Jan 12, 2016

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்பதை இவ்வளவு அவசரமான வழக்காக எடுத்து ஒரே நாளில் விசாரணையை முடித்து தடை செய்கிறோம் என்று தீர்ப்பெழுத வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை. ஜல்லிக்கட்டு என்பதை உணர்ச்சி பூர்வமான ஒரு சங்கதியாக முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. தேர்தல் சமயங்களில் இத்தகைய உணர்ச்சி விளையாட்டுக்கள் அரசியல்வாதிகளுக்கு அவசியமாக இருக்கின்றன. எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அரசியல் கட்சிகள் ஸ்கோர் செய்ய முயற்சிக்கத்தான் செய்வார்கள். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

அரசியல், வழக்கு, தேர்தல் என்பதெல்லாம் ஒரு பக்கம் என்றாலும் ஜல்லிக்கட்டை நம்முடைய அடையாளமாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன? ஒரு காலத்தில் பொழுதுபோக்கு அம்சமாக இருந்த ஜல்லிக்கட்டு பிறகு வீரத்தின் அடையாளம் என்பதாகவும், முரட்டுக்காளையை வளர்ப்பதே கெளரவம் என்பதாகவும், அதை அடக்குகிறவர்கள் வீரத் திருமகன்கள் என்பதாகவும் குறியீடாகவும் அடையாளமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தக் காலத்திலும் ஒரு காளையை அடக்கித்தான் நம்முடைய வீரத்தையும் ஆண்மையையும் காட்ட வேண்டியிருக்கிறதா? காளையை அடக்கித்தான் நம்முடைய திறமையை வெளிப்படுத்த வேண்டுமா? ஏறு தழுவுதல் இல்லையென்றால் நமக்கான பொழுது போக்குக்கு வேறு வழியே இல்லையா?

ஜல்லிக்கட்டுக்கான அனுமதி என்பது நாட்டு மாடுகள், இயற்கை விவசாயம் குறித்தான ஒரு விழிப்புணர்வை உருவாக்குவதற்கான குறியீடு என்றெல்லாம் எழுதி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்துவதால் நாட்டு மாடுகள் பெருகும் என்பதாக இருந்தால் எந்தக் காலத்திலேயோ பெருகியிருக்க வேண்டும். இயற்கை விவசாயம் தழைத்தோங்கியிருக்கும். இனம், மொழி, அரசியல் உள்ளிட்ட மனச்சாய்வுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஜல்லிக்கட்டு தேவையா என்று யோசித்துப் பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டு நடத்தித்தான் நம்முடைய கலாச்சாரத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. டாஸ்மாக்கும், அளவற்ற குடியும் சமூக அடையாளங்களாகிப் போன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சர்வசாதாரணமாக அடுத்த மனிதனைக் கொன்று வீசிவிட்டுப் போகிற ரத்தக் கறை படிந்த சூழலில் நம்முடைய் பிழைப்புத்தனம் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் நம்முடைய அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அற்பத்தனமான சினிமா மோகம், குடி, அசிரத்தையான மனநிலை எனச் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையைச் ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கிறது. நம் கண் முன்னால் நிகழக் கூடிய சமூக அவலங்களை நோக்கி குறைந்தபட்சமான கேள்விகளையாவது கேட்கும் சுரணையுள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு குடல் சரிந்தும், முகம் கிழிந்தும் போகும் சிலரை வாழ்க்கையின் இருண்டகாலத்திற்கு தள்ளிவிடுவதற்காக ஜல்லிக்கட்டை நடத்தப் போகிறோம். இல்லையா?

இன்னொரு சாராரைப் போல ஜல்லிக்கட்டை கலாச்சாரத்துடன் எல்லாம் இணைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நிரந்தரமான கலாச்சாரம், பண்பாட்டு அடையாளங்கள் என்பதெல்லாம் எதுவுமில்லை. காலம் மாறும் போது சமூகத்தின் செளகரியத்திற்கு ஏற்ப இவையெல்லாம் மாறிக் கொண்டேதான் இருக்கும். கடந்த இரண்டாயிரம் வருடங்களில் நம்முடைய உடைகள் மாறியிருக்கின்றன. திருமண முறைகள், சடங்குகள். சம்பிரதாயங்கள் என எல்லாமும் மாறியிருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பாகச் செல்ல வேண்டியதில்லை- நூறாண்டுகளுக்கு முன்பான சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் இன்னமும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோமா? ஐம்பதாண்டுகளுக்கு முன்பான உணவுப் பழக்கத்தைத்தான் இன்னமும் தொடர்கிறோமோ? எல்லாமே நெகிழ்ந்தும் வளைந்தும் உருமாறியும் போவதுதான் இயல்பானது. இன்னும் பத்து வருடங்களில் நம்முடைய பண்பாடு என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய விஷயங்களில் புதியன உள்ளே புகுந்திருக்கும். இப்பொழுது இருப்பவை உருமாறியிருக்கும். அதுதான் இயற்கையின் நியதியும் கூட. எல்லாவற்றையும் வறட்டுத்தனமாக பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 

