Feb 2, 2016

வருமானம்

பெங்களூரு மாதிரியான மாநகரத்தில் ஒரு இளநீர் வியாபாரிக்கு எவ்வளவு வருமானம் இருக்கும்? கடை எதுவுமில்லை. மொத்தமாகக் கொள்முதல் செய்து விநியோகஸ்தரும் இல்லை. சுமாரான பரபரப்புடைய சாலையின் ஓரமாக ஒரு குச்சியை நட்டு வைத்து அதைச் சுற்றிலும் இளநீர் வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய்? ஐந்நூறு? ஆயிரம்? நகரத்தைப் பொறுத்த வரைக்கும் ‘இதுதான் வருமானம்’ என்று கணிக்கவே முடியாது.

கடந்த வாரம் ஜெயநகரில் ஒரு ஜூஸ் கடையில் பேசிக் கொண்டிருந்த போது ஒரு பொடியன் - அவர்தான் ஓனர்- பத்துக்கு பத்து கடைக்கு இருபத்து மூன்றாயிரம் ரூபாய் வாடகை கொடுக்கிறார். ராஜஸ்தானில் இருந்து வந்து கடை ஆரம்பித்திருக்கிறார். அவருடைய சொந்தக்காரர்கள் இங்கேயே வெகு காலமாக இருக்கிறார்கள். ஆளாளுக்கு பணம் சேர்த்து முன்பணம் திரட்டி இந்தக் கடையை வாடகைக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இப்படித்தான் அவர்களுடைய ஆட்களை உள்ளே இழுக்கிறார்கள். பெருநகரங்களின் சந்து பொந்துகளுக்குள் எல்லாம் வடநாட்டு வலது சாரி ஆண்ட்டிகள் வெள்ளையாகச் சிரிப்பதும் பான்பராக் அங்கிள்கள் கோலோச்சுவதும் இதனால்தான். இனி இந்தப் பொடியன் மற்றவர்களோடு சேர்ந்து பணம் திரட்டி இன்னொருவனைக் கொண்டு வந்து கடை வைத்துக் கொடுப்பான். நாமெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் ஆவோம் என்று சொன்னால் தமிழன்டா என்று கத்தியபடி அரிவாளைத் தீட்டிக் கழுத்திலேயே வைப்பார்கள். எதுக்கு பொல்லாப்பு?

இருபத்து மூன்றாயிரம் ரூபாய் வாடகை கொடுத்து, மற்றவர்கள் கொடுத்து உதவிய முன்பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுத்து, ஜூஸ் பிழிய பழம் வாங்கி, மின்கட்டணம், மாமூல், எதிர் சவ்வூடு பரவலில் சுத்தமாக்கப்பட்ட தண்ணீர் - எல்லாத்தையும் கணக்குப் போட்டால் எவ்வளவு மிஞ்சும்? ‘பெருசா ஒண்ணும் நிக்காதுங்க’ என்று முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.  மாதச் சம்பளக்காரர்களைக் கணித்துவிடலாம். நேரடியாகச் சம்பளம் எவ்வளவு என்று கேட்க வேண்டியதில்லை. எவ்வளவு வருட அனுபவம் என்று கேட்டால் போதும். குத்துமதிப்பாக ‘இவ்வளவுதான்’ என்று சொல்லிவிட முடியும். ஆனால் வியாபாரிகளின் வருமானத்தைக் கண்டுபிடிப்பது கடினம்.

