Mar 1, 2016

குழப்பம்

என் பெயர் களஞ்சியம். முதலில் என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன். என் வயது 25. பொருளதாரத்தில் பின் தங்கிய குடும்பம்தான். அப்பாவின் சொந்த ஊர் மதுரை அருகில். எனது 5 வயதில் அவர் இறந்து விட்டார். அப்பா இறந்ததும் அம்மா எனது தங்கையை அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். தையல் வேலையும், சிறிய அளவில் இட்லி சுட்டு விற்று பிழைத்து வருகிறார். நான் அப்பாவின் அம்மா (அப்பத்தா) வீட்டில் இருந்து  நியூஸ்பேப்பர் விநியோகம், பால் பாக்கெட் போடுதல், சிற்றாள், லாரியில் கீளீனர் போன்ற சிறுசிறு வேலைகளைச் செய்து தான் பள்ளி கல்லூரி என எல்லாம் முடித்தேன். 

என் கல்வித் தகுதி M.Sc Electronics and Instrumentation. ஆங்கிலம் ஒரளவு தெரியும். நான் படித்து முடித்து வேலை தேடி ஆறு மாதம் அலைந்து கடைசியில் ஜக்கிய அரபு அமீரகத்தில் ஒரு சிறிய அலுவலகத்தில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் Procurement assistant பணி கிடைத்ததது. இரண்டு வருடப்  பணி முடிந்து கடந்த மாதம் நாடு வந்தேன். இந்த இரண்டு வருடச் சம்பளமும் சேமிப்பும் சென்ற வருடம் நடந்த தங்கையின் திருமணத்திற்கும் சரியாய் இருந்தது. தந்தையின் ஸ்தானத்தில் ஒரு கடமை முடிந்தது. இனி என் வாழ்க்கையை பார்க்க வேண்டும், அம்மாவை வைத்து நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

இப்பொழுது ஒரு குழப்பத்தில் இருக்கிறேன். சற்றேறக் குறைய ஒரு வருடத்திற்கு முன் நீங்கள் எழுதிய இரண்டு பதிவுகளில் மத்திய அரசு தேர்வுகளில் தமிழர்கள் குறைவாக தேர்வாவது பற்றி வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட இந்த ஒரு வருடம்  இது என் மனதில் பல எண்ண ஓட்டங்களை விதைத்துள்ளது. நானும் முழு மனதாக அமர்ந்து படித்து தேர்வு பெற வேண்டும் என்று எண்ணம் தோன்றியுள்ளது. 

அதே சமயம் வேறொரு நிறுவனத்தில் அழைப்பு வந்தது. வெளிநாட்டு வேலை உண்மையில் நிலையில்லாதது. இப்பொழுது இறுதியாக கடன் ஒன்றும் இல்லை. இன்னும் கையில் ஒரு இருபதாயிரம் மிச்சம் வைத்திருக்கிறேன். இப்பொழுது மறுபடியும் இரண்டு வருடம் வெளிநாட்டுக்கு ஓடுவது எனக்குச் சரியாக படவில்லை. முடிவு என் கையில் தான் இருக்கிறது. நான் என்ன முடிவெடுத்தாலும் அம்மாவுக்கு சம்மதம்தான். மாதம் ஐயாயிரம் ரூபாய் அவரது செலவுக்கு அனுப்பினால் போதும்.

எனவே, சென்னையில் ஏதேனும் அரசு பயிற்சியகத்தில் சேர்ந்து எட்டு அல்லது ஒன்பதாயிரம் சம்பளத்தில் பகுதி நேர வேலை செய்தபடி அரசு வேலைக்குத் தயாராகலாம் என்று நினைக்கிறேன்.

நண்பர்கள் அனைவரும்  இந்த காலத்தில் அரசு  வேலை கிடைப்பது மிகவும் கடினம் என்றும் போட்டி அதிகம் என்றும் அதனால் வெளிநாட்டு வேலைக்குச் சென்று கையில் கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கச் என்று சொல்கிறார்கள். 

நான்  எதை தேர்வு செய்வது என்று மிகுந்த குழப்பத்தில் உள்ளேன். வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். என்னுடைய குழப்பத்தைத் தீர்க்க முடியுமா?

மிக்க நன்றி.

அன்புடன்,
களஞ்சியம்.

                                                                        **

அன்புள்ள களஞ்சியம்,

நீங்கள் வெளிநாட்டு வேலையை நிராகரித்துவிட்டு கிட்டத்தட்ட போட்டித் தேர்வு எழுதுவது என முடிவு செய்துவிட்டீர்கள் என புரிந்து கொள்ள முடிகிறது. நல்ல முடிவுதான். 

வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். குழம்புவதில் தவறேதுமில்லை. 

உடனடியாகச் சில திட்டமிடல்களைச் செய்யுங்கள். 

