Apr 22, 2016

தெண்டி மோனே

நேற்று எங்கள் அலுவலகத்தில் ஒரு விழா. டீ-ஷர்ட் அணிந்து வரச் சொன்னார்கள். அலுவலகத்திலேயே கொடுத்ததுதான். கல்லூரி காலத்திற்குப் பிறகு டீஷர்ட், ஜீன்ஸ் அணிவதேயில்லை. டீ-ஷர்ட் அணிந்தால் ஜீன்ஸ்தான் அணிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்பதால் என்ன செய்வதென்று குழப்பம். என்னிடமில்லை. வேணியிடம் ஒழுங்காகக் கேட்டிருக்கலாம். வாயில்தான் வெடிகுண்டை வைத்துக் கொண்டு சுற்றுகிறேனே? ‘இன்னைக்கு பொண்ணுங்க எல்லாம் ஜீன்ஸூம் டீஷர்ட்டும் சூப்பர் சூப்பரா வருவாங்க..இதுக்கு பொருத்தமா எனக்கு நல்ல பேண்ட்டா எடுத்துக் கொடுத்துட்டு போ’ என்றேன். முறைத்தாள். அவள் கிடக்கிறாள். கடந்த வாரத்தில்தான் தாடியில் ஒற்றை வெள்ளை முடியைக் கண்டுபிடித்தேன். இருக்கிற பிரச்சினையில் இதுவொரு புதுப்பிரச்சினை. இப்பொழுதெல்லாம் ஹெல்மெட் அணிந்திருந்தாலாவது இரண்டொரு பெண்கள் பார்க்கிறார்கள். வண்டியை நிறுத்தி தலைக்கவசத்தைக் கழற்றினால் அவ்வளவுதான். அசிரத்தையாக முகத்தைத் திருப்புவார்கள் பாருங்கள். பவர்ஸ்டார் மாதிரியாகவோ பாரிவேந்தர் மாதிரியாகவோ ஒரு அட்டகாசமான விக் ஒன்றைத் தயாரித்துக் கொண்டு இவர்களை எல்லாம் கவனித்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

பெண்கள் நன்றாக வருவார்கள் அதனால் நானும் நன்றாக அணிய வேண்டும் என்றவுடன் வேணிக்கு உலக மகா கடுப்பு. ஏதோ ஒரு கால்சட்டையை எடுத்துக் கொடுத்து ‘இது போதும் போங்க’ என்றாள். உள்ளுக்குள் எப்படியெல்லாம் கறுவி என்னவெல்லாம் சாபம் விட்டாளோ அந்த மலையாள பகவதிக்குத்தான் வெளிச்சம். இந்த இடத்தில் மலையாள பகவதி யார் என்ற கேள்வி வர வேண்டுமே. கொசுவர்த்தியை ஒரு சுற்று சுற்றினால் இரண்டொரு வாரங்களுக்கு முன்பாக ஒரு பெண்மணியைப் பற்றி எழுதியது ஞாபகத்துக்கு வரலாம். பெங்களூரின் மகாத்மா காந்தி சாலையில் தனித்துச் சுற்றுகிற பெண்மணி. மனநிலை சரியில்லாதவர். அவர் நேற்று கண்ணில்பட்டுவிட்டார். ‘சாய் பாய்ண்ட்’ தேநீரகத்தில் அவருக்கு யாரோ ஒரு காகிதக் குடுவையில் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். இன்னொரு கையில் நீண்ட குச்சியொன்றையும் தோளில் துணிப்பை ஒன்றையும் வைத்திருந்தார். 