மிருகவதை என்பதெல்லாம் இருக்கட்டும். கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டுகளில் இறந்து போன குடும்பங்களின் நிலைமை என்னவாகியிருக்கிறது? ‘ஜல்லிக்கட்டை நடத்துவோம்’ என்கிற போராளிகளில் எத்தனை பேர் இந்தக் குடும்பங்களில் வெளிச்சம் ஏற்றுகிறார்கள்? வெளியிலிருந்து பார்க்கும் போது ‘நாலு பேர்தான் செத்துப் போனாங்க’ என்பது சர்வசாதாரணமாக இருக்கலாம். ஆனால் அந்த நான்கு குடும்பங்களின் வலியை அந்த நான்கு குடும்பங்களால் மட்டும்தான் உணர முடியும். வெறியேற்றுவதும், உசுப்பேற்றுவதும் விவேகம் இல்லை. ஐந்தறிவு கொண்ட வெறியேற்றப்பட்ட விலங்கை விரட்டிப் பிடிப்பது வீரமும் இல்லை. இப்படி உசுப்பேற்றுபவர்கள் யாரும் அலங்காநல்லூரில் களம் இறங்கப் போவதில்லை அல்லது தனது மகனிடம் ‘இதுதான் ஆண்மை. போய் மாட்டைப் பிடி’ என்று வழியனுப்பப் போவதில்லை. சாகிறவன் சாமானியன். அகப்படப் போகிறவர்கள் அப்பாவிக் குடும்பத்தினர்.

ஃபேஸ்புக்கையும், நியூஸ் சேனல்களையும் பார்த்துவிட்டு எல்லாவற்றையும் உணர்ச்சிகரமாக அணுகிக் கொண்டிருக்கிறோம். சாலையில் போகும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் செத்துப் போகிறார்கள். பெயர் தெரியாத நோய் பீடித்து உயிரை விடுகிறார்கள். அணுக்கழிவு, வேதிப்பொருட்கள், சுற்றுச் சூழல் என்று இந்த உலகை ஒவ்வொரு நாளும் பாதுகாப்பற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலுமிருந்து நம் அடுத்த தலைமுறையை எப்படிப் பாதுகாப்பது என்பதை யோசிக்க வேண்டிய தருணத்தில் இருந்து கொண்டு அபாயகரமான செயல்களை ஆதரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஜனவரிக்கு ஜனவரி ‘ஜல்லிக்கட்டை நடத்துவோம்’ என்பதும் ‘மாடுகளை வதைக்காதீர்கள்’ என்பது அபத்தமான நாடகத்தின் இருவேறு காட்சிகளாக பல்லிளிக்கின்றன.

இந்தப் பல்லிளிப்புகளுக்கிடையில் நீதிமன்றங்களின் அவசரத் தலையீடுகள், தேர்தல் வாக்கு அரசியலுக்காக கையில் எடுக்கப்படும் வாதங்கள், ‘எங்களால்தான் இது’ என்கிற வறட்டு கோஷங்கள் எல்லாம் வெகுவாகக் குழம்பச் செய்கின்றன. பெட்டா போன்ற அமைப்புகளின் அரசியல் பற்றி தனியாகப் பேசலாம். பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு அவசியம்தானா? இப்படிக் குழம்புவதும் இரண்டு நாட்களில் அடுத்தவொரு உணர்ச்சிகரமான சம்பவத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போராளியாக உருவெடுப்பதும் நம்முடைய தினசரிக் கடமைகளில் ஒன்றாகிக் கொண்டிருக்கிறது. பல் துலக்குகிறோமோ இல்லையோ- போராளி ஆகிவிடுகிறோம்.

