Mar 19, 2016

அறம்

மணிகண்டன் பற்றி எழுதியிருக்கிறேன். நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். ஜெர்மனியில் உயிரியல் பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய உயர்படிப்புகளைப் படிக்கும் தலித் மாணவர்களுக்கு தமிழக அரசு ஸ்காலர்ஷிப் வழங்குகிறது. அதை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு வந்து கொண்டிருந்த உதவித் தொகை நின்றுவிடவும் படிப்பைக் கைவிட வேண்டிய சூழ்நிலை. மூன்று நான்கு மாதங்களுக்கான தொகை கிடைத்தாலும் கூட அதற்குள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்வதாகச் சொன்னார்.  அப்பொழுது நிசப்தம் அறக்கட்டளை தொடங்கப்பட்டிருக்கவில்லை. நிசப்தத்தில் மணிகண்டன் குறித்து எழுதியிருந்தேன். அவர் படிப்பைத் தொடர உதவ விரும்புகிறவர்கள் அவருக்கு நேரடியாக பணத்தை அனுப்பி வைக்கச் சொல்லியிருந்ததால் அழகேசன், சதீஷ், வெங்கட்ரமணி, யேஸா, மொய்தீன், சமீரா என்று ஏகப்பட்ட பேர் உதவினார்கள். கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகை உதவியாக வழங்கப்பட்டது. அவர் படிப்பு தொடர்ந்தது.

மீண்டும் ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு தொடர்பு கொண்டவர் தன்னுடைய ஸ்காலர்ஷிப் தடைபட்டதன் காரணமாக சென்னை வர வேண்டி இருப்பதாகவும் டிக்கெட் செலவுக்கு மட்டும் ஏற்பாடு உதவி செய்தால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் திருப்பித் தந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார். அதுவரை தனிப்பட்ட உதவியாக யாருக்குமே உதவியதில்லை. ஆனால் இதுவும் கல்வி சம்பந்தமான உதவி என்பதால் முப்பதாயிரம் ரூபாய் அவருடைய பெயருக்கு காசோலை அனுப்பி வைத்தேன். அதையும் கூட டிக்கெட் ஏஜென்ஸியின் பெயரில்தான் அனுப்புவதாக இருந்தது. அந்த முகவர் ஏஜென்ஸியின் பெயரில் வங்கிக் கணக்கு இல்லை என்று சொன்னதால் மணிகண்டனின் பெயரிலேயே அனுப்பியிருந்தேன். 

கடந்த மே மாதம் அனுப்பிய தொகை. அடுத்த மே மாதம் வரப் போகிறது. ‘என்னவாயிற்று?’ என்று கேட்டு அனுப்பிய ஒரு மின்னஞ்சலுக்குக் கூட பதில் இல்லை. என்னுடைய தனிப்பட்ட பணத்தை எத்தனையோ நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு கேட்காமல் விட்டிருக்கிறேன். கையில் இருந்தால் பணத்தைக் கண்டவர்களுக்கும் கொடுத்துவிட்டு திரும்பக் கேட்பதில்லை என்று வீட்டில் திட்டு வாங்குவதுண்டு. இந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் தப்பிக்க விரும்பியே சம்பளம் வந்தவுடன் ஐயாயிரம் ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு மிச்சத்தை தம்பிக்கு அனுப்பி வைத்துவிடுகிறேன். தனிப்பட்ட பணம் என்றால் இப்படித் தொலைகிறது என்று விட்டுவிடலாம். ஆனால் அறக்கட்டளையின் பணத்தை அப்படி விட்டுவிட முடியாது. விதவிதமான மனிதர்கள் உழைப்பு இது. மரக்கடையில் வேலை செய்கிறவர் அறக்கட்டளை குறித்து கேள்விப்பட்டு நம்பியூர் பரோடா வங்கிக்கு நேரடியாகச் சென்று ஐநூறு ரூபாயை அறக்கட்டளையின் கணக்கில் போட்டுவிட்டு அழைத்துப் பேசியிருக்கிறார். கண்ணீர் சிந்திவிட்டேன். அப்பேற்பட்ட மனிதர்களின் உழைப்பில் வரக் கூடிய பணம் இது. என் மீதான நம்பிக்கையில் அனுப்பி வைக்கிறார்கள். போனால் போகட்டும் என்று எப்படி விட்டுவிட முடியும்? ஒற்றை ரூபாயில் கூட ஏமாறக் கூடாது.

முப்பதாயிரம் ரூபாய் என்பது சாதாரணத் தொகையாக இருக்கலாம். ஆனால் வெறும் பத்தாயிரம் ரூபாய் கிடைக்காமல் மருத்துவத்தைக் கைவிடுகிறவர்களும் படிப்பை நிறுத்துகிறவர்களையும் தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். கறாராக நிராகரித்திருக்கிறேன். பல மின்னஞ்சல்களுக்கு பதில் சொல்வதில்லை. நம்மால் உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை; தவறான ஆட்களுக்கு பணம் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எங்கிருந்தோ மனிதர்கள் கொடுக்கும் தொகையை வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்தத் தொகையை எவனோ வாங்கித் தின்றுவிட்டுப் போவதைப் போன்ற பாவம் வேறில்லை. எத்தனை தலைமுறை கடந்தாலும் தீராத பாவம் அது.