எங்கள் வீட்டை ஒட்டி ஒரு குட்டி வீடு இருக்கிறது. ஆயிரம் சதுர அடிகளுக்குள்ளாகத்தான் இருக்கும். பெட்டி வீடு என்போம். உரிமையாளர் சில மாதங்களுக்கு முன்பாகவே காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டார். வாடகைக்கு விட்டிருந்தார்கள். வாடகைக்கு இருப்பவர்கள் படு மோசம். அப்பன் பற்களைத் துலக்கி மாடியில் நின்று வாசலிலேயே துப்புவான். குழந்தை மாடியில் நின்று வாசலில் சிறுநீர் கழித்துவிடும். அப்பனுக்குத் தப்பாத பிள்ளை. ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக அந்த வீட்டை விற்பனை செய்ய விரும்புவதாக வீட்டு உரிமையாளர் சொன்னார். எனக்கு உள்ளூர ஆசை. விலையைக் கேட்ட போது மயக்கம் வந்துவிட்டது. அறுபத்து ஐந்து லட்ச ரூபாய். ஐம்பது லட்சம் வங்கிக் கடன் வாங்கினால் ஐம்பதாயிரமாவது மாதாந்திரத் தவணை கட்ட வேண்டியிருக்கும். வாடகைக்கு விட்டால் அதிகபட்சம் இருபத்தைந்தாயிரம் வரும். எப்படியிருந்தாலும் கையிலிருந்து காசு போட்டுத்தான் தவணை கட்ட வேண்டும். மண்டைக்குள் ஆயிரம் கணக்குகள். ‘இதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று முடிவுக்கு வந்து சேர்வதற்குள் வீடு விற்பனையாகிவிட்டது.

அறுபத்து இரண்டு லட்ச ரூபாய் மொத்தத் தொகையாகக் கொடுத்து கிரயம் முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள். பெரிய ஆள் வாங்கிவிட்டார் என்று நினைத்திருந்தோம். பெரிய ஆள்தான். இளநீர் கடைக்காரர். நம்பவே முடியவில்லை. நீங்கள் மட்டும் நம்பவா போகிறீர்கள்? கதை விடுகிறான் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். பெங்களூர் வரும் வேலை இருந்தால் எங்கள் வீட்டுக்கு வரவும். இளநீர் கடைக்காரரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். ‘எப்படிங்க இவ்வளவு பணம் சம்பாதிச்சீங்க?’ என்று நேரடியாகக் கேட்டால் ஒரே வெட்டாக வெட்டிவிடுவார். 

விவசாயிடமிருந்து இளநீர் பத்து ரூபாய் என்று வாங்கி இருபத்தைந்து ரூபாய்க்கு விற்கிறார்கள். இடையில் போக்குவரத்துச் செலவு, தரகருக்கான தொகை, நொட்டு, நொஸ்கு என்று பத்திலிருந்து பனிரெண்டு ரூபாய் போய்விடும் என்று வைத்துக் கொள்ளலாம். எப்படியும் ஒரு இளநீருக்கு மூன்று ரூபாய் நிற்கும். ஒரு நாளைக்கு நூறு இளநீர் விற்றால் முந்நூறு ரூபாய். சாப்பாட்டுச் செலவு, வீட்டு வாடகை என்றெல்லாம் கணக்குப் போட்டால் ‘எப்படி வீடு வாங்க முடியும்?’ என்று யோசித்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். நம்முடைய கணக்கு சரியாகவே இருக்காது.

இந்த ஊரில் தம் கட்டி கோடிக்கணக்கான சொத்துக்களைச் சேர்த்து வைத்திருக்கிற நிறையத் தமிழர்களைத் தெரியும். எழுதிவிடலாம்தான். ஆனால் எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் நிசப்தம் வாசிக்கிறார்கள். அடுத்த முறை வீட்டுக்குச் சென்றால் தலைவாசலோடு திருப்பி அனுப்பிவிடக் கூடும் என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.  இந்த இளநீர்கடைக்காரர் கன்னடத்தவர். அதனால் பிரச்சினையில்லை.