வீட்டில் பற்ற வைத்திருந்த குண்டு என் வாயில் கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து கொண்டிருந்தது. எப்படியாவது விசாரித்து அந்தப் பெண்மணியின் குடும்பத்தைக் கண்டுபிடித்துவிட முடியும் என்கிற நினைப்பில் மெலிதாகப் புன்னகைத்தேன். என்னைப் பார்த்தவுடன் அந்தப் பெண்மணி முறைத்தார். கையில் வைத்திருக்கும் குச்சியில் விளாசிவிடுவாரோ என்று சற்று பயந்து நான்கைந்தடி முன்னால் நகர்ந்து வேடிக்கை பார்ப்பது போல அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகத் திரும்பி ஓரக் கண்ணில் அவரைப் பார்த்தேன். அவருடைய முறைப்பு அப்பொழுதும் என்னை நோக்கியே இருந்தது. அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடலாமா என்று ஒரு வினாடி ஞான திருஷ்டி உதயமானது. ‘ஆனானப்பட்ட ஒபாமாவையே சட்டையைப் பிடித்துக் கேட்கிற ஆளு நீ..இதுக்கு பயப்படலாமா?’ என்று உள்ளுக்குள் அசிரீரி கேட்டுத் தொலைத்தது. பேஸ்மெண்ட்டை கொஞ்சம் வலுவாக்கிக் கொண்டு இன்னொரு முறை சிரித்தேன். வெறும் இரண்டேகால் மில்லி மீட்டர் சிரிப்புதான் அது. மற்றவர்களுக்கு அது சிரிப்பாகவே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தப் பெண்மணிக்குத் தெரிந்துவிட்டது.

‘தெண்டி மோனே’ என்று கத்தியபடி கையிலிருந்த தேநீரை விசிறியடித்தார். எந்தச் சாமி கையைப் பிடித்து இழுத்ததோ தெரியவில்லை- இரண்டடி பின்னால் நகர்ந்தேன். தலையிலிருந்து ஊற்றியிருக்க வேண்டியது என்னுடைய சாமர்த்தியத்தால் தொடையிலிருந்து ஊற்றியிருந்தது. சுட்டெரிக்கும் நாற்பது டிகிரி வெயிலிலில் எண்பது டிகிரி தேநீர் தொடையில் குளுகுளுவென்றிருந்தது. அந்த இடத்தில் கழற்றவா முடியும்? துணி தொடையில் படாமல் மேலாக இழுத்துப் பிடித்துக் கொண்டேன். உள்ளுக்குள் உஸ்ஸூ உஸ்ஸூ என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். சுற்றிலும் நின்றிருந்தவர்கள் காணாததைக் கண்டது போல பார்த்தார்கள். ‘போயும் போயும் பைத்தியகாரக் கிழவியிடம் வேலையைக் காட்டியிருக்கிறான்’ என்று நினைத்திருக்கக் கூடும். அதுவும் அந்தப் பக்கமாக நின்றிருந்த பெண்களின் பார்வை கூசச் செய்தது. ஒரேயொரு ஆள் வந்து ‘வேற எங்கேயும் படல இல்ல?’ என்றான். ‘தொடை வரைக்கும் சுடுது சார்...அதுக்கு மேல இல்ல’ என்றேன். அவனுக்கு இருந்த மொத்த ஆர்வமும் வடிந்துவிட்டது. இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான். தொடைக்கு மேலாகவும் சுட்டிருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு என்ன அவ்வளவு ஆசையோ தெரியவில்லை.

இனியும் அந்த இடத்தில் நின்றால் ஒபாமாவே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று தோன்றியது. அந்தப் பெண்மணி கத்திக் கொண்டேயிருந்தார். அநேகமாக மலையாளக் கெட்ட வார்த்தைகள். அவசர அவசரமாக இடத்தை விட்டு நகர்ந்தேன். எல்லோரும் என்னை பார்த்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. தேநீர் நனைத்திருந்த கால்சட்டையோடு அலுவலகத்துக்குச் செல்ல முடியும் என்று தோன்றவில்லை. கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். சாலையில் இருக்கிறவர்கள் பொம்பளைப் பொறுக்கி என்று நினைத்தால் தொலைகிறது. அலுவலகத்திலும் தெரிந்தால் அசிங்கமாகிவிடும். பைக்கைக் கிளப்பிக் கொண்டு வீட்டுக்குச் சென்றேன். நல்லவேளையாக வீட்டிய்ல் யாருமில்லை.