அறக்கட்டளைக்கு வந்து சேரும் எந்தப் பணமும் வீணாகப் போய்விடக் கூடாது என்றுதான் ஒவ்வொரு முறையும் கைக்காசைச் செலவழித்து மதுரைக்கும், தேனிக்கும், கடலூருக்கும் சென்று வருகிறேன். ‘போக்குவரத்துச் செலவுக்கு இவ்வளவு ரூபாய் ; தங்கும் செலவுக்கு இவ்வளவு ரூபாய்’ என்று கணக்கெழுதிக் கொண்டிருக்கிறேனா? வெள்ளிக்கிழமை வரை அலுவலகத்தில் பணிபுரிந்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்துகளில் ஏறி ஊர் ஊராகச் சுற்றி எதற்காகச் சிரமப்பட வேண்டும்? இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. அடுத்தவர்களின் நிதியைக் கையாளும் போது முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். ஆனால் இந்த அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள் என்ன படிப்பு படித்து என்ன பிரயோஜனம்?

நம்மிடம் அடிப்படையான அறம் வேண்டும். குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மை வேண்டும். ‘இதுதான் பிரச்சினை’ என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை; அவமானமுமில்லை. ‘இதுதான் என் வாழ்க்கை. இதுதான் என்னுடைய சிரமங்கள்’ என்று சொல்வதில் வெட்கப்படவே வேண்டியதில்லை. மூடி மறைப்பதுதான் பிரச்சினைகளின் அடிநாதம்.

இதையெல்லாம் எழுதுவதற்கே மிகுந்த சங்கடமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக மன வருத்தமாக இருந்தது. குற்றவுணர்ச்சியும்தான். அறக்கட்டளையின் செயல்பாடுகளில் முதன் முறையாக ஏமாற்றப்பட்டதாக வருந்தினேன். அவருடைய மனைவியின் எண் பழைய மின்னஞ்சல்களில் இருந்தது. அழைத்துப் விவரங்களைச் சொன்னேன். அதன் பிறகு மணிகண்டன் அழைத்தார். ‘ட்ரஸ்ட்டில் பணம் வாங்கியிருந்ததெல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது. பிரச்சினை ஆகிவிட்டது’ என்றார். எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லாமல்தான் அவருடைய மனைவியிடம் பேச வேண்டியிருந்தது. மணிகண்டன் பேசும் போது இன்னமும் ஸ்காலர்ஷிப் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை என்றார். இப்பொழுதும் கூட மணிகண்டன் ஏமாற்றிவிட்டார் என்று குற்றம் சுமத்த விரும்பவில்லை. மிகக் கஷ்டப்படுகிற குடும்பம் அவருடையது. இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்ததே பெரிய காரியம். அவர் எல்லாவிதத்திலும் நன்றாக இருக்கட்டும் என மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு நிச்சயமாகச் சிக்கல்கள் இருக்கக் கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் என்பது சாதாரணமானது. ஆனால் நம்மால் திருப்பிச் செலுத்த முடியாத போது அதிகபட்ச நேர்மை வேண்டும். வெளிப்படையாகப் பேசி பிரச்சினையைச் சொன்னால் அதோடு முடிந்தது. அவர் மெதுவாகவே தரட்டும். நாம் ஒன்றும் கந்து வட்டி வியாபாரம் நடத்தவில்லை. ஆனால் தந்துவிட வேண்டும். அதை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்காக இதை எழுதுகிறேன்.

11 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Good Points

Unknown said...

Mani. Very good post! That is his pure mistake. He should have replied to your email at least. Its very bad attitude, I have experiencing it personally in my life, many are very good when they ask for money but when you ask in return.. NO RESPONSE AT ALL.

ADMIN said...

திருப்பி தந்துவிடுகிறேன் என்று கூறியிருந்தால் கண்டிப்பாக திருப்பி தர வேண்டும். அதுதான் செய்த உதவிக்கு நன்றி கடன் செலுத்துவது.

Prefer to nameless said...

இதைப் பற்றி முன்பே சொல்லவேண்டும் என்று நினைத்தேன். பல ஐரோப்பிய நாடுகளில் தகுதிக்குத் தேவையான உதவித்தொகை கிட்டும். மேலும், அந்த அன்பர் அன்றைய காலகட்டத்தில் சொல்லி இருந்த பணத்தேவையின் "கணக்கில்" பல முரண்பாடுகள் இருந்தன. அதனை உங்களிடம் சுட்டிக்காட்டி விசனப்படுத்த விரும்பாததால் தவிர்த்துவிட்டேன். உதவி பெற்றவர்கள், நன்றி அறிதல் என்பது பற்றி சற்றேனும் சிந்திக்கவேண்டும்.

