Jan 11, 2016

போட்டி

ஜனவரியில் நடக்கவிருந்த புத்தகக் கண்காட்சிக்காக அறிவிக்கப்பட்ட போட்டி இது. பிறகு சென்னை மற்றும் கடலூர் மழை வெள்ளத்தின் காரணமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டுவிட்டது. 

போட்டிக்காக தங்களுக்கு விருப்பமான நாவல் குறித்தான விமர்சனக் குறிப்பை அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைப் போட்டி என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு விளையாட்டு. யார் வேண்டுமானாலும் எழுதிப் பார்ப்பதற்கான வாய்ப்பு.  முதற்கட்டமாக தங்கிலீஷ், ஆங்கிலத்தில் வந்த குறிப்புகள் நிராகரிக்கப்பட்டன. மிகச் சிறியதாக - ஒன்று அல்லது இரண்டு வரிகளில் எழுதப்பட்ட குறிப்புகளும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. 

மீதமிருக்கும் பதின்மூன்று விமர்சனக் குறிப்புகளில் சிறந்த பத்து விமர்சனங்களை வலது பக்கமாக இருக்கும் சர்வேயில் வாக்களிப்பதன் வழியாகத் தேர்ந்தெடுக்கலாம். வெள்ளிக்கிழமை (15 ஜனவரி 2015) வரைக்கும் கால அவகாசம் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் பத்து விமர்சனங்களை எழுதியவர்களுக்கு ‘மூன்றாம் நதி’ நாவல் அனுப்பி வைக்கப்பட்டுவிடும். பதின்மூன்று குறிப்புகளுக்கும் வாக்களித்து மண்டை காய விடாமல் காப்பாற்றவும்.

பத்து பிரதிகளுக்கான பணத்தை சரவணபாபு அளித்திருக்கிறார். ஒவ்வொரு புத்தகம் வெளியாகும் போது முதல் பத்து பிரதிகளுக்கான நன்கொடையை அனுப்பி வைத்து போணியை ஆரம்பித்து வைக்கிறார். இன்னமும் முப்பது பிரதிகளுக்கான நன்கொடையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். எனவே குறைந்தபட்சம் இன்னமும் மூன்று போட்டிகள் உண்டு.

நன்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். விடப் போவதில்லை. ஒரு கை பார்த்துவிடலாம்.
       

                                                                       (1)

பாப்பிலோன் - ரா.கி.ரங்கராஜன்

பாப்பிலோன் என்ற கிட்டதட்ட உண்மை சரிதம் போன்ற நாவலை ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மொழிபெயர்த்தார். 

என் இருபத்தைந்தாவது வயதில் என் வேலைக்குபோக விருப்பம் இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்தபோது, என் தந்தை எனக்களித்த ஒரு பொக்கிஷம். இன்றும் நான் பாதுகாத்து வரும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. அந்நாவலில் பட்டாம்பூச்சி என்ற பட்டப்பெயருடன் வரும் நம் கதாநாயகன், நம் ஊர் திரைநாயகன் போல் ஜெயிப்பதற்கு மட்டுமே பிறந்தவன் இல்லை. செய்யாத குற்றத்திற்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான போராட்டங்களே பல நூறு பக்கங்களில் நாவலாக விரித்தெடுத்துள்ளார். 

அதில் எனக்குப் பிடித்த பகுதிகள் இரண்டு.

1. முதல் முறை தனிமைச் சிறையை சமாளித்த விதம். குறிப்பாக, தினமும் அரை மூடித் தேங்காய் மட்டுமே சாப்பாடாக, அதுவும் கடைசி ஆறு மாதங்களுக்கு இல்லை. அதை சமாளித்த மனத் தைரியம்.

2. லாலி மற்றும் சொரைமா உடனான அந்த வாழ்க்கை. சிப்பிகளை தின்பது, மீனை சுட்டுத் தின்பது. தூளியில் உறங்குவது. அந்தப் பகுதி தலைவனுக்கு பச்சை குத்துவது.

ஒவ்வொரு முறை படிக்கும்போதும், ஒரு புதிய தகவல் அதில் எனக்கு கிடைக்கிறது. எத்தனை முறை சிக்கினாலும் நான் தப்பித்து செல்ல முயற்சிப்பேன் என்ற எண்ணம். அதிலும்  மாட்டிக்கொண்டால் உடன் இருப்பவனை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்ற கண்ணியம். அந்நாவலில் உணர்ந்துகொள்ள ஏராளமான இடங்கள் உள்ளன.  

இதோ மழை பெய்து கொண்டிருக்கும் இந்த மதிய வேளையில், நேற்று(30-11-2015) இரவு பத்து மணியளவில் துவங்கிய மழை இதுவரை(01-12-2015, 2.00 மணி) தேநீர் இடைவேளை கூட விடாமல் பெய்து  கொண்டிருக்கிறது. இதே போன்ற ஒரு 2005 நவம்பர் மழையில் சென்னையில் உணவுக்கு வழியில்லாமல் ஒரு உணவகமும் கிடைக்காமல் வெறும் பார்லே பிஸ்கட் பாக்கெட்களும் சிகரெட்களையும் வைத்து நான்கு நாட்களை சமாளித்த போதுதான், பட்டாம்பூச்சியின் தனிமைச்சிறை கோரம் புரிந்தது.

படிப்பவர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தரவல்ல நாவல் - பட்டாம்பூச்சி, தமிழ் மொழிபெயர்ப்பு- ரா.கி. ரங்கராஜன்

(குறிப்பு: ‘பட்டாம்பூச்சி’ புத்தகம் ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறை கைதியால் பாப்பிலோன் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது. தமிழில் திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்களால் மொழி பெயர்க்கபட்டு ‘பட்டாம்பூச்சி’ என்ற பெயரில் 1970 - களில் தொடராக குமுதத்தில் வெளிவந்தது)

​எழிலனின் தந்தை சிவக்குமரன்.

                                                                        (2) 

எங்கதெ - இமையம்

ஆண் பெண் உறவின் மாயா விநோதங்களை நிகழ்த்தும் நாவல்கள் தமிழுக்கு புதிதல்ல என்றாலும் இமையத்தின் “எங்கதெ” அந்த மாயாவிநோதங்களின் மறுசுழல். ஒருவனின் முப்பத்து மூன்று வயதில் ஆரம்பித்து நாற்பத்து மூன்று வயதில் முடியும் இக்காதல் ஏன்? எதுவரை? என்று எல்லையற்ற பெருவெளில் காதல் நிகழ்த்தும் அற்புதங்களையும் அவலட்சணங்களையும் ஒரு முனையில் குவிக்கிறது இந்த நாவல்.

