Feb 1, 2016

பஞ்சர்

சமீபகாலத்தில் சற்றே வயதான கன்னடப் பெரியவர்கள் எங்கள் ஏரியாவில் புது பொழுதுபோக்கு ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு நீண்ட குச்சியை எடுத்துக் கொண்டு அதன் நுனியில் நீளவாக்கில் அல்லது உருளை வடிவில் ஒரு காந்தத்தை கட்டிக் கொண்டு அதைப் பிடித்தபடியே நடக்கிறார்கள்.  நடைப்பயிற்சி முடித்துவிட்டு ‘நம்மத்ர ஹாஃப் கேஜி’ ‘நம்மத்ர வொந்து கேஜி’ என்று பெருமை பேசுகிறார்கள். அவர்கள் அரைக்கிலோ என்றும் ஒரு கிலோ என்றும் பெருமை பேசுவது ஆணிகளின் எடை. எங்கள் பகுதியில் வேகத்தடை அல்லது குழாய் அமைப்பதற்காகத் தோண்டப்பட்டு அரைகுறையாக மூடப்பட்ட குழிகள் உள்ளிட்ட வண்டியின் வேகத்தைக் குறைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஆணிகளைக் கொண்டு வந்து கொட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். பெரும்பாலும் புத்தம் புதிய ஆணிகள். வண்டியின் வேகம் குறையும் போது ஆணி ஏறுவதற்கு வாகாக இருக்கும் என்பதால் இத்தகைய இடங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 

சில மாதங்களுக்கு முன்பாக ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் காவல்துறையினர் ஒரு மனிதனைக் கைது செய்தார்கள். அவனொரு தில்லாலங்கடி. ஒரு ஆட்டோவை வாடைக்கு பிடித்து அதை நடமாடும் பஞ்சர் கடையாக மாற்றி வைத்திருந்தான். ஆணியை தூவிவிட்டு காத்திருக்கும் போது இரைகள் வந்து விழத் தொடங்கின. காலையில் பத்து மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டியதாக இருக்கும். ஒன்பதே முக்காலுக்குத்தான் வண்டியைக் கிளப்புவார்கள். தெறி அவசரத்தில் இருக்கும் இத்தகைய மனிதர்களிடம் ‘ஒரு பஞ்சர் அடைக்க நூறு ரூபாய்’ என்று சொன்னாலும் வேறு வழியில்லாமல் தலையை ஆட்டுவார்கள். மகிழ்வுந்துக்காரர்களாக இருப்பின் இன்னமும் கூடுதல் தொகை கோரலாம். ஏகப்பட்ட பேர் அயோக்கியர்களாக இருக்கும் போது வசமாகச் சிக்குகிற ஒருவனை மட்டும் பிடித்து அமுக்கி ‘புடிச்சுட்டோம்..புடிச்சுட்டோம்’ என்று கத்துகிற மாதிரிதான் அந்த நடமாடும் பஞ்சர் கடைக்காரன் கைது.

நேற்று இன்னொருவனை பிடித்துவிட்டார்கள். பொடியன். பதினைந்து வயது கூட இருக்காது. இரவு நேரத்தில் பைக்கை ஓரமாக நிறுத்தி ஆணியைத் தூவிக் கொண்டிருந்தவனை ஒரு தெலுங்குவாலா ஓடி வந்து பிடித்துவிட்டார். அவர் சற்றே விவரமானவர் போலிருக்கிறது. பையன் ஆணிகளைத் தூவுவதை ஒரு நிமிட சலனப்படமாகவும் பதிவு செய்துவிட்டார். இப்படியான ஆட்கள் கிடைக்கும் போது நம்மவர்கள் விடுவார்களா? அடித்து நொறுக்கிவிட்டார்கள். இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் எங்களுக்குத் தெரியும். வெளியே கூட்டமாக இருக்கிறது என்று கிளம்பிச் சென்றால் வாயில் ரத்தம் ஒழுக அடித்திருந்தார்கள். ‘இவனை யாரு அனுப்பினாங்கன்னு சொல்லவே மாட்டேங்குறான்’ என்பதுதான் அவர்களின் அடிப்படையான குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் அதற்காக அவனை அடித்த விதம் குரூரமாக இருந்தது. கண்களுக்குக் கீழாக வீங்கியிருந்தது. காவல்துறைக்கு ஏற்கனவே தகவல் சொல்லியிருந்தார்கள். காவலர்கள் வருவதற்குள்ளாக அந்தப் பையனிடமிருந்து எவ்வளவு தகவல்களைக் கறக்க வேண்டுமோ அவ்வளவு தகவல்களைக் கறப்பதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

