Mar 19, 2016

சாகாள்

அகரமுதல்வனின் சிறுகதை சாகாள். சமீபத்தில் வெளியான இந்தக் கதையை வைத்துக் கொண்டு தாறுமாறாக அடித்துக் கொள்கிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழினிதான் கதையின் நாயகி. அவரது இயற்பெயர் சிவகாமி சுப்பிரமணியம். அகர முதல்வனின் கதையில் சிவகாமி என்ற பெயரே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட நான்காண்டுகள் புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழினி 2013 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இறந்த அவர் புற்று நோயால் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது.


அகரமுதல்வனின் கதையில் சிவகாமி 23 முறை தொடர்ந்து வன்புணர்வு செய்யப்படுகிறாள். சித்ரவதை செய்யப்படுகிறாள். எல்லாவிதத் துன்பங்களுக்கும் பிறகு மெதுவாகக் கொல்கிற விஷமருந்தை ஏற்றி சாகடிக்கப்படுகிறாள். 

இந்தக் கதையை வைத்துக் கொண்டு இணையவெளியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து விவாதம் நடைபெறுகிறது. அகரமுதல்வனைப் புரட்டி எடுக்கிறார்கள். அகரமுதல்வன் தீவிரமான புலி ஆதரவாளர். இளம் வயதிலேயே இலக்கிய உலகில் தனக்கான இடத்தை ஸ்திரமாக அமைத்துக் கொண்டவர். ஏகப்பட்டவர்களுக்கு இவர் மீது வன்மம் உண்டு என்பதை நேர்பேச்சில் உணர்ந்திருக்கிறேன். இந்த அடிப்படையில் பார்க்கும் போது இந்த விமர்சனங்கள் ‘சாகாள்’ என்கிற கதைக்கான விமர்சனங்களா அல்லது அகரமுதல்வன் என்ற தனிப்பட்ட மனிதர் மீதான விமர்சனங்களா என்று குழப்பம் வருகிறது.

இராணுவம் செய்த அயோக்கியத்தனங்களை டிவி சேனல்களில் குறும்படங்களாகவும், ஆவணங்களாகவும் பதிவு செய்யும் போது ஒரு எழுத்தாளன் புனைவாகவோ அல்லது அபுனைவாகவோ கதையாக எழுதும் போது ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும்? இதற்கு முன்னால் விடுதலைப்புலிகளின் எதிர்பாளர்கள் தங்களின் கதைகளில் புலிகளைப் பாத்திரங்களாக்கி மிக மோசமாக பதிவு செய்ததையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுபடுத்திப் பார்க்கலாம். இந்தக் கதையில் மட்டும் என்ன பிரச்சினை என்று புரியவில்லை. 

இந்தக் கதையில் தமிழினியை மையப்பாத்திரமாக்கியிருப்பது நெருடலாகத்தான் இருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கதை எழுதுவது ஆரோக்கியமான போக்காக இருக்காது. சிவகாமி என்ற பெயரை மாற்றியிருந்தால் கூட இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்காது என்று நினைக்கிறேன். ஆயினும். இந்தக் கதையை எழுதுவதற்கான எல்லாவிதமான சுதந்திரமும் அகரமுதல்வனுக்கு இருப்பதாகத்தான் நம்புகிறேன். இந்த ஒரு கதைக்காக அவரை குத்திக் கிளறுவது சரியாகப் படவில்லை.

தமிழினி இராணுவ முகாம்களில் இத்தகைய துன்பங்களை அனுபவித்திருக்கவில்லையென்றால் சந்தோஷம். ஆனால் இராணுவ முகாம்களில் அத்தனை பெண்களுமே கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்கள் என்பதைத்தான் இந்தக் கதையின் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கிறார்களா என்று புரியவில்லை. கதையில் வரக் கூடிய சிவகாமி தமிழினியாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்குமான ஒற்றைப் பிரதியாக கதையின் நாயகி இருக்கிறாள் என்கிற வகையில் இலக்கிய மோஸ்தர்கள் விட்டுக் கொடுப்பதுதான் நல்லது. 

அதிகாரத்தின் கோரப்பசி கொண்ட இராணுவமும் அதிகாரவர்க்கமும் பெண்ணுடலை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறோம். விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சலனப்படங்களிலும் அனுபவக் கட்டுரைகளிலும் வாசித்துக் கொண்டிருக்கிறோம். அதே தகவல்களை அகரமுதல்வனின் எழுத்து வழியாகக் கதையாக வாசித்துவிட்டு இவ்வளவு கொந்தளிக்க வேண்டியதில்லை. கொந்தளிக்கும் பலரின் அரசியல் நிலைப்பாடுகளின் பின்னணிகளைப் பார்த்தால் பெரும்பாலானவர்களின் விமர்சனங்களை இடது கையில் தள்ளிவிட்டு தாண்டிவிடலாம்.

