Feb 1, 2016

நேர்காணல்

மே மாதம் நெருங்கும் போது கல்லூரி மாணவர்கள் நிறையப் பேர் தொடர்பில் வருகிறார்கள். இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களாக இருந்தால் பிரச்சினையில்லை. இன்னமும் அவகாசம் இருக்கிறது. சொன்னால் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் படித்து முடித்து ஓராண்டுக்கும் மேலான மாணவர்கள் என்றால் பதற்றத்தை அதிகமாகவே காட்டுகிறார்கள். நேற்று ஒரு மாணவர் பேசினார். ‘ஒரு வருஷம் என்ன செஞ்சுட்டு இருந்த?’ என்று நேர்காணலில் கேட்டதாகச் சொன்னான். இது இயல்பான கேள்விதான். நேர்காணல் நடத்துகிறவர் இந்தக் கேள்வியைக் கேட்டவுடனேயே தவித்துப் போக வேண்டியதில்லை. ஆனால் பையன் அவரிடம் பினாத்தியிருக்கிறான். அனுப்பி வைத்துவிட்டார்கள்.

‘வேலை தேடிக் கொண்டிருந்தேன்’ என்று தாராளமாகச் சொல்லலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஒரு வருடம் வேலை தேடியவன் என்பதாலேயே முட்டாள் என்று யாரும் நிராகரிக்கப் போவதில்லை. ஆனால் ஒரு வருடத்தில் நம்முடைய தயாரிப்பு என்ன என்பதை நிரூபித்தாக வேண்டும். இத்தகையவர்களிடம் அருண் பற்றித்தான் சொல்கிறேன். அவன் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் நல்ல கல்லூரியிலேயே இடம் கிடைத்திருந்தது. கல்லூரியில் அவனுடன் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறுதியாண்டிலேயே ஐடி நிறுவனங்களுக்குள் கர்சீப் போட்டு வைத்திருந்தார்கள். அருணுக்கு மட்டும் வாய்க்கவே இல்லை. அதற்கு மிக முக்கியமான பிரச்சினையொன்று தடைக்கல்லாக இருந்தது. இதே நேர்முகத் தேர்வுகள்தான். தமிழ் வழிக் கல்வி, ஆங்கிலம் சரளமாக இல்லை, தன்னம்பிக்கை இல்லை என்று ஏதொவொரு காரணத்தினால் காலி ஆகிக் கொண்டேயிருந்தான். எழுத்துத் தேர்வுகளைச் சமாளித்தாலும் நேர்காணல்கள் காலை வாரிக் கொண்டிருந்தன. சறுக்கிக் கொண்டேயிருந்தான்.

வகுப்புத் தோழர்களில் பெரும்பாலானவர்கள் இருபதாயிரம், முப்பதாயிரம் என்கிற சம்பளத்தில் வேலைக்குச் சேர்வதற்கான அப்பாய்ண்ட்மெண்ட் கடிதங்களோடு இருக்கும் போது நாம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத சூழலில் குழப்பம் வரத்தான் செய்யும். நமக்கு வேலையில்லை என்பதைவிடவும் ஊர்க்காரர்களுக்கு பதில் சொல்லியே தாவு தீர்ந்துவிடும். நம்மோடு விடுவார்களா? ‘பையன் என்ன செய்கிறான்?’ என்று அம்மா அப்பாவையும் தாளித்து எடுத்துவிடுவார்கள். இவர்களுக்கு பதில் சொல்வதற்காகவே ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு வேலை கிடைத்தாலும் தேவலாம் என்றிருக்கும். இத்தகைய சமயங்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துவிடுகிறார்கள். அதுவும் ஒரு நல்ல வழிதான். நம்மைத் தயார் படுத்திக் கொள்ள இரண்டு வருடங்கள் கிடைக்கும். பெயருக்குப் பின்னால் ஒரு டிகிரியும் அதிகமாகியிருக்கும். ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமாவதில்லை. அருணுக்கும்தான். பால் கறந்து விற்கும் குடும்பம் அவனுடையது. பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.  

நான்கைந்து பேர்களிடம் வழி கேட்டிருக்கிறான். அதில் ஒருவர் உருப்படியான வழியைச் சொல்லியிருக்கிறார். ‘ஸ்கெட்ச் போடு’ என்பதுதான் அந்த வழி. அதென்ன ஸ்கெட்ச்? 