துணியெல்லாம் மாற்றிக் கொண்டு 1091க்கு அழைத்தேன். அது பெண்களுக்கான உதவி மையம். இணைப்பு கிடைக்கவேயில்லை. கடைசியாக இணைப்புக் கிடைத்த போது பேசிய பெண்மணி நிச்சயமாக உதவுவதாகச் சொன்னார். ஆனால் எப்படி உதவப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ‘ஹாய் ஹவ் ஆர் யூ’ என்று செய்தி அனுப்பி சாதாரணமாக இருக்கிற பெண்ணிடமே வாங்கிக் கட்டிக் கொள்கிற வகையறாவைச் சார்ந்தவன் நான். இந்த மாதிரியான பெண்ணிடம் பேசுவதற்கு முன்பாக சற்றேனும் முன் தயாரிப்பைச் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி நடுச்சாலையில் தெண்டி மோனே ஆக வேண்டியதுதான். அடுத்த முறை தயாரித்துக் கொண்டு போய் பேசிப் பார்க்கிறேன்.

நிசப்தம் அறக்கட்டளையின் மூலமாக பணம் வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பது மட்டும்தானா என்று யாராவது கேட்டால் உடனடியாக பதில் சொல்லத் தெரியாது. அடுத்த கட்டம் என்பது பற்றி யோசித்ததேயில்லை. ஆனால் சமீபகாலமாக ஆதரவற்ற பெண்களுக்கு உதவுகிற வகையிலான செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தப் பெண்மணிதான் அதற்கான உந்துதலாக இருக்கப் போகிறாள் என்று நினைக்கிறேன்.

17 எதிர் சப்தங்கள்:

Jasper said...

Stupid or beggar son. :D

அருண் பாண்டியன் said...

தெண்டி = பிச்சைக்காரன்,
மோன் = மகன் மருவி "மோன்"

மலையாளிகள் பிச்சை எடுப்பதை மிகவும் கீழ்த்தரமாக நினைக்கிறார்கள், அதனால் அதை கெட்டவார்த்தையாக பயன்படுத்துகிறார்கள். கேரளத்தில் பிச்சை எடுப்பவர்கள் மிக மிக மிக குறைவு, அதில் எப்படியும் சில தமிழர்களை காணலாம்.! :( :(

venkat said...

அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நண்பர் என்று எழுத காரணம், உங்களின் ஆத்மார்த்தமான உதவி செய்யும் மனப்பான்மை. திடீரென்று தன் துணிமணிகளை கழற்றி எறிந்து விட்டு, ஆதிமனிதக் கோலத்திற்கு செல்லும் பெண் பைத்தியங்களை பார்த்து நானும் அதிர்ந்திருக்கிறேன். அந்த திடீர் நிர்வாண அதிர்ச்சியில் காமம் எதுவும் எழுந்ததில்லை. ஆனால், உலகத்திற்கு ஒரு பெண்ணை ஆண் நெருங்கினால் படுக்கை அறைக்குத்தான். இதற்கு யாரும் விதி விலக்கில்லை. அந்த பைத்தியங்களினால், நாம் உதை வாங்குவதை விட, நன்றான மன நிலையில் இருப்பவர்கள் (இருப்பதாக சொல்லிக் கொள்ளுகிறவர்கள்) நம்மைப் பற்றி தவறாக நினைப்பதுதான் உச்ச வன்முறை. என்னைப் பொருத்தவரை, உங்கள் உதவி குணம் உங்களுக்கு உபத்தரமாக மாறாத வரை, சௌகர்யம். அதற்கு மேல் இறைவன் விட்ட வழி. அடுத்த முறை, இந்த மாதிரி யாரையாவது நீங்கள் பார்க்க நேர்ந்தால், கொஞ்சமும் பதறாமல், மேற்கொண்டு ஆராய்ச்சி எதுவும் செய்யாமல், உங்களையும் புண்படுத்திக் கொள்ளாமல், ஒரு நல்ல மகளிர் நல வாழ்வு நிலையத்திற்கு தொலைபேசியில் தெரிவியுங்கள். அது அந்த நோயாளியையும், உங்களையும் காக்கும். பெண் என்பதாலேயே, நிறைய சந்தேகங்கள் வருவதை இன்னமும் முதிர்ச்சி அடையாத சமூகத்திலிருந்து எதிர்பார்க்கமுடியாதுதான். வாழ்த்துக்கள் உங்களின் புதிய ஆரம்பத்திற்கு.

Vaa.Manikandan said...

