Feb 10, 2016

மயில் குஞ்சு

‘ஸீன் பாத்துக்கு போலாம்’ என்று வேல் முருகன்தான் அழைப்பான். அசிங்கம் பிடித்த பொடியன்கள். எங்களைத்தான் சொல்கிறேன். பெண்கள் குளிக்கும் இடங்களுக்குச் சென்று குளிப்பதற்கு அவன் வைத்திருந்த பெயர் அது. பாவாடையை ஏற்றிக் கட்டி பெண்கள் குளித்துக் கொண்டிருப்பார்கள். அப்பொழுது எங்களுக்கு பதினைந்து வயதுக்குள்தான் இருக்கும் என்பதால் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்பாவித்தனத்துக்குள் வில்லத்தனத்தை ஒளித்து வைத்திருந்த கிராதர்கள் நாங்கள். 

வேல் முருகன் சூட்டிப்பானவன். சூட்டிப்பானவன் என்றால் அவனிடமிருந்து கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும். அதனாலேயே அவனுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும் எனத் தோன்றும். வசதியான குடும்பமெல்லாம் இல்லை. அவனுடைய அப்பா தனியார் பேருந்தில் ஓட்டுநராக இருந்தார். அந்தக் காலத்தில் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வந்திருந்தாலே பெரிய காரியம்தான். வாடகைக்குக் குடியிருந்தார்கள். வேல்முருகனுக்கு உடன் பிறந்தவர்கள் என்று யாருமில்லை. ஒற்றைப் பையன் என்பதால் அவனுடைய அம்மா தாங்கு தாங்கென்று தாங்குவார். உள்ளூர் அரசாங்கப்பள்ளியில்தான் படித்தான். எனக்குத் தெரிந்து அவன் தனிப்பயிற்சிக்குச் சென்றதில்லை. சாயந்திர நேரம் வீட்டுக்கு முன்னால் ஓடுகிற சாக்கடையின் திண்டு மீது புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருப்பான். அதற்கு மேல் அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதலிடம் வந்தான். கொண்டாடித் தீர்த்தார்கள்.

எல்லோரும் பதினோராம் வகுப்பில் சேரச் சொன்னார்கள். ‘அப்பாவுக்கு ஹெல்ப் பண்ணனும்டா’ என்று சொல்லிவிட்டு டிப்ளமோ சேர்ந்தான். அவனுடைய அப்பா வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி வேல்முருகனுக்கும் வேலை கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். முதலாம் ஆண்டு படிக்கும் வரை கொடுத்து வைத்த வாழ்க்கை. அளவான சம்பாத்தியம் என்றாலும் அவ்வளவு அழகான குடும்பம் அது. அவனுடைய அம்மாவுக்கு சர்க்கரை நோய் இருந்தது. அது முதல் வினை. பற்களில் வலி என்று மருத்துவத்துக்குச் சென்றார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு மேல் வரிசைப் பற்களில் கை வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் பற்களைப் பிடுங்கச் சொன்ன மருத்துவர் என்ன செய்தாரோ தெரியவில்லை- பிடுங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். ஒன்றிரண்டு நாட்களில் ஈறுகள் வீங்க ஆரம்பித்து முகமும் உப்பிய பின்னர் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். ஒரே நாள்தான். வெள்ளைத் துணியால் மூடி எடுத்து வந்தார்கள்.

