Mar 25, 2016

வெக்கை

பள்ளிப்பருவத்தில் முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் அமத்தா ஊரில் விட்டுவிடுவார்கள். மொண்டியப்பய்யன் என்றொருவர் இருந்தார். அவருடைய இயற்பெயர் என்னவோ- கள் எடுப்பதற்காக பனை மரம் ஏறி கீழே விழுந்ததிலிருந்து நொண்டியப்பனாகி பிறகு மொண்டியப்பனாகி எங்களுக்கு ஐயன் விகுதி சேர்த்து மொண்டியப்பய்யன் ஆகிவிட்டார். அமத்தா வீட்டில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டு அவர் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது விழுந்து விழுந்து சிரிப்போம். குழந்தைகளுக்கு ஒரு கதை; பெரியவர்களுக்கு ஒரு கதை என்று விதவிதமாகச் சொல்வார். சினிமாக்கதைகளும் அப்படித்தான் - சர்வர் சுந்தரம் படத்தை முப்பது வருடங்களுக்கு முன்பாக பார்த்திருப்பார். அந்தக் கதையை பிசகாமல் சொல்வார். திருவிளையாடல் படத்தை வசனத்தோடு சேர்த்துச் சொல்வார். 

‘சிவாஜி நடக்கிறதை பார்க்கோணும் அம்மிணி...அப்படியும் இப்படியும் வளைச்சு நெளிச்சு நடந்தான்னு வைய்யி...அந்த ஆளு கண்ணு கூட டான்ஸ் ஆடுது’ என்று அவர் என்ன சொன்னாலும் வாயைப் பிளந்து கொண்டு கேட்போம். அவ்வப்பொழுது எங்களையும் இழுத்துவிட்டுவிடுவார். ஏதாவது கற்பனைக் கதை ஒன்றைச் சொல்லச் சொல்வார். அப்பொழுதிருந்துதான் நன்றாக புருடா விட்டுப் பழகினேன் என்று நினைக்கிறேன். பிற்காலத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அம்மா அப்பாவிடமும் கதை விடுவதற்கு அதுதான் அடித்தளமாக இருந்திருக்க வேண்டும். கண்ணம்மா டீச்சர் என்றொரு தமிழாசிரியை இருந்தார். ‘நெஞ்சு வலிக்குது டீச்சர்’ என்று நான் அளப்பதைப் பார்த்து நடுங்கிப் போய்விடுவார். பத்தாம் வகுப்பை முடிக்கிற சமயமாக ஒரு நாள் ஆசிரியைகள் அறைக்குச் சென்றிருந்த போது ‘உண்மையைச் சொல்லுற மாதிரியே பொய் சொல்லுறதுக்கு இவன்கிட்ட கத்துக்கணும்’ என்றார். பெருமைப்படுவதா அவமானப்படுவதா என்று தெரியாத குழப்பத்தில் ஓடி வந்துவிட்டேன்.

அமத்தா ஊரில் இருக்கும் போது பகல் முழுவதும் பொங்கியா காட்டில்தான் கழியும். அது பொட்டல் காடு. ‘ஒணான் கூட முட்டை வைக்காது’ என்பார்கள். ஆனால் ஓணான்கள் இல்லாத பொட்டல் நிலம் உண்டா? அதனால் எங்கள் வேட்டை பெரும்பாலும் ஓணானாகத்தான் இருக்கும்.  எங்கள் கையில் ஓணான் கிடைத்தால் அது பாவம்தான். 