தங்களின் அக்கறைக்கு நன்றி. எல்லாவற்றையும் அனுபவமாக மட்டுமே பார்க்கிறேன். அதனால் புண்படுத்திக் கொள்வதை நான் பொருட்படுத்திக் கொள்வதில்லை. இப்படியான அனுபவச் சேகரத்தினால் மட்டுமே நம்முடைய ஆளுமை தனக்கான வடிவத்தை மெருகேற்றும் என்று உறுதியாக நம்புகிறேன். நன்றி.

Anonymous said...


வா. மணிகண்டன்,

"ஆதரவற்ற பெண்கள்" என்ற பிரயோகத்தை பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது.

எனக்கு தெரிந்து ஒரு பெண். தற்போது டி.சி.எஸ்ஸில் தான் வேலை பார்க்கிறார். ஒரு ஐடி பையனுடன் தான் திருமணம் நடந்தது. ஒரே மாதத்திற்குள் பெண் பார்த்து நிச்சயித்து நடந்த திருமணம். வரதட்சனை என்று சல்லிக்காசு இல்லை. பையனுக்கு ஜாதகத்தில் கோளாறு. வேறு பெண் கிடைக்காமல் இவளுக்கு ஓகே சொன்னாலும், இருப்பதை வைத்து சுகமாக வாழும் லட்ச ருபாய் சம்பளம் வாங்கும் மினிமலிஸ்ட் வகைக்காரர். மணமான ஒரே மாதத்திற்குள் கண்டவனுக்கும் கிற‌க்கமான குறுஞ்செய்திகள் அனுப்பி மாட்டிக்கொண்டார். கேட்டால், எனக்கு மேஸேஜ் செய்யாதே என்று சொல்லித்தான் ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த கண்டவனுக்கும் பதில் குறுஞ்செய்திகள் அனுப்பினாராம். இப்போது விவாகரத்து வழக்கு கோர்டில் உள்ளது. விவாகரத்துக்கு முரண்டு பிடிக்கிறார். கேட்டால், நூற்றாண்டுகளாக பெண்கள் பொறுத்தார்களாம். இப்போது ஆண்கள் பொறுக்கக்கூடாதா? மன்னிக்கக்கூடாதா? என்று கேள்வி கேட்கிறாராம். தவறு செய்பவன் ஒருத்தன், தண்டனை அனுபவிப்பவன் வேறொருத்தனா?

பெண் என்றதும் உடனே பரிதாபம் கொண்டு 'அந்த பையன் சரியில்லையாக இருக்கும்? " என்றெல்லாம் மொன்னையாக வாதம் செய்யாதீர்கள். லாஜிக்காக கேட்கிறேன். நாளை அந்த பெண்ணுக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்தால், மாப்பிள்ளை வீட்டில், "முதல் கணவன் சரியில்லை " என்று இந்த பையன் மேல் தான் பழி சொல்வார்கள் தோழர். ஆண்கள் தொடர்ந்து கெட்ட பெயர் வாங்குவதற்கு பின்னால், ஆண்களின் தவறுகள் மட்டுமே இருக்கிறது என்கிற நினைப்பெல்லாம் இருப்பது வெள்ளந்தியாக இருப்பதன் அறிகுறி.

இதெல்லாம் மாட்டிக்கொண்ட கேஸ்கள். இது போன்ற பெண்கள் மாட்டிக்கொள்ளாத கேஸ்களால் தான் பெண்களை பரிதாபத்துடன் நோக்கும் போக்கு இன்னமும் மலிந்து கிடக்கிறது.

"ஆதரவற்ற பெண்கள்" என்பது க்ளிஷே ஆகி ரொம்ப நாள் ஆகிறது தோழர். இப்போது ட்ரண்ட் வேறு. பாதிக்கப்பட்ட ஆண்களுக்கென்று ஏதாவது செயல்திட்டம் உருவாக்க முடியுமா பாருங்கள். இனி வரும் காலத்திற்கு அது தான் தேவை.