பொதுவான வாசகர்கள் இந்தக் கதையை ஒரு முறை வாசித்துவிடவும். ஆதரவு எதிர்ப்பு என்பதையெல்லாம் மறந்துவிட்டு வாசித்த கதையில் இருக்கும் குறைபாடுகளையும் நிறைகளையும் வெளிப்படையாக விவாதிக்கலாம். படைப்பு சார்ந்த நேர்மையான விவாதங்கள் பொதுவெளியில் அவசியமானவை. அகரமுதல்வன் என்ற எழுத்தாளனைத் தள்ளி வைத்துவிட்டு சிவகாமியை மட்டும் முன்னிறுத்திப் பேசலாம்.

மற்றபடி, அகரமுதல்வனிடம் சொல்வதற்கு ஒன்றிருக்கிறது- நீங்கள் ஈழமண்ணில் பார்த்த வலிகளையும் கண்ணீரையும் ஒப்பிடும் போது இன்றைய விமர்சனங்களும் கூச்சல்களும் எந்தவிதமான எடையுமற்றவை. எதிர்மறை விமர்சனங்களை துச்சமாக நினைத்து நகர்ந்து செல்வதில்தான் படைப்பாளியின் வெற்றி இருக்கிறது. இன்னமும் காலமிருக்கிறது. எழுதிக் குவிக்கவும் வாசித்துத் தள்ளவும் தளங்கள் காத்திருக்கின்றன. பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. தொடர்ந்து எழுதுங்கள். எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் முன்னேறிக் கொண்டேயிருங்கள் சப்தங்கள் உங்களுக்குப் பின்னால் தானாக அடங்குவதை உணர முடியும்.

(இந்தக் கதையை இப்பொழுது எந்தத் தளத்திலும் காண முடியவில்லை. அதனால் நிசப்தம் தளத்தில் பிரசுரம் செய்கிறேன்)

                                                                      ***

சாகாள்- அகரமுதல்வன்

இந்தக் காலவெளியிலிருந்து அவளால் மீள முடியவில்லை. கணங்களில் சலிப்பு நிகழ்ந்த பின்னர் விரும்பத்தகாத இருத்தலாக வாழ்க்கை திணறுகிறது. துயரங்களுக்குள் ஒடுங்கி வானத்தைப் பார்க்கிற பறவைக்கு பறத்தலில் ஒரு பயமிருப்பதைப் போல அவளுக்குள்ளும் வாழ்க்கை நடுங்கத்தொடங்கிவிட்டது. புலர்ந்த காலையும், இரவும் அவளுக்கு ஒன்றாகவே நிறம்காட்டியது. பொழுதுகள் தீரத்தீர தன்னையும் தீர்த்துக்கொண்டிருக்கும் உயிரியாய், இருட்டின் விலங்குகள் போடப்பட்டிருக்கும் தனது கைகளை எப்போதேனும் தூக்கி முகம் துடைத்து வலியழிப்பாள். அழிக்க அழிக்கத் தோன்றும் வலியின் சாகாவரம் அவளில் தொற்றியிருந்தது. கருகிப்போன சோளக்கதிர்களில் குட்டி ஓணான்கள் ஏறுவதைப் போல தனக்கு ஏற்றப்பட்ட மெல்லக் கொல்லும் விசமருந்துகள் உக்கிரமாவதை விளங்கியிருந்தாள். தன்னை கண்ணாடியில் பார்க்கிற போதெல்லாம் இறந்து கொண்டிருக்கும் விநோதமானவொரு உருவத்தைப் நினைத்து வாய்விட்டுச் சிரிப்பாள் சிவகாமி. நினைத்தலுக்கே நரம்பதிரும் இடைவிடாத வன்புணர்வை, முலை நசிக்கும் சப்பாத்துக் கால்களின் சித்ரவதைகளை  திணித்து பருக்கப்பட்ட சாராயங்களை, உடம்பெல்லாம் கறுத்தப் பொட்டுக்களாயிருக்கும் சிகரெட் சூடுகளையென தானெதிர்கொண்ட எவற்றையும்  எவரிடமும் பகிராமல் சிறையில் இருக்கும் சிவகாமியின் தலையின் மேல் பல்லியொன்று வீழ்ந்தது. சிறைகளுக்குள் இருக்கும் பல்லிகள் மேலிருந்து கீழே விழுவதற்கும் அங்கு அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளின் தலைகளையே தேர்ந்தெடுக்கிறது.

மெகசின் சிறைச்சாலையில் ஒரு வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருக்கும் சிவகாமி அங்குவரும் தேரர்களுக்கும், சிங்கள அரசின் உயர் அதிகாரிகளுக்கும் கண்காட்சிப் பொருளாகவே இருந்தாள். இயக்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த சிவகாமியோடு கதைப்பதையும் போர் வெற்றியின் பெருமைகளை பற்றி சொல்லிக்காட்டுவதையும் ஒரு வேலையாகவே தேரர்கள் தொடர்ந்து செய்துவந்தார்கள்.சிவகாமி துன்பத்தை அமைதிப்படுத்தத் தெரிந்தவளாய் தன்னை மாற்றிக்கொண்டாள். அவலங்கள் சக்கரங்களாகி சுழலும் பாதையின்  நிரந்தரமானவளாய் தன்னை உணர்ந்துகொண்டாள். போராளியாகவிருந்த கடந்த காலங்களை சிறையறையில் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் அவளைச் சூழும் இருளுக்கு இவ்வுலகை மிரட்டும் குரலிருந்தது.
                                             