பெங்களூர் மாதிரியான நகரங்களில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை கவனித்தால் மலைப்பாக இருக்கிறது. கட்டிடங்களில் கம்பி கட்டுகிற வேலை செய்பவர்களின் வருமானம் எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சியாக இருக்கும். காலை ஆறு மணிக்கு வந்து மதியம் வரைக்கும் ஒரு கட்டிடத்தில் முடித்துவிட்டு மதியத்திலிருந்து இரவு பதினோரு மணி வரைக்கும் இன்னொரு கட்டிடத்தில் வேலை செய்கிறார்கள். ‘கட்டிடத்திற்கு இவ்வளவு’ என்று மொத்தமாகப் பேசிவிட்டால் ஒரே நாளில் ஆயிரத்து ஐநூறிலிருந்து இரண்டாயிரம் வரை சாதாரணமாகச் சம்பாதிக்கிறார்கள். ‘என்ன இருந்தாலும் கார்போரேட்காரன் சம்பளம் ஐம்பதைத் தாண்டுதே’ என்று வெட்டி வீராப்பு பேசலாம். தாண்டுகிறதுதான். சட்டைக்கும் பேண்ட்டுக்கும் எவ்வளவு காசு செலவு செய்கிறோம்? மாதம் எத்தனை முறை ட்ரீட் என்று அழைத்துச் சென்று மிளகாய் அரைக்கிறார்கள்? திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்தில் ஏறி நின்றபடியே தூங்கிச் சென்று இறங்குவார்கள். நாம் கே.பி.என்னில் பயணம் செய்ய எவ்வளவு செலவழிக்கிறோம்?

அங்கே இருக்கிறது சூட்சமம். வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை குறைவாக வைத்துக் கொண்டு ‘சம்பாதிக்கிற காசை அனுபவிக்கணும்’ என்று காசை அள்ளி இறைக்கிற கூட்டம் வாழ்கிற அதே ஊரில்தான் ‘சேர்த்து வைக்கலாம்’ என்கிற இளநீர்க்கடைக்கார வகையறாவும் வாழ்கிறது. எங்கள் வீட்டில் வேலை செய்கிற பவானிக்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறோம். பாத்திரம் கழுவி, வீட்டைப் பெருக்கி, குழந்தைகளின் துணியைத் துவைத்துப் போடுகிறார். ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேர வேலை. ஐந்து வீடுகளில் வேலை செய்கிறார். கணக்குப் போட்டுக் கொள்ளலாம். குடிசை வீட்டில்தான் இருக்கிறார்கள். குழந்தையை அரசாங்கப்பள்ளியில் படிக்க வைக்கிறார். ஃபோரம் மால், பெங்களூர் செண்ட்ரல் எல்லாம் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. மூன்றாம் நதி நாவலை இவரை மையமாக வைத்துத்தான் எழுதியிருக்கிறேன். இப்பொழுது முப்பதுக்கு நாற்பது சைட் ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார். 

உழைக்கிற மக்கள் நன்றாகச் சம்பாதிக்கிறார்கள் என்று நிறுவுவதற்காக இதைச் சொல்லவில்லை. அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு. நேற்று மாலையில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது வழக்கமாக நாங்கள் கொய்யாப்பழம் வாங்குகிற தள்ளுவண்டிக்காரரைப் பற்றி இளக்காரமாகப் பேசினார். ‘இவனுக்கே இத்தனை லொள்ளு’ என்கிற ரீதியிலான பேச்சு அது. தான் படித்து முடித்து, ஆங்கிலம் பேசி, வேலைக்கு வந்து நன்றாகச் சம்பாதிப்பதாகவும் அந்த மனிதர் தள்ளுவண்டியில் கொய்யா விற்றுக் கொண்டிருப்பதால் தன்னிடம் பவிசாக நடந்து கொள்ள வேண்டும் என்கிற மாதிரியான இளக்காரம் அது. சுள்ளென்றிருந்தது. இந்தக் கதைகளையெல்லாம் வரிசையாகச் சொன்னேன். பேயறைந்த மாதிரி ஆகிவிட்டார். திருந்துவாரா என்று தெரியாது. ஆனால் பெங்களூர் மாதிரியான பெருநகரங்களில் சாமானியமாக இருக்கிற ஆட்களிடம் வருமானம் இருக்காது என்றும் அவர்கள் தங்களை விட மட்டம் என்றும் நினைப்பதைவிடவும் முட்டாள்த்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. அக்காங்!

4 எதிர் சப்தங்கள்:

மகேஸ் said...

