Jan 28, 2016

இடைவெளி

கடந்த சனிக்கிழமையன்று ஊருக்குக் கிளம்பிய போது வழக்கமான பயணமாகத்தான் இருந்தது.  ஒவ்வொரு ஊரையும் இரண்டாகக் கிழித்துக் கொண்டு ஓடும் சாலைகள், அதே சுங்கச் சாவடிகள், எதிரில் விரையும் வாகனங்கள் எல்லாமும் அப்படியேதான் இருந்தன. வீட்டிற்குச் சென்ற பிறகு கட்டுரைகளாக எழுதுவதற்காக சிலவற்றை யோசித்துக் கொண்டிருந்தேன். சேலத்தில் உணவருந்திய போது க்ரூப் 2 தேர்வின் வினாத்தாளோடு ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ‘இவற்றில் சுந்தர ராமசாமி எழுதாத நாவல் எது?’ என்று கேள்வியிருந்தது. அவருக்கு பதில் தெரியவில்லை. எனக்கு அந்தக் கேள்விக்கு மட்டும்தான் பதில் தெரிந்திருந்தது. பேசிக் கொண்டிருந்தோம். அதுவரைக்கும் வழக்கமான ஒன்றாக இருந்த பயணம் அதன் பிறகான ஐந்து நாட்களும் எப்பொழுதும் போல இல்லை.

உறவுக்காரப் பையன் ஒருவனுக்காக இரவும் பகலுமாக மருத்துவமனையில் கிடக்க வேண்டியிருந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருந்தார்கள். அவனுக்கு நினைவு இருந்தது. அடிக்கடி யாரையாவது அழைப்பதாகச் சொல்லி என்னை அழைத்து அருகில் அமர வைத்துவிட்டார்கள். நள்ளிரவு முழுக்கவும் அவசர சிகிச்சைப் பிரிவில் அமர்ந்திருந்தேன். அவசர சிகிச்சைப் பிரிவில் தனித்தனி அறைகள் எதுவுமில்லை. திரைச் சீலைகளை இழுத்துவிட்டு மறைத்திருந்தார்கள் என்றாலும் ஒவ்வொரு நோயாளியையும் பார்க்க முடியும். பேட்டரி தீர்ந்து அலைபேசி அணைந்திருந்தது. கையில் புத்தகம் எதுவுமில்லை. பேசுவதற்கும் ஆட்கள் யாருமில்லை. தனித்து அமர்ந்திருந்தேன். அவன் அனத்தியபடியே கிடந்தான். 

இரவு முழுக்கவும் அவசர ஊர்திகள் மருத்துவமனையை நோக்கி வந்து கொண்டேயிருந்தன. விபத்து, இருதயம் நின்று போனது, தற்கொலை முயற்சிகள் என ஆட்களைத் தூக்கி வந்தபடியே இருந்தார்கள். ஒவ்வொருவரும் மரணத்தை மிக அருகில் அழைத்து நிறுத்திக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மூச்சிரைப்புக்காக அழைத்து வரப்பட்ட கல்லூரிப் பெண்ணொருத்தி சிகிச்சை பலனின்றி இறந்து போனாள். இருதய அடைப்பின் காரணமாக ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதரை நம்பிக்கையோடு தூக்கி வந்திருந்தார்கள். அவர் வரும் வழியிலேயே இறந்திருந்தார். அழைத்து வந்தவர்கள் கதறி அழுதார்கள். எல்லாவற்றையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லா இரவுகளும் தூக்கத்தைக் கோருபவை இல்லை. அந்த இரவு அப்படியானதாக இருந்தது. விழித்திருப்பதைத் தவிர வேறு வழியே இல்லாமல் இருந்தது.

வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. மரணங்களை மட்டும் வெகு அருகாமையில் இருந்தபடி கவனித்தபடியே இருந்தது இப்பொழுது வரைக்கும் கொடுங்கனவைப் போலத் துரத்திக் கொண்டிருக்கிறது. வலியால் எழுப்பப்பட்ட குரல்கள் இன்னமும் காதுகளுக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.  திடீரென நிலைமை மோசமடையும் நோயாளியை நோக்கி மருத்துவர்களும் செவிலியர்களும் திமுதிமுவென ஓடுவார்கள். எனக்கு நடுங்கத் தொடங்கும். அவர்கள் அந்த நோயாளியை விட்டு விலகும் வரை அந்தப் பக்கமாகத் தலையைத் திருப்பிவிடக் கூடாது என பதறியபடியே அமர்ந்திருந்தேன். ஆனாலும் தலை தானாகத் திரும்பி என்னவானது என்று குறுகுறுக்கும்.

கடந்த ஐந்து நாட்களில் உலகில் எவ்வளவோ விஷயங்கள் நடந்திருக்கின்றன. எதுவும் தெரியவில்லை. செய்தித்தாள்களைக் கூட வாங்கவில்லை. இப்பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. பத்மஸ்ரீயிலிருந்து பழ.கருப்பையா வரைக்கும் எத்தனையோ விவகாரங்களை பேசியிருக்கிறார்கள். எதையுமே தெரிந்து கொள்ளாமல், எதைப் பற்றியும் கருத்துச் சொல்லாமல் இருந்த ஐந்து நாட்களும் ஒருவிதமான சுதந்திரத்தைத் தந்திருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். வெளியுலகில் பெரும்பாலான மனிதர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத அத்தகைய மனிதர்களும் இயல்பாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

உறவுக்காரப் பையன் நன்றாக இருக்கிறான். அவனைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. 

