Mar 24, 2016

பதில் தெரியுமா?

கோபிப்பாளையம் பள்ளியிலிருந்து அடிக்கடி அழைப்பு வருவதுண்டு. அரசு உதவி பெறும் பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு வரைக்கும்தான் இருக்கிறது. ஆனால் மாணவர்கள் படு சூட்டிப்பு. எந்தக் கேள்வி கேட்டாலும் தெரிகிறதோ இல்லையோ - தயங்கவே மாட்டார்கள். எழுந்து நின்று கையைக் கட்டியபடி நின்று அடித்துவிடுவார்கள். ‘வீட்டில் துணி துவைக்கும் போது நுரை வருதுல்ல? அந்த நுரை ஏன் கலர் கலரா தெரியுது?’ என்றேன். ஒரு பொடியன் எழுந்தான். இரண்டாம் வகுப்பு அல்லது மூன்றாம் வகுப்பு படிக்கக் கூடும். ‘ஒவ்வொரு அழுக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்குதுங்கய்யா..அதனால் அப்படித் தெரியுதுங்க’ என்றான். மாணவர்கள் முடிந்த வரை தமிழில்தான் பேசுவார்கள். அதற்காகவே அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும். சிறப்பாக இயங்குகிற அரசுப் பள்ளிகளில் இதுதான் மாணவர்களின் தனிச்சிறப்பு. சரியோ, தவறோ- தைரியமானவர்களாக வளர்த்துவிடுகிறார்கள். மனனம் செய்வது, புரிந்து கொள்வது, பாடம் படிப்பதெல்லாம் அப்புறம்தான். 

பொதுவாகவே குழந்தைளிடம் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல்தான் எதிர்காலத்தில் அவர்களின் ஆளுமையை நிர்ணயம் செய்கிறது. தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது அரசுப் பள்ளிகளில் சராசரி மதிப்பெண் வேண்டுமானால் குறைவாக இருக்கக் கூடும். ஆனால் மாணவர்களின் ஆளுமை (Persoanlity) என்ற அடிப்படையில் பார்த்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரு படி மேலேதான் இருக்கிறார்கள். 

அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தனித்து இயங்குகிறவர்களாக (Indepent) இருக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்தே அவர்களாகக் குளித்து, அவர்களாக உண்டு, அவர்களாக பள்ளிக்கு கிளம்பிச் செல்கிறார்கள். விதிவிலக்குகள் இருந்தாலும் இதுதான் பொதுவான நிலை. ஆனால் நகர்ப்புற அல்லது தனியார் பள்ளிகளுக்கு இது வாய்ப்பதில்லை. குளித்து விட வேண்டும். உணவூட்டி விட வேண்டும். வீட்டு வாசலில் வந்து நிற்கும் வாகனத்தில் ஏற்றிவிட்டு வர வேண்டும். மாலை நான்கு மணிக்கு ஒன்றாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு பொடிக் குழந்தைகள் சாரிசாரியாக நடந்து வீட்டுக்குச் செல்வதை அரசுப் பள்ளிகளில் இயல்பாகப் பார்க்க முடிகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் இது சாத்தியமில்லை. ஓரளவு காசு சேரச் சேர அதீதமான பயத்தை தேடிக் கொள்கிறோம். ‘பைப் தண்ணியைக் குடிச்சா சளி புடிச்சுக்கும்’ என்பதில் ஆரம்பித்து ‘மண்ணில் விளையாடினால் பூச்சி வந்துடும்’ வரைக்கும் எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். எட்டாம் வகுப்புக் குழந்தை கூட சாலையைத் தனித்து தாண்டிவிட முடியுமா என்று பயந்து கொண்டேயிருக்கிறோம்.

குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிற வரைக்கும் அவர்களின் ஆளுமைத் திறன் தானாக வளரும். எப்பொழுது குழந்தைகளை பிராய்லர் கோழிகளாகப் பார்க்கிறோமோ அப்பொழுது அவர்களின் சகல திறமைகளுக்கும் கத்தரி விழுகிறது. இதனாலேயே என்னவோதான் தனியார் பள்ளியின் மாணவர்கள் தனித்து இயங்குபவர்களாக இருப்பதில்லை. வீட்டில் பெற்றோர்களையும், பள்ளிகளில் ஆசிரியர்களையும், சக நண்பர்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்திருக்கிறார்கள். படிப்பு, மதிப்பெண் என்கிற வகையில் அவர்கள் முன்னிலையில் இருந்தாலும் ஒட்டுமொத்த சராசரி என்று பார்த்தால் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆளுமைதான் ஒரு படி மேலே இருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட புரிதலில் இதைத்தான் அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்குமிடையேயான மிகப் பெரிய வித்தியாசமாகப் பார்க்கிறேன்.