சிவகாமியை பார்ப்பதற்கு இடைக்கிடை தமிழ் அரசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறைச்சாலைக்கு வருவார்கள்.  சிறைக்கதவுக்குள் நின்று கொண்டு வந்தவர்களை பார்த்து புன்னகைக்கும் சிவகாமியின் பண்பும் ஒழுக்கமும் துயரத்திலும் பிசகவில்லை. சிறைச்சாலையில் நிறையப் பெண் போராளிகள் அடைக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர் ஒருவரைத் தான் சந்திக்கமுடியுமென கட்டுப்பாடு இருந்தது. சிவகாமியை சந்திக்க ஒருமுறை வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினரை இராணுவம் பல கேள்விகளை கேட்டுத் தான் சிறைக்குள்ளேயே அனுமதித்து. சிவகாமி சந்திக்கும் இடத்திற்கு கூட்டி வரப்பட்டதற்கு பிறகும் அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதை ஒட்டுக்கேட்க சிவகாமியின் ஆடையில் அவளுக்குத் தெரியாமலேயே கருவியொன்றை பொருத்தியிருந்தார்கள்.

வணக்கம் தங்கச்சி...

சிவகாமியை பாராளுமன்ற உறுப்பினர் கும்பிட்டு கண்கள் கலங்கச் சொன்னார்.

வணக்கம் அண்ணா, எப்பிடி இருக்கிறியள்? சிவாகாமி கூப்பிய தனது கரங்களுக்குள் வாதைகளின் வாயைக் கட்டிப்போட்டிருந்தாள். உலகிற்கு சொல்லமுடியாத துயரங்களை சித்ரவதைகளை சிறைகளில் சந்தித்த பெண்ணுடல் சிவகாமியினது. போரும் போரின் வெற்றியும் பெண்களின் உடலைத்தான் தீனியாக்கியது. அலரிமாளிகையில் கண்ணாடிப்பெட்டியில் கிடக்கும் புத்தரின் புனிதப்பல்லுக்கு ஒரு தமிழச்சியின் பிறப்புறுப்பைக் கீறி இரத்தம் தெளித்தார்கள் என்கிற ஒரு செய்தியை  தடுப்பில் இருந்த போராளிகளுக்கு இடையில் இராணுவமே கசியவிட்டது.

“சனங்களை அலையவிட்டு, குடும்பங்களைச் சிதறடிச்சு எல்லாரையும் நொண்டியாக்கி ஆறுதல் அடையினம் தங்கச்சி. காணமல் போன பிள்ளையை வவுனியாவில இருந்து தேடத் தொடங்கி கொழும்பு வரைக்கும் வந்து அழுதழுதே செத்துப்போகிற பெற்றோர்கள், முள்ளிவாய்க்காலில செத்துப்போனது என்று தெரிஞ்சால் கூட நிம்மதி அந்தச் சனங்களுக்கு. கோவில் வாசலில கூடி நிக்கிற மாதிரி இராணுவ முகாம்களுக்கு முன்னால சனங்களை நிப்பாட்டிப்போட்டாங்கள். பிள்ளையள் கடவுள் என்றால் இப்ப இராணுவ முகாம் கோவில். கண்ணீரும் அலைச்சலும் தான் சனங்களுக்குள்ள நிரம்பியிருக்குத் தங்கச்சி என்றார் வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்.

சிவகாமியின் மூச்சுக்குள் சனங்களின் அவலம் புயல் காற்றின் பாய்க்கப்பலைப் போல திணறியது. முள்ளிவாய்க்காலிலிருந்து மக்களை அடைத்து வைத்திருந்த செட்டிக்குளம்  முகாமில் தான் சிவகாமியிருந்தாள். அடையாளமே தெரியாத ஒருத்தியாக தன்னை மாற்றிக்கொண்டு இருந்து சிலகாலங்களில் தப்பிவிடலாம் என நினைத்த சிவகாமியை இரண்டு வாரங்களிலேயே இராணுவம் கண்டுபிடித்துவிட்டது. சிவகாமியை இராணுவம் கைதுசெய்த சம்பவம் பெரியளவில் மக்களால்  பேசப்பட்டது. போர்வெற்றிக்க்கு பிறகு தாம் பெற்ற இன்னொரு வெற்றியென்று அரசாங்கத்தின் புலானய்வு அலகு தன்னை நினைத்து பெருமிதம் கொண்டது. இயக்கத்தின் கடைசிக்கால ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் அதிருப்தி அடைந்திருந்த மக்கள் சிலரே இராணுவப் புலனாய்வாளர்களிடம் சிவகாமியை காட்டிக்கொடுத்தார்கள் என ஒரு இராணுவ அதிகாரியே ஊடகங்களுக்கு செய்தி வழங்கினான். சிவகாமி இராணுவத்தின் கையில் அகபட்ட முதல் நாளில் அவளை விசாரணை செய்த  குழுவில் ஒரு தமிழனும் இருந்தான். வவுனியாவில் உள்ள ரகசிய இடத்திற்கு சிவகாமியை கொண்டு போய் விசாரித்த அந்தக் குழு கோத்தபாயவின் விசுவாசிகளாய் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டது.              அவர்களிடம் அகப்பட்ட போதிருந்த பாவாடை சட்டையோடு சிவகாமி அவர்களுக்கு முன்னிருந்தாள்.