காதல் எப்படி அவலட்சணமாகும்? இரண்டு பெண்குழந்தைகளுக்கு தாயான விதவைப் பெண் கமலாவின் மீது வேலையற்ற விநாயகம் கொள்ளும் காதல், திருமணம் செய்து கொள்ளாமலேயே அவர்கள் வாழும் வாழ்க்கை,அந்த வாழ்வின் மீது அலைபாயும் ஊர்க் கண்கள், உறவுகளின் பதைப்பு,அருகிலிருந்தும் அவள் அவனுக்கு உடல் ரீதியாகக் கிடைத்த போதும் மன வெளியில் அவனுக்கும் அவளுக்கும் இருக்கும் செப்பனிட முடியாதூரம் நிகழ்த்தும் மனக் குமைச்சல். அறிமுகம், பழக்கம், நெருக்கம் என்று வாழும் அவர்களுக்கிடையே சந்தடியியில்லாமல் நழுவும் வருடங்கள்.அவர்கள் உறவை அங்கீகரிக்கப் பட்ட உறவாக அறிவிக்க கூசும் அவள் மனத்தடை. யாருமற்ற அவளுக்கு கிடைக்கும் அவன் உறவு, அது தரும் பலம்.அந்த ஆதாரம் பற்றிக் கொண்டு அவள் பலமாய் வாழ்வில் வேர் ஊன்றி,இப்படித்தான் அவள் இதுதான் அவள் என்று அவனால் எண்ணவொட்டாத ஒரு படைப்பாய் இருப்பதும்,அவளைக் கண்டடையும் முயற்சியில் தோற்று, அவளைக் கொல்ல முயன்று மனமில்லாமல் அதே காதலுடன் அவளைப் பிரிந்து செல்வதும், தமிழ் நாவல்களில் ஒரு புதிய நடை,அது நிகழும் காலகட்டம் நாவலுக்கு பெரும் பலம். நான் படித்த சமீபத்திய வருட நாவல்களில் மிக முக்கியமான நாவல்.

என்.ஜெகநாதன். 


                                                                   (3)

துளசிதளம் - எண்டமூரி வீரேந்திரநாத்

‘துளசிதளம்' எண்டமூரி வீரேந்திரநாத்தின் மாஸ்டர் பீஸ்களில் தலையாயது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ‘சாவி' இதழில் எ.மூ.வீ.நாத்தின் ஆந்திர மூலம் சுசீலா கனகதர்கா என்பவரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்தபோது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் அந்தத் தொடர்கதையின் இறுதிப்பகுதி Abrubt ஆக முடிந்தது போலத் தோன்றியது. ஸ்ரீனிவாச பிள்ளை என்பவன்தான் குற்றவாளி என்று ஒரு வரி வரும். யார் அந்த ஸ்ரீனிவாச பிள்ளை? துளசி பிழைத்தபின் என்ன நடந்தது என்கிற விடைதெரியாத கேள்விகள் இருந்தன. பின்னர் புத்தகமாக்கப்பட்ட போதும் அப்படியே. 

இப்போது கௌரி கிருபாநந்தன் என்பவர் எ.மூ.வீ.நாத்தின் நாவல்களை மொழிபெயர்த்து வருகிறார். அவருடன் பழக்கம் உண்டு என என் வாசகி சமீரா சொன்னபோது சமீராவிடம், அந்தப் பரபர நாவலின் க்ளைமாக்ஸைப் படிக்காத வருத்தத்தை வெளியிட்டேன். இப்போது கௌரி கிருபாநந்தன் முழுமையாக மொழிபெயர்த்து அல்லயன்ஸ் வெளியீடாக வந்திருக்கும் துளசிதளம் என் குறையை நீக்கியது. ஒரு நாவல் குறையுடனேயே வெளிவந்து 20 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்பட்ட பதிப்பு இப்போது வந்துள்ளது என்பது வெகு வியப்பான விஷயம்.

விஞ்ஞானமா, பைசாசமா என்கிற கேள்வியை எழுப்பிய ஒரு பரபரப்பு த்ரில்லரை நம்ம சுஜாதா ‘கொலையுதிர் காலம்’ ஆக எழுதியிருக்கிறார். தமிழில் சுஜாதா கையாண்ட விஷயம் ஒருவிதமான சுவாரஸ்யம் என்றால் இந்த ஆந்திர சுஜாதா வேறு ஒரு கோணத்தில் அதைக் கையாண்டு அசத்துகிறார். ஆயின் இரு எழுத்தாளர்களுமே கடைசியில் எதனால் குற்றம் நிகழ்ந்தது என்பதற்கான விளக்கத்தை வாசகர்கள் அவரவர் மனப்போக்கின்படி தீர்மானிக்கட்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக செயல்பட்டிருக்கிறார்கள்.

‘துளசிதளம்’ கதையில் ஒருபுறம் 1ம் நாள், 2ம் நாள் என்று துவங்கி 21ம் நாள் வரவும் ஸ்ரீதர் மகளுக்காகப் போராடுவதை மணிக் கணக்காக நம் முன் விவரித்து, இங்கே அதேபோல ஜெயதேவ் போராடுவதையும் மணி, நிமிட சுத்தமக விவரித்து, மூன்றாவது ட்ராக்காக எப்படி புத்திசாலித்தனமாக மாரியை நாராயணன் கொல்கிறான் என்பதை விவரித்து, மும்முனை சுவாரஸ்யத்தில் டோட்டலாக படிப்பவருக்கு பி.பி.யை எகிற வைத்து விடுகிறார் எ.மூ.வீ.நாத். ‘கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத நாவல்’ என்கிற வாசகத்தை பெயரளவுக்குச் சொல்லாமல் அசலாக மெய்ப்பிக்கும் புத்தகம்.

இதில் என்னைக் கவர்ந்த அம்சம் என்னவெனில்... நூலாசிரியர் தரும் தகவல்கள். பூத, பைசாச வித்தைகள் மூலம் சிறுமியை அழிக்க முற்படுகிறார்கள் எனில், அதற்காக மந்திரவாதிகள் மேற்கொள்ள வேண்டிய நியமங்கள், கஷ்டங்கள் போன்ற விவரங்களை ஏதோ மந்திரவாதிகளுடன் பலஆண்டு பழகியவர் போல அள்ளித் தந்திருக்கிறார். அதேசமயம், விஞ்ஞான ரீதியாக வேறொரு இடத்திலிருந்து குழந்தையை மெஸ்மெரிசம் செய்து எப்படி அட்டாக் பண்ண முடியும் என்பதற்கான விளக்கம் (படமே போட்டு) தெளிவாகத் தந்திருக்கிறார். அசத்துகிறது அந்த உழைப்பு!

இந்தக் கதை தொடராக வெளிவந்த காலத்தில் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டதாம். எந்த அளவுக்கு என்றால்... யாராவது சாதாரணமாக உடம்பு முடியாமல் படுத்தால் கூட ‘எனக்கு சூனியம் வெச்சுட்டாங்க’ என்று பயந்து நடுங்கும் அளவுக்கு. ஆசிரியருக்கு நிறைய மிரட்டல்களும், வினோத பார்சல்களும் வந்தனவாம். இத்தனைக்கும் பின்னர் ‘பதினோரு ஆண்டுகளுக்குப் பின் காஷ்மோரா மீண்டும் விழித்துக் கொள்வதோடு அடுத்த நாவலான மீண்டும் துளசி துவங்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். (நல்லவேளை... அந்த இரண்டாம் பாகத்தையும் வாங்கிவந்து விட்டேன்.) அதைப் படிக்க நான் புறப்படுகிறேன். இதுவரை துளசிதளம் படிக்காதவர் நீங்கள் எனில், உடனே அதைத் தேடிப் பிடித்துப் படிக்கப் புறப்படுங்கள்!​

பால கணேஷ்


                                                                (4) 