நூற்றுக்கணக்கான தேர்வுகள் இருக்கின்றன. எந்தத் தேர்வுக்கு தயார் செய்யப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். பெட்ரோலிய நிறுவனங்கள், ரயில்வேயின் தொழில்நுட்பப் பிரிவுகள் போன்ற துறை சார்ந்த வேலைகளுக்குத் தொழில்நுட்பம்(Technical) சார்ந்த தேர்வுகள் நடத்தப்படும். அத்தகைய தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா அல்லது பொது அறிவுத் திறனுக்கும் ஆளுமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு தேர்வாணையம் (UPSC), தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (TNPSC) உள்ளிட்டவற்றின் நிர்வாகப் பிரிவுகளுக்கான தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா என்ற முடிவுக்கு வந்துவிடுங்கள்.

இந்த முடிவை எட்டுவதற்கு முந்தைய வருடங்களின் வினாத்தாள்கள் உங்களுக்கு உதவக் கூடும். கடந்த சில வருடங்களின் வினாத் தாள்களில் சுமார் இருபது முதல் முப்பது சதவீதக் கேள்விகளுக்கு உங்களுக்கு முழுமையாகவோ அல்லது ஓரளவுக்கோ பதில் தெரியும் என்றால் துணிந்து பயிற்சியைத் தொடங்கிவிடலாம். அதன் பிறகு அதற்கேற்ற பயிற்சி நிலையம், தரமான புத்தகங்கள் என்று விவரங்களைச் சேகரிக்கத் தொடங்குங்கள். அதே தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிற வேறு சில மாணவர்களுடன் தொடர்பை உருவாக்கிக் கொள்வது நல்ல பலனைத் தரும். ஆனால் நாம் தேர்ந்தெடுக்கிற மாணவர்கள் உண்மையிலேயே அர்பணிப்பு உணர்வுடன் தேர்வுக்குத் தயாராகிறவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பன்றிகளோடு சேர்ந்த கன்றுக்குட்டியின் கதையாகிவிடக் கூடும். 

நீங்கள் குறிப்பிட்டிருக்கிற இன்னொரு விஷயம் பகுதி நேர வேலை. எட்டாயிரம் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு சென்னையில் பகுதி நேர வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அப்படியே கிடைத்தாலும் பிழிந்து எடுத்துவிடுவார்கள். தேர்வுக்கு தயாராகுவதிலும் சிரமமாகிவிடும். இயலுமெனில் இன்னும் குறைவான சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை என்று புத்தகக் கடை மாதிரியான இடங்களில் வேலைக்கு முயற்சி செய்யலாம். தேர்வுக்கு தயாரிப்பதற்கு நேரம் கிடைக்கும். நீங்கள் நினைப்பது போல அம்மாவுக்கு ஐந்தாயிரம் அனுப்பவதில் சிரமம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒன்றிரண்டு வருடங்கள் பொறுத்துக் கொள்ளலாம்.

மற்றபடி, போட்டி அதிகமாக இருக்கிறது என்பதெல்லாம் சாக்குபோக்கு. எங்குதான் போட்டி இல்லை? கோவிலுக்கு முன்னால் பிச்சை எடுக்கிற இடத்தில் கூடத்தான் போட்டி இருக்கிறது. கடித்துத் துப்பிய ஒரு எலும்புத் துண்டை தெருவில் வீசினால் கண்ணிமைக்கும் நேரத்தில் நான்கைந்து நாய்கள் அடித்துக் கொள்கின்றன. எலும்புத்துண்டுக்கும், பிச்சைக் காசுக்குமே போட்டி இருக்கிற உலகத்தில் போட்டியே இல்லாமல் எனக்கு எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு அபத்தம்? போட்டியில் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையும் ஒதுங்கிக் கொள்ளலாம் என்கிற தயக்கமும் நம் மனநிலையைப் பொறுத்துதான். எல்லோருக்கும் அதே இருபத்து நான்கு மணி நேரம்தான் இருக்கிறது. சரியான திட்டமிடலும், ஒழுங்கான தயாரிப்பும், அர்பணிப்பும் இருந்தால் போதும். எந்தக் களமாக இருந்தாலும் இறங்கி அடிக்கலாம்.

சிலருக்கு முதல் வருடத்திலேயே வெற்றி கிடைக்கும். வேறு சிலருக்கு கூடுதலாகக் காலம் பிடிக்கும். அவ்வளவுதானே தவிர தேர்வுகளில் வெல்வது ஒன்றும் நடக்காத காரியமில்லை. 

வெளிநாட்டுக்குச் செல்லலாமா அல்லது போட்டித் தேர்வுகளா என முடிவெடுப்பதற்கு முன்பாக பின்வருவனவற்றை தீர்க்கமாக யோசித்துக் கொள்ளுங்கள்-

1.  இலக்கை அடையும் வரைக்கும் மனச் சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. கடைசி வரைக்கும் எந்தவொரு கணத்திலும் தொய்வில்லாமல் மனநிலையை வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். 
3.    ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகு ‘எனக்குத் தேர்வு ஒத்து வராது’ என்று உடைந்து போனால் முதலில் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்க வேண்டிய சூழல் வந்துவிடும்.