நீங்கள் சொல்லும் 'தெண்டிமோனே" யில் வரும் பைத்தியத்தை கூட நீங்கள் பரிதாபத்திற்குரிய பெண்ணாகத்தான் பாவிக்கிறீர்கள். அவள் தவறு செய்து அதற்காக துரத்தி விடப்பட்டவளாகக்கூட இருக்கலாம் என்பது தான் நிதர்சனம்.

அந்த பைத்தியத்தின் இப்போதைய சூழலுக்காக வேண்டுமானால் நீங்கள் உதவ நினைப்பதாக கொள்ளலாம். ஆனால் , இதை செய்கையில், சார்த்தர் சொல்லும் அர்த்தங்களின் படி. உங்கள் உதவி தவறானவர்களுக்கும் சென்று சேர்வதாக கூட அர்த்தமாகிவிடலாம் அல்லவா?

உதவி செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. சமூகத்தின் சிக்கல்கள் புரிந்த ஒருவரின் மதிப்பீடுகளும், அளவீடுகளும் தவறாகவோ, அல்லது ஒருதலைபட்சமானதாகவோ இருந்தால், அதன் மூலமாக கிளைக்கும் உதவி தவறானவர்களுக்கு சென்று சேரக்கூடிய வாய்ப்பு உருவாகிவிடும் என்பது தான் என் தாழ்மையான கருத்து.

ADMIN said...

அருமை. புண்பட்டாவது உதவும் குணம்.

Anonymous said...

ஜீன்ஸ் போட்டிருந்தால் தேநீர் மேலே விழும்போது பாதிப்பு குறைவாக இருக்கும்.இனிமேலாவது போடலாமே

Anonymous said...

Insha Allah if it happens this would be your best initiative for the society. Best wishes Mr Mani.

-Dev

Unknown said...

ஒரேயொரு ஆள் வந்து ‘வேற எங்கேயும் படல இல்ல?’ என்றான். ‘தொடை வரைக்கும் சுடுது சார்...அதுக்கு மேல இல்ல’ என்றேன். அவனுக்கு இருந்த மொத்த ஆர்வமும் வடிந்துவிட்டது. இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான். தொடைக்கு மேலாகவும் சுட்டிருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு என்ன அவ்வளவு ஆசையோ தெரியவில்லை. !!!!!

kannan said...

"hell hath no fury like a woman scorned", how true !!

Anonymous said...

ஒரேயொரு ஆள் வந்து ‘வேற எங்கேயும் படல இல்ல?’ என்றான். ‘தொடை வரைக்கும் சுடுது சார்...அதுக்கு மேல இல்ல’ என்றேன். அவனுக்கு இருந்த மொத்த ஆர்வமும் வடிந்துவிட்டது. இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான். தொடைக்கு மேலாகவும் சுட்டிருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு என்ன அவ்வளவு ஆசையோ தெரியவில்லை.////

Pro Groin Guard Sales man ஆ இருக்கலாம் பாஸ்!! பாவம், அவனுக்கென்ன டார்கெட்டோ?

Commonman said...

Anonymous உங்கள் கருத்தை படிக்கையில் சிரிப்பை அடக்க முடியவில்லை. எதோ உங்களுக்கு தெரிந்த ஒன்றிரண்டு பெண்கள் தவறு செய்தால் பெண்களுக்கு உதவுவதே தவறா... அப்படி என்றால் எனக்கு தெரிந்து சில ஆண்களும் தவறு செய்திருக்கிறார்கள் ஆண்களுக்கும் உதவாதீர்கள் என்று சொல்லலாமா.முதலில் இந்த உலகில் எது சரி, எது தவறு என்று எப்படி முடிவு செய்யவது.


ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் யாரும் இங்கே புத்தன் கிடையாது உதவி செய்பவர்களும் வாழ்கையில் பல தவறு செய்த, இனிமேலும் தவறு செய்யகூடியவர்கள் தான், உதவி பெருகிறவரும் தவறு செய்ய கூடியவர்கள் தான். அப்படியே தவறு செய்தவராய் இருந்தாலும் என்றோ செய்த தவறுக்காக உதவி செய்யாமல் அவர்களை தண்டிக்கும் நீதிபதி பொறுப்பை நம்மிடம் தந்தது யார் ?

Anonymous said...