கருவாச்சி காவியம் - வைரமுத்து

நான் படிச்சதுல எனக்குப் பிடித்த நாவல் "கருவாச்சி காவியம்" தாங்க.. இள வயசுல கவிதைகள் எழுத ஆரம்பிச்சு, அப்புறமா கொஞ்சம் கவிதைகள் படிக்க ஆரம்பிச்சப்போ வைரமுத்து தான் எனக்குத் தெரிஞ்ச ஒரே கவிஞர். ஆனந்த விகடனில் அவர் எழுதிய கருவாச்சி காவியத்த எதார்த்தமாதான் படிக்க ஆரம்பிச்சேன். உரைநடையையே கவிதை மாதிரியும், கவிதையை உரை நடை மாதிரியும் வைரமுத்துவால் மட்டும் எப்படி எழுத முடியுதுன்னு, வியந்து, ரசிச்சு படிச்சேன். ஒரு எடத்துல கருவாச்சிய வர்ணிச்சு அவரு எழுதி இருப்பாரு.. "நெறம் கறுப்பு. கறுப்புல பல கறுப்பு இருக்கு. அட்டக் கறுப்பு, அடிச்சட்டிக் கறுப்பு, கெட்டிக் கறுப்பு, கரிக் கறுப்பு, கார்மேகக் கறுப்பு, குயில் கறுப்பு… இப்படி எத்தனையோ கறுப்பு. கருவாச்சி அழகுக் கறுப்பு, அம்சமான கறுப்பு. நவ்வாப்பழத் தோல்ல மினுமினுன்னு ஒரு மின்னலடிக்குமா இல்லையா… அப்பிடிக் கண்ணுக்குக் குளுச்சியா ஒரு கறுப்பு" இந்த மாதிரி வர்ணனனைய எங்கேயும் நான் கேட்டதில்ல. குடும்பத் தகராறு, பழி வாங்கல், கொழந்தை பொறக்குறது, சாவு வீடு, பஞ்சம், பட்டினி ன்னு பல களங்கள்ல கதை அருமையா போகும். அது மட்டுமில்லாம பன்னி அடிக்கிறது, மீன் குழம்பு வைக்கிறதுன்னு அங்கங்கே சில குறும்பான விஷயங்களையும், சில பல "Adults Only" சமாச்சாரங்களையும் அழகா எழுதி இருப்பாரு. எதார்த்த எழுத்து நடை பிடிப்பவர்கள் இந்த நாவலை கண்டிப்பா படிக்கனும்ங்க. 

பிரகாஷ்

                                                          (5) 

பட்டத்து யானை - வேல.ராமமூர்த்தி

புனைவும், வரலாறும் கலந்து, அதனுடன் ஆப்பநாடு எனும் மறவர் சீமையின் பழக்க வழக்கங்களையும், கும்பினி எதிர்ப்பையும் சேர்த்து எழுத்தாளர் வேல ராமமூர்த்தி படைத்த புதினம் "பட்டத்து யானை".

தனுஷ்கோடியில் கும்பினியின் கப்பல் ஒன்றை வெடிவைத்து தகர்க்கும் ரணசிங்கம், தப்பித்து தன் சொந்த ஊரான பெருநாழிக்கு தப்பிச்செல்வதில் ஆரம்பிக்கிறது கதை. ரணசிங்கத்தின் தங்கை மாயழகியின் கல்யாணத்திற்கு வருபவனை பொறிவைத்து பிடிக்க ஆயத்தமாகும் முதுகுளத்தூர் கச்சேரி மற்றும் கமுதி கச்சேரி போலீஸ்காரர்கள் கமுதி முதலாளியையும், ரணசிங்கத்தின் பங்காளி உடையப்பனையும் கூட்டு சேர்த்துக்கொள்கிறார்கள்.

போலீசுகள் செல்லும் லாரி, இடையில் மாயழகியின் கல்யாணத்துக்கு செல்லும் மாப்பிள்ளை வீட்டாருடன் மறித்து மோதுகையில் மணமகன் திருக்கண்ணன் சாகடிக்கப்படுகிறான். இதையறியாமல் கட்டுத்தாலி முறையில் மணமகன் இல்லாமலே திருமணம் முடிந்து, விடியும்வேளையில் உண்மை தெரிந்து விதவை ஆகிறாள் மாயழகி.

இடையில் கமுதி கச்சேரியை தாக்கி ஆயுதங்களை பறிக்கும் ரணசிங்கம் அடுத்த தாக்குதலுக்காக ஆட்களை அனைத்து சுற்றுபற்று கிராமங்களிலிருந்தும் திரட்டுகிறான். நிலைமையை அறிய வந்த விஞ்ச் துரைக்கு இன்ஸ்பெக்டர் மார்ட்டின்ஸ் ரணசிங்கத்தின் முன்கதையை சொல்வதாய் ஆரம்பிக்கிறது 'பிளாஷ்பேக்'.

பள்ளியில் ஒரு வெள்ளை மாணவனை உதைத்து வெளியேறி, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்து, அங்கும் புரட்சி செய்து, இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தில் இணைந்து சிட்டகாங் ராணுவ கிடங்கை முற்றுகையிட்டு, ஆயுதங்களை கொள்ளையடித்த கதையை நிகழ்கதையின் ஊடே தொடர்ந்து நாவலின் இறுதிவரை கொண்டுசெல்கிறார் எழுத்தாளர்.

திரண்ட ஆப்பநாட்டு கருஞ்சேனையை மூன்றாக பிரித்து மூன்று பக்கங்களில் அனுப்பி பூப்பாண்டியபுரம் பனங்காடு, விளாத்திகுளம் வைப்பாறு, கமுதி குண்டாறு ஆகிய இடங்களில் அப்பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த போலீஸ் படையை கெரில்ல தாக்குதலில் சின்னாபின்னமாக்குகிறான் ரணசிங்கம். மிஞ்சும் போலீஸ் படையை கமுதி கோட்டைமேட்டில் வைத்து காவு வாங்குகிறது கருஞ்சேனை.

நிகழும் சண்டைகளில் ரணசிங்கத்தின் அண்ணன் தங்கச்சாமியும் செத்து விழுகிறான். ஏராளமான இழப்புகளுக்கிடையில் அப்பகுதியின் மொத்த போலீஸ் படையையும் அழித்த ரணசிங்கத்தை (கும்பினியின் தொன்றுதொட்ட வழக்கத்தில்) பங்காளி உடையப்பனை வைத்தே அழிக்கின்றனர். மாயழகியும், ரணசிங்கத்தின் மகன் துரைசிங்கமும் மலேசியாவிற்கு நாடு கடத்தப்படுகின்றனர். துரைசிங்கத்தை வளர்த்து பழிதீர்க்கும் தீர்க்கத்துடன் கப்பலில் நிற்கும் மாயழகியுடன் முடிகிறது கதை.

இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் தமிழ் இந்து தினசரியில், பட்டத்து யானையின் தொடர்ச்சியாக குருதி ஆட்டம் என்ற தொடர் வெளிவந்து (ஏனோ தெரியவில்லை) பாதியில் நிற்கிறது.

ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்து, பின் விகடன் பிரசுரத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தற்போது டிஸ்கவரி புக் பேலஸினாலும் வெளியிடப்பட்டுள்ளது.

