Feb 3, 2016

விழிப்பு

மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை. ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு தலைவலி வந்து சேர்ந்திருக்கிறது. கல்லூரிக்கு ஏற்றாற்போல ‘வருடத்திற்கு இத்தனை மாணவர்களைச் சேர்த்தாக வேண்டும்’ என்று நிர்வாகத்தினர் அழுத்துகிறார்களாம். என்னோடு கல்லூரியில் படித்த ஒரு நண்பன் - தனியார் கல்லூரி ஆசிரியர்- ‘மச்சி....போற போக்கே சரியில்லை...ரெண்டு பசங்களைச் சேர்க்கச் சொல்லுறாங்க...ஏதாச்சும் பசங்க இருந்தா சொல்லு’ என்றான். பயங்கரக் கோபம் வந்துவிட்டது. ஆனால் பற்களைக் கடித்துக் கொண்டேன். அவன் பிரச்சினை அவனுக்கு. வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தினமும் கழிவறையை ஒரு முறை கழுவிவிடு என்று சொன்னால் நானும் கூட செய்வேனோ என்னவோ, யார் கண்டார்? அந்தச் சூழலில் சிக்கும் போதுதான் அந்த வலி புரியும்.

முன்பெல்லாம் ஊருக்கு ஒரு பொறியாளர் இருந்தாலே பெரிய விஷயமாக இருந்தது. எங்கள் ஊர்ப்பக்கத்தில் எனக்குத் தெரிந்த பொறியாளர் என்றால் கே.எல்.முத்துச்சாமிதான். அதன் பிறகு தொண்ணூறுகளில் திரும்பிய பக்கமெல்லாம் பொறியாளர்கள் தென்பட்டார்கள். இரண்டாயிரங்களில் வீட்டுக்கு இரண்டு மூன்று பொறியாளர்களைப் பொறித்துத் தள்ளின தனியார் கல்லூரிகள். எத்தனை பேருக்குத்தான் வேலை கிடைக்கும்? பத்து பதினைந்து அரியர் வைத்தவர்களெல்லாம் ஒன்றிரண்டு வருடங்கள் கூடுதலாக எடுத்துக் கொண்டு பொறுமையாக முடித்து ‘இந்த பி.ஈ கருமாந்திரம் வேலைக்கு ஆகாது’ என்று எம்.ஈ, எம்.டெக்கில் சேரத் தொடங்கினார்கள். இதைப் பார்த்த தனியார் கல்லூரிகள் வத வதவென எம்.ஈ, எம்.டெக் படிப்புகளுக்கும் அனுமதி வாங்கித் தள்ளினார்கள். முதுநிலை படிப்பில் சேர்கிறவர்களில் முக்கால்வாசிப் பேர் ‘எப்படியாவது வாத்தியார் ஆகிவிடலாம்’ என்றுதான் நம்புகிறார்கள். இப்பொழுதெல்லாம் பி.ஹெச்.டி முடித்தவர்களே கூட ரூபாய்க்கு மூன்று பேர்கள் கிடைக்கிறார்கள் . 

தனியார் ஐடிஐகளிலும் பாலிடெக்னிக்களிலும் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு எம்.ஈ முடித்துவிட்டு வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களைத் தெரியும். ‘நீ இல்லைன்னா இன்னொருத்தன்...இருக்கிறதுன்னா இரு’ என்று கல்லூரி மேலாண்மை மனசாட்சியே இல்லாமல் சொல்கிறது. தனியார் கல்லூரிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கு அழுத்தம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பத்தாம் தேதி ஆனாலும் சம்பளப் பட்டுவாடா செய்வதில்லை; எத்தனை வருடங்கள் ஆனாலும் சம்பள உயர்வு என்பதெல்லாம் இல்லை, பாடம் சொல்லித் தருகிற வேலையைத் தவிர, கல்லூரி நிர்வாகம், கல்லூரி நிறுவனரின் வீட்டு நிர்வாகம் வரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பிரச்சினைகளை எல்லாம் தாண்டி இப்பொழுது ஆள் பிடிக்கிற பிரச்சினை வந்து சிக்கியிருக்கிறது. இதற்காக புரோக்கர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆளுக்கு இவ்வளவு ரூபாய் என்று பேசிக் கொடுத்துவிட்டால் கேரளாவிலிருந்தோ, அஸாமிலிருந்தோ பிடித்துக் கொண்டு வந்து சிக்க வைத்துவிடுவார்கள். மேலே சொன்னது மாதிரி தெரிந்த ஆட்களிடமெல்லாம் ‘ப்ளஸ் டூ முடிக்கிற பசங்க இருக்காங்களா?’ என்று கேட்டு முயற்சிக்கிறார்கள். கிடைத்தால் சரி. கிடைக்கவில்லையென்றால் புரோக்கர்களே கதி என்று சரணாகதி அடைந்துவிடுகிறார்கள்.