Commonman...
உங்களை போன்றவர்களுக்காகத்தான் "இதெல்லாம் மாட்டிக்கொண்ட கேஸ்கள். இது போன்ற பெண்கள் மாட்டிக்கொள்ளாத கேஸ்களால் ... " என்கிற வாக்கியத்தையும் சேர்த்திருக்கிறேன்.
இன்னொன்று உங்களுக்கு மட்டும் சொல்ல ஆசை. கையும் களவுமாக தவறு செய்யும் பெண்ணை பிடிக்கவென்று சில திறமைகள் வேண்டும். அந்த திக்கிலேயே சிந்தனை செல்லாதவர்கள் பெண்களை உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே தான் பார்க்கிறார்கள்.. உண்மையில் இவர்கள்தான் பெண்ணடிமைத்தனத்தை வளர்ப்பவர்களாக இருக்கிறார்கள்...

பிகு: இக்காலத்தில் இந்த திறமைகள் ஆணுக்கு அவசியம் சார்.. இது இல்லாதவர்கள் படும் பாட்டை, நேரமிருந்தால், கோர்ட் வாசல்களில் நின்று தெரிந்துகொள்ளுங்கள்..

"உதவி செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. சமூகத்தின் சிக்கல்கள் புரிந்த ஒருவரின் மதிப்பீடுகளும், அளவீடுகளும் தவறாகவோ, அல்லது ஒருதலைபட்சமானதாகவோ இருந்தால், அதன் மூலமாக கிளைக்கும் உதவி தவறானவர்களுக்கு சென்று சேரக்கூடிய வாய்ப்பு உருவாகிவிடும் என்பது தான் என் தாழ்மையான கருத்து." என்றும் சொல்லியிருக்கிறேன்.

இதை படித்த பின்னும் சிரிப்பீர்கள் என்று தெரியும். அதான் சொல்லிவிட்டேனே.. "கையும் களவுமாக பிடிக்கவென்று சில திறமைகள் வேண்டும்" என்று...

Anonymous said...

commonman..

பிரச்சனை என்னவென்றே தெரியாமல், முக நூலில் ஸ்டேடஸ் போடுவது போல் சமூக பிரச்சனைகளுக்கு கமென்ட் போடுவது இப்போது ட்ரன்டாகிவிட்டது பாஸ்.. "எதோ உங்களுக்கு தெரிந்த ஒன்றிரண்டு பெண்கள் தவறு செய்தால்..." என்று எப்படி சொல்கிறீர்கள்? கோர்ட் பக்கம் என்றாவது போயிருக்கிறீர்களா?

விவாகரத்து மனு அனுப்பினால் எதிர் தரப்பில் எப்படியெல்லாம் டாட்ஜ் செய்வார்கள்?
அலிமனி என்றால் என்ன?
ஒரு விவாகரத்து வழக்குக்கு எத்தனை வாய்ப்பு தரப்படும்?
எப்போது யாருக்கு ஜிவனாம்சம் தரலாம்? யாருக்கு தர தேவையில்லை?...
மியூச்சுவல் கன்சன்டுக்கு என்ன விதிமுறை? எத்தனை செலவாகும்?
மியூச்சுவல் கன்சன்ட் அல்லாததுக்கு ஹைகோர்டில் ஆகும் செலவு என்ன?

இப்படி எதுவுமே தெரியாமல், நான்கு சுவற்றுக்குள் அமர்ந்துகொண்டு, வெளி உலகத்தின் ரியாலிட்டி என்னவென்று தெரியாமல் வக்காலத்து வாங்காதீர்கள் சார்...

பொன்.முத்துக்குமார் said...

உரையாடலை திசை திருப்பவில்லை, Commonman-க்கு ஒரு சில சொற்றொடர்கள் :

1. 498A என்றால் என்ன என்று கூகுளில் தேடி பாதிக்கப்பட்டோரது கதைகளை படிக்கவும்.