அதே போல ‘அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பொறுப்பற்றவர்கள்; யாரையும் கண்டுகொள்வதில்லை’ என்பதெல்லாம் பொதுமைப்படுத்தப்பட்ட வாதம். பெரும்பாலான அரசு மற்று அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். நேரடியாகவே பார்த்திருக்கிறேன். பிறகு எங்கே தேங்கிப் போய்விடுகிறார்கள் என்று கேட்டால் - exposure என்று சொல்லலாம். நகர்ப்புற, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைக்கக் கூடிய நவீன வசதிகள் அரசு மற்றும் உதவி பெறும் ஆசிரியர்களுக்குக் கிடைப்பதில்லை. வெளிப்புற ஆலோசகர்கள், பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டால் பெரும்பாலான கிராமப்புற/அரசுப் பள்ளிகள் பின்னியெடுத்துவிடுவார்கள் என்று தைரியமாக நம்பலாம்.

கோபிப்பாளையம் பள்ளி ஆசிரியைகள் கிட்டத்தட்ட தங்கள் வீடு மாதிரிதான் பள்ளியை நினைக்கிறார்கள். சம்பளம் தருகிறார்கள்; வேலைக்கு வருகிறோம் என்கிற மனநிலையை அவர்களிடம் பார்த்ததேயில்லை. பல பள்ளிகளில் கைவிடப்பட்ட மனநலம் குன்றிய மாணவர்களையும் சேர்த்து பாடம் சொல்லித் தருகிறார்கள். இப்படியான ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். கடந்த ஆண்டு இந்தப் பள்ளிக்கு அறக்கட்டளையிலிருந்து விளையாட்டுச் சாதனங்கள் வாங்கிக் கொடுத்திருந்தோம். அதனால் விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். ‘நீங்க எவ்வளவு நேரம் வேணும்ன்னா பேசுங்க’ என்றார்கள். நான் பேசிவிடுவேன். மாணவர்கள்தான் பாவம். ஊரில் எந்த இடத்தில் பார்த்தாலும் ‘வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம் அய்யாஆஆஆஆ’ என்று இழுத்து சங்கோஜமடையச் செய்வார்கள். குடும்பத்தினருடன் செல்லும் போது வேண்டுமானால் பந்தாவாக சட்டையை உயர்த்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு முறை தமிழாசிரியருடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு பொடியன் ஓடி வந்து இழுவை போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். தமிழாசிரியர் எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டார்தான். ஆனால் எனக்குத்தான் ‘இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலையா’ என்று உள்ளுக்குள் அசிரீரி ஒலித்தது. 

அப்பேற்பட்ட மாணவர்கள் அடுத்த முறை பார்க்கும் போது தலை தெறிக்க ஓடிவிடக் கூடாதல்லவா?

‘அஞ்சே நிமிஷம் பேசிக்கிறேன்...போரடிச்சா சொல்லுங்க’ என்று சில கேள்விகளைக் கேட்டுவிட்டு ‘ப்ளாஸ்டிக்கை கண்டபக்கம் போடாதீங்க...நீங்களா ஒரு மரத்தை வளர்த்துங்க...அடுத்த வருஷம் யாரெல்லாம் மரம் வளர்த்திருக்கீங்களோ அவங்களுக்கு நானொரு பரிசு தருவேன்’ என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டேன். கேள்விகள் என்றால் பாடத்திலிருந்து இல்லை. ‘தார் ரோட்டில் நடந்தால் கால் சுடுது...அதே மண் ரோட்டில் நடந்தால் ஏன் சுடுவதில்லை’ ‘ஏன் ஒவ்வொரு வருஷமும் மரங்கள் இலைகளை உதிர்க்குது?’ ‘கார்பன் டை ஆக்ஸைடு அதிகமானா ஏன் நிலமெல்லாம் தண்ணீருக்குள் மூழ்கிடும்ன்னு சொல்லுறாங்க?’ - இப்படியான கேள்விகள்.

சில கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு சில கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்து வைக்கச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

‘நல்லா பேசுனீங்க’ என்றார் தலைமையாசிரியர் அரசு தாமஸ். 

‘இதெல்லாம் எனக்கு சாதாரணமப்பா’ என்று மனதுக்குள் பந்தா செய்துவிட்டு வந்து வண்டியை எடுக்கும் போது ஒரு பொடியன் வந்தான். நான்காம் வகுப்பு படிக்கிறானாம்.