சபரி நாதன்

                                                                         (6) 

இரவு - ஜெயமோகன் 

இருளால் தீட்டிய ஓவியம், நாவலாக்கப்பட்ட ஒற்றைக் கவிதை 

பகலின் பகட்டு வெளிச்சத்தை வெறுக்கும் ஒரு குடும்பம் இரவில் மட்டும் கண் விழித்து, பகலில் உறங்குகிறது. அன்றாட கடமைகள் போன்று எதுவும் அவர்களுக்கு இல்லை. வாழ்வின் முழுமுதற் நோக்கமாக இரவை மட்டும் ரசிக்கின்றனர், அவர்கள் வீட்டில் மது, இசை, உணவு பெற்றிருக்கும் இடங்களைக்கூட விளக்குகள் பெற்றிருக்கவில்லை. அளவான வெளிச்சத்தை மட்டும் பொருட்களின்மீது செலுத்துகின்றனர். பகல் வெளிச்சம் காட்சிகளை அதன் இயல்பிலிருந்து அதிகப்படுத்திக் காட்டுவதாக கருதுகின்றனர். அசாதாரண இந்தக் குடும்பத்துடன் அறிமுகம் கொள்கிறான் நாயகன் சரவணன்.

மெல்ல மெல்ல இரவு வாழ்க்கையை நேசிக்கத் துவங்குகிறான். அவனைப்போலவே இரவை விரும்பும் நீலிமாவை காதலிக்கத் துவங்குகிறான்  இரவு வாழ்க்கைக்கு முழுக்க பழகியவுடன் சரவணனின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன, அதிலிருந்து மீண்டானா? நீலிமா என்ன ஆகிறாள் என்பது மீதிக்கதை.

ஒரு கவிதை உண்டாக்கும் பரவச தருணங்கள் இந்நாவல் முழுக்கவே கிடைக்கின்றன. அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தவை 

"தனிமையை 
இரவால் போர்த்திக்கொள்ள முடியும் 
தனிமையின் ஒவ்வொரு சொல்லுடனும் 
தாயின் கனிவுடன் உரையாட
இருளால் முடியும்"

"எத்தனைகோடி 
பகல்களை அணைத்தால் 
உருவாக்கமுடியும் ஓர் இரவை"

"பிடிபட்ட கரடி 
மெல்ல எழுந்து சிலிர்த்துக்கொள்வதுபோல
தன்னைக் காட்டியது 
இந்த இரவு"

நாம் கவனிக்கத்தவறிய ஒரு உலகத்தைக் கொண்டாட வைக்கிறது இரவு நாவல். 

த.ரிஷி

                                                       (7)  

ரண்டாம் மூலம் - எம்.டி.வாசுதேவன் நாயர்

2003 என்று  நினைக்கிறேன், கல்லூரி நூலகத்தில் அதிசயமாக ஒரு தமிழ் புத்தகம் கண்ணில் பட்டது. 'இரண்டாம் இடம்' என்ற அந்த தமிழாக்கம் செய்யப்பட்ட நாவலில், பீமனின் பார்வையில் மகாபாரதம் சுருக்கமாக சொல்லப்பட்டு இருந்தது.  பல நூறு ஆண்டுகளாக , பல கதைகளால் தங்கள் மேல் பூசப்பட்ட அரிதாரம் கலைத்து மகாபாரதத்தின் கதைமாந்தர்கள் சாதாரண மனிதர்களாக என் முன்னால் நிற்பது  போலிருந்தது. அந்த சமயத்தில் இந்த நாவல் என்னுள் ஏற்படுத்திய அதிர்வும், தாக்கமும் அபரிதமானது. 

இதிகாசங்கள் , புராணங்கள் மீதான  எனது பார்வையை மாற்றியமைத்த புத்தகம் இது. இதிகாசங்களின் மறுஆக்கம் படிக்க விரும்புவர்களுக்கு இந்த நூல் நல்ல துவக்கமாக இருக்கும். இந்த நாவலைத்  திரைப்படமாக எடுக்கும் பணிகள் ஆரம்பமாகி விட்டன. திரைப்படம் வெளிவருவதற்குள் , நாவல் படித்து விடுவது உசிதம்.

மூலம்: M.T.வாசுதேவன் நாயர் எழுதிய 'Randamoozham'(மலையாளம்) 
தமிழ் மொழியாக்கம்: குறிஞ்சிவேலன்

கவிப்பிரியா

                                                                (8)
இடைவெளி- சம்பத் 

சாவே உனக்கு ஒரு சாவு வராதா? என்று ஒரு கவிஞனை கதற வைத்த இறப்பு.

ஒருத்தருக்கும் பாரமில்லாம, நல்லபடியா போய் சேரணும் கடவுளே என்று முதிய மனங்களை வேண்ட வைக்கும் இறப்பு.

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை எத்தன்மையது என்பதை உலகிற்கு உணர்த்தும் இறப்பு.

போராட்ட வாழ்விலிருந்து விடுதலை அளிக்கும் இறப்பு; உயர்திணை மனிதனை வெறும் அஃறிணை பிணமாக்கும் இறப்பு.

எத்தனை உணர்வுகளால் பின்னப்பட்டிருந்தாலும் இறப்பு என்பது தவிர்க்கவும் முடியாது. மறுக்கவும் இயலாது. அத்தகைய யாராலும் வெல்ல முடியாத இறப்பு எப்படி, எந்த விதம் நிகழ்கிறது என்பதை, இப்படித்தான் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலையில், அதை கண்டறிய துடிக்கும் ஒரு மனிதனின் கதை.

தினகரன் என்னும் மனிதன், தனது நாற்பதாவது வயதில் இறப்பைப் பற்றி சிந்திக்கிறார். அனுதினமும் இதே சிந்தனையுடனேயே நாட்களைக் கடக்கிறார். வேலைக்கு செல்கிறார். நண்பர்களுடன் உரையாடுகிறார். குடும்பத்தினரை கவனித்துக் கொள்கிறார். எல்லாப் பொழுதுகளிலும், அருவமாக அவர் கூடவே வருகிறது, சாவு.

மனித வாழ்வின் இறுதியும், மறுக்க முடியாததுமான உண்மையே இறப்பு, என்று கூறும் அவர், அது எந்த விதம் எப்படி நிகழ்கிறது என்பதை கண்டறிய முயல்கிறார். முதலில் சாவு என்பது, உலக வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுவிக்கும் கருணாமூர்த்தி என்று சிலாகிக்கிறார். அடுத்து, எப்போதும் நம்மைக் கண்காணிக்கும் கண்காணிப்பாளரோ என்று சந்தேகிக்கிறார். அதன் பின்பு சில நாட்களிலேயே அதையும் மறுத்து, மனித வாழ்வின் முடிவுக்கான காத்திருப்போ என்று பிரமிக்கிறார். ஆயினும் எந்த ஒன்றின் முடிவாலும் அவரால் திருப்தியுற முடியவில்லை.

உடல் தான் இறக்கிறது, உயிராகிய ஆன்மா இறப்பதில்லை என்று கூறும் மெஞ்ஞானமும், உடல் உறுப்புகள் இயக்கத்தை நிறுத்திக் கொள்வதே இறப்பு என்று கூறும் விஞ்ஞானமும் அவரது தாகத்தை தணிக்க சிறிதும் உதவவில்லை. சோர்ந்து போனாலும் முயற்சியை விடாதவராக தொடர்கிறார். நாட்கள் இப்படியே சென்று கொண்டிருந்தன.

இந்நிலையில், அவரது பெரியப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவலால், அங்கே செல்கிறார். அங்கும் அவரது சிந்தனையே அவரை இழுத்து செல்கிறது. பெரியப்பா மிகவும் வயதானவர். கண்முன்னே நடக்கும் அவரது இறப்பை, அணுவணுவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதன் முடிவில் சாவு என்பது ஓர் இடைவெளி என்ற இறுதி முடிவுக்கு வருகிறார். அதில் பூரண திருப்தி இல்லையெனினும், மிக திருப்தியாகவே உணர்கிறார்.