குடியரசு தினத்தன்று கோவை மெடிக்கல் செண்டர் மருத்துவமனையில் கொடியேற்றுவதற்காகத் தயாராக இருந்தார்கள். பையனைப் பார்ப்பதற்காகச் சிலர் வந்திருந்தார்கள். இடைவெளியில் எங்கேயாவது சென்று வர வேண்டும் போலிருந்தது. மருத்துவமனை வீச்சம் உடல் முழுவதும் விரவிக் கிடந்தது. மகிழ்வுந்தைச் சுத்தம் செய்வதற்காக எடுத்துச் சென்றேன். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பாப்பநாய்க்கன் பாளையம் மின்மயானத்துக்கு எதிரில் செல்லச் சொன்னார்கள். அங்கேயொரு சர்வீஸ் ஸ்டேஷன் திறந்திருந்தது. மலையாளிகள் நடத்துகிறார்கள். பல்லாண்டுகளுக்கு முன்பாக குடி வந்தவர்கள். மலையாளத்தைக் காட்டிலும் தமிழ் நன்றாகப் பேசக் கூடிய மலையாளிகள். எதற்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன் என்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அசுவராசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். முந்தைய இரவுகளில் தூக்கமில்லாததால் கண்கள் சுழற்றிக் கொண்டிருந்தன. 

‘இன்னைக்கு லீவு சார்...உங்க வண்டி வந்ததால வேலை செய்யறோம்’ என்றார் அந்த மலையாளி.

‘எதுக்குங்க லீவு?’ என்றேன்.

‘சுதந்திர தினம்ல..நல்ல நாள் அதுவுமா எங்கேயாவது போகலாம்’ என்றார். 

எதுவும் பேசவில்லை. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையை நகர்த்துகிற மனிதர்கள் அத்தனை தளங்களிலும் இருக்கிறார்கள். நண்பர் ஒருவர் இருக்கிறார். நல்ல சம்பளம். நல்ல வாழ்க்கை. அவருக்குக் கருணாநிதி தெரியும். ஜெயலலிதா தெரியும். அன்பழகனையெல்லாம் தெரியாது. நத்தம் விஸ்வநாதன் என்ற பெயர் அவருக்கு சம்பந்தமேயில்லாதது. யாராவது தீவிரமாக ஒரு சமாச்சாரத்தைப் பேசிக் கொண்டிருக்கும் போது வெகு இயல்பாக தனது செல்போனை நோண்டிக் கொண்டிருப்பார்.  ‘எல்லாத்தையும் மண்டையில் நிரப்பி என்ன செய்யப் போறீங்க?’ என்று சாதாரணமாகக் கேட்கிற கட்சி அவர். Information is wealth என்கிற கட்சி நான். தேவையில்லாத தேவையற்றை தகவல்கள் என்றெல்லாம் எதையும் பிரிக்க வேண்டியதில்லை. எல்லாமே தகவல்கள்தான். தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பேன். ‘மூளை என்ன குப்பைத் தொட்டியா?’ என்று கேட்டுவிட்டு செல்போனுக்குள் புகுந்துவிடுவார்.

எது சரி என்றெல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை. அவரவருக்கு அவரவர் நிலைப்பாடு. 

கார் தயாராகும் வரைக்கும் சாலையில் அமர்ந்திருந்தேன். பாப்பநாய்க்கன்பாளையம் மின் மயானத்துக்கு ஓர் சடலத்தை எடுத்து வந்தார்கள். மரணத்துக்கு மட்டும்தான் காலம் நேரம் நல்ல நாள் கெட்ட நாள் எதுவுமில்லை. அலறல் சத்தம் சாலையை கிழித்து விசீயது. எழுந்து சர்வீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றேன். வேலையை முடித்து வைத்திருந்தார்கள். மலையாளியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். மின் மயானத்தின் புகைபோக்கியில் கரும்புகை எழுந்திருந்தது. வண்டியை அழுத்தினேன். மருத்துவமனைக்குள் நுழையவும் இன்னுமொரு ஆம்புலன்ஸ் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

4 எதிர் சப்தங்கள்:

ramass said...

எனக்கும் இந்த மாதிரியான அனுபவம் உண்டு. இருதய நோய் சிகிச்சைக்காக icu-வில் இருந்த சமயம். பல சம்பவங்கள், காட்சிகள். நல்ல உடல் நலமுள்ள உங்களையே இவ்வளவு பாதிக்குமெனில் நோயாளிகளின் மன நிலை? எனது அடுத்த படுக்கையில் மிக வயதான இருதய நோயாளி ..icu-ல் நீண்ட நாள் படுக்கை. நான் icu-ல் இருந்த அந்த இரவு, midnight, திடீரென மாரடைப்பு; படுக்கை சுற்றிலும் மறைப்பு; இருதயத்தை மீண்டும் இயக்க மருத்துவர்கள் முயற்சிகள் பயனின்றி இறந்துவிட்டார். அனைத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த என் மனநிலை? Icu-ல் பணியில் உள்ளவர்கள் இரும்பு இருதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மரணத்தைப் பற்றி தெரிந்த ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே .ஆனல் அதன் வலி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே என்று நினைப்பவர்களை எண்ணி கடவுளுக்கு வலிக்கிறது

Vinoth Subramanian said...

It happens... Hospital is a new world. I've seen in my life. If you there for fifty days, you will be used to it. True.

Jaypon , Canada said...

So touchy post Mani. I have been volunteering at NODA (No One Dies Alone)in the hospital here in Canada. It is sad to see people struggling alone in their final days of life.