தன்னை ஒரு முன்னாள் போராளி என்று அறிமுகப்படுத்திய அந்தக் குழுவின் ஒரே தமிழனானவனை வேறு எங்கேனும் பார்த்த ஞாபகம் அவளுக்கு வரவில்லை. விசாரணையே ஒரு மரத்தின் கீழேயே நடாத்தப்பட்டது. அதுவொரு இராணுவ முகாமென்பது சிவகாமிக்கு தெளிவு. திரும்பும் பக்கமெல்லாம் சிப்பாய்கள் தெரிந்தார்கள். சிவகாமியும் அந்த விசாரணைக்குழுவும் இருப்பதிலிருந்து இருபது அடிகள் தள்ளி கோத்தபாயவின் படமும் சிங்களத்தில் ஏதோ எழுதியும் பெரியளவில்  பதாகைகள் நிறுவப்பட்டிருந்தது. என்ன விநோதம்! அந்த வளாகம் முழுதும் கோத்தபாயாவின் படங்கள் ஆளுயர பதாகைகளில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இரத்தம் குடித்து இறுகிப் போன பிசாசின் முகம் இப்படித் தான் இருக்கமுடியுமென சிவகாமி நம்பினாள்.

நீங்கள் ஏன் சரணடையவில்லை? என்று சிங்களத்தில் கேட்கப்பட்ட கொழும்பின் கேள்வியை தமிழனானவன் மொழிபெயர்த்துக் கேட்டான். விசாரணைகளின் தன்மைகளை, இராணுவ உரையாடல்களை அது கோருகிற விடயங்களோடு புரிந்துகொள்ளக்கூடியவர்கள் இயக்கப் போராளிகள்.
   
எனக்கு உங்களிடத்தில் சரணடைய பயமில்லை அவமானம் இருந்தது என்று அத்துணை இறுக்கத்தோடு பதில் சொன்னாள். அவளுக்கு மேலிருந்த மரம் அசைவதில்லை என்பது போல இருந்தாலும் காற்று அசைப்பேன் என்று சொன்னது. காற்றுக்கு அசைத்து மட்டும் தான் பழக்கம். இந்த விசாரணை அவளை என்னவெல்லாம் செய்யப்போகிறது எனும் நடுக்கம் அந்த மரத்திலிருந்த செண்பகம் ஒன்றுக்கு இருந்தது. இந்த மரத்தடி நிறைய விசாரணைகளையும் நிறைய பதில்களையும் கண்டிருக்கும்.

நீங்கள் ஏன் முள்ளிவாய்க்காலிலேயே சரணடையவில்லை என்று அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலகம் கேட்கிறது?

அது தான் சொல்கிறேன். உங்களிடம் சரணடைய எனக்கு அவமானமாக இருந்தது. ஆனாலும் உங்களிடம் அகப்பட்டு விடுவேன் என்று உள்மனசு சொன்னது என்று எழுதிக்கொள்ளுங்கள். நிச்சயமாக இந்தக் காலத்தில் பிரகாசத்தை விரும்புவர்கள் வாழமுடியாது,இனி எத்தனையோ காலங்களுக்கு நாம் இருட்டிலேயே காணமல் போகும் கனவைப் போன்றவர்கள் என்று நான் முதலிலேயே விளங்கிவிட்டேன். நீ கடைசியாக எப்போது பிரபாகரனைப் பார்த்தாய்?

அவன் நீங்களில் இருந்து “நீ”க்கு வந்துவிட்டதை உணர்ந்து கொண்ட சிவகாமி நான் தலைவரைப்  பார்த்தது பெப்ரவரியில, அதுக்கு பிறகு பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாள்.

பிரபாகரன் என்று கருணா உறுதிப்படுத்திய அந்தச் சடலத்தின் புகைப்படம் வெளியான பத்திரிக்கையை காட்டி இது பிரபாகரன் தானே என்று சிங்கள அதிகாரி கேட்டான். அவள் அந்தப் பத்திரிகையை அப்போது தான் கையில் வாங்கிப் பார்த்தாள். சிரித்தாள். அது தான் உங்களை நம்பிய கருணாவே உறுதிப்படுத்தி விட்டாரே அவரை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டாள். அந்தக் கேள்வியின் உச்சியில் அப்படியொரு தீக்கங்காய் நக்கல்.