பி.ஈ முடித்தவுடன் பெரும் சம்பளத்திற்குச் சென்றுவிடலாம் என்று கணக்குப் போடுகிற மனநிலை கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றவர்களிடம் மாற வேண்டும். நல்ல கல்லூரியாக இருந்தால் பொறியியல் சேர்வதில் தவறு இல்லை. ஆனால் பொறியியல்தான் படிக்க வேண்டும் என்ற நினைப்பில் சுற்றுச் சுவர் கூட இல்லாத கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் வாழ்க்கை வீணாகப் போய்விடும். நான்கு வருடங்களாக வேலை கிடைக்கவில்லை என்று தொடர்பு கொள்கிற மாணவர்கள் இருக்கிறார்கள். ‘எம்.ஈ முடித்திருக்கிறேன். வேலையே இல்லை’ என்று ஒருவர் தனது சுயவிவரக் குறிப்பை அனுப்பி வைத்திருந்தார். இப்படியான சுய விவரக் குறிப்பை அனுப்புகிறவர்களிடம் முடிந்தவரை அழைத்துப் பேசிவிடுகிறேன். வேலை வாங்கித் தருகிறோமோ இல்லையோ- சற்று ஊக்கப்படுத்திப் பார்க்கலாம் என்ற நினைப்பில் அழைப்பேன். பேச்சுவாக்கில் ‘VLSI படிப்புக்கும் Embedded systems படிப்புக்கும் என்ன வித்தியாசம்’ என்று கேட்ட போது அவருக்கு பதில் தெரியவில்லை. உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. அவர் எம்.ஈ VLSI முடித்திருக்கிறார். ‘இந்தப் பையனுக்கு வேலை கொடுங்க’ என்று யாரிடம் கேட்க முடியும்? அடுத்த முறை தகுதியான மாணவரை அழைத்துக் கொண்டு யாரிடமாவது சிபாரிசு என்று போனால் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள்.

இந்த மாணவன் ஒரு பருக்கை உதாரணம். உறுதியாகச் சொல்ல முடியும்- நம்முடைய கல்வித்தரம் சீரழிந்து கிடக்கிறது. நூற்றுக்கணக்கான கல்லூரிகளைத் திறந்துவிட்ட பிறகு மாணவர்களின் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு தடையாக இருந்தது. கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நுழைவுத்தேர்வை ரத்து செய்கிறோம் என்றார்கள். அது பொய். தனியார் கல்லூரி முதலாளிகளின் நலன் கருதித்தான் ரத்து செய்தார்கள். அதன் பிறகும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் என்பதும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுவதற்குத் தடையாக இருந்தது. அதையும் நீக்கினார்கள். இப்பொழுது யார் வேண்டுமானாலும் பொறியியல் சேர முடியும் என்ற மோசமான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். எல்லோருக்கும் கல்வி கிடைப்பது என்பது வேறு. ஒரு படிப்பை சீரழிப்பது என்பது வேறு. இன்றைக்கு அரசாங்கமும் கல்லூரி நிர்வாகங்களும் செய்து கொண்டிருப்பது இரண்டாவது காரியம்.