சிங்கப்பூர் மொய்தீன் போன்ற நல்மனது படைத்தவர்கள் உடனே பெரும்தொகை அனுப்பியதனையும், உங்கள் மூலம் பெற்ற அனைத்துப் பணத்தினையும் அவர் திரும்ப தந்துவிடுவதாகவும் கூறியவர், குறைந்தபட்சம் மின்அஞ்சலுக்கு பதில் எழுதாதது தான் மெத்தப்படித்த அறம்.

உங்களின் கடலூர் வெள்ள நிவாரணப் பணிகளைப் பற்றி படித்த எனக்குத் தெரிந்த ஒருவர் நிசப்தம் அறக்கட்டளைக்கு 3000 அனுப்பியதாக சொன்னார். அது பெரிதான தொகை இல்லை, எனினும் அந்தப் பணத்தினை அனுப்பியவரின் மாத வருமானமே 5000 தான். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

Anonymous said...

ஆனால் இந்த அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள் என்ன படிப்பு படித்து என்ன பிரயோஜனம்?நம்மிடம் அடிப்படையான அறம் வேண்டும். குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மை வேண்டும். ‘இதுதான் பிரச்சினை’ என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை; அவமானமுமில்லை. ‘இதுதான் என் வாழ்க்கை. இதுதான் என்னுடைய சிரமங்கள்’ என்று மறைப்பதுதான்பிரச்சினைகளின்அடிநாதம்
WELL SAID.


‘ட்ரஸ்ட்டில் பணம் வாங்கியிருந்ததெல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது. பிரச்சினை ஆகிவிட்டது’.
I CANT UNDERSTAND THIS.DID NOT PEOPLE IN THE HOUSE/HIS WIFE ASK HOW HE MOBILISED SO MUCH MONEY NEARLY 5 LAKHS TO CONTINUE IN GERMANY.
HE HAS BEENUNTRUE TO HIS WIFE AND BETRAYED ALL HIS DONORS.
ANYONE IN HIS PLACE WOULD HAVE TOLD ALL INCLUDING HIS WIFE ABOUT THE HELPING HEARTS AND HIS IN DEBTEDNESS TO THEM.
IF MY INFORMATION IS CORRECT IN GERMANY THEY WILL THEMSELVES SUPPORT HIGHER EDUCATION IN DESERVING CASES.
ANYWAY OUR FRIEND HAS BETRAYED NOT ONLY YOU HIS FAMILY AND HIS DONORS.
HE CAN MAKE AMENDS BY DONATING LIBERRALY TO POOR STUDENTS.
BY THIS POST LET ME APPEAL TO OUR FRIEND TO BE TRUTHFUL TO HIS WIFE/FAMILY.
BORROWING FOR THE SAKE EDUCATION IS NOT A CRIME/SIN TO BE HIDDEN FROM WIFE/FAMILY.
DO NOT GET DISCOURAGED BY SUCH PAINFUL EXPERIENCES.
LOT OF PEOPLE NEED YOUR HELP/SUPPORT.
GOD WILL BE WITH YOU FOR ALL YOUR GOOD DEEDS.
M.NAGESWARAN.

Vaa.Manikandan said...

அவரது குடும்பப் பின்னணி, அவரது வருமானம், படிப்பு உள்ளிட்ட அத்தனை விவரங்களையும் விசாரித்திருந்தேன். அவருக்கு படிப்புக்கு தந்த தொகை சரியான உதவிதான். ஆனால் இத்தகைய காரியங்களில் தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. அந்தச் சமயங்களில் உங்களைப் போன்றவர்கள் ஒரு வரித் தகவல் அனுப்புவது பலவிதங்களில் பலனளிக்கும். நன்றி.

Anonymous said...

those doing masters in west can earn money legally in many ways.normally they need support to come and sustain for 6 months.
but based on his background, he may have valid and pressing money issues.
most probably he didnt mean to cheat. but, some of us can't come clean with our problems clearly to those who helped.
hope sense prevails and this person returns his favor back and helps others also.

Siva said...

It hurts a lot after hearing that he didn't even replied a single e mail. He just need money it seems. Really it makes us sad.

Anonymous said...

Hi,

Very valid one. However, one small suggestion from my end and hopefully u can consider in future cases....
Even though it is education, and people are from really really poor background.. Please arrange money only for UG education and india based studies. Once they get the degree, they should be able to support themselves by any job. If they want to go to abroad or for higher education, they should be in a position to support themselves and not depend on other's donation. In abroad, they can work parttime and earn decent amount money to support.

Even i am from middle class family and scored more than 84% in engineering. My parents didn't have money to send me for higher education. So i had decided to do job and support my family. caste or middle class family shuldn't come in to the picture in this situations.
people shuld be responsible enough and understand the family situation before taking big decisions.

kailash said...

Many don't have self responsibility . People like him don't understand that their indiscipline makes the path tough for others who need help from groups like nisaptham in future . Due to the attitude of these people few needy ones will be affected and they have to face tough process and get frustrated .

Anonymous said...

பணம் தேவைப்படுகிறபோது இருக்கும் பதைபதைப்பு திருப்பி தரவேண்டும் என்கிறபோது
இருப்பதில்லை...

வருத்தமான விஷயம்...