இடைவெளி என்பதே சாவு என்பதை உணர்ந்து கொள்ளும் அவர், மேலும் அதை ஆராய்கிறார். இறுதியாக, அனுசரணையான இடைவெளியே வாழ்வு எனவும், முரண்பாடுடைய இடைவெளியே சாவு எனவும் புரிந்து, மிகுந்த திருப்தியடைகிறார்.

பொதுவாக சாவை நினைத்து பயம் கொள்ளும் மனிதர்களின் மத்தியில் இப்படிப்பட்ட தேடல், ஒரு அக தரிசனம்.

சாவைப் பற்றிய தேடலில் ஏற்பட்ட எண்ணச் சிதறல்களை எல்லாம், அப்படியே கொட்டியிருக்கிறார். அதனால் மிக நுட்பமான கவனத்தைக் கோருகிறது. 

உடலின் உயிர், அதிலிருந்து பிரிந்து நிற்கும் இடைவெளியே சாவு என்று கூறுவதை, நம்மாலும் சிந்தித்து உணர முடிகிறது.

மேலும் சிந்திக்கும் போது, எது ஒன்று உருவாவதும், அழிவதும் அது இடைவெளியின் காரணமாகவே என்னும் உண்மை புலப்படுகிறது. அது இருத்தலாகவும் இருக்கலாம், அல்லது இழத்தலாகவும் இருக்கலாம்.

இது போன்ற பல சிந்தனைகளுக்கு வித்திடும் கதை….

M.சரளா.

                                                                 (9) 

மிளிர்கல்- இரா.முருகவேள்

கண்ணகி, கோவலன், மாதவி, சிலம்பு, மதுரை மன்னன், மதுரை எரிந்தது, இறுதியில் கண்ணகி தெய்வமானது அவ்வளவே எனக்கு சிலப்பதிகாரம் பற்றின ஞானம்.இதுவும் பூம்புகார் படத்தை எப்பொழுதோ பார்த்தால் வந்தது தான். இந்த லட்சணத்தில் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து  எழுதப்பட்ட "மிளிர் கல்" நாவலை வாசிக்க துவங்குவதற்கு மிகவும் தயக்கமாக இருந்தது. 

சிலப்பதிகாரத்தை முழுவதும் தெரியாமல் வாசிக்க சிரமமாக இருக்கும் என்ற எண்ணத்தால் வந்த தயக்கம். ஆனால் வாசிக்க துவங்கியதும் தயக்கம் அனைத்தும் பறந்தோடியது. வாசகனுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் போகிற போக்கில் நாவலில் தரப்பட்டுள்ளது. ஒரே அமர்வில் எந்தவித சிரமமுமின்றி நாவலை முடித்துவிட்டேன். கதை ஆங்கிலப்படம் போல ஆரம்பமாகிறது.கண்ணகி கடந்த பாதையை அவணமாக்க ஆசைப்படுகிறாள் நாயகி, அவளுக்கு துணையாக நண்பன் செல்கிறான். வர்களுடன் ஒரு பேராசரியரும் வழியில் இணைகிறார். இவர்களுக்கிடையில் நடக்கும் உரையாடல், விவாதங்கள் வழியே வாசகனுடன் நாவல் பேசுகிறது. இதில் எனக்கு மிகவும் பிடித்தது நாவல் சொல்லும் அரசியல் தளம் தான். திராவிடர் கழகம் சிலப்பத்திகாரத்தை தவிர்த்தப்பொழுது அதிலிருந்து பிரிந்த தி.மு.க ஏன் சிலப்பதிகாரத்தை தமிழனின்  அடையாளமாக முன்னிறுத்தியது என்ற விவாதம் வாசிப்பவரை வேறொரு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது. தற்பொழுதைய அரசியல் தளத்திலிருந்து நாவல் சேரன் செங்கட்டுவன் காலத்திற்கு இட்டுச் செல்வதும் அர்புதமான இடமாக நாவலில் எனக்கு தோன்றியது. சோழனும், பாண்டியனும் செய்யாததை சேரன் செய்தது ஏன்? என்ற கேள்வி வாசகனை உச்சு கொட்ட செய்கிறது. 

கோவலனின் பெயர் காரணம், இளங்கோவடிகளின் மனநிலை, கோவலன்-கண்ணகியின் உண்மையான கதை எதுவென என்று நாவல் பல தளங்களில் செல்கிறது. முக்கியமாக பூம்புகார் நகரை வார்த்தைகள் மூலம் கண் முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.எவ்வளவு பெரிய வணிக தளமாக அது இருந்திருக்க வேண்டும்.இதுமட்டுமில்லாமல் சுவாரஸ்யமான தகவல்கள் பலவும் இந்த நாவலில் உள்ளது; கண்ணகியின் கோவத்தை குறைக்க நடக்கும் கெட்ட வார்த்தை திருவிழா, கேரளத்தில் நடக்கும் திருவிழா, மதுரை எரிந்ததற்கான சான்றுகள் ஏதும் வரலாற்றில் உள்ளதா? கோவலன் ஒற்றனா? சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் இன்றும் மரகத கல்லை தேடுவது உண்மையா? கவுந்தியடிகள் 35 வயதானவரா? கண்ணகி ஏன் கடவுளாக்கப்பட்டாள்? அதன் பின்னனி என்ன? மதம் எப்படி அரசியலுக்கு உதவுகிறது? கண்ணகி கொங்கு நாட்டவரா? என்ற பட்டியல் நீள்கிறது.

நாவலுக்காக இரா.முருகவேள்  செமையாக மெனக்கிட்டிருக்கிறார், நாவலில் நாயகி பயணிக்கும் அனைத்து இடங்களுக்கும் அவர் நேரில் கண்டவை. அவரது எரியும் பனிகாடு போலவே இந்த நாவலும் என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் இந்தப் பதிப்பில் ஏகப்பட்ட அச்சுப்பிழை இருக்கிறது.நாவலின் வேகத்தை அடிக்கடி குறைத்துவிடுகிறது.மற்றபடி நாவல் அடி தூள்.

பிரபு

                                                                     (10)

காடு - ஜெயமோகன்

ஜெயமோகனின் அறம் சிறுகதை தொகுப்பு என்னை வெகுவாக பாதித்த ஒன்று. அதன் தாக்கதினாலோ என்னவோ அவரது "காடு" மற்றும் "இரவு" நாவல்களை வாங்கி அலமாரியில் அடுக்கி அழகு பார்த்தேன். "எடுத்தால் இடைவிடாது முழுவீச்சில் முடித்தாக வேண்டும்", என்று சபதம் வேறு மேற்கொண்டிருந்ததால் நாவல்கள் அலமாரியே கதியெனக்கிடந்தன. தற்செயலாக ஒரு நாள் முகநூலில் ராஜா ராஜேந்திரன் அவர்களின் "காடு" பற்றிய பதிவின் உந்துதலால் சபதத்தை குப்பையில் தள்ளிவிட்டு "காடு" வாசிக்கத்துவங்கினேன்.