இப்பொழுது வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களை எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்? அடிப்படையான அறிவியல், கணிதம், புள்ளியல், புவியியல், வரலாறு போன்ற படிப்புகளைப் படிப்பதற்கு ஆட்களே இல்லை. இன்னும் பத்தாண்டுகளில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இத்தகைய பாடங்களைச் சொல்லித் தருவதற்கான ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை இருக்கும். Butterfly effect. பொறியியல், பொறியியல் என்று இஷ்டத்துக்கு கல்லூரிகளைத் திறந்து வைத்து, சிக்குகிற மாணவர்களை எல்லாம் உள்ளே திணித்து, சரியான வேலை கிடைக்காமல் அவர்கள் திணறடிக்கப்பட்டு, எதிர்காலத்தைச் சீரழிப்பதோடு நில்லாமல் எதிர்வரும் சந்ததியினருக்கு பாடம் சொல்லித் தருகிற ஆசிரியர்களுக்குக் கூட பற்றாக்குறையை ஏற்படுத்தி மற்ற பாடங்களை பெரு மொத்தமாக அழித்துக் குழி தோண்டி மூடுகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் கலந்தாய்வுக்குப் பிறகு நிறைய கல்லூரிகளில் ஓரிடம் கூட நிரம்பவில்லை என்ற செய்தியைப் படிக்கும் போது ‘நாசமாகப் போகட்டும்’ என்று இருக்கும். நிறையக் கல்லூரிகளை மூட வேண்டும். நூறு நல்ல கல்லூரிகள் மட்டும் செயல்பட்டால் போதுமானது. விருப்பமிருக்கக் கூடிய மாணவர்கள் மட்டும் பொறியியல் படிக்கட்டும். பிற மாணவர்களுக்கு மற்ற வாய்ப்புகளைப் பற்றித் தெரியட்டும். நாம் கை தொடாத நூற்றுக்கணக்கான படிப்புகள் இருக்கின்றன. பொறியல் கல்லூரியின் அபத்தங்கள், எதிர்மறையான விளைவுகள், அதன் பிரச்சினைகள் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. யாராவது அங்குமிங்குமாகப் பேசுவதில் பலனில்லை. ஊடகங்கள் தொடர்ச்சியான விவாதத்தை உருவாக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் பொறியியல் கல்லூரி நடத்தும் பெருந்தலைகளை எதிர்த்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை.

14 எதிர் சப்தங்கள்:

Vivekanandan.M said...

வேதியல்,வரலாறு போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை வரும் என்பது ஒரு தவறான ஊகம்... பொறியாளர்களே அப்பணிகளையும் நிரப்புவர், இங்கே பயின்ற துறையிலேயே வேலை பார்க்கும் பொறியாளர்கள் வெறும் 20% கூட இருக்காது மற்றவரெல்லாம் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்பவர்களே. அதுமட்டுமல்லாமல்,தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு +2க்கு பிறகு ஒரு மேற்படிப்பு என்ற அளவிலேயே உள்ளது.இங்கு 90% பிஇ படிப்பவர்கள் பெற்றோரின் விருப்பத்துக்கு அல்லது சம்பிரதாயத்துக்கு படித்துவிட்டு பின் தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுப்பவர்களாகவே உள்ளனர்.

-விவேக்

Anonymous said...

Mani, you also selected engineering... what is the problem if other are selecting the same....

Vaa.Manikandan said...

உண்மையிலேயே புரிந்துதான் கேட்கிறீர்களா? இல்லை..கேட்க வேண்டும் என்பதற்காகவே கேட்கிறீர்களா?

யாருமே பொறியியல் படிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேனா? பொறியியல் படிப்பதில் தவறு எதுவுமில்லை. ஆனால் சரியான கல்லூரி, சரியான பாடம், மாணவர்களின் விருப்பம் என்பவை மிக முக்கியமான காரணிகள். பொறியியல் படித்தே தீர வேண்டும் என்று கிடைக்கிற கல்லூரிகளில் சேர வேண்டியதில்லை.