2. விவாகரத்து மற்றும் வரதட்சணை வழக்குகளில் இன்னும் சட்டம் பெண்கள் சார்பாகத்தான் உள்ளன என்பதற்கு இரண்டு ஆதாரங்கள் :

- கணவனின் முன்னோர்களின் சொத்திலும்கூட மனைவி (விவாகரத்தின்போது மட்டுமல்ல விவாகரத்தான பின்னும் கூட) பங்கு கேட்டு வழக்கு தொடுக்கலாம் ;

- கணவன் கள்ள உறவு வைத்திருந்து அதை காரணம் காட்டி மனைவி விவாகரத்து தொடர்ந்தால் கணவன் மறுக்க முடியாது; விவாகரத்து கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் மனைவி கள்ள உறவு வைத்திருந்து அதை காரணம் காட்டி கணவன் விவாகரத்து வழக்கு போட்டால் மனைவி விவாகரத்து தர மறுக்க முடியும் (ஒருசில ஆண்டுகள் முன் மத்திய அரசு நிறைவேற்றின சட்டம் இது)

ஒரு தமிழ் வலைப்பூவில் கணவனை எப்படியெல்லாம் விதவிதமாக காயடிக்கலாம் என்று வகுப்பே எடுக்கிறார்கள்.

Commonman said...

Anonymous //"ஆதரவற்ற பெண்கள்" என்பது க்ளிஷே ஆகி ரொம்ப நாள் ஆகிறது//
"ஆதரவற்ற பெண்கள்" என்ற வார்த்தையை "விவாகரத்தான பெண்கள்" என்ற அர்த்தத்தில் புரிந்துகொண்டு விவாதம் செய்கிறீகள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பாலியல் இட்சைகாக கடத்தப்படும் பெண்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய பெண்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் இவர்களும் ஆதரவற்ற பெண்கள் தான், எதோ சில பெண்கள் (பல பெண்களாகவே இருக்கட்டும்) செய்யும் தவறுக்காக "ஆதரவற்ற பெண்களே" இங்கு இல்லை என்பது போல் பேசுவது எவ்வாறு சரியாக இருக்கும்?

ஆனால் நான் கூற வந்தது அதுவல்ல....

//நீங்கள் சொல்லும் 'தெண்டிமோனே" யில் வரும் பைத்தியத்தை கூட நீங்கள் பரிதாபத்திற்குரிய பெண்ணாகத்தான் பாவிக்கிறீர்கள். அவள் தவறு செய்து அதற்காக துரத்தி விடப்பட்டவளாகக்கூட இருக்கலாம் என்பது தான் நிதர்சனம்.// என்று குறிப்பிடுகிறீர்கள். அந்தப்பெண் தவறு செய்தே இருக்கட்டும் இப்போது அவருடைய நிலைமையை கண்டு பரிதாபபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றே புரியவில்லை.

ஒருவர் அடிபட்டு உயிருக்கு போராடிகொண்டிருக்கும் வேளையில் அவரை காப்பாற்றி மருத்துவமையில் சேர்ப்பீர்களா? இல்லை அவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டினாரா, Wrong side ல் ஓட்டி வந்தாரா, தூக்க கலகத்தில் அடிபட்டதா என்று விசாரித்து விட்டு அவர் உயிரை காப்பாற்றலாமா, வேண்டாமா என்று முடிவெடுப்பீர்களா ? நீங்கள் சொல்வது அப்படித்தான் உள்ளது.

//இப்படி எதுவுமே தெரியாமல், நான்கு சுவற்றுக்குள் அமர்ந்துகொண்டு, வெளி உலகத்தின் ரியாலிட்டி என்னவென்று தெரியாமல் வக்காலத்து வாங்காதீர்கள் சார்..//
நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு வெளி உலகத்தின் ரியாலிட்டி தெரியாமல் தெரியாமல் பேசுவது தவறுதான் அதே சமயம் தான் பார்த்தது, தான் கேட்டது, தன்னை சுற்றி நடப்பதை மட்டுமே உலகம் என்று நம்பிக்கொண்டு, யார் பற்றியும் முழுதாக தெரியாமலே ஒரு முன்முடிவோடு அணுகுதலும் தவறுதான் ஐயா.

Anonymous said...

@Commonman...

அறிவுப்பூர்வமான ஆழமான புரிதல்களுடைய விவாதமாக இது தெரியவில்லை என்பதால் வா.மணிகண்டனின் வலைப்பூவில் இதற்கு மேல் இந்த விஷயத்திற்காய் எழுத விரும்பவில்லை.... ஆனால் ஒன்றை இறுதியாக சொல்ல விரும்புகிறேன்..