‘ஒரு காலத்துல விநாயகர் அரக்கனுக கூட சண்டைப் போட்டு களைச்சு போய் தண்ணி வேணும்ன்னு கேட்டாராம்....அணில் இளநீர் கொண்டாந்து கொடுத்துச்சு...இந்த ஒடக்கா இருக்குது பாரு...ஒண்ணுக்கை புடிச்சு கொடுத்துச்சாமா...அதனால இதை மட்டும் எங்க பார்த்தாலும் உடக் கூடாது’ என்று கல்லால் அடித்து அதன் வாயிலேயே சிறுநீரை நுரைக்க நுரைக்க அடித்து விடுவது வாடிக்கையாகியிருந்தது. விநாயகருக்கு அது செய்த பாவத்திற்காக வழிவழியாக அதன் சந்ததியினர் பாவத்தை அனுபவிக்கட்டும் என்பது எங்கள் எண்ணம். நாங்கள் பரவாயில்லை. இன்னமும் சில குரூரமானவர்கள் இருந்தார்கள். கருவேல முள்ளை ஒடித்து ஓணான் தலையில் குத்தி அந்தப் புண் மீது எருக்கம் பாலை வைத்து ‘இப்போ அதுக்கு பைத்தியம் புடிச்சுடும்...ஒண்ணுக்கு அடிச்சவன் ட்ரவுசருக்குள்ள பூந்து கடிச்சு வெச்சுடும்...ஓடுங்க’ என்பார்கள். ஒரு ஓணான் கூட ட்ரவுசருக்குள் ஏறியதைப் பார்த்ததில்லை என்றாலும் அய்யம்பாளையத்திலோ ஆவாரம்பாளையத்திலோ ஓணான் கடித்து யாரோ ஒருவன் குஞ்சாமணி இல்லாமல் சுற்றுவதாக கதை அளந்து கொண்டேதான் இருந்தார்கள்.

முள்ளால் குத்தி எருக்கம் பாலை வைத்தால் கொஞ்ச நஞ்ச வலியா வலிக்கும்? ஓணான் வலியில் தப்பி ஓட முயல்வதைப் பார்த்து ‘உன்னைத்தான் கடிக்க வருது..என்னைத்தான் கடிக்க வருது’ என்று தாறுமாறாக ஓடுவதில் அல்ப சந்தோஷம். புழுதி பறக்க விளையாடிய அந்த நாட்கள் அப்படியே நினைவில் பதிந்து கிடக்கின்றன. வறண்ட நிலத்தின் வெக்கையும் காலில் ஏறிய முட்களும் மனவெளிக்குள் பச்சையாகத்தான் இருக்கின்றன. வெகு நாட்களுக்கு ஓணான் வேட்டை நடந்து கொண்டேதான் இருந்தது.

ஒரு நாள் சலவாதிக்குப் போவதற்காக வந்த மொண்டியப்பய்யன் ஓணான் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார். அப்பொழுது எதுவுமே சொல்லவில்லை. மாலை வீட்டில் ‘செகை’ பிடித்துக் கிடந்தேன். சூடு பிடித்துக் கொள்வதை எங்கள் ஊரில் அப்படித்தான் சொல்வோம். பகலின் மொத்தச் சந்தோஷத்தையும் துளித் துளியாக வெளியேறும் அந்த எரிச்சல் மிகுந்த சிறுநீர் வடித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றும். சூடான வெந்நீரைக் குடிக்கச் சொல்வார்கள்; நிறையத் தண்ணீரைக் குடிக்கச் சொல்வார்கள். ம்ஹூம். என்னதான் குடித்தாலும் வாதிப்பதை வாதித்துவிட்டுத்தான் உடலை விட்டு நீங்கும். 