‘கூகிள் மேப்ஸ்ல நம்ம ஏரியாவை பஞ்சர் ஆகுற இடம்ன்னு குறிச்சு வெச்சிருக்கானுங்க’ என்று ஒரு மனிதர் பொங்கினார். அப்படிச் சொல்லிவிட்டு அந்தப் பொடியனை அடிக்க முயற்சித்தார். நமக்கு எப்பொழுதுமே மென் இலக்குகள்தான் லாயக்கு. சற்றே விவகாரமான இடம் என்றாலும் பம்மிவிடுவோம். ‘பாலித்தீன் பைகளை விற்கவே கூடாது’ என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். சில பெரும் தலைகளின் கடைகளில் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நட்டு வைத்த செடிகள் மீது ஆடுகளை மேய விடும் உள்ளூர் முரட்டு மேய்ப்பர்கள் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய மனிதர்களிடம் இந்த மென்பொருள் ஆசாமிகள் கண்ணசைவைக் கூட காண்பிக்க மாட்டார்கள். இந்தப் பையனால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்துவிட்டது. மனைவியிடம் கள்ளக்காதலியிடம் அலுவலகத்தில் மேலாளரிடம் இருக்கும் கோபத்தையெல்லாம் இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘நெசரு ஏனு?’

‘இஸ்மாயில்’

‘ஊரு?’

‘மெஹபூப் நகர்’

‘ஓ தெலுங்குவாலா?’

அந்தப் பையன் எதுவும் பேசவில்லை. அந்தப் பொடியன் எங்கே வேலை செய்கிறான் என்று கண்டுபிடிப்பது பெரிய காரியமில்லை. சுற்று வட்டாரத்தில் இரண்டு மூன்று பஞ்சர்கடைகள்தான் இருக்கின்றன. ஒரு முறை எனதும்இரு சக்கர வாகனம் பஞ்சர் ஆகியிருந்தது. பெங்களூரில் பஞ்சர் ஆனால் உயிரே போன மாதிரிதான். 

‘ட்யுப் போய்டுச்சு...மாத்தணும்’ என்பார்கள்.

‘எவ்வளவு ஆகும்?’ என்று கேட்டால் அவர்கள் சொல்வதுதான் விலை.

‘வேணும்னா நீங்க போய் ட்யூப் வாங்கிட்டு வாங்க’ என்றான். ஆனால் சுற்றுவட்டாரத்தில் ஒரு கடை இருக்காது. 

‘மங்கமன்பாளையாவில் கடை இருக்கு’ என்றான். ஆட்டோ பிடித்து அங்கே போய் வாங்கி வரும் செலவு, நேரம் உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு ‘கொஞ்சம் குறைச்சுக்குங்க ப்ளீஸ்’ என்று கெஞ்சிய பிறகு அவன் சொன்னவிலையிலிருந்து ஐம்பது ரூபாய் குறைத்தான். வேறு வழியே இல்லை.

இந்த ஊரில் வண்டி ஓட்டுகிற கிட்டத்தட்ட அத்தனை பேருக்கும் இது மாதிரியான அனுபவம் ஒன்றிரண்டாவது இருக்கும். அப்படியான அனுபவம் இல்லாதவர்கள் துரதிர்ஷ்டசாலிகள்தான். அந்தக் கடுப்பையெல்லாம் பையனிடம் காட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. சிறிது நேரத்தில் போலீஸ்காரர்கள் வந்தார்கள். கன்னடப் போலீஸ்காரர்கள் அவ்வளவு சீக்கிரமாக கை வைக்கமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் பொதுமக்களிடம் வசையை வாங்கிக் கட்டிக் கொள்கிற காவலர்களை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம்.