காட்டைப் பற்றியும் காட்டில் வாழும் ஜீவராசிகளைப் பற்றியும் ஜெமோ அணு அணுவாய் விவரிக்கும் விதத்திலேயே நாவலுடன் நான் ஒன்றிவிட்டேன் என்றே கூற வேண்டும். காட்டின் அழகை வர்ணிக்கையில் சிலிர்ப்பதும், அதே நேரம் காட்டில் பொதிந்து கிடக்கும் மர்மத்தைக் கடக்கையில் கிரிதரனைப் போலவே அஞ்சுவதுமாக இருந்தேன். ஆம்.. கிரிதரன் தான் கதையின் நாயகன். ஆனால் கிரிதரனையும் மற்ற அனைத்து கதாப்பாதிரங்களையும் பின்னுக்கு தள்ளி காடே பிரதான அந்தஸ்த்தைப் பெறுகிறது. கனவுகள் பல கண்டு அவையெதுவுமே நிறைவேறாமல் வாழ்க்கையில் தோற்றுப்போய் தனிமையில் தவிக்கும் கிரிதரன், அனைத்து வேலைகளிலும் தன் கெட்டிக்காரதனதைக் காட்டும் குட்டப்பன், தேவாங்கை தன் குழந்தையாய் பாவித்துக் கொஞ்சிக்குழையும் ரெசாலம், மலையத்திப்பெண் நீலி, ரெஜினாள் மேரி, சினேகம்மை, வேணி, அந்த அய்யர், இரட்டையர்கள், மிளா, கீறக்காதன், என அத்தனைக் கதாப்பாதிரங்களும் கண்முன்னே உலாவிக்கொண்டிருந்தனர் சில காலம்.

கிரிதரனுக்கும் நீலிக்கும் இடையேயான காதலும்  காமமும்  நாவலினூடே மிகைப்படுத்தப்படாமல் அழகாகக் கடந்து செல்லும். அதிலும் நீலி அடிக்கடி சொல்லும் "ஞான் மலையத்தியாணு" என்ற பதம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்நாவலில் அதிகமாக மலையாளம் கலந்த தமிழ் பேசப்படுகிறது. எனக்கு மலையாளம் தெரியுமென்பதால் அவ்வசனங்கள் யாவும் மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிந்தன.

மொத்தம் 470 பக்கங்கள். திங்கட்கிழமை தொடங்கி வெள்ளி வரை 100 பக்கங்கள் வாசித்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு வீச்சில் அமர்ந்தும், கிடந்தும், மொத்தத்தையும் வாசித்து என் சபதத்தை கிட்டத்தட்ட நிறைவேற்றி விட்டேன். மொத்தத்தில் காடும் அதன் கதாப்பாதிரங்களும் ஏற்படுத்திய தாக்கம் அந்த ஞாயிற்றுக்கிழமை தாண்டி மேலும் சில ஞாயிற்றுக்கிழமைகள் வரை நீடித்தது. என்னை விட்டு வெகு தூரம் சென்றுவிட்ட வாசிப்புப்பழக்கத்தை மீட்டெடுத்ததில் “காடு” நாவலுக்கு பெரும்பங்குண்டு. 

முகமது ஷபீர்

                                                        (11) 

காடோடி- நக்கீரன்

நகர நாகரீகத்தில்  வாழ்ந்து திளைத்த   மனிதன் ஒருவன், காட்டு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு இருக்கும் ஓங்கி உயர்ந்த மரங்களை வெட்டி, வெறும் கட்டைகளாக, கனமீட்டர்களாக மாற்றி   பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வெட்டுமர நிறுவனத்தில் பணிபெற்று  போர்னியாவில், மலேசியாவிற்கு சொந்தமான சபா பகுதியில் உள்ள மழைக் காடுகளுக்கு பயணம் செய்கின்றான் - ஒரு உல்லாசப் பயணியாக.

அவனது எண்ணம் முழுவதும் காடுகளும் அதன் வனப்பும் ஊடுருவி நிற்கிறது.
தான் கேட்டும், படித்தும், கற்பனை  செய்தும் வைத்திருந்த மரங்கள் செறிந்த கானகங்களை  பார்க்கப் பார்க்க ஆனந்தம் கொள்ளும் அவன், நாட்கள் செல்ல செல்ல தான் ஏற்று வந்த பணியின் நோக்கம், அதன் தாக்கம், அதனால் ஏற்படும் விளைவுகளைக் கண்ணுற்று தன்னையே வெறுப்பவனாகவும், தான். செய்த பாவத்திற்கு  மன்னிப்பு உண்டா?  என்று கேட்கும் நிலைக்கும் ஆளாகிறான்.

அது எவ்வாறு  என்பதை தனது தனித்துவமான எழுத்து நடையில்  சொல்லி இருக்கிறார் ஆசிரியர் நக்கீரன்.

துவான்  என்று அழைக்கப்படும் அவ் உல்லாசப் பயணி. மரம் வெட்டும் ஒரு வெட்டு நிறுவனத்தில், மரக் கட்டைகளின் தரம் சோதித்து  அளவீடு செய்து அனுப்பும் பணியில் இருக்கிறார். அவர்களின் குழுவின் தலைவர் ஓமருடன் அத்தொழில் தொடர்பான குழுவினரும் செல்கின்றனர்.

இதுவரை யாரும் செல்லாத மனித சஞ்சாரமே இல்லாத பகுதிகளை எல்லாம் பல தொகுதிகளாகப் பிரித்து, பல வெட்டு நிறுவனங்களுக்கு  மரங்களை வெட்டும் உரிமையைக் கொடுக்கிறது அரசு. 

தங்களின் உரிமைப் பத்திரத்தை வைத்துக் கொண்டு, அந்த இடங்களுக்கே சென்று முகாம் அமைத்து, தங்களின் வாழ்வியலையும் அங்கே ஆரம்பிக்கிறார்கள். இவர்களின் பணி, பயணம், வாழ்வியல் நிலைப்பாடுகள் அதனோடு மழைக் காடுகளின் தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், பூக்கள் ,மரங்கள். மனிதர்கள், அனைத்தையும்  அளவிடற்கரிய தகவலோடு முன் வைக்கிறது  இந்த புதினம்.

ஆங்கிலேயர்கள் ஆரம்பித்த காடு அழிப்பை  இவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள். இவர்களால் அழிக்கப்பட்ட காடுகள்  செம்பனைத் தோட்டங்களாகவும்,  கொக்கோ தோட்டங்களாகவும் உருமாறி கண்முன் நிற்கின்றன. அந்த அழிவிற்கு, அழிப்பிற்கு பின் இருக்கும் நுண்ணிய அரசியல் ஆங்காங்கே விளக்கப்படுகிறது.

காடு,  அது வெறும் வார்த்தையல்ல. இயற்கை நமக்களித்த அரியக் கொடை. நமது ஆடம்பரத்திற்கும், பேராசைக்கும் எல்லையில்லாது போகும் பொழுது  நமது  இருப்பை விரிவுபடுத்துகிறோம்  அக்காட்டை அழித்து.

வாழ்வது நகரத்து மனிதனுக்கு மட்டும் அளிக்கப்பட்ட வரமா? காட்டோடு இணைந்து வாழும் தொல்குடிகள் என அழைக்கப்படும், காட்டின் மனிதர்களுக்கும்,  அக்காட்டையே  தங்களின் வாழ்விடமாகக் கொண்டு வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவ்வுரிமைகள் இல்லையா?  என்று முகத்தில் அறையும் உண்மைகளோடு வெளிவருவோம் இந்த நாவலை படித்து முடிக்கும் பொழுது அடர்ந்த காடுகள், வெயிலின் ஒளி புகமுடியாத இருண்ட கவிகை படர்ந்த நிழல் பரப்பு என நாவலுக்குள் தொலைந்துதான் போகிறோம்  நாம்.

