Mar 1, 2016

கிள்ளு

வெகு காலம் ருத்திராட்சை அணிந்திருந்தேன். ஆனால் அம்மா ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருந்தார். அதை அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடக் கூடாது; பொய் சொல்லக் கூடாது என்றெல்லாம் அவர் சொல்வதை சமாளிக்க வேண்டியிருந்தது. பள்ளியில் படிக்கும் காலத்தில் அதெல்லாம் சாத்தியமா? அதுவும் எனக்கு.

ருத்திராட்சைக்கே பொறுக்கவில்லை போலிருக்கிறது. வாய்க்காலில் குளிக்கும் போது நீரோடு போய்விட்டது. அதன் பிறகு அணியவில்லை. ஒரு காலத்தில் 1982 ஆம் வருடத்து ஒற்றை ரூபாய் நாணயத்தை எப்பொழுதும் வைத்துக் கொண்டே திரிந்தேன். ‘இன்னைக்கு படிக்கலாமா? வேண்டாமா?’ என்று பார்ப்பதற்கு கூட சுண்டி விட்டுப் பார்ப்பேன். இப்படி எந்தவொரு முடிவாக இருந்தாலும் அந்த நாணயத்தின் வழிகாட்டல்தான். ஒரு முறை கூட நாணயத்தின் வழிகாட்டலின் படி செய்த காரியம் உருப்பட்டதாக ஞாபகமில்லை. இருந்தாலும் அந்தக் காசு என்னோடு ஒட்டியிருந்தது. ருத்திராட்சையும் அப்படித்தான். சிவபெருமானே என்னோடு இருப்பது போல ஒரு நினைப்பு.

ஒரு மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள்தான் இப்படியான அஃறிணைகள் மீதான நம்பிக்கையை இறுகப் பற்றியிருப்பார்கள்’ என்றார். எனக்கு தன்னம்பிக்கை கிலோ கணக்கில் இருக்கிறது என்று சொல்லி எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். அவர் சொன்னதையெல்லாம் கேட்டிருக்க வேண்டியதில்லை. ஏதோவொரு பொருளின் மீது ஆழ்ந்த நம்பிக்கையை வைப்பதில் தவறில்லை. எல்லாவற்றையும் நாமே தூக்கிச் சுமக்காமல் பாதிச் சுமையை அதன் மீது இறக்கி விட்டுவிடலாம். இது ஒருவிதமான பகிர்தல்தான். மற்றபடி எந்தச் சமயத்தில் நமக்கு எது நடக்குமோ அது நடந்தே தீரும்.

2006 ஆம் ஆண்டு சுனில் காணாமல் போய்விட்டான். அப்பொழுது அவனுக்கு பத்து வயது. யாரோ சாலையில் போகிறவர் விசாரித்திருக்கிறார். தனது பெயரைத் தவிர அவனுக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அழைத்துச் சென்று குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு தனது அம்மாவும் அப்பாவும் இறந்து போனதாகச் சொல்லியிருக்கிறான். அதன் பிறகு காப்பகம் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. காப்பகத்தில் அவனைப் படிக்கச் சொல்லியிருக்கிறார்கள். படிப்பின் மீது ஆர்வமில்லை. அதனால் ஏதோவொரு தொழிலை அவனுக்கு பழக்கிவிட்டிருக்கிறார்கள். பத்து வருடங்கள் கழித்து இந்த மாதம் காப்பகத்தில் வழுக்கி விழுந்திருக்கிறான். மண்டையில் அடிபட்டு நரம்பு மருத்துவ சிகிச்சைக்கு புகழ்பெற்ற மருத்துவமனையான நிமான்ஸில் சேர்த்திருக்கிறார்கள். சிகிச்சை முடித்து திரும்பி வந்தவன் தனது சிறு வயது நினைவுகள் ஞாபகத்திற்கு வருவதாகவும் அம்மா அப்பாவெல்லாம் வசித்த இடத்தைச் சொல்லியிருக்கிறான். அவன் சொன்ன இடத்திற்குச் சென்று விசாரித்தால் அவர்கள் இருந்திருக்கிறார்கள். இப்பொழுது பெற்றோர்களையும் மகனையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். சாதாரணச் செய்திதான். ஆனால் இந்தச் சம்பவம் நமக்குள் எவ்வளவு கேள்விகளை எழுப்புகிறது? குழந்தையாக இருக்கும் போது ஏன் பிரிந்தான்? திடீரென்று எப்படி விழுந்தான்? அதுவும் மண்டையிலேயே ஏன் அடிபட்டது? சிகிச்சைக்குப் பிறகு நினைவுகள் ஏன் திரும்பின? இப்படி நிறையக் கேட்டுக் கொள்ளலாம். எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். பெரிய அளவில் நாம் மெனக்கெட்டு அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. 

தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறேன். ம்க்கும்.

பெங்களூரில் எதற்கெல்லாம் கண்காட்சி நடத்துவார்கள் என்றே கணிக்க முடியாது. Falun Dafa என்றொரு சீனக்காரனின் யோகா முறை. இதை பயிற்சி செய்ததற்காக சீனாவில் ஏகப்பட்ட பேர்களைக் கொன்று குவித்திருக்கிறார்களாம். அந்த யோகாவை பிரபலப்படுத்த இந்த ஊரில் கண்காட்சி நடத்தினார்கள். அரசாங்கமே கொன்றிருக்கிறது என்றால் ஏதாவது கிளுகிளுப்பாக இருக்கும் என்று நினைத்தபடிதான் சென்றேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வழக்கம் போலவே கைகளையும் கால்களையும்தான் அசைக்கச் சொன்னார்கள். இதற்கு எதற்கு கொலை? இதற்கு எதற்கு கண்காட்சி என்று குழப்பம் தீராமல்தான் வெளியில் வந்தேன். வெளியில் வந்தால் அதே மாதிரி இன்னொரு கண்காட்சி. ருத்திராட்சைக்கு. பெங்களூரின் இன்பண்டரி சாலையில் ஒரு பெரிய ஹோட்டல். அங்கேதான். அனுமதி இலவசம் என்றால் தயங்காமல் நுழைந்துவிடுவேன். வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்துவிட்டேன். இரண்டு வடக்கத்தி ஜோதிடர்கள் அமர்ந்திருந்தார்கள். பிறந்த தேதியைக் குறித்துக் கொடுத்தால் கணிக்கிறார்கள்.

‘எல்லாம் சரியா இருக்கு..ஆனா வீட்டில் அடிக்கடி சண்டை வருமே’ என்றார். எந்த வீட்டில்தான் சண்டை வருவதில்லை என்று நினைத்தபடி ‘எட்டு வருஷம் ஆச்சுங்க..ஒண்ணும் பிரச்சினையில்லை’ என்றேன். 

‘என்ன வேலை செய்யறீங்க?’ என்றார். பெங்களூரில் ஐடிக்காரன் என்று சொன்னால் தாறுமாறாகக் கணக்குப் போட்டுக் கொள்வார்கள். 

‘ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கிறேன்’ என்றேன்.

‘அதுதான் பிரச்னை..அவங்க சம்பாதிக்கிறாங்க..நீங்க உட்கார்ந்து சாப்பிடுறீங்க...இனிமேல் உங்களுக்குள்ள பிரச்சினை வரும்’ எப்படியாவது என்னை வழிக்குக் கொண்டு வரப் பார்த்தார். பிரச்சினை எதுவுமில்லை என்று மீண்டும் சொன்னால் வீட்டிற்கே வந்து கூட பிரச்சினை செய்துவிட்டுப் போவார் போலிருந்தது.

நேற்று காலையில் கூட கையைப் பிடித்து வெறுக்கென்று கிள்ளி வைத்தாள். அதைத்தான் தனது ஞானதிருஷ்டியில் கண்டுபிடித்துவிட்டார் போலிருக்கிறது.

‘அதுக்கு என்னங்க சாமி பரிகாரம்?’ என்று சரணடைந்தேன்.