‘ஏனாயித்து’ என்றார். கதைகளை அளந்து சலனப்படத்தைக் காண்பித்தார்கள்.

‘சின்னப்பையன் சார்’ என்றார் ஒரு காவலர்.

‘அதுக்கு?’ என்று ஒருவர் எகிறினார்.

‘ஓனர் யாருன்னு கேளுங்க..அவனைப் பிடிங்க’ என்றார் அந்த எகிறல் பார்ட்டி. அதற்கு மேல் காவலர் எதுவும் சொல்லவில்லை. தங்களது பைக்கில் அந்தப் பையனை நடுவில் அமர வைத்து ‘யாராவது ஸ்டேஷனுக்கு வாங்க’ என்றார். ஆளாளுக்குத் தலையை ஆட்டினார்கள். 

‘புகார் கொடுக்க வர்றீங்களா?’ என்றார்கள். அந்தப் பையன் குற்றவாளிதான். ஆனால் இவர்கள் கொடுத்த தண்டனையே அதீதமானது எனத் தோன்றியது. ‘இல்ல சார்...’ என்றேன். ‘இவன் யாருடனும் சேரமாட்டான்...ஓரி’ என்று நினைத்திருக்கக் கூடும். நினைத்துவிட்டுப் போகட்டும். இவன் தண்டிக்கப்பட்டால் இனி வேறு யாரும் இந்தக் குற்றத்தைச் செய்ய மாட்டார்கள் என்று நம்பவில்லை. ஒருவேளை குறையக் கூடும். ஆனால் பதினைந்து வயதுப் பையன் மீது காவல்துறையில் புகார் அளித்து சிறையில் தள்ளி வழக்கு என்று அலைய வைத்து அவனது வாழ்க்கையின் சில காலத்தை கசங்கச் செய்வதில் எனக்கு விருப்பமில்லை.

ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு விதத்தில் குற்றவாளிதான். தெரிந்தோ தெரியாமலோ இன்னொரு மனிதனை அது பாதிக்கத்தான் செய்கிறது. ஆனால் நம்மிடம் ஒரு சால்ஜாப்பு இருக்கும். ‘அடுத்தவன் பாதிக்கப்படாம குற்றங்களைச் செய்தால் தப்பே இல்லை’ என்று சமாதானப்படுத்திக் கொள்வோம். அவரவருடைய அயோக்கியத்தனங்கள் அவரவருக்குத்தான் தெரியும். அடுத்தவனின் அயோக்கியத்தனம் வெளியே தெரியும் போது மற்ற அத்தனை பேரும் சேர்ந்து அவனைக் கும்மிவிட்டு நம்மை யோக்கியனாகக் காட்டிக் கொள்வதில் நம்மை அடித்துக் கொள்ளவே முடியாது.

பைக் கிளம்பியது. கூட்டம் கலையத் தொடங்கியது. அந்தப் பையன் வலியைப் பொறுத்துக் கொண்டு தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தான். 

5 எதிர் சப்தங்கள்:

நெய்தல் மதி said...

சொல்ல வந்ததை வெகு இயல்பாக சொல்லிவிட்டு செல்லும் மொழிநடை உங்களின் இடைவிடாத உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி.....வாழ்த்துக்கள்.!

சரவணன் சேகர் said...

யோசிக்க வச்சிட்டிங்க மணிபாய்... அருமையான பதிவு.

சேக்காளி said...

NTR said...

yes..nice 2 read ur pages..sir..awesome...

NTR said...

நெய்தல் மதி said...

சொல்ல வந்ததை வெகு இயல்பாக சொல்லிவிட்டு செல்லும் மொழிநடை உங்களின் இடைவிடாத உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி.....வாழ்த்துக்கள்.!

yes..i agreed...