எத்தனை வகையான விலங்குகள், நம் மூதாதையர்கள்  என அழைக்கப் படும் பல வகையான பிரைமேட்ஸ்,  அவர்களின் பெயர்கள்,  உருவங்களின் வர்ணனைகள், கண்களிலே  பாய்ந்து மனதுக்குள் பதுங்குகின்றன  ஆசிரியரின் நடையில்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மட்காக இருக்கும் மரங்களின் இலைகள், அவற்றின் மிருது, அவைகள் உருவாக எடுத்துக் கொள்ளும் கால அளவுகள் நம் கற்பனைக்கும் எட்டாதது - அனைத்தையும் எளிய நடையில் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.

பல வகையான நீர்வழித்தடங்கள், மனிதன் கால்படாத சமயங்களில் இருந்த தெளிவு, அவன் கால்பட்டவுடன் உருமாறும் அவலம், பலவகையான பறவைகள், அவற்றின் எச்சங்கள் என்னவாக  உருவாகிறது, அவற்றின் மருத்துவ மதிப்பீடு என்ன, ஒரே வாழ்விடத்தில்  பகலில் இரைதேடும் லயாங் பறவைகளும், இரவில் மட்டுமே ஓடியாடும்  பாலூட்டிகளான வௌவால்களும் சிக்கலற்று சமமாகப் பங்கிட்டுக் கொள்ளும் அன்பான வாழ்வியல்  குகைக்குள் ஆசிரியரோடு நாமும் பயணிக்கிறோம்.

தனது குழுத் தலைவர் ஓமருடன்,  வழி தொலைந்து, குன்றின் மேல் கடும் மழையில் அமர்ந்திருக்கும் துவானுடன்  நாமும்தான்  கலந்திருக்கிறோம். தேவைகளுக்கு மட்டும் வேட்டையாடும்  தொல்குடிகள், தங்களின் வேட்டை விதிகளை சொல்லும் பொழுது,  நாமெல்லாம்  வாழ்ந்து என்ன பயன் என்பதை உணர்த்துகிறார்  ஆசிரியர்.

கருவுற்றிருக்கும் பெண் விலங்குகளைக் கொல்வதில்லை, கருவுறும் காலங்களில்  அக்கூட்டத்தில் இருக்கும்  ஆண் விலங்குகளைக் கூட கொல்வதில்லை, ஆனால்  நாம் சுய நலத்திற்காக , சொந்த ஆதாயத்திற்காக செய்வது என்ன? தொல்குடிகளின் உணவு, இருப்பிடம். அவர்களின் உணர்வுகள். எத்தகைய சூழலிலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் வாழ்க்கையை வாழும் அவர்களின் நிலைப்பாடு ஆகியவற்றை இப்புதினத்தின் வாயிலாக அறிபவர்கள்,  நாகரீகத்தின் பெயரால் அனைத்து இயற்கை வளங்களையும் அழிப்பதில் இருக்கும் அவலத்தை உணர்ந்து கொள்வார்கள்.

இவற்றையெல்லாம் அங்கிருந்த நாட்களில் உணர்ந்து கொண்ட உல்லாசப் பயணியான துவான்,  மனதளவில் தளர்ச்சி அடைகின்றான். இதற்கு முக்கியக் காரணியாக இருப்பவர்   பிலியவ் என்கிற, காட்டுடன் இயைந்து வாழ்கின்ற தொல்குடி மனிதர்.  துவான் மட்டுமல்லாமல் அவர்களின் குழுவின் தலைவருமான  ஓமரும்  தொல்குடி மனிதரின்  இயற்கை காதலை அறிந்து, அவருடன் பயணிக்கின்றார் மனதளவில். இவையெல்லாம் அவர்கள் நிறுவனத்தின் விருப்பம் இன்றியே நடக்கிறது.

சிறிது சிறிதாக தாங்களும் அவரைப்போலவே  மாறி,  செய்யும் தொழில் எத்தகைய பாவம் நிறைந்தது என்று அவ்விடத்தை விட்டு  நீங்குகின்றனர் இருவரும். முதலில் ஓமரும் பிறகு  துவானும்.

  • மழைக் காடுகளின் அழிவு மனித குலத்திற்கு மட்டுமல்ல அங்கு வாழும்    அனைத்து உயிர்களின் அழிவிற்கும் காரணமாகிறது.
  • உலகில் எங்குமே இல்லாத  ஒரிட வாழ்விகளாக வாழும் பல விலங்குகள் இருக்கும்  இடம் தெரியாமல் அழிக்கப்படுகின்றன.
  • இருள் சூழ்ந்த வனம், முடிவில் வெறும் நிலத்திடலாக மட்டுமே காட்சி அளிக்கும் அவலம்.
  • பெரும் போர் நிகழ்ந்த இடத்தில் தலை வெட்டப்பட்ட முண்டமாக காட்சி அளிக்கும் போர்க்களம் போல, வெட்டப்பட்டு சிறிய கட்டைகளாக மட்டுமே காட்சி அளிக்கின்ற பல வருட வயதுள்ள மரங்களின் எச்சங்கள். 
  • வெட்டுவதற்கு முன்பிருந்த காட்டின் வனப்பு, சிள்வண்டுகளின் ஒலி, கோடிப் பூக்களின் வண்ணம் மறைந்து, வெள்ளுடை தரித்த மனிதர்களாக காட்சியளிப்பது.
  • மீன்கள் உரையாடிச் சென்ற நீரோடைகள் அனைத்தும் மாயமாகிவிட்டன முடிவில்.
இவையெல்லாம்  நம் கண் முன்னே  படம் பிடித்து காட்டப் படுகின்றன- இப்புதினத்தின் வாயிலாக.  இயற்கைக்கும் நமக்கும் இருக்கும் சமன்பாடுகள் சீர்குலையும் சமயங்களில் எல்லாம், இயற்கையின் சீற்றம் அதிகம் இருப்பது போல துவான் விலகும் நாளில் பேய் மழையின் காரணமாக ஒரு ஊழித்தாண்டவமே நடக்கின்றது.

அதற்கு முன்பும் பல நிகழ்வுகள் இருந்தாலும், காட்டை காவு கொண்டே அவ்விடத்தைவிட்டு நகர்கிறார்கள் அக்குழுவினர் அனைவரும்.

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, வாழ்ந்த, பலநாட்டின் பணியாளர்கள் ஒன்று கூடி, ஒரு மழைக் காட்டின் அழிவிற்கு  சாட்சியாக இருந்து, பிரிந்து செல்லும் பொழுது வெறும் மனிதர்களாக  செல்வது நம்மையும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.

சித்ரா.ஜி

                                                                   (12) 

குருத்தோலை- செல்லமுத்து குப்புசாமி

நடுகல் பதிப்பக வாயிலாக  வெளிவந்த செல்லமுத்து குப்புசாமியின் "குருத்தோலை" நாவலை நிசப்தம் மூலமாக அறிமுகப்படுத்துகிறேன். இந்நாவலின் கதைக்களம் தாராபுரம் அருகிலுள்ள ஒரு கொங்கு கிராமம். ஒரு விவசாயக் குடும்பத்தை மையமாகக்கொண்டு அக்கால வாழ்வியலை படம்பிடித்து காட்டியுள்ளாா் எழுத்தாளர். 