இவர்கள் யாருக்கும் இன்கம் டாக்ஸ் பிரச்சனை இல்லை. அதனால் இன்னும் அதிகம் சேமிக்க முடிகிறது.

Anonymous said...

நாமெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் ஆவோம் என்று சொன்னால் தமிழன்டா என்று கத்தியபடி அரிவாளைத் தீட்டிக் கழுத்திலேயே வைப்பார்கள். எதுக்கு பொல்லாப்பு
NOT ONLY A 100% TRUE STATEMENT BUT AVERY SAD REFLECTION ON OUR TAMIL COMMUNITY. TAKE FOR EXAMPLE 'MALAYALEES'. THEY WILL START WITH ONE AND IN A FEW YEARS THE PLACE WILL BE FULL OF 'MALAYALEES' IN ALL JOBS .
IN US IT IS 'TELUGUS' EVERYWHERE.
TAMILS WILL NOT ONLY DO ANY HELP TO FELLOW TAMILS BUT WILL GO OUT OF THE WAY TO HARM/DAMAGE OTHER TAMILS.
IN LANKA/ASSAM/DELHI IT IS TAMILS WHO DAMAGE FELLOW TAMILS
IN OTHER FREEDOM GROUPS THERE WILL BE NO 'KARUNA'.
MOOPANAR WOULD HAVE BECOME PRIME MINISTER BUT FOR TAMIL BETRAYAL. I DON'T WANT TO NAME PEOPLE RESPONSIBLE.
ABDUL KALAM ,THE DARLING OF THE NATION COULD NOT GET GET A SECND TERM ONLY BECAUSE MANY TAMIL PARTIESDMK/ LOCAL CONGRESS OPPOSED IT.
OUR STATE GETS THE LEAST NATIONAL AWARDS SINCE OUR GOVTS INDULGE IN PETTY POLITICS AND DO NOT RECCOMEND TALENTED PEOPLE.
WE, TAMILS FEEL INSECRE IN PRAISING FELLOW TAMILS.
WE ARE BOGGED DOWN BY PARTY/CASTE/JEALOUSY ETC.
ALL OTHER PEOPLE ARE UNITED WHEN IT COMES TO THEIR LAGUAGE/PEOPLE.
SEE HOW SHIV SENA BEHAVED IN ELECTING PRADEEPA PATIL, A, MAHARASTRIAN.
IT WAS THE SAME FOR NARASIMHA RAO WHEN HE CONTESTED FROM'MEDAK'
ENTIRE ANDHRA WAS PROUD THEIR MAN WAS PM .
ONE CAN GO ON AND ON . LET US PRAY FOR THE DAY ALL TAMILS WILL GET UNITED AS TAMILS.
NISAPTHAM IN ITS USUAL STYLE CAN HELP.
M.NAGESWARAN.

பொன்.முத்துக்குமார் said...

// நாமெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் ஆவோம் என்று சொன்னால் தமிழன்டா என்று கத்தியபடி அரிவாளைத் தீட்டிக் கழுத்திலேயே வைப்பார்கள். எதுக்கு பொல்லாப்பு? //

வெறுக்கக்கற்றுக்கொடுக்கப்பட்ட சமூகம் வேறெப்படி இருக்கும் ?

சும்மாவா மலையாளிகள் நம் ரயில்வே வருமானத்தை பிடுங்கிக்கொண்டு நமது தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டிருந்தார்கள் ?

”தனியே அதற்கோர் குணமுண்டு” ஆயிற்றே.

sonaramji said...

எங்கள் ஊாில் கறிகாய் கடை போட விருதுநகாிலிருந்து ஒரு குடும்பம் வந்தது. ஒரு சின்ன இடத்தில் வாடகைக்கு வீடாகவும் கடையாகவும் இருந்த இடம். 5 பிள்ளைகள். இன்று ஆளுக்கு இரண்டு பொிய வீடு காா் தனித்தனியாக கடை.ஆனால் இதே ஊா்க்காரா் முன்பே கடை வைத்திருந்தவா் கடையை விற்று விட்டு இன்று அவாிடம் கணக்கு பிள்ளை