ஐடி துறையை நுணுக்கமாக கவனித்துப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இன்றைக்கு ஜாவாவில் ஆட்களை அதிகமாக எடுக்கிறார்கள் என்றால் எப்பொழுதுமே ஜாவா தெரிந்தவர்களுக்கே டிமாண்ட் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆறு மாதத்திற்கு பிறகு டாட் நெட்டுக்கோ அல்லது ஆரக்கிளுக்கோ ஆட்களின் தேவை அதிகமாக இருக்கும். அதை மோப்பம் பிடிக்க வேண்டும். அதைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். ஆறு மாதங்களில் இந்தத் துறை தலையெடுக்கப் போகிறது என்று கணித்து அதை ஒழுங்காகப் படித்துத் தயாராக வேண்டும். இது முதலாவது வழி. கொஞ்சம் ரிஸ்க் அதிகம். நம் கணிப்பு தவறாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் குடி மூழ்கிப் போய்விடாது. ஆறு மாதத்தில் வேலைக்கு சேர்வதற்கு பதிலாக கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். அவ்வளவுதான்.

இரண்டாவது வழி ஒன்றும் இருக்கிறது. சில தொழில்நுட்பங்களைச் சொல்லித் தருவதற்கு ஆட்களே இருக்க மாட்டார்கள். ஆனால் நிறுவனங்களில் அந்த நுட்பங்களைத் தெரிந்த ஆட்களுக்கான தேவை இருக்கும். அப்படியான டென்கானலஜியைக் கண்டுபிடித்து அதைச் சொல்லித் தரும் பயிற்சி நிறுவனத்தையும் கண்டுபிடித்து படிக்கத் தொடங்க வேண்டும். ஓரளவுக்கு நம்பிக்கை வந்தவுடன் ஏதாவதொரு நிறுவனத்திற்குள் நுழைந்துவிடலாம். அருண் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தான். ஒரு புண்ணியவான் நிறுவனம் சென்னையில் அந்தப் படிப்பைச் சொல்லித் தந்து கொண்டிருந்தது. ஆறு மாதப் படிப்பு அது. காலையில் குளித்து தயாராகிச் சென்றால் மதியம் வரைக்கும் வகுப்பு நடக்கும். அதன் பிறகு வீட்டுக்கு வந்துவிடலாம். ஆனால் அருண் அங்கேயேதான் தவம் கிடந்தான். மதியத்திற்கு மேலாக அங்கிருந்த கணினிகளைப் பயன்படுத்தி பயிற்சி செய்யத் துவங்கினான். சில ப்ராஜக்ட்களை அவனாகவே செய்து கொண்டிருந்தான். ஆரம்பத்தில் திக்கித் திணறியவனுக்கு ஒரு சமயத்தில் அது பிடிபடத் தொடங்கியிருக்கிறது. இப்படியான நெருப்பு கனன்று கொண்டிருந்தால் எப்படியும் வேலையைப் பிடித்துவிடலாம். லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. 

ஒரு கன்சல்டன்ஸி நிறுவனத்தில் விவரங்களைக் கொடுத்து வைத்திருந்தான். அமெரிக்காவுக்கான H1 விசாக்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் நிறுவனம் அது. அருணுக்கு ஒரு வருட அனுபவம் இருப்பதாகச் சொல்லி விஸாவை வாங்கிவிட்டார்கள். அண்ணாமலை ரஜினியைப் போல வெற்றி அவ்வளவு சீக்கிரமாக ஒரே பாடலில் வந்து தோளில் விழுந்துவிடவில்லைதான். எதிர்ப்படுபவர்களின் கேள்விகள், அழுத்தங்கள், வீட்டில் காசு வாங்கும் கொடுமை என எல்லாப் பிரச்சினைகளையும் தாண்டித்தான் தயார் செய்தான். கடுமையான உழைப்பு அது. ஆனால் வெறும் உழைப்பு மட்டுமே நமக்கான இடங்களை பெற்றுத் தந்துவிடுவதில்லை. சரியான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பது அவசியம். எதை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்பொழுது செய்ய வேண்டும். அருண் செய்தான்.