இதையெல்லாவற்றையும் யோசித்த பிறகும் ‘தேர்வுகளில் எழுதி வென்று விட முடியும்’ என்ற நம்பிக்கை இருந்தால் வேறு எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ள வேண்டாம் களஞ்சியம். வென்றுவிடலாம். 

அறக்கட்டளையின் வழியாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்கு பண உதவி எதுவும் செய்வதில்லை ஆனால் பயிற்சி மையங்களைத் தேர்ந்தெடுத்தல், சரியான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தல், பகுதி நேர வேலை போன்ற எந்தவிதமான உதவியாக இருந்தாலும் தயங்காமல் தொடர்பு கொள்ளலாம். நிச்சயமாகச் செய்து கொடுக்க முடியும்.

ஆயிரம் கரங்கள் காத்திருக்கின்றன.

வாழ்த்துக்கள்! 

அன்புடன்,
மணிகண்டன்

8 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Thumbs up...Those three are highly valid points....

சேக்காளி said...

//ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகு ‘எனக்குத் தேர்வு ஒத்து வராது’ என்று உடைந்து போனால் முதலில் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்க வேண்டிய சூழல் வந்துவிடும்//
அட பரவாயில்லய்யா. ஆனால் வயது வரம்பிற்குள் இருக்கும் வரை மட்டுமே அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.வரம்பு கடந்து விட்டால் மறுபடியும் விமானம் ஏறிக்கொள்ளலாம்.
கடினமான வாழ்க்கை முறையில் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற ஒருவரால் நிச்சயம் அரசு வேலையில் சேர முடியும்.
வாழ்த்துக்கள் வீர களஞ்சியம்.

ADMIN said...

அருமை.. முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு முதலில் அர்ப்பணிப்பு உணர்வு இருக்க வேண்டும். அர்பணிப்பு உணர்வுடன் செயல்படக்கூடிய இளைஞர்களுக்கு உதவுவதுதான் திருப்திகரமாக இருக்கும்.

முன்னற துடிக்கும் இளைஞருக்கும், முழு மனதோடு உதவ காத்திருக்கும் "மணிகண்டனுக்கும்" வாழ்த்துகள்..!!

சேக்காளி said...

உத்வேகத்திற்காக
https://www.facebook.com/photo.php?fbid=996072227092388&set=a.433629970003286.106944.100000688592780&type=3&theater

Anonymous said...

நான் ஆபிஸ் போய்விட்டு வரும் வழியில் அதாவது கோடம்பாக்கம் ஸ்டேசன் ரோடில் நேரே சென்று 3 லெப்ட் எடுத்து ஒரு 5 அல்லது 7 பில்டிங் சென்றால் ஒரு பெரிய காம்பளக்ஸ் அமைந்து இருக்கும், அங்கு இலவசமாக தங்கி போட்டி தேர்வுகள் எழுதலாம் என நினைக்கிறேன், அங்கே ப்ரி வைப்-பை மற்றும் தங்குமிடம் இலவசம் என நினைக்கிறேன், அவருக்கு(களஞ்சியம்) தெரிவித்து விடவும்

Santhosh Sundaram.J said...

Ask him to apply for SSC CGLE 2016 exam details are in www.ssc.nic.in. For books Kiran prakasan publications for Combined Graduate level examination 2016 to get an idea. All the best.

செ. அன்புச்செல்வன் said...

நான் கடந்த ஓராண்டாக உங்களின் பதிவுகளை வாசிப்பவன் என்ற முறையில் உங்களின் இந்தத் தெளிவு படுத்தும் வரிகள் மிகவும் என்னைப் பாதித்திருக்கின்றன. ஒவ்வொன்றும் உண்மையை மட்டுமே பேசும் வரிகள். மனம்நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் ங்க மணிகண்டன் சார். வீரக்களஞ்சியமும் தெளிவு பெற்றிருப்பார் என்று நம்புகின்றேன். களஞ்சியத்தின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகள் ஏறக்குறைய என் பட்டாங்கில் கண்டவை. அவற்றையெல்லாம் கடும் முயற்சியாலும், அயராத உழைப்பாலும் அறிவியலில் உயர்ந்த விருதாகக் கருதப்படும் ஐரோப்பிய மேரி-க்யூரி ஆராய்ச்சி விருதுடன், அவர்கள் ஒதுக்கிய தொகையில் UK வில் மிகச்சிறந்த பல்கலையில் ஆய்வு செய்யும் நிலையை அடைந்திருக்கிறேன். ஆகவே களஞ்சியம் துணிந்து உழையுங்கள்.வெற்றி நிச்சயம்.
-முனைவர் அன்புச்செல்வன்

Anonymous said...

Thanks Manikandan. We can refer your advice to 100s of others.

- Dev