Anonymous said...

Well said mani anna

Unknown said...

Funny thing is many of IT job requires basic analytical skills, any graduates can do..

Sad thing is EDUCATION continue to become BUSINESS. Unfortunately ... no solutions and no recovery plan..

இரா. பாலா said...

Here is my post related to this topic:
http://rbaala.blogspot.in/2014/06/blog-post_8.html

kaniB said...

@vivekandan M: நீங்கள் கூறுவது வேலையை நிரப்ப மட்டுமே சரியாக இருக்கும். மற்றபடி பாடம் சொல்லித் தரவது என்பது தற்போது உள்ள பொறியில் கல்லூரிகளின் கல்வி நிலை போல் ஆகிவிடும். ஏதோ ஒன்றை படித்து விட்டு தெரியாத ஒன்றில் வேலை பார்ப்பது ஐடி, வங்கி இன்னும் பிற தொழில்களில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால் கலை மற்றும் அறிவியல் கற்ப்பித்தலில் இவ்வாறு ஜல்லி அடிக்க முடியாது.

மேலும் ஐடி, வங்கி போன்றவற்றில் துறை சார்ந்த குறைந்தபட்ச பயிற்சியாவது கொடுத்துவிட்டு பிறகு தான் வேலை. கலை மற்றும் அறிவியல் பாடங்களில் ஆர்வமும் அறிவும் இல்லாவிட்டால் அது சரியான கற்ப்பிதலாக இருக்காது. மதிப்பெண் வாங்க மட்டும் பயன்படும் பள்ளிக்கல்வி போன்று மாறிவிடும்.

Unknown said...

You must consider allowing anonys to comment in your blog post. Such a waste of time you are spending to answer for their ridiculous question especially this post. Its my opinion Manikandan.

- Arul Manivannan

Ramya said...

Dear manikandan,
I also agree that minimum marks required for studying engineering. But, i dont agree with ur view about entrance exam. Preparation for entrance is very tough for rural students since they dont have any training centre for the same. Do we have any alternate?
Please correct me if i am wrong.
Longing to type in tamil but my mob doesn't support. Sorry

Unknown said...

எல்லோருக்கும் கல்வி கிடைப்பது என்பது வேறு. ஒரு படிப்பை சீரழிப்பது என்பது வேறு. இன்றைக்கு அரசாங்கமும் கல்லூரி நிர்வாகங்களும் செய்து கொண்டிருப்பது இரண்டாவது காரியம்.

Well Said.

Aba said...

இலங்கையில் இப்போதுதான் "எல்லா மாணவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்கவேண்டும்" எனும் போர்வையில் தனியார் கல்லூரிகள் (இங்கே பல்கலைக்கழகங்கள்) தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்கக் கல்லூரிகளின் (கவனிக்க, இலங்கையில் மிகச்சிறந்தவை அரசாங்க இலவசக் கல்லூரிகள்தான்) மாணவர்களும், வாங்கும் விரிவுரையாளர்களும் நடுத்தெருவில் நின்று போராடி வருகின்றோம். தமிழ்நாட்டின் நிலைமை இங்கேயும் வந்துவிடக்கூடாது, இல்லையா...

Anonymous said...

I think this is a perfect example for market forces in action. Who are we to decide we need only 1 lakh or 2 lakh engineers power year?

Let the supply and demand adjust based on the market. There will be time (I think it's already happening) when people realize only top colleges are good and others will close shops.

Anonymous said...

It's better for market to decide on the supply demand than some IAS bureaucrat sitting in Chennai. More unnecessary power to government obviously will result in corruption.

moe said...

Educators need considerable amount of money to provide quality education.
Infra and salary for resources.
Govt.couldn't scale to the needs. Be it education/health care or transportation.
Allowing private operators are fine. But letting market to decide the supply picture is not correct.
Fees must go UP for quality engg. courses. To pay lecturers atleast 75000 to 1lakh to get good resources.