கெளரிசங்கர் ருத்திராட்சை அணியச் சொல்லி பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்தார். மருத்துவர் எழுதுவதைப் போலவே சுருக்கெழுத்தில் GS-1 என்று எழுதினார். GS என்றால் Gowri Shankar.அந்த பிரிஸ்கிரிப்ஷனை எடுத்துச் சென்றால் ஒரு பெட்டியில் விதவிதமான ருத்திராட்சைகளுடன் காவி ஆடை அணிந்தவர்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். 

‘என்ன ரேட்டுங்க வருது?’ என்றேன். ருத்திராட்சையின் முகத்துக்குத் தகுந்த மாதிரி விலை. இரண்டு முக ருத்திராட்சை- நெஞ்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்- எழுபத்தைந்தாயிரம் ரூபாய். பதினான்கு முக ருத்திராட்சையும் கிட்டத்தட்ட அதே விலை. மற்ற முகங்கள் அதைவிட விலை குறைவு. 

காவியுடைக்காரர் ‘நூற்றைம்பது ரூபாயில் இருந்து ஆரம்பிக்குது’ என்றார். ‘லட்ச ரூபாய் வரைக்கும் இருக்கு’ என்று முற்றுப்புள்ளி வைக்காமல் பேசினார்.

பிரிஸ்கிரிப்ஷனை நீட்டினேன். நூறு, இருநூறு என்றால் ஒன்றை வாங்கி அணிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். கிள்ளு வாங்குவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். 

சர்வசாதாரணமாக ‘பத்தாயிரத்து ஐநூறு ரூபாய்’ என்றார். 

‘என்னய்யா நினைச்சுக்கிட்டீங்க?’ என்று வார்த்தைகள் வந்துவிட்டன. மொச புடிக்கிற நாயை முகத்தைப் பார்த்தால் தெரியாதா? எனது முகக்குறியை வைத்துக் கண்டுபிடித்துவிட்டார். வெளியில் எடுத்த ருத்திராட்சைகளை உள்ளே எடுத்து அடுக்கினார். நான் வாங்க மாட்டேன் என்ற முடிவுக்கு வந்துவிட்டவராய் ‘எவ்வளவுன்னா வாங்கிக்குவீங்க?’ என்றார்.

‘ருத்திராட்சை ஒரு மரத்தோட விதைதானே?’ என்றேன்.

‘ஆமாம்’ என்றார்.

‘இருநூறு ரூபாய்ன்னா வாங்கிக்குறேன்’ என்றேன். 

‘ரெடி கேஷ்’ என்று சொல்லலாமா என்று யோசனை வந்தது. கடுப்பாகிவிடுவார் என்று சொல்லவில்லை. 

எதுவுமே பதில் சொல்லாமல் முறைத்தார். அதற்கு மேல் அங்கே இருப்பது உசிதமில்லை. கிளம்பினேன். அதே கெளரி சங்கர் ருத்திராட்சைக்கு வேறொரு மனிதர் பில் போட்டுக் கொண்டிருந்தார். ‘பாவம்...நம்மை விட அதிகமாகக் கிள்ளு வாங்குற மனுஷனா இருக்கும்’ என்று உச்சுக் கொட்டியபடியே பைக்கை எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

5 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

ருத்ராட்சை கதை அருமை சார்..!

Ponchandar said...

கிள்ளு - க்கே 10,500 ரூபாய்னா....பூரிகட்டையால அடிவாங்கறவங்களுக்கு எவ்வளவு ???? ஈஷா-ல ருத்ராட்ச மாலையை கையில் பிடித்து நாம் சாப்பிடும் பொருட்கள் மீது தொங்கவிட்டால் வலப்பக்கம் சுற்றினால் நல்லது என்றும் இடபக்கம் சுற்றினால் கெட்டது என்றும் சொல்கிறார்களே ! உங்களுக்குத் தெரியுமா ???????

சேக்காளி said...

சமீபத்துல அருணாசலம் படம் பாத்தியளோ???????????.

Kamala said...

எல்லாம் ருத் ராட்சப்பூனைகள்!

selva said...

பிரச்சினை எதுவுமில்லை என்று மீண்டும் சொன்னால் வீட்டிற்கே வந்து கூட பிரச்சினை செய்துவிட்டுப் போவார் போலிருந்தது.ஹா ஹா ஹா ஹா ஹா