இல்லை நாங்கள் இன்னும் நம்பவில்லை. பிரபாகரன் செத்துப்போயிட்டார் ஆனால் இது அவரோட உடம்பு என்று நாங்கள் நம்பவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். கருணாவை அரசாங்கம் நம்பியதில்லை. அவர் தான் அரசாங்கத்தை நம்புகிறார் என்று அந்தத் தமிழனானவன் சொன்னான். துரோகத்தை எதிரிகளும் விரும்புவதில்லை. மரத்தில் இருந்த செண்பகத்தை திடீரென நிமிர்ந்து பார்த்தாள் அதன் பிடரி மயிர் சிலிர்த்து கண்களின் சிவப்புக் கூடியிருந்தது.

விசாரணை முடிய இன்னொரு இடத்திற்கு கொண்டு போகப்போவதாக அவளிடம் சொல்லப்பட்டது. அவள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னாள். விசாரணை முடிந்ததோடு அவளை தமது கைபேசிகளிலும், புகைப்படக்கருவிகளிலும் படமெடுத்தார்கள். தாங்கள் வைத்திருந்த கோப்புகளில் கையெழுத்திடும்படி பணித்தார்கள். தமிழனானவன் அவளை அக்கா என்று அழைத்தபோது          தன்னை அக்கா என்று அழைக்கவேண்டாம் என மறுத்தாள். நீங்கள் இன்னும் அடங்கவில்லை என்று தமிழனானவன் கன்னத்தில் அறைந்தான். ஆமோதிப்பதைப் போல அமைதியாக நின்றாள்.

ஆயுதம் ஏந்திய சிப்பாய்களின் பாதுகாப்போடு கண்களும் கைகளும் கட்டப்பட்டு வெள்ளை வானொன்றில் ஏற்றபட்டு சித்ரவதைக்காக பயணித்துக்கொண்டிருப்பதை சிவகாமிக்கு யாரும் சொல்லத்தேவையில்லை. கோழைகளின் வீரம் சித்ரவதை. சிப்பாய்கள் மூவர் சேர்ந்து அவள் கதறியழும்வரை அவளின் மார்பை இறுக்கிப் பிடித்து கொண்டாடினார்கள். மாற்றினத்து பெண்களின் மார்புகளை அறுக்கும் மானுடர்களைத் உலகம் சிங்களர் என்று அழைக்கட்டும். வாகனம் எங்கோவொரு இடத்தில் நின்றது. கண்கள் கட்டி நின்ற அவளுக்கு நீ நிற்பது என் மேல் என்றது காடு.

சிங்களத்தில் பலர் கதைத்துக்கொண்டிருந்தார்கள். கண்களின் மேல் காலத்தைப் போல இருக்கும் துணியை யாரோ அவிழ்க்கிறார்கள். கைகள் ஏற்கனவே கட்டில் இருந்து பிரிக்கப்பட்டுவிட்டது. அவிழ்க்கப்பட்ட கண்களுக்கு முன்னால் ஐம்பதுக்கு மேற்பட்ட பெம்பிளைப் பிள்ளைகள் நிர்வாணமாக இருத்திவைக்கப்பட்டிருந்தார்கள். அது அடர்ந்த காடு மட்டுமல்ல பெண் போராளிகளுக்கான வதை முகாம். கண்கள் அவிழ்க்கப்பட்டதும் அவளை அடையாளம் கண்ட சில பிள்ளைகள் அக்கா என்று கதறி அழுதார்கள். சில பிள்ளைகள் யார் என்று கேட்டு அறிந்து கொண்டார்கள். நோய் வந்து தூங்கும் கோழிகளாய் சில பிள்ளைகள் கண்களை சொருகிக் கொண்டு மஞ்சள் முன்னா மரங்களுக்கு கீழே இருந்தார்கள். சிலருக்கு அம்மை போட்டிருந்தது. நாடும் காடும் பரவிய தோல்வியை நடுக்காட்டின் நிர்வாணம் உறுதிசெய்தது.

அவளை கீழே இருக்குமாறு சிப்பாயொருவன் சொன்னான். அவள் பிற போராளிகளோடு சேர்ந்திருக்கவே விரும்பினாள். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களுக்கு முன்னால் இருக்குமாறு சொல்லப்பட்டது. நிர்வாணமாக இருக்கும் போராளிப் பிள்ளைகளுக்கும் அவளுக்குமிடையில் இருந்த இடைவெளியானது சிறு தூரமே தவிர அவர்கள் ஒன்றாகவே உணர்ந்தார்கள். நிர்வாணமாக இருந்த போராளிகள் நால்வர் சாப்பாட்டு டாசரை தூக்கிக் கொண்டு வந்தார்கள். எல்லோருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டது. இதனை கண்காணிக்கும் சிப்பாய் தமிழில் பேசிக்கொண்டிருந்தான். அவன் தன்னை ஒரு முஸ்லிம் என்று எல்லோருக்கும் சொல்லுவதன் மூலம் வெளியேற்றத்தை பறைசாற்றினான். ஆயுதங்களோடு காடுகளுக்குள் நிமிர்ந்து நின்றவர்களை நிர்வாணத்தோடு வரிசையாக்கி சாப்பாடு வழங்கினார்கள். அவளை இராணுவம் இன்னும் சாப்பிடு என்று சொல்லவில்லை. அவள் அப்படியே தானிருந்தாள். மனமெங்கும் சாவின் ஆசைகள் மரங்களைப் போல பெருகித்துளிர்த்தது. அந்தக் காட்டின் சுற்றுப் புறத்தில் இவ்வளவு நேரங்களில் எந்தப் பறவையையோ குருவிகளையோ அவள் காணவில்லை. மானுடர்க்கு சுதந்திரமற்ற காடுகளில் கூட உயிரினங்கள் வாழாது என்று அவள் உள்ளூரச் சிந்தித்தாள்.