பொறியியல் படித்துவிட்டு ஏதோவொரு துணிக்கடையில் கண்காணிப்பாளராக இருக்கும் ஆட்களும் இருக்கிறார்கள். சொற்ப சம்பளம். ‘வேலை தேடிப் பார்த்தேன்.  என்னதான் உருண்டாலும் ஒட்டுகிற மண்தானே ஒட்டும்’ என்று தத்துவம் பேசியபடி கிடைத்த வேலையில் சேர்கிறவர்கள் அவர்கள். இப்படியெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எந்தத் துறையிலும் வெற்றி தானாக வந்து சேராது. ஐடி துறையும் அதற்கான விதிவிலக்குகள் இல்லை. இனிமேல் ஐடி அவுட். அந்தத் துறையே காலி என்பதெல்லாம் லுலுலாயி பேச்சு. ஆட்களுக்கான தேவை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நம்மிடம் உள்ளே நுழைவதற்கான தகுதியும் திறமையும் தேவையான உழைப்பும் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

ஐடி நிறுவனங்களைப் பொறுத்த வரைக்கும் உள்ளே நுழைவது எளிமையான காரியம்தான். ஆனால் குறி வைத்து அடிக்க வேண்டும். மேற்சொன்ன இரண்டு வழிகள் மட்டும்தான் ஐடிதுறையில் நுழைவதற்கான நுழைவாயில்கள் இல்லை. ஆயிரத்தெட்டு வழிகள் இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் பெரும்பாலானவர்களுக்கு அந்த வழிகள் தெரிவதில்லை. முரட்டுவாக்கில் ஒரே கதவையே திரும்பத் திரும்பத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே கதவு எல்லோருக்கும் திறக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு கதவு திறக்கவில்லை என்றால் அந்தக் கதவை விட்டுவிட்டு அடுத்த கதவைத் தட்டுவதற்கு நமக்குத் தெரிய வேண்டும். அது மட்டும்தான் கை கொடுக்கும்.

6 எதிர் சப்தங்கள்:

Vijo said...

True!!! Pinringa Mani..

ADMIN said...

உண்மைதான் சார்.... ஒரு தூண்டில் இல்லேன்னா.. பத்து தூண்டில் போட்டு காத்திருக்க வேண்டியதுதான்... ஒன்னு இல்லேண்ணாலும் ஒன்னுல செமயா மாட்டிடும்....!

suresh p Thiruvarur said...

I completed B.E.cse at 2009 with 71% in Thiruvarur in Chennai I am tried all the interview. But I can't get the job. Still I working in not related to my degree.get only rs
10000. But all my friends getting married.and settled there in life

Unknown said...

Hi Mani

Good Points!

The students can also check the following website and blog.

http://careerdrill.com

Thanks
Siva

இரா.கதிர்வேல் said...

நிதர்சனமான உண்மை. படிக்கும் காலத்தில் மாணவர்களிடம் இருக்கும் திறமைகளையும், அவர்களின் ஆர்வம் எது என்று கண்டுபிடித்து ஊக்குவிக்கும் வேலையை ஆசிரியர்கள் செய்யாமல் விட்டுவிட்டு. இல்லாததையெல்லாம் காட்டி பயமுறுத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்சனையை நேரடியாக நான் எதிர்கொண்டிருக்கிறேன். நீங்கள் இதில் சொல்லியுள்ள விஷயங்கள் யாவும் எனக்கு 99% பொருந்தியே வருகிறது. காரணம் நான் படித்து முடித்து விட்டு இரண்டு வருடம் கழித்து சென்னைக்கு வந்து இப்போது Software Developer ஆக Python/Django தொழில்நுட்பத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கிறேன். அந்த இடைப்பட்ட காலங்களில் M.B.A தொலைதூர முறை மூலமாக படித்து முடித்தேன். பட்டமும் பெற்றுவிட்டேன். அதே காலத்தில் Linux, Python ஐ தீவிரமாக கற்றேன்.

//நெருப்பு கனன்று கொண்டிருந்தால் எப்படியும் வேலையைப் பிடித்துவிடலாம்.// அந்த இடைப்பட்ட காலத்தில் அந்த நெருப்பு கனன்று கொண்டிருந்தது என்னுள்.

Vinoth Subramanian said...

Inspirational!!!