நாவல் முழுவதுமே கொங்குத்தமிழ் பொங்கிவழிகிறது. கொங்குத்தமிழ் பரிச்சயம் இல்லாதவர்கள் வாசிக்க  சற்று சிரமப்படுவார்கள்.

கொங்கு கிராமமெங்கும் குடும்பங்கள் தோறும் நடந்த, நடக்கும் கதை. கதையின் மையப்பாத்திரம் முத்துச்சாமி. முத்துச்சாமியின் வளரச்சியோடு கதையும் வளர்கிறது. 

கதை நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கி இன்றைய தேதியில் முடிவுறுகிறது. அன்றைய மனிதர்களின் யதார்த்தம், பாசம், காதல், செலவாந்திரம், கெட்டவார்த்தைகள், சண்டைகள், மறைந்து போன கல்யாண சம்பிராயங்கள் என அத்தனை அலகுகளையும் கண் முன் காட்சிகளாக விவரிக்கிறார் எழுத்தாளர்.

"குருத்தோலை" - இது புனைவல்ல; கொங்கு கிராமங்களின் பல்வேறு குடும்பங்களில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பே. மொத்ததில், குருத்தோலையை உண்ணும்போது பெறும் சுவையை, நிச்சயம் அதை வாசிக்கும்போதும் பெறலாம்.

மணி பிரபு

                                                        (13) 

கன்னி - பிரான்சிஸ் கிருபா

‘உதட்டில் சுடர்ந்த
உன் உயிரின் இளவெயிலை
உனக்குத் தெரியாமல்
உறிஞ்சி சூரியனானேன்.
தெரிந்ததும் திடுக்கிட்டாய்
வானத்தை நோக்கி நீ
கோபத்தில் எறிந்த கற்கள்
மேகத்தைத் தாண்டியதும்
விண்மீன்களாயின.
உன்னைப் பார்த்து நிலா
என்றுணர்ந்து மின்னிச் சிரித்து
என்னைக் காண
கிழக்கில் தேடுகின்றன.
அமுதவெளியைப் பருகித் திளைத்து
அம்மாவென உனை அழைக்கின்றன.
தேயாத நிலவாய் நிலைக்குமா
என் அழிவற்ற கனவு?

பாண்டியை மரத்தில் கட்டிப்போடுவதற்காக கைகால் விலங்கு செய்ய வந்த ஏலானஆசாரி திடீரென இறந்ததிலிருந்து தொடங்குகிறது கதை.பாண்டியை பிடித்த சனியன்தான் ஆசாரியையும் கொன்றுவிட்டது என ஊர்முழுக்க பேச்சு.பாண்டியை ஏன் கட்டிப்போட வேண்டும், ஏன்னா அவன் ஒரு லூசு, கிறுக்கன், பைத்தியம். 

இப்படித்தான் ஊரில் உள்ள சிறுசுகள் எல்லாம் சொல்லித்திரியுது. நல்லா இருந்த புள்ள இப்படி கெடக்கானே என ஒருபுறம் பெருசுகளும் புலம்பிக்கிட்டு திரியுதுக.ஆனால் இந்த அற்ப மனிதர்கள் சஞ்சரிக்கும் உலகத்தில் இருந்து அவன் வேறு உலகம் சென்று வெகுநாள் ஆகிவிட்டது யாருக்கும் தெரியாது. அவன் தேடல் அத்தகையது. அவன் தேடுதலின் ஆதாரமாக அமைகிறது சுனை அத்தியாயம்.பெரியம்மா மகளான அமலா அக்காவுடனான பாண்டியுடைய அந்த அன்பும், வயது கூடும்போது அதற்கேற்ப மாறுபடும் அன்பின் முதிர்ச்சியும், அக்காவின் நிலையைக் கண்டு தன்னால் எதுவும் செய்ய இயலாத கையாலாகத் தனத்தையும் நினைத்து வெதும்பும்போதும் கடல் அலையோடு நாமும் சேர்ந்து கரைகிறோம்.

முதல்பகுதி முழுதும் கண்கட்டி வித்தையாகப்படும் அவனது தேடல் பிற்பகுதியில்தான் அவன் தேடுவது சாரா எனத் தெரிகிறது. சாரா யார்? பைத்தியம் ஆகும் அளவிற்கு அவள் என்ன செய்துபோனாள் இவனை? இறுதி
அத்தியாயம் படிக்கும் வரையில் எனக்கும் குழப்பமாகத்தான் இருந்தது.

குறிப்பு: இன்னும் குறைந்த பட்சம் இரண்டு வாசிப்புகளுக்குப் பிறகுதான் கன்னி நாவலைப் பற்றி ஒரு தெளிவான கட்டுரையை எழுதலாம்.இந்த பதிவில் கொஞ்சமாவது உருப்படியாகச் சொல்லிவிட திணறிக்கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை.ஒரு மனநிலை சரியில்லாத ஒருவனின் மனம் எப்படியெல்லாம் அலைபாயும் எந்தந்த உலகத்திற்கு எல்லாம் செல்லும் என இதை படிக்கும்போதே சிலிர்க்கிறது. 

அவன் பைத்தியம் ஒன்றுமில்லை அவன் தெளிவாகத் தான் இருக்கிறான். அவன் தேடல் எது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும் ,சாரா. ஏன் என்று கேட்டால் காதல் என்று பதில் சொல்லவும் தெரிகிறது. அவன் தெளிவாகத்
தான் இருக்கிறான். கடைசியான மழை அத்தியாயத்தை படிக்கும்போதுதான் மொத்த அத்தியாயத்திற்கான புதிர் அவிழ்ந்ததுபோல் மனம் அத்தனை அழுத்தம் கொடுத்தது, இரவில் தூக்கம் கெடுத்தது.

கன்னியை எழுதிய ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கற்பனைத் திறனும், அவரின் கதை சொல்லி விதமும் அத்தனை அபாரம்..பாண்டியை தமிழ் படிக்கும் மாணவனாக கவிதையில் ஆர்வமானவனாக காட்டியதால் இடையிடையே வரும் கிருபா, தேவதேவனின் கவிதைகளும் கதையோடு ஒன்றி பயணிக்கிறது.மெல்லிய காதலையும் அதன் பிரிவையும் அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டு எழுதப்பட்ட கதையானாலும் கன்னி மௌனமாக விமர்சித்திருப்பது கிறிஸ்துவத்தில் பின்பற்றப்படும் ஒரு மதசடங்கினை. அதுவே கன்னியை இன்னும் அழுத்தமாக்கிவிடுகிறது.

‘காதல் என்பது இறை அனுபவம்
எந்தச் சொற்களாலும்
உணர்த்திவிட முடியாதது அது.’

ராம்குமார்

1 எதிர் சப்தங்கள்:

செந்தில்குமார் said...

நான் கடந்த 9 அல்லது 8 வருடமா வாசிக்கிறேன் பட்டாம் பூச்சி பத்தி பாத்த உடணே சொரைமாவும் லாலிதான் எனக்கு தோனிச்சு.ஏன்னா இந்த மாதிரி ஒரு வாழ்க்கைய விட்ட்டு போறான் நினைச்சேன்.வைத்தியர்க்கே வைத்தியம் பாக்குறாப்புல.ஆனா லாலி சொரைமாவ பத்தி சொல்லம போயிரிந்திங்கின்னா எபவும் போல படிச்சுட்டு சும்மா இருந்துருப்பேன்.