வானத்தை பார்க்கமுடியாமால் மரங்களால் வடிவமைக்கப்பட்ட சிறைச்சாலை போன்று எல்லாம் மூடப்பட்டிருந்தது. ஆடைகளோடு இருக்கும் அவளை விதிவிலக்காக தண்ணீர்க் கொடிகள் பார்த்தது. தன்னை இவர்கள் என்ன செய்வார்கள் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். நேரப் போகிறவற்றை நிர்வாணமாக இருக்கும் போராளிப்பிள்ளைகளின் உடல்களில் இருந்த தடயங்கள் சொல்லிற்று. யுத்தத்தை வென்ற அதிகாரம் தனது மமதையை தோல்வியுற்ற யோனிகளிலேயே நிகழ்த்தும். பிரபாகரன் இல்லை என்று தெரிந்ததன் பின்னர் இந்தக் காடுகளும் குனிந்து பணிந்துவிட்டது என்று இயற்கையை சினந்தாள். நிர்வாணமான போராளிகள் சாப்பிட்ட பிறகு எங்கேயோ இராணுவத்தால் கூட்டிச் செல்லப்பட்டார்கள்.  அவர்களில் சிலர் அவளுக்கு கை காட்டிப் பிரிந்தார்கள். அந்தக் காட்டில் நிர்வாணமாக நடந்து போகும் போராளிப் பிள்ளைகளின் காலடிகள் சருகுகளில் காய்ந்த கொடும் சாட்சிகள்.

ஒரு பத்து நிமிடம் கழிய இன்னுமொரு தொகை நிர்வாணப் போராளிகள் காட்டிற்குள் இருந்து அவள் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். நிர்வாணமான போராளிகளால் நிறைந்திருப்பதை காடு என்று அழைப்பதா? அவள் இருந்த நிலத்தின் மீது நடுக்கத்தோடு குச்சி ஒன்றால் எதையோ கீறினாள். கண்கள் அநாதரவான பாடல்களை கண்ணீராக எழுதியது. உடலில் சவக்களை தொற்றிய அவளின் நெஞ்சில் காலால் எட்டி  உதைந்தான் இராணுவ அதிகாரியொருவன். சித்ரவதை செய்கிற இராணுவ அதிகாரிக்கு பாதுகாப்புக்கு நின்ற சிப்பாய்கள் அவளின் ஆடைகளை கிழித்தார்கள். ஊமைத் துயரம் உழல்வதைப் போல நிலமெங்கும் கதறினாள். காட்டின் எல்லா இலைகளிலும் கேட்ட கதறல் ஒட்டியது. காற்றில்லை. அவளின் வாய்க்குள் துவக்கின் முன் பகுதியை ஓட்டி டிகரில் கைவைத்தபடி சிப்பாய். அவளை வன்புணர்ந்தபடியிருக்கும் இராணுவ அதிகாரிக்கு பாதுகாப்பாக இன்னொரு சிப்பாய். தன்னிலிருந்து காலம் பிய்த்தெறிந்த சாவின் துண்டைப்போல அவள். வானம் பார்த்திராத காட்டின் மத்தியில் அவளுடல் எல்லா மிருகத்தனங்களையும் எதிர்கொண்டது. நிர்வாணமாக நிற்கும் பிற போராளிகள் தரையில் அமர்ந்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கொடுங்காலத்திலும் சிறகுகள் உள்ள பறவையொன்று மரங்களுக்குள் வந்தமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. தனது பறத்தலின் ஓய்வில் இளைப்பாறும் இடமாக பறவை இந்தக் காட்டைத் தெரிவித்தது.