‘ஐயா கோடைகாலத்தில் நீராவிப்போக்கை தடுக்கணும்ன்னுதானே மரமெல்லாம் இலையை உதிர்க்குது?’ என்றான். இவன் எதுக்கு கொக்கி போடுகிறான் என்று தெரியாமல் ‘ஆமாம்ப்பா’ என்றேன். 

‘வேப்பமரத்தைப் பார்த்தீங்களா? வெயில்காலத்துக்கு முன்னாடி இலையெல்லாம் உதிர்த்துட்டு சரியா பங்குனி சித்திரைல உச்சி வெயில் காலத்துல தள தளன்னு ஆகிடுது..அது ஏன்?’ என்றான்.

‘அடங்கொக்கமக்கா’ என்று நினைத்துக் கொண்டேன்.

நல்லவேளையாக அலைபேசியில் யாரோ அழைத்தார்கள். பொடியனிடம் அவசர அவசரமாக ‘அடுத்த தடவை வரும் போது சொல்லுறேன் தம்பி’ என்று சொல்லிவிட்டு வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஓரே ஓட்டம்தான். 

யாருக்காவது பதில் தெரியுமா?
10 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Thanks a lot mani! I always proud to say that I grown up in this school...then it has upto 5th standard only, FYKI.

Unknown said...

நான் உங்கள் வலைப்பதிவில் படிக்கும் போது ஒவ்வொரு முறையும் உங்கள் கருத்துகள் அனைத்தும் நான் மிகவும் மனதார உணர்கிறேன்,
வாழ்த்துகள் மணி ...!
All the best keeping going..!

Jaypon , Canada said...

Your posts are always encouraging me to be on philanthropic path.I will for sure Anna.

சர்வோத்தமன் சடகோபன் said...

இந்த பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது.எனக்கு ஒரு கேள்விக்கும் பதில் தெரியவில்லை.வாழ்த்துக்கள்.

Unknown said...

வேப்ப மரத்தோட ஆணி வேர் 12 meter deep inside the land.

Somesh said...

As a layman , while trying to learn about Fall Colors, I understood that, when photosynthesis couldn't happen, in order to retain moisture and energy, trees shed leaves. And as we know: for Photosynthesis, CO2, H2O and Sunlight is required. If there is an acute shortage of one of these, trees shed leaves. I think, that's why in places where there is no sunlight, fall colors and leaves shedding happens in winter. And when there is shortage of water, trees shed leaves in summer. It also depends on type of trees I believe. அவ்வ்வ்வ்வ்வ்வ் ...அம்புட்டு தான் நமக்கு தெரியும். விவரம் தெரிஞ்சவங்க யாராவது "Detail சொன்ன நல்லா இருக்கும்

Anonymous said...

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=816&ncat=3

கடுமையான குளிர் வாட்டும் காலங்களில் தங்களிடம் உள்ள தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள மரங்கள் மேற்கொள்ளும் ஒரு வழிதான் இலைகளை உதிர்த்தலாகும். இலைகள் இழக்கும் அல்லது உதிர்க்கும் மரங்களின் இலைகள் மெல்லியதாக இருக்கும். ஒப்பிடுகையில் என்றென்றும் பசுமையான இலைகளுடன் காட்சி தரும் மர இலைகளைவிட மெல்லியதான இலைகளை, இலை உதிர்க்கும் மரங்கள் கொண்டிருக்கும். இந்த மெல்லிய இலைகள் சுவாசித்தலின்போது என்றும் இலைகளுடன் விளங்கும் மரங்களின் தடிமனான இலைகளைவிட அதிகப்படியான தண்ணீரை செலவு செய்கிறது.

குளிர் காலத்தில், வேர்களின் நடவடிக்கைகள் குறைவதால், தண்ணீரை வேர்கள் மூலம் பெறுவதும் குறைகிறது. தண்ணீர் இழப்பை மேலும் மட்டுப்படுத்த மரம் இலைகளை உதிர்க்கிறது. இலைகளை உதிர்ப்பதன் மூலம், மரம் தன்னில் உள்ள வேண்டாத மற்றும் நச்சான பொருட்களையும் வெளியேற்றுகிறது. மரத்தில் இதுபோல சேர்ந்த கால்ஷியம் மற்றும் சிலிக்கான் வெயில் காலத்தில் வெளியேற்றப்படுகிறது.
"பாப்லர்' மரத்தின் இலைகள் தட்டையான காம்புகளை கொண்டிருப் பதால் அவை எளிதாக சிறகடிக்க முடிகிறது. பாப்லர் மரம் என்பது ஒரு வகை நெட்டிலிங்க மரமாகும். இது மூச்சுவிடுவதற்கு பெரிதும் உதவுவதோடு, இம்மரத்தை ஈர நிலத்திலும் வளர ஏற்றதாக செய்கிறது. பாப்லர் என்ற வார்த்தைக்கும் "ஆட்டு' என்ற பொருள் படும் கிரேக்க "பாப்பாய்லோ' வார்த்தைக்கும் தொடர்புண்டு.

