Feb 1, 2016

நாயகிகள்

கடந்த வாரத்தில் ஒரு நாள் டோனி சான் வந்திருந்தார். மூடர் கூடம் படத்தின் ஒளிப்பதிவாளர். இப்பொழுது ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சென்னையில் அவரை முதன் முறையாகச் சந்திக்கும் போது நான் மூடர் கூடத்தின் நாயகி ஓவியாவின் தீவிர ரசிகனாக இருந்தேன். ‘ஓவியா நெம்பர் கிடைக்குமாங்க?’ என்று கேட்பதற்காகத்தான் அவரிடம் பேச்சுக் கொடுக்கவே ஆரம்பித்தேன். ஆனால்  எடுத்த உடனேயே கேட்க முடியாது என்பதால் டோனியின் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து அந்தப் படத்தை இன்னொரு முறை பார்த்தேன்.

ஒளிப்பதிவு பற்றி பேசுகிற அளவுக்கு நமக்கு அறிவு இல்லை என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ‘கேமராவை நெட்டுக்குத்தலா தொங்கவிட்டிருந்தா இந்தக் காட்சி உலகத் தரம் வாய்ந்ததாக மாறியிருக்கும்’ என்றோ ‘அந்த இண்டர்வெல்லுக்கு முந்தின ஸீன்ல கேமிரா கொஞ்சம் ஷேக் ஆச்சு பாருங்க...அதான் அல்டிமேட் குறியீடு’ என்றோ படம் ஓட்டலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் டோனியிடம் அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை. அவர் முறையாகக் கேமிரா குறித்துப் படித்துப் பட்டம் வாங்கியவர். ஒரு முறை முறைத்துவிட்டு ‘என்ன வேணும்?’ என்றார்.

இனிமேல் வளைத்து நெளித்து பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்து ‘ஓவியா நல்லா நடிப்பாங்களா?’ என்றேன். 

சிரித்துவிட்டு ‘நம்ம டார்கெட் உச்சாணியில் இருக்கணும்...நயன் தாரா நெம்பர் வாங்க ட்ரை பண்ணுங்க’ என்றார். தர முடியாது என்றால் நேரடியாகச் சொல்ல வேண்டியதுதானே? எப்படியெல்லாம் மூக்கை உடைக்கிறார்கள். 

நயன்தாராவை விகடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பார்த்தேன். ஓவர் அல்டாப்பு. நீல நிற பி.எம்.டபிள்யூ காரில் அவரோடு நான்கைந்து பேர்கள் வந்தார்கள். பின்னால் இன்னொரு வண்டியில் அவருக்கான உடைகள், மேக்கப் சாதனங்கள் வந்தன. மேக்கப்புக்கு மட்டும் அவ்வளவு பெரிய பெட்டி. வந்தவுடன் மேக்கப் அறைக்குள் சென்றார். நான் ஓடிச்சென்று முகத்தை அழுந்தக் கழுவி நான்கைந்து டிஷ்யூ காகிதத்தில் துடைத்துக் கொண்டு, சீப்பை வைத்து உச்சந்தலை முடியை நெற்றிக்கு இழுத்து வந்து நிறுத்தி கண்ணாடியைப் பார்த்து மெலிதாகச் சிரித்தபடியே ‘நீ அழகன்டா’ என்று சொல்லிக் கொண்டேன். நயன் வெளியில் வர முக்கால் மணி நேரம் ஆனது. பளிச்சென்று அவர் வெளியே வந்த போது மற்றவர்கள்தான் அவரைப் பார்த்தார்கள். மற்றவர்களை அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை. என்னை மட்டும் ஒன்றரை விநாடி பார்த்தார் என்று நான் சொன்னால் நீங்கள் நக்கலாகச் சிரிக்கக் கூடும். இருந்தாலும் நயன்தாரா வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன். 

டோனி பெங்களூர் வந்திருந்தார். சந்தித்தோம். அவரிடம் பேசுவதற்கு சுவாரசியமாக இருக்கும். எப்பொழுதும் நான்கைந்து கதைகளை மண்டைக்குள் வைத்திருப்பார். எல்லாவற்றையும் தலா ஐந்து நிமிடங்களுக்குச் சொல்வார். ஒவ்வொரு கதையையும் சொல்லிவிட்டும் நான்கைந்து படங்களின் பெயர்களைச் சொல்லி ‘இந்தப் படத்தை பார்த்திருக்கீங்களா?’ என்பார். அத்தனை படங்களை எங்கிருந்துதான் பார்த்தாரோ என்று ஆச்சரியமாக இருக்கும். படங்களின் பெயர்களைக் குறித்து வைத்துக் கொள்வேன். பார்க்கவில்லை என்று சொல்ல வெட்கப்பட்டு ‘ஓ பார்த்திருக்கேனே’ ‘இதை மூணு தடவை பார்த்தேன்’ என்று படம் ஓட்டிவிடுவேன். நம்பிக் கொள்வார். அடுத்த முறை பார்க்கும் போதும் வேறு நான்கைந்து கதைகளைச் சொல்வார். ஏதாவது ஒரு கதையைக் குறிப்பிட்டு ‘அது நல்லா இருக்கு’ என்று சொன்னால் அந்தக் கதையை மட்டும் காட்சிப்படுத்தி படமாக ஓட்டுவார். முழுமையாகச் சொல்லி முடிக்க எப்படியும் ஒன்றரை மணி நேரமாவது பிடிக்கும்.

