Jan 22, 2016

பால்

இன்றைக்கு இந்தியாவில் பால் உற்பத்தி 140 மில்லியன் டன்னுக்கும் அதிகம். 1950களில் வெறும் பதினேழு மில்லியன் டன். வெண்மைப் புரட்சியைத்தான் கை காட்ட வேண்டும். 

1970 ஆம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் பால் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் முதற்கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என்று விரிவுபடுத்தப்பட்டது. முதற்கட்டத்தில் பால் பண்ணைகளை உருவாக்கினார்கள். இரண்டாம் கட்டத்தில் பால் பண்ணைகளை நாடு முழுக்கவும் விரிவுபடுத்தினார்கள். உருவாக்கப்பட்ட பண்ணைகளுக்கு அதிக அளவில் பால் தேவைப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு சங்களின் மூலமாக பால் வாங்கப்பட்டு பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. பால்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை சந்தைப்படுத்தப்பட்டன, கால்நடைகள் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட்டன. ஏகப்பட்ட கிராமங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. விவசாயிகள் பால் உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள். 

மூன்றாம் கட்ட வெண்மைப் புரட்சியில் இந்தப் பால் உற்பத்தி சங்கங்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் விரிவுபடுத்தப்பட்டது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட எண்பதாயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையிலான சங்கங்கள் உருவாகின. சீமைப்பசுக்களை வளர்க்கச் சொல்லி விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள். அதுவரை தங்களிடமிருந்த நாட்டுப் பசுக்கள் மூன்று அல்லது நான்கு லிட்டர் பால் வழங்கிக் கொண்டிருந்த போது ‘காலேஜ் மாடு’ என்ற பெயரிலும் ‘சீமை மாடு’ என்ற பெயரிலும் கலப்பின பசுக்கள் களமிறக்கப்பட்டன. அவை பதினைந்திலிருந்து இருபது லிட்டர் வரைக்கும் பால் கறந்தன. விவசாயிகள் மயங்கினார்கள். நாட்டு மாடுகளை மேய்க்க அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. சீமைப் பசுக்களுக்கு அந்த வேலை இல்லை. தாளி நிறைய மாட்டுத் தீவனத்தையும் புண்ணாக்கையும் கலந்து வைத்தால் போதும். நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கும். 

அதே சமயம், சினை சேர்ப்பதற்காக ஊசிகளைக் கண்டுபிடித்தார்கள். காளைகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்து போயிற்று. கன்றுக் குட்டி காளையாகப் பிறந்தால் ஒன்றிரண்டு மாதங்களுக்கு வைத்துவிட்டு பிறகு அடிமாடாக அனுப்பினார்கள். அதை வைத்துக் கொண்டு தேவையில்லாமல் தீவனம் போட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது முதற்காரணமாக இருந்தது. பசுவை தெய்வமாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் ‘நாமதான் கொல்லக் கூடாது; கண்ணுக்குத் தெரியாமல் என்னவோ நடந்துட்டு போகட்டும்’ என்கிற மனநிலைக்கு வந்து சேர வெகு காலம் பிடிக்கவில்லை.

மாட்டுத்தீவனங்களில் சேர்க்கப்பட்ட பொருட்கள் உடல் புஷ்டிக்குத்தான் முக்கியத்துவம் தந்தன. ஆரோக்கியம் இரண்டாம்பட்சம்.  நாட்டு மாடுகளுக்கு இயற்கையாக இருந்த நோய் எதிர்ப்பு சக்தி கலப்பின மாடுகளுக்கு இல்லை. இந்த பிரச்னையைச் சமாளிப்பதற்காக நிறைய கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. எந்தவிதமான நோயாக இருந்தாலும் ஊசி மற்றும் மருந்தில் சரியாகிவிடும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. மாடுகளின் உடலில் மருந்துகள் ஏற்றப்பட்டன. நோய் தீர்ந்தது. பிரச்னை எளிதில் தீர்ந்துவிடுவது போன்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. அதுவரை கால்நடைக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்த- மாடுகளைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த உள்ளூர் வைத்தியர்களின் அவசியம் படிப்படியாகக் குறைந்தது. இப்படி சீமைப்பசுக்கள் விவசாயிகளின் பிரச்னைகளைக் குறைத்துவிட்டதாக நம்பினார்கள். வருமானம் மட்டுமே முக்கியம் என்று பசுமைப் புரட்சியின் போது விவசாயிகளுக்கு சொல்லித் தரப்பட்ட மந்திரம் வெண்மைப்புரட்சியின் போது அழுத்தம் திருத்தமாக ஓதப்பட்டது. விவசாயிகள் நம்பினார்கள். கலப்பின மாடுகளின் எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்தது. திமில் கொண்ட உள்நாட்டு மாட்டு வகைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறையத் தொடங்கியது. 