* இலை நீக்கும் இயக்கவியல்

அதிக குளிரும், குறைந்த பகலின் நேரமும் கொண்டது இலையுதிர் காலம். இந்த காலத்தின் நிலையால் தண்ணீர் மற்றும் சத்துக்கள் வரத்து தடுக்கப்படுகிறது. அதோடு இலைகளின் செயல்பாடும் தடுக்கப்படுகிறது. உடனே மிருதுவான செல்கள் காம்பின் அடியில் உருவாகத் தொடங்கும். இந்த மிருதுவான செல்களால் உருவான அடுக்கில் "பெக்டின்' என்ற பெயரில் பொருள்களில் மாற்றம் உண்டாக்கும் வேதியியல் பொருள் உருவாகிறது. இந்த பெக்டின் காம்பின் செல் சுவர்களை மூழ்கடித்து, அதன் மூலம் இலை காம்பிலிருந்து பிரியும்படி செய்கிறது. இலை விழும்போது, ஒரு மரப்பட்டை அடுக்கு உடனே அந்த இலைக்காம்பு பிரிந்த இடத்தில் தோன்றி, பாதிக்கப்பட்ட அந்த இடத்தை பாதுகாக்கிறது.

* எல்லா மரங்களும் இலையுதிர்ப்பதில்லை

சில இலையுதிர்க்கும் மரங்கள் குளிர் காலத்தில் தங்கள் இலைகளை உதிர்ப்பதில்லை. மடிந்த ஓக் மர இலை கள் ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், குளிர்காலம் முழுவதும் கிளைகளிலேயே இருக்கும். வசந்த காலத்தில், புதிதாய் முளைக்கும் மொட்டுக்கள் பழைய ஓக் இலைகளை மரத்திலிருந்து வெளி தள்ளும். உண்ண பயன்படும் கொட்டைகளை கொண்ட செஸ்ட்நட் என்ற இலை யுதிர்கால மரமும், குளிர் காலத்தில் இலைகளுடனேயே இருக்கும். தென் சீதோஷ்ண நிலையில் வளரும் சில வகை புங்க மரங்கள், இலைகளை பிரிக்கும் அமைப்பை உருவாக்க முடியாததால், இலைகளை வெளி ஏற்றுவது அவ்வளவு எளிதாக நடைபெற முடிவதில்லை.

* இலையுதிர்க்காத பசுமை மரம், இலைகளை கழிப்பது எப்படி?

வருடம் முழுவதும் இலைகளுடன் இருக்கும் மரங்கள், பசுமை மரங்கள் எனப்படும். ஆனால், ஒரே இலைகளை வருடத்திற்கு வருடம் வைத்தி ருக்கும் என்று பொருளல்ல. இலையுதிர்கால மரம் அந்த காலத்தில் தன் இலைகள் முழுவதையும் இழந்துவிடும். ஆனால், பசுமை மரங்களிலோ இலைகள் உதிர்வதும், வளர்வதும் வருடம் முழுவதுமான தொடர் நிகழ்ச்சி. சராசரியாக பசுமை மரங்களின் இலைகள் 3 - 4 வருடங்கள் வாழும். ஆனாலும் இந்த வாழும் காலம் தாவர இனங்களில் மாறுபட்டே இருக்கும். பைன் மர வகை இலைகள் 9 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஆனால், ரோஹோடென்டிரான் இலைகளில் வாழும் காலமோ 6 மாதங்கள்தான்.

Anonymous said...

கோடைக் காலத்தில் மரங்கள் இலை உதிர்வதில்லை! குளிர் காலத்தில்தான் இலை உதிரும்.. மேலே தினமலரில் (அட!) விரிவாக வந்ததை பதிந்துள்ளேன்.

Chandru said...

super sir.. நீங்க கேட்ட கேள்வி எதற்கும் பதில் தெரியவில்லை.. நீங்களே பதிலும் சொல்லிருங்க..

Vinoth Subramanian said...

No idea... Sorry...