, மதத்தின் பேரால் தடுக்க நினைப்பது அறிவீனம். அதைப் போலவே, இந்த கதையின் நாயகனின் மன ஓட்டத்தையும், சமூக நியதிகள் அங்கே முரண்படுவதையும் அழகாக சித்தரித்துள்ளீர்கள். மலரினும் மெல்லிய காமத்தை, நாகரீக ஜோடனையில், அணுகவது எப்படி என்கிற பரந்த பரப்பில் உங்கள் விதைகளைத் தூவி உள்ளீர்கள். படிப்பவர்களில் பலருக்கு, கோணப்பனின் காமத்தில் நிரம்பி இருக்கின்ற சராசரி ஏக்கங்கள் உள்ளன. அதனை ஏற்றுக் கொள்வதே சமூக மாற்றத்துக்கு ஆணி வேறாக இருக்கும். உங்கள் இலக்கிய பணி தொடர என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

சேக்காளி said...

எத்தனை எத்தனை வகையான மனிதர்கள்.இத்தனை காமம் இருந்தும் இன்னொரு நாள் வா என்ற லலிதாவின் வாசக்கதவை தட்ட தடுத்த வைராக்கியத்தை என்னவென்று சொல்ல?.உலகில் லலிதாக்களின் தேவை குறைவதற்கான வாய்ப்பே இல்லையென்பதே உண்மை.

நேத்தா கார்த்திக் said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கிங்க.
வாழ்த்துக்கள்.

Unknown said...

யாரோ ஒருவருடைய வாழ்கையில் நடந்தது போல் உள்ளது

ADMIN said...

இந்த பூமியில்
இன்னும் எத்தனை எத்தனை கோணப்பண்ணன்களோ...!