தான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் முன்னோட்டத்தைக் காட்டினார். ‘என்கிட்ட காட்டவா இவ்வளவு தூரம் வந்தீங்க?’ என்றேன். ‘ஆமாம்’ என்று சொல்லி என்னைச் சந்தோஷப்படுத்தியிருக்கலாம். வீட்டில் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். ‘ச்சே...ச்சே’ என்று அவசரமாக மறுத்தார். இருந்தாலும் வீட்டில் அப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறேன். ‘நான் என்ன கரெக்‌ஷன் சொன்னாலும் செஞ்சுடுறதா சொல்லியிருக்காரு’ என்றேன். வீட்டில் நான் சொன்னதை நம்புவது போல பாவனை செய்தார்கள். அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்கும் தெரியும். எனக்குத் தெரியும் என்பது அவர்களுக்கும் தெரியும்.

சரி விடுங்கள்.

‘ஆமா இங்க எதுக்கு வந்தீங்க?’ என்று திரும்பக் கேட்டேன்.

‘ஒரு பத்து சதவீத ஷுட்டிங் பாக்கியிருக்கு...ஹீரோயின் உங்க ஊர்தான்..பெங்களூர்’ என்றார். 

‘அதுக்கென்ன நான் தமிழ் சொல்லிக் கொடுத்துடுறேன்’ என்று அவசரப்பட்டேன். எமி ஜாக்சனுக்கு பாரதி மணிதான் தமிழ் சொல்லிக் கொடுத்தாராம். அந்த மாதிரியான வரலாற்றுப் புகழை அடைவதற்கான தருணத்திற்காகக் காத்திருக்கிறேன். 

‘அந்தப் பொண்ணு தமிழ்தாங்க’ என்று பேச்சை முடித்துவிட்டார். அடுத்த விக்கெட்டும் காலி.

‘நான் வேணும்ன்னா வீட்டுக்கு போய் பார்த்துட்டு...எப்போ ஷூட்டிங் வர்றாங்கன்னு கேட்டுச் சொல்லுறேன்’ என்று வாய் வரைக்கும் வந்துவிட்டது. இனிமேல் நான் இருக்கும் பக்கமே திரும்பிக் கூட பார்க்க மாட்டாரோ என்று அமைதியாக இருந்து கொண்டேன்.

மூடர் கூடம் வெளியான பிறகு ஒளிப்பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய வந்திருக்கின்றன. இவர்தான் படம் இயக்குவதுதான் அடுத்த காரியம் என்று ஒற்றைக்காலில் நின்று இயக்கிக் கொண்டிருக்கிறார். ‘செட்டில் ஆகுறது பிரச்சினையே இல்லை...நாம நினைக்கிற இடத்தில் செட்டில் ஆகணும்...என்ன சொல்லுறீங்க?’ என்றார்.

என்ன சொல்வது? ஆசிரியர் ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். வீட்டில் சொன்னார்கள் என்று பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். எல்லோரும் மென்பொருள் துறைக்குச் சென்ற போது அதற்குள் செல்லக் கூடாது என்று விஜய் எலெக்ட்ரிக்கல்ஸில் சேர்ந்தேன். அங்கே சம்பளம் போதவில்லை என்று மென்பொருள் குட்டைக்குள் விழுந்தேன். இப்பொழுதும் வாழ்க்கை ஒன்றும் மோசமில்லைதான். ஆனால் ஆசிரியராக இருந்திருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. வேஷ்டியைக் கட்டிக் கொண்டு ஆறாம் வகுப்பிலோ ஏழாம் வகுப்பிலோ தமிழ் பாடம் நடத்திக் கொண்டு உள்ளூரிலேயே சுற்றித் திரிந்திருக்கலாம். அவசரம்தான். ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடி நிற்கிற கொக்கு பெரிய மீனாகக் கொத்துகிறது. ‘இதை விட்டுட்டா எதுவுமே கிடைக்காதோ என்னவோ?’ என்று பயப்படுகிற கொக்கு கிடைக்கிற மீனைக் கொத்துகிறது. நான் பயப்படுகிற கொக்கு. டோனி மாதிரியானவர்கள் வாடி நிற்கிற கொக்குகள். 

‘நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு வந்து நாயகியின் படத்தை ஃபேஸ்புக்கில் தேடி எடுத்துவிட்டேன்.

4 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

உங்களோட ஒவ்வொரு பதிவும், ஒரு டைரி குறிப்பு..!

Unknown said...

ஹீரோயின் பேர சொல்லலியேன்னு .. :D

Vinoth Subramanian said...

Humorous!!! So? it will be fine if you describe her in the next post. You say SHe's a Tamilian. She should be fascinated after your post and should give you friend request on face book.

Vinoth Subramanian said...

// நான் பயப்படுகிற கொக்கு.// I am your first follower in this matter.