நிர்வாணமாக இந்தக் காட்டிடையே உலவப் போகிறவளாக அவளும் ஆக்கப்பட்டிருந்தாள். அவளின் மேலிருந்து எழுந்த இராணுவ அதிகாரி இந்திரியத்தை அவளின் மார்பிலும் படச்செய்தான். தானொரு பெம்பிளைக் ஹொட்டியின்*முகத்தில் இந்திரியத்தை பாய்ச்சியதை பிரபாகரனை உயிரோடு பிடித்ததற்கு சமனாக நினைத்துப் பெருமைப்பட்டான். எந்த நிலத்திற்காக இத்தனை துயரங்களை சுமந்தாளோ அந்த நிலத்தில் நிர்வாணமாயிருந்தாள். போராளிகளை நிர்வாணமிடுவதன் மூலம் தாம் வெற்றியடைந்து விட்டதாக எண்ணுகிற இனவாதத்தின் முனை மழுங்கிய பேரிகை அவளுக்கு எரிச்சலைத் தந்தது.    சாவுக்கு அப்பாற்பட்டவர்களை வன்புணர்வின் மூலம் அடிமைகளாக்கி நிர்வாணங்களாய் காடுகளுக்குள் அலையவிடுவதில் அதிகாரமும் போரின்  வெற்றியும் நிரந்தரமாகி விடாது. காட்டின் வதைமுகாமில் நிர்வாணமாக இரண்டு மாதங்கள் நூற்றுக்கணக்கான போராளிகளோடு இருந்தாள். கோத்தபாயவின் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்திற்கான பணிப்பெண்களாக, வன்புணரப்படுவோராக குறைந்தபட்சம் இருநூறு போராளிகள் நிர்வாணமாகவே இந்தக் காட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தார்கள். ரணம் பெருக்கும் சித்தரவதைகள் காடுகளில் அம்மாவென,ஐயோவென ஒலியெழுப்பும் ஒரேயொரு ஜீவராசிகளாக போராளிகளே இருந்தார்கள். போராளிகளை வடிவின் பெயரில் தரப்படுத்துவதும்,உடலின் அளவில் பிரிப்பதும் அவர்களை கற்பனைக்கும் மனிதத்தன்மைக்கும் எட்டாதபடி வன்புணர்வு செய்து தரையில் கிடத்திச் சாகடிப்பதும் கோத்தபாயவின் வதைமுகாமில் திருவிழாவைப் போல முன்னெடுக்கப்பட்டது.

இவளை ஒரு சிப்பாய் கட்டில்களில் படுத்திருக்கும் பிற சிப்பாய்களிடம் தெரியப்படுத்துகிறான். இவளொரு பெம்பிளைப் புலி, அதிலும் முக்கியமானவள், நீங்கள் எப்போது வேண்டாம் என்கிறீர்களோ அப்போது தான் அவள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவாள் என்று சொல்லுகிறான். சிப்பாய்கள் கைகளைத் தட்டி ஆரவாரமான சிரிப்புக்களையும் நக்கல் கதைகளையும் சொல்லுகிறார்கள். சலித்துப் போன அவலமும் அனுபவமும் நிர்வாணமாக நின்ற எல்லாப் பிள்ளைகள் மீதும் முளைத்திருந்தது.

கட்டிலில் கிடந்த சிப்பாய் ஒருவன் எழும்பி வந்து அவளின் பிறப்புறுப்பில் தனது கைகளால் சத்தம் வரும்படி பொத்தி அடித்தான். எல்லோரும் கைதட்டி மகிழ்ந்தார்கள். சில கட்டில்களில் இவற்றையெல்லாம் பார்க்காமல் போராளிகளை வன்புணர்ந்து கொண்டிருந்தார்கள். சில கட்டில்களில் சொல்லமுடியாத பணிகளை எல்லாம் பிள்ளைகள் செய்து கொண்டிருந்தார்கள். போராளிகளாக இருந்ததினாலேயே இந்த நிலை எமக்கு ஏற்பட்டு விட்டது என்று இத்தனை நாட்களில் யாரும் யாரோடு பேசியது கிடையாது. சிப்பாய் ஒருவன் சிவகாமியை கைகளைக் காட்டி அழைத்தான். அவனுக்கு காலில் பெரிய காயம் தனது மூத்திரச் சட்டியை எடுத்துத் தரும்படி கட்டளையிட்டான். பக்கத்துக் கட்டிலின் இரு சிப்பாய்கள் உதவியோடு அவளை வன்புணரத்தொடங்கியவன் நீண்ட நேரம் வதைத்தான். அவளை மிகக் கொடூரமாகவெல்லாம் வன்புணரவேண்டும் என்று துடித்தான். கால்கள் முடியாத ஒரு சிப்பாய் அவளை வதைக்கிற பொழுது பலநூறு பலம் கொண்டான். நெரிந்த அவளின் உடலிலிருந்து கடந்தகாலத்தின் நிமர்ந்த நடை கொண்ட நிழலும்,உரைகளும் வரிகளாய் வந்து போனது.

ஆயுதங்கள் மட்டுமல்ல,போராட்டம் மட்டுமல்ல எமது எதிர்காலங்களும் விடுபட்டுப் போய்விட்டது போல வதை. தோல்வியின் குரூரம் பலித்தது. எங்கெனும் பிள்ளைகளின் இரத்தங்கள் வன்புணர்வில் வடிந்தபடியே இருந்தது. குளிப்பதற்காய் காட்டில் வெட்டப்பட்டிருக்கும் குளத்தில் தண்ணீருக்குள் அமுங்கி தற்கொலை செய்து கொண்ட பிள்ளைகள் இருவரை செத்துக்கொண்டிருந்த மற்றவர்கள் புதைத்தார்கள்.

அக்கா நீங்கள் ஏன் இவங்களிட்ட பிடிபட்டனியள்? இன்னொரு பிள்ளை இவளிடம் கேட்டாள்.