20 எதிர் சப்தங்கள்:

Srinivasan said...

எனக்குத் தெரிந்த இரண்டு இளவட்டங்கள், போதையில் காளையை அடக்கச் சென்று குடல் கிழிந்து செத்தார்கள். ஒருவர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பல அறுவை சிகிச்சைகளுக்கும் பிறகு இன்றும் சிக்கலான குடல் பிரச்சனையால் தவிக்கிறார். செத்துப்போன அந்த இரு நபர்களின் ஒருவரின் குடும்பம் இன்னும் பொருளாதார நிலையில் சிதைந்தே இருக்கிறது. ஒரு காளையை ஒரு கும்பல் விரட்டி விரட்டி அடக்குவதில் என்ன வீரம் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு காளைக்கும் ஒரு மனிதனுக்கும் ஒத்தைக்கு ஒத்தை என்று இருந்தால் ஒருவேளை சரியான போட்டியாக இருக்கலாம். உண்மையிலே இவர்களின் வீரத்தினை காட்டவேண்டும் என்றால், புலி அடக்குதல் என்பது போல வீர விளையாட்டுக்கள் இருக்கவேண்டும். புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண் வாழ்ந்த தமிழகம் தானே!

Name : Rajesh RV said...

Sensible writing

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

‘ஜல்லிக்கட்டை நடத்துவோம்’ என்பதும் ‘மாடுகளை வதைக்காதீர்கள்’ என்பது அபத்தமான நாடகத்தின் இருவேறு காட்சிகளாக பல்லிளிக்கின்றன.//உண்மை

SIV said...

சரியாக கூறினீர்கள்..
இவரும் அதேதான் சொல்றார்..
https://mathimaran.wordpress.com/2016/01/05/madu-1192/

https://mathimaran.wordpress.com/2016/01/08/tamil-culture-1195/

SVD Color Prints said...

PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா. அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
அதிர்ச்சி அடைய வேண்டாம்...
35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!
இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...
நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
கொம்பைப் பிடிக்கிறாய்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!
அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!
'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!

kamalakkannan said...

ஜல்லிக்கட்டு பத்தி எதாவது எழுதனும்னு சொத்தையா எழுதியது போல இருக்கு

Siva said...

நல்ல பதிவு மணி அண்ணா . Svd color கூறிய புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது

Gurunathan Sivaraman said...

"எல்லாத்தையும் மறந்து தடம் மாறி போயி நாசமா போயிட்டோம்.
இனி எக்கேடு கேட்டு போனால் என்ன!" என்கிற தோனியில் இருக்குது உங்களின் பதிவு.
ஒருவித மேட்டுக்குடி மனப்பான்மையின் வெளிப்பாடு என்று கூட சொல்லலாம்.
பெட்டா அமைப்பு போலவே பேசுகிறீர்கள்.
போராட்ட குணத்தினை மழுங்கடிக்கும் ரகத்தில் உள்ளது சில வார்த்தைகள் .

அது போக எல்லா பிரச்சினைகளையும் முடிச்சு போட்டு கவனத்தை வேறு எங்கேயோ திசை திருப்புகிறீர்கள்.

இந்தப் பிரச்சினைக்கு முன்வருகிறவர்கள் இனி அனைத்து பிரச்சினைகளுக்கும் முன் வருவார்கள் என்கிற பாசிடிவ் எண்ணத்துடன் பார்க்கலாமே!

Elango said...

சாரு நிவேதிதா அப்துல்கலாம் பற்றி எழுதியதற்கும் நீங்கள் ஜல்லிகட்டை பற்றி எழுதி இருபதற்கும் வித்தியாசம் இல்லை.

Unknown said...

தொலைகாட்சி மற்றும் இணையதள பொங்கல் என்று ஆகிவிட்ட பிறகு , எதற்கு ஜல்லி கட்டு என்னும் ஆபத்தான விளையாட்டு, ஆர்வகோளாரில் அடுத்தவன் சாகிறான், கைதட்டி மகிழ்கிறோம் ..

அதையும் GOOGLE APPLICATION கேம் ல விளையாடிவிட்டு போயிரலாமே!

செல்வம் said...