கிழுவை மரத்தின் கீழாக ட்ரவுசரைக் கழட்டிக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த மொண்டியப்பய்யன் அருகில் வந்து ‘சாவுற நேரத்துல நம்ம ஒவ்வொருத்தர்கிட்டவும் சாமி வருமாம்...நாம என்ன வரம் வேணும்ன்னாலும் கேட்டுக்கலாம்...நீங்க ஒண்ணுக்கு அடிச்சு விட்ட வலியில கிடந்த ஒடக்காகிட்ட சாமி அது என்ன கேட்டிருக்கும்?’ என்றார். கிளறிவிட்டுவிட்டார். பயம் தொற்றிக் கொண்டது. மனம் என்னென்னவோ யோசித்தது. ‘எம்மேல மண்டு உட்டவனுக்கு செகைப் புடிக்கோணும்ன்னு கேட்டதோட அதோட உசுரு போயிருச்சு’ என்றார். திக்கென்றானது. ‘இனி பண்ணாதீங்க...அவன் குஞ்சாமணி அழுகிப் போய்டோணும் கேட்டுடுச்சுன்னா என்ன பண்ணுவீங்க?’ என்றார். வாழ்க்கை முழுவதும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவஸ்தைப் பட வேண்டும் என்கிற பயம்தான் பிரதானமாக இருந்தது. அதன் பிறகு ஓணான் அடிக்கப் போனதாக ஞாபகமேயில்லை. 

யோசித்துப் பார்த்தால் மொண்டியப்பய்யன் இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ‘உடம்புக்கு சொகம் கொடுத்து பழக்கவே கூடாது’ என்று அவர் சொன்னதன் அர்த்தம் அந்த வயதில் முழுமையாகப் புரிந்ததில்லை. ஆனால் இப்பொழுது தெரிகிறது. இப்பொழுதெல்லாம் உடல் சுகம் கேட்டுப் பழகிக் கொண்டிருக்கிறது. வெயிலில் இறங்குவதென்றாலே அவ்வளவு சங்கடமாக இருக்கிறது. உடல் நம் பேச்சைக் கேட்கும் வரைக்கும் பிரச்சினையில்லை. எப்பொழுது ‘குளிருது போத்திக்க’ ‘உப்புசம் அடிக்குது ஏஸில உட்காரு’ என்று நம்மிடம் உத்தரவு போட ஆரம்பிக்கிறதோ அப்பொழுதிருந்து உடல் மீதான நம் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்குகிறோம் என்று அர்த்தம். அதற்கு விட்டுவிடவே கூடாது என்று நினைப்பேன். யாருடைய வீட்டிற்குச் சென்றாலும் ‘பாய் கொடுங்க படுத்துக்கிறேன்...சுடு தண்ணீர் வைக்க வேண்டாம்...குளிர்நீரிலேயே குளித்துக் கொள்கிறேன்’ என்று சொன்னால் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். 

இன்று கோயமுத்தூர் வந்திருக்கிறேன். மொத்தத் தமிழ்நாட்டையும் யாரோ எடுத்துக் கொதிகலனில் வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. வெந்து தணிகிறது. 
(கனகமணி, ரூபி மற்றும் அவரது குழந்தை)

ரூபி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இளம் வயதுப் பெண். ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. நான்கு வயது இருக்கும். அந்தக் குழந்தைக்கும் கண்ணில் ஏதோவொரு கோளாறு. ரூபி மீண்டும் கர்ப்பமான இரண்டாவது மாதத்தில் அவருடைய கணவர் இறந்துவிட்டார். எலெக்ட்ரீஷியன். கார்போரேட் நிறுவனமொன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இறந்து போனார். கோவை கணபதியில் வசிக்கும் கனகமணியும் அவருடைய தங்கை ரம்யாவும் அழைத்து ‘அந்தப் பொண்ணு அப்பாவி...வெளியுலகமே தெரியலை...ஏதாச்சும் செய்யுங்க’ என்றார்கள். என்ன தேவை, இப்போதைக்கு எதைச் செய்யலாம் போன்ற விசாரணைகளைச் செய்து சுந்தர்தான் ஒருங்கிணைத்தார். இப்போதைக்கு அவரால் வேலைக்கு எதுவும் செல்ல முடியாது. குழந்தை பிறந்த பிறகு அவருக்கு வேலை ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துவிடலாம். தற்சமயம் ஆறு மாதத்திற்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கிக் கொள்வதற்கான உதவியைச் செய்துவிட்டு வந்திருக்கிறேன். உள்ளே நுழையும் போது தலை இடித்துவிடக் கூடிய மிகச் சிறிய வீடு. திண்ணையிலேயே அமர்ந்து காசோலையை எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்த போது ‘இந்தக் கோடையில் இந்த வீட்டில் எப்படி வாழ முடியும்?’ என்ற சிந்தனை தோன்றிக் கொண்டேயிருந்தது. மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்?  