முகமெல்லாம் வீங்கி குரூரமாக இருந்ததால் வெகு சீக்கிரமாக எடுத்துக் கொண்டு போய் எரித்துவிட்டு வந்தார்கள். வேல்முருகன் அழுது களைத்திருந்தான். வீட்டிற்கு முன்பாகவே வெகு நேரம் அமர்ந்திருந்தோம். அம்மாவை இழந்துவிட்ட நண்பனை எப்படித் தேற்றுவது என்கிற அனுபவம் எதுவுமில்லை. பெரும்பாலும் பேசிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தோம். அவனுடைய பாலிடெக்னிக் நண்பர்கள் வந்தார்கள். அப்பொழுது அழுது முடித்திருந்தான். ‘என்னடா ஊர் பேரு...கரட்டடிபாளையம்?’ என்றான் வந்திருந்தவர்களில் ஒருவன். சம்பந்தமேயில்லாமல் கேள்வி கேட்கிறான் என்று கடுப்பாகியிருந்தேன். வேல்முருகன் முகத்தைத் துடைத்துக் கொண்டு ‘கரடுக்கு அடியில் இருக்கிற பாளையம்டா..அங்க தெரியுது பாரு வெள்ளிமலைக்கரடு’ என்றான். அப்பொழுதுதான் எங்கள் ஊருக்கான அர்த்தத்தைத் தெரிந்து கொண்டேன். இப்படி ஒவ்வொரு முறை பேசும் போது ஏதாவதொரு திறப்பை மிக இயல்பாகத் திறந்து வைத்துக் கொண்டிருந்தான். அது எந்தத் தருணமாக இருந்தாலும் சரி.

அதன் பிறகு தினசரி காலையில் எழுந்து சமையல் செய்து வைத்துவிட்டு பாலிடெக்னிக் சென்று கொண்டிருந்தான். அவனுக்கும் அப்பாவுக்குமான சமையல். இரவிலும் சமையல் அவனுடையதுதான். விளையாட வருவதை நிறுத்தியிருந்தான். ‘படிக்கிற வேலை இருக்கு’ என்று எங்களிடம் சொல்லிவிடுவான். பையன்களும் அவனைத் தொந்தரவு செய்வதைக் குறைத்திருந்தார்கள். ‘ஸீன் பாத் போலாமாடா?’ என்ற கேள்வியும் கூட அப்படியேதான் திரும்பி வந்தது. அவனது அம்மாவின் இழப்பு வெகு சீக்கிரமாக அவனை விளையாட்டுப் பையன் என்கிற இடத்திலிருந்து பெயர்த்தெடுத்து பெரிய பையனாக்கியிருந்தது. 

ஊருக்குள் அவனுக்கென்று உருவாகியிருந்த பச்சாதாபமும் அதைவிடவும் அதிகமாக அவனது பொறுப்புணர்ச்சி மீதான ஆதரவும் பெருகியிருந்தது. ‘அவனை மாதிரி பொறுப்பா இரு’ என்று எங்கள் வீடுகளில் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். அதே சாக்கடைத் திண்டு மீது அமர்ந்து படிக்கும் வழக்கத்தை அவன் மாற்றியிருக்கவில்லை. லுங்கி, முண்டா பனியன், மேலே ஒரு துண்டு என அமர்ந்து படித்துக் கொண்டிருப்பான். முன்பு பார்க்கும் போது சிரித்த மாதிரியேதான் சிரிப்பான். ஆனால் உற்சாகம் குறைந்த சிரிப்பு அது. ‘எப்படி இருக்கிற?’ என்று கேட்டால் ‘அப்படியேதான் இருக்கிறேன்’ என்பான். அது சிரிப்பு வரவழைக்கிற பதிலாக இருந்தாலும் யோசிக்க வைக்கிற பதில். 

இடையில் சனி, ஞாயிறுகளில் அவனுடைய அப்பாவுடன் சேர்ந்து பேருந்து பட்டறைக்கு வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தான். அவர் பேருந்தை ஓட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார். இவனிடம் பராமரிப்புப் பணியைக் கொடுத்திருந்தார்கள். பனியனை அணிந்து கொண்டு வெள்ளை உடல் கருப்பாகும் வரைக்கும் வேலை செய்துவிட்டு மாலையில் இருவரும் வீடு வந்து இவன் சமைத்துக் கொடுப்பான். அவனுடைய அப்பாவும் தனது மனைவியின் இறப்புக்குப் பிறகு உற்சாகமிழந்திருந்தார். முன்பு போல எங்களிடமும் பேசுவதைக் குறைத்திருந்தார். எதிர்ப்படும் போது மெலிதாகச் சிரித்துக் கொள்வார். அதோடு சரி. 

இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஓடியிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று விளையாடிக் கொண்டிருந்தோம். பள்ளி மைதானத்திற்கு யாரோ ஓடி வந்து ‘வேல்முருகனுக்கு வலிப்பு வந்துவிட்டது’ என்றார்கள். விளையாட்டுச் சாமான்களை அப்படியே போட்டுவிட்டு ஓடினோம். அவனது வீட்டில் யாருமில்லை. எங்களுக்கு எதுவும் புரியவில்லை. வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது வலிப்பு வந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள். வாய்க்காலை நோக்கி ஓடினோம். அவனது உறவுக்காரப் பையன் ஒருவன் ஊருக்கு வந்திருக்கிறான். இருவரும் வாய்க்காலுக்குக் குளிக்கச் சென்ற போது வேல்முருகனுக்கு வலிப்பு வந்துவிட்டது. உறவுக்காரப் பையனால் தனியாக எதுவும் செய்ய முடியவில்லை. அவன் கத்திக் கதறியதைக் கேட்டு அருகிலிருந்த ஒன்றிரண்டு பேர் சேர்ந்து அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் தூக்கி போட்டு வந்தார்கள். நாங்கள் பாதித் தூரம் செல்லும் போது எங்களுக்கு எதிரில் ஆட்டோ வந்தது. வேல் முருகனின் கை மட்டும் வெளியில் தெரிந்தது. யாருடைய மடியிலோ தலையை வைத்துப் படுத்திருந்தான். ஆட்டோ நிற்காமலேயே சென்றது. கோபி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குச் செல்லலாம் என முடிவு செய்து வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

வீட்டிற்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே ஜன்னல் வழியாக சித்தப்பா அழைத்து ‘உன் ப்ரெண்டு செத்து போய்ட்டான்’ என்றார். அவர் அப்பொழுதுதான் அவனது உடல்த் திரும்பக் கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறார். அப்படியே மூச்சிரைக்க ஓடினேன். தகவல் தெரிந்து நண்பர்களும் வந்திருந்தார்கள். வேல்முருகனை நடு வீட்டில் கிடத்தி வைத்தார்கள். அவனுடைய அப்பா உடைந்து போய் பேயறைந்தாற் போல அமர்ந்திருந்தார். கூட்டம் நெருக்கிக் கொண்டிருந்தது.  யாரோ ஒரு பெண்மணி ‘மயில்குஞ்சு மாதிரி கிடக்குது’ என்றார். ஒரு நண்பனின் உடனடி இழப்பை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. கூட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் போலிருந்தது. அவன் அமர்ந்து படிக்கும் சாக்கடைத் திண்டக்கு வந்து நின்ற போது அவனது நீல நிற லுங்கியும், முண்டா பனியனும், துண்டும் கூடவே அவனது சிரிப்பும் ஞாபகத்துக்கு வந்தது. மனம் என்னையுமறியாமல் கரைந்து கொண்டிருந்தது.

(முந்தைய நாயகன் கட்டுரையில் இடம் பெற்ற வேல்முருகன்)

5 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

Time is 4 Am here.No sleep throughout. Just came to read something for time pass. Very depressed. I pray for that lonely man if he is still alive.

Jayavel Chakravarthy Srinivasan said...

Dont know wat to to say..

நெய்தல் மதி said...

விதி ஒருசிலரை மட்டும் விடாமல் துரத்துகிறது. பட்ட காலிலேயே திரும்ப திரும்ப படுகிறது. சுனாமியால் இறந்துபோன என் நண்பனின் நினைவோடு அழுகையும் வருகிறது.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

என்னுடைய மயில்..நான் உடைந்தது.என் கார்த்திக்
karthik amma
kalakarthik

Uma said...

ஓரு இழப்பின் செய்தி மனதில் உறைந்து கிடக்கும் ஒன்பது இழப்பு களின் இரணங்களைக் கீறி விடுகிறது.