ஜல்லிக்கட்டு எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் காரணங்கள் மிருக வதை, காளை மற்றும் மனிதனுக்கு ஏற்ப்படும் தீங்கு, சாதி . ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் காரணங்கள் கலாச்சாரம், காளை இன பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம். கூட்டி கழித்து பார்த்தால், முறை படுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு தேவை என்றே தோன்றுகிறது. அதற்கு இது போன்ற எதிர்ப்புகள், தடை என்ற பயமுறுத்தல் போன்றவை சரியே. ஆயினும் இறுதியில் ஜல்லிக்கட்டு நிகழ்வு தொடர வேண்டும் என்றே விரும்புகிறேன்.

saravanan said...

நாட்டு மாடுகள் பெருகும் என்பதாக இருந்தால் எந்தக் காலத்திலேயோ பெருகியிருக்க வேண்டும். இயற்கை விவசாயம் தழைத்தோங்கியிருக்கும்.

அது குறித்த புரிதல் இப்பொது தான் வந்திருக்கிறது. அதனால் தான் இருக்கும் நாட்டு மாடு இனங்கள் அழிந்து விட கூடாது என்பதற்காக இளைய தலைமுறை ஆதரிக்கிறது.

Saravanan said...

Dear Mani, totally disappointed with this article...

ஊரான் said...

"நிரந்தரமான கலாச்சாரம், பண்பாட்டு அடையாளங்கள் என்பதெல்லாம் எதுவுமில்லை. காலம் மாறும் போது சமூகத்தின் செளகரியத்திற்கு ஏற்ப இவையெல்லாம் மாறிக் கொண்டேதான் இருக்கும்."

Vinoth Subramanian said...

Million likes for this post sir!!! Wonderfully said. I read the reflection of my thought. I agree with this article. Even I hate this competition. People are emotional. They have no issues on others death and their deserted families. I support Depak Mishra's judgment. I hate jallikattu, I hate jallikattu, I wholeheartedly hate this jallikattu.

Anonymous said...

This article is not suitable to you. Better maintain the cattles and rewrite the article. I know you will not worry about few black remarks but you should mind it.

Anonymous said...

ஜல்லிக்கட்டை ஆதரிப்பவன் அல்ல அதேசமயம் இதற்க்கு எதிராக போர்கொடி பிடிப்பவர்களை கொஞ்சம் உற்றுநோக்க வேண்டும். இவர்கள் காளை விரும்பிகளோ,அல்லது அதை நேசித்து வளர்த்தவர்களோ அல்ல ஆனால் இவர்கள் ஏன் இந்த காளைக்கு மட்டும் போர்கொடி பிடிக்கிறார்கள்... கோயிலில் சங்கலியால் வதைபடும் ஆனை ,கேரளாவில் யானைகளை வைத்து நடத்தபடும் தொழில் , திருவிழாக்கள் மேலும் காட்டுமிருகங்களின் வழிதடத்தை அக்கிரமித்திருக்கும் ஆன்மிக வாதிகள் இவர்களின் பார்வையில் படவில்லையா..... அங்குதான் இவர்களின் உள்ளே இருக்கும் குள்ள நரிதனம் எட்டி பார்கிறது

Anonymous said...

Never expected this kind of article from nisaptham.

ADMIN said...

///குடல் சரிந்தும், முகம் கிழிந்தும் போகும் சிலரை வாழ்க்கையின் இருண்டகாலத்திற்கு தள்ளிவிடுவதற்காக ஜல்லிக்கட்டை நடத்தப் போகிறோம். இல்லையா?///

உண்மை. ஆபத்து என தெரிந்தும் அதில் கலந்து கொண்டு உயிரை விடும் வீரர்களின் குடும்ப நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும். அக்காலத்தில் வீரத்தை வெளிக்காட்ட, அவர்களுக்குத் தெரிந்த விளையாட்டுகளை , அக்காலச் சூழலுக்கு ஏற்ப விளையாடினார்கள். வீரத்தை வெளிப் படுத்தினார்கள். அதற்கேற்ற உணவு, உடல்வாகு,அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை அப்போது இருந்தது. இது இயந்திர உலகம். காலச் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது அவசியம். கண்மூடித்தனமாக அனைத்தையும் தொடர்வது சரியாகாது.

நல்லதொரு கட்டுரை.. வாழ்த்துகள் மணிகண்டன் சார். !

Anonymous said...

Hello Sir,

Why no analysis abt PETA? or the cruel endings of culture?
Very disappoinnting article...