‘இங்க எப்படி வாழ முடியும்?’ என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது ‘உடல் சுகம் தேடிப் பழகியிருக்கிறது’ என்று அர்த்தம். 

‘ஏன் ஒவ்வொரு மனிதர்களையும் நேரில் சந்திக்க வேண்டும்?’ என்று கேட்கப்படுகிற கேள்விகளுக்கு நூறு பதில்களைச் சொல்லலாம். ஆனால் நம்மைத் திரும்பத் திரும்ப பரிசோதனை செய்து கொள்வதற்கு நம்மைவிட எளிய மனிதர்களை சந்திப்பது மிக அவசியம். எந்த மனிதரையும் பார்த்து நாம் பரிதாபப்பட வேண்டியதில்லை. இதுதான் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தைப் பார்த்து பரிதாபப்படுவதும், நம்மால் அந்த இடத்தில் வாழ முடியாது என்று அலட்டிக் கொள்வதும் அவசியமற்றது. அவ்வப்போது நம்மைத் தட்டி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய பரிசோதனைகள் சுயநலமானவை என்றாலும் அந்த பரிசோதனைதான் நம்மைத் திரும்பவும் நம்முடைய இயல்பான இடத்திலேயே நிறுத்தி வைக்கிறது. நிலத்திலிருந்து நாம் பறந்துவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டேயிருக்கிறது. 

ரூபியையும் அவருடைய குழந்தையயும் பார்த்துவிட்டுத் திரும்பிய போது மனம் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. அவர்களின் வலியோடும் துக்கத்தோடும் ஒப்பிடும் போது செய்த உதவி ஒன்றுமேயில்லை. மனம் கனத்துக் கிடந்தது. அலை மோதும் எண்ணச் சிதற்லகளோடு கோவையின் சாலையில் நடந்த போது அந்த வெக்கை ஏனோ பழைய வெக்கையாக இல்லாமலிருந்தது.

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// நம்மைத் திரும்பத் திரும்ப பரிசோதனை செய்து கொள்வதற்கு நம்மைவிட எளிய மனிதர்களை சந்திப்பது மிக அவசியம்//
இந்த வார்த்தைகள் எல்லாம் சுயமாய் அனுபவிக்காமல் வருமா மணி?.

ADMIN said...

பதிவு நகைச்சுவையா போய்க்கொண்டிருந்தத்து. திடீரென சிரிப்பை விட்டு,
"சீரியசாக" மாறிவிட்டது. சிரிக்க வைத்ததற்கும், சிந்திக்க வைத்ததற்கும் நன்றி.

சரியான நபர்களை தேர்ந்தெடுத்து உதவும் குணம் பாராட்டத்தக்கது. தொடர்க உங்கள் நலப்பணி..!

செ. அன்புச்செல்வன் said...

என்னைக் காசேதும் இன்றி அமத்தா வீட்டிற்கு அழைத்துச்சென்று வந்த மகிழ்ச்சி மறைவதற்குள் ரூபி யைப் பற்றிய செய்திகண்டு வருத்தத்தைக் கொடுத்துவிட்டது. நல்லது நடக்கவேண்டும்..உங்களின் அறம் இன்னும் செழிக்கட்டும்...

பாலாஜி said...

ரூபிக்கு ஏதாவது ஒரு தொழிற் பயிற்சி அளீப்பதன் மூலம் அவரது வருமானத்திற்கு வழி செய்து கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.