அந்தக் கேள்வியில் அடியாழத்தில் நீங்கள் குப்பி கடித்திருக்கலாம் தானே என்கிற இன்னொரு சாரமும் இருந்தது. எல்லோரும் வாழவேண்டியதற்காக செத்துப்போகலாம் என்று தான் நாங்கள் கழுத்தில குப்பியை போட்டம்,ஆனால் எல்லாரும் செத்துப் போயிட்டினம் நாங்கள் மட்டும் சாகிறம். வந்திருக்கக் கூடாது தான். சோற்றுக்குள் இலையான்கள் விழுந்து கிடந்ததை பொருட்படுத்தவில்லை. அப்படியே உருட்டிய சோற்றை விழுங்கிக் கொண்டாள்.

“ஏன் அண்ணா எங்களை இப்பிடி விட்டிட்டு போனவர்” என்று கண்கள் கலங்கிக் கேட்ட இன்னொரு பிள்ளையின் இரண்டு மார்புக் காம்புகளும் இல்லாமல் அந்த இடத்தில் புண்ணாகிக் கிடந்தது. அந்தப் பிள்ளையின் காம்புகளற்ற மார்புகளைப் போலவே இந்தக் கேள்விக்கும் பதிலில்லை. அந்தக் கேள்வியைக் கேட்ட பிள்ளையும் பதிலைப் போல ஓரிருதினங்களில் இல்லாமல் ஆகிவிட்டாள். அவளின் செத்துப் போனவுடல் அந்தக் காட்டில் நிர்வாணமாக அலைந்த சக போராளிகளிடமே காட்டப்படவில்லை.

அந்தக் கேள்வியும் இல்லாத பதிலும் தொடர்ந்து பயணிப்பதைப் போல சிவகாமியும் அந்தக் காட்டில் இருந்து ஆடைகள் வழங்கப்பட்டு வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டாள். மெகசின் சிறையில்  கொண்டு வந்து அடைக்கப்பட்டாள். வதைமுகாமில் பறிக்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட்டதே தவிர அங்கிருந்தவர்கள் எல்லோரும் பலாத்காரம் செய்யப்பட்டார்கள். பல்லிகள் நிறைந்திருக்கும் சிறையறைக்குள் பயந்து பைத்தியங்களைப் போல போராளிகள் முகங்களை முகங்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து 23தடவைகள் எல்லோருக்கும் தெரிந்து  வன்புணர்வு செய்யபட்ட சிவகாமியை இராணுவக் கோப்ரல் “எய்ட்ஸ் நங்கி” என்று தன் இப்போது கூப்பிடுகிறான். கனவழிந்த கருப்பையில் இறந்துபோன சிசுக்களாய் போராளிகள் இருந்தார்கள். எந்தப் பொழுதும் ஆடைகள் களையப்படலாம் என்பதை பகிடியாகக் கதைக்கத் தொடங்கினார்கள். அதிக வலி தருகிற சித்ரவதைகளை நாளும் எதிர்கொள்பவர்களின் உளம் அதனை பகிடி செய்யத்தொடங்குகிற பொழுது நிறைந்த வன்முறை அவர்களை பின் தொடரத் தொடங்குகிறது. தனக்கு மெல்லக் கொல்லும் விஷ மருந்து ஏற்றி மூன்று மாதங்கள் ஆகிவிட்டதை தவிர தன்னைப் பார்க்க வந்திருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரிடம் சிவகாமி எல்லாவற்றையும் கதைத்தாள், சொன்னாள். சிவகாமியை பார்க்க வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினருக்கான நேரம் முடிவடைந்தவுடன் அவர் விடைபெற்றார்.

மெஹசின் சிறைச்சாலை கம்பிகளுக்குள் நின்ற முகத்தின் இறுக்கத்தோடு தான் மூன்று வருடங்கள் கழித்து புற்றுநோயால் இறந்ததாக சொல்லப்பட்ட சிவகாமி சவப்பெட்டிக்குள்ளும் மரணித்திருந்தாள். யாருமே அறியாத சேதிகளோடு தாயக வானம் அழுதது.

5 எதிர் சப்தங்கள்:

Vinoth Subramanian said...

இது போன்ற சொல்லமுடியா துயரங்களை எழுத்தின் மூளம் வெளிக்கொணர்வதில் எந்த தவறும் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.

Umesh Srinivasan said...

நிகழ்ந்தவைகளைத்தானே பகிர்ந்துள்ளார், இதில் மறுக்கவோ கூக்குரலிடவோ எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. படித்து முடித்தவுடன் தொண்டைக்குழியில் சோகப்பந்தொன்று வந்து அடைப்பதென்னவோ நிதர்சனம்.

shrkalidoss said...

Shocked.. stunned..devastated..Oh my dear sisters.What the hell we did to help you? Very frustrating....

Anonymous said...

This story is needed for Srilankan future generations!!

Valmeegy said...

“ஏன் அண்ணா எங்களை இப்பிடி விட்டிட்டு போனவர்”