சமூக பிரச்சனைகள் குறித்த ஆழ்ந்த புரிதல் இல்லாமலேயே நாம் இருக்கும் ஏரியாவில் நம்மை சுற்றி உள்ள ஆண்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் ' நல்லவன்' என்ற பெயர் வாங்க ஒரு ட்ரிக் இருக்கிறது.

பெண் மீது அனுதாபமும் பரிதாபமும் கொள்பவனாக காட்டிக்கொள்ள வேண்டும். ஆணாதிக்கம் மலிந்து இருப்பதாக சீன் கிரியேட் செய்ய வேண்டும்.. தொட்டதுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட வேண்டும்.. கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது, அவர்களுக்கு பணம் அனுப்புகிறேன் பேர்வழி என்றெல்லாம் ஜல்லி அடிக்கலாம்.. குடும்பத்தில் மாமியார், நாத்தனார் என்று ஈகோ பிரச்சனைகளை சந்திக்கும் பெண்களின் மனதோரத்தில் ஓர் இடம் பிடித்துவிடலாம்.. அவர்கள் துணையுடன், அவர்களின் புருஷன், அப்பன்மார்களை திட்டி தீர்க்கலாம்.. தன்னை மட்டுமே சிறந்த ஆணாக முன்னிறுத்திக்கொள்ளலாம்.. கணவன் மனைவி பிரச்சனைக்குள் புகுந்து, இன்னும் இன்னும் குழப்பி, அடுத்தவர் வாழ்க்கையை நாசமாக்கலாம்.. முடிந்தால் அதில் ஏதாவது தேறுமா என்று பார்க்கலாம் ... ஆனால் இது ஓடுகிற நீரோட்டத்தில் தன்போக்கில் செல்லும் படகில் சவாரி செய்வது என்பது தலைக்குப்புற விழும்போதுதான் தெரியும்.

இவர் போன்றவர்களை எளிமையாக கண்டுபிடித்துவிடலாம்.. நாலு கேள்வி கேட்டால், பதில் வராது.. பேச்சை விவாதத்தை தவிர்த்து எஸ் ஆகிவிடுவார்கள்.. ஒரே வாக்கியத்தை திரும்ப திரும்ப டேப் ரிக்கார்டர் போல் சொல்லிக்கொண்டிருப்பார்கள்..

இவர்கள் குடும்பத்துக்குள் பெயர் வாங்குவது இன்னொரு அலாதியான சமாச்சாரம்.. கட்டற்ற சுதந்திரம் என்கிற பெயரில் தனது அறியாமையை, புரியாமையை மறைத்துவிடுவார்கள்.. கட்டற்ற சுதந்திரம் பற்றி பேசுவதே தங்களின் குறைகளை மற்றவர்களை கடந்து போக வைக்க தரும் சலுகையாக, லஞ்ச்மாக மாற்றுவார்கள்...

இந்த தலைமுறையின் மிகப்பெரிய இழப்பு, ஆழ் புரிதலில்லாத முந்தைய தலைமுறையை பெற்றோர்களாக, மாமன்களாக, சித்தப்பன்களாக பெற்றிருப்பதுதான்.. எதையும் தெளிவாக சொல்லித்தர ஆளில்லை.. தானாக கற்றுக்கொள்ளும் அறிவோ, ஆர்வமோ கூட இல்லை.. ஆனால், பரவலாக நல்லவன் என்று பெயர் வாங்க வேண்டும்.அதற்கென்ன குறுக்குவழி? பெண்ணுரிமை பேசுவது, சமத்துவம் என்கிற பெயரில் ஜல்லியடிப்பது, கலாச்சார பாதுகாவலராக இல்லாமல் இருக்கிறேன் என்பதன் பின்னே தனது குறைகளை, அறியாமைகளை, புரிதலின்மைகளை மறைத்துக்கொள்வது..

தவறானவர்களை களைய, கேட்க வேண்டிய கேள்விகளை கேட்க வேண்டும். போலிகள் கேள்விகளில் காணாமல் போய்விடும்.