வெண்மைப் புரட்சியை பட்டவர்த்தனமாகக் குற்றம் சாட்ட முடியாது. பல தொழில்களும் பெருகிக் கொண்டிருந்த சூழலில் விவசாயி நசுங்கிக் கொண்டிருந்தான். ஒரு கலப்பின மாடு இருந்தால் அவனது குடும்பச் செலவைப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற சூழல் உருவானது வெண்மைப் புரட்சி நிகழ்ந்த பிறகுதான். அந்தவிதத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் தப்பின. ஆனால் அதன் எதிர்விளைவுகள் வேறு மாதிரியாக அமைந்தது துரதிர்ஷ்டம். மாடு என்பது விவசாயத்துடனும் விவசாயியுடனும் இணைந்த ஒரு உயிர் என்ற நிலை மாறி அவை வெறும் பால் கறக்கும் ஜீவனாக மாறிப் போயின. அதற்காக எந்த மாடு அதிக பால் கொடுக்கும் என்று தேடத் தொடங்கினார்கள். இது தமிழ்நாட்டில் மட்டும் நிகழவில்லை. அனைத்து இந்திய மாநிலங்களிலும் நடந்தது. 1970களுக்குப் பிறகு படிப்படியாக நாட்டு மாடுகளின் எண்ணிக்கை சரிந்து கொண்டேதான் இருக்கிறது. 

பால் நுகர்வோர்களுக்கு நாட்டு மாட்டுப்பாலுக்கும் கலப்பின மாட்டுப்பாலுக்குமான வித்தியாசங்கள் தெரிந்தாலும் அவை வெறும் சுவை சார்ந்த வித்தியாசம் என்பதோடு பழகிக் கொண்டார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகுதான் A1 மற்றும் A2 புரதம் பற்றிய விவரங்கள் வெளிவரத் தொடங்கின. கலப்பின மாடுகளின் பாலில் இருக்கும் A1 புரதமானது சர்க்கரை நோயிலிருந்து ஆட்டிசம் வரைக்குமான பிரச்னைகள் உண்டாக்குகின்றன என்றெல்லாம் எழுதினார்கள். 

Devil in the Milk என்ற புத்தகத்தின் சில பகுதிகள் கிடைத்தது. புத்தகத்தின் ஆரம்பமே BCM7 என்பது குறித்துதான். பீட்டா கேஸோமார்பின் 7 என்பதன் சுருக்கப்பட்ட வடிவம்தான் BCM7. A1 புரதத்தை சீரணிக்கும் போது அந்தப் புரதம் உடைந்து BCM7 உடலில் உருவாகிறது. இது இருதய நோய் உள்ளிட்ட மேற்சொன்ன பிரச்னைகளின் அடிநாதமாக இருக்கிறது என்பதுதான் இந்தப் புத்தகத்தை எழுதிய கெய்த் வுட்ஃபோர்டின் முடிவு. ஒருவேளை இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மையா என்று தேடிய போது மேற்சொன்ன முடிவுகள் ‘ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை’ என்று ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருப்பதாக ஒரு குறிப்பு கண்ணில்பட்டது. ஆனால் அப்படி A1 புரதத்தில் எந்தப் பிரச்னையுமில்லை என்றால் நாட்டு மாடுகளில் இருக்கும் A2 புரதத்தை கலப்பின மாடுகளின் பாலில் உருவாக்குவதற்கான முயற்சிகள் கால்நடை ஆராய்ச்சிகளில் நடந்து கொண்டிருப்பது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கையை பெருக்க விவசாயிகளின் மனநிலை மாறினால் மட்டும் போதும் என்பது மேம்போக்கான வாதம். ஏற்கனவே விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை, பொருட்களுக்கு விலை இல்லை, பெரும்பாலான பயிர்கள் நட்டத்தைத்தான் உருவாக்குகின்றன என்கிற சூழலில் பெரும்பாலான விவசாயிகளுக்கு சீமைப்பசு தரும் லிட்டர் கணக்கான பால்தான் வாழ்வாதாரமாக இருக்கிறது. அவர்கள் பிழைக்க வேண்டுமானால் இப்போதைக்கு அதில் கை வைக்க முடியாது. நுகர்வோர்களுக்கு புரிதல் ஏற்பட வேண்டும். ‘பாதிப்புள்ள பொறக்குதய்யா பசுமாட்டை தாய்ப்பாலா நம்பி’ என்று அதீதப் புனிதப்படுத்தலை ஒதுக்கிவிட்டு நாம் குடித்துக் கொண்டிருக்கும் பாலில் இருக்கும் கெடுதல்களைப் பற்றிய தெளிவு ஏற்பட வேண்டும். 

இது குறித்து நிறையத் தேட வேண்டியிருக்கிறது. நிறையப் பேச வேண்டியிருக்கிறது. உயிர் அறிவியல் தெரிந்தவர்கள் பேசினால் இன்னமும் நிறைய விவரங்கள் கிடைக்கக் கூடும்.

எல்லாவற்றிலும் உணர்ச்சிவசப்படுவதால் எதையும் நாம் சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு நாளும் உணர்ச்சிவசப்படுவதற்கு நமக்கு ஏதாவது தேவையாக இருக்கிறது. வெள்ளம் வந்தது. எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டோம். வெள்ளம் வடிந்த போது அது குறித்தான உணர்ச்சியும் வடிந்து போனது. அடுத்த வருடம் வெள்ளம் வந்தாலும் இதே நிலைமைதான் இருக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பது பற்றியெல்லாம் யோசித்தோமா? சிம்புவை தூக்கில் போட வேண்டும் என்றார்கள்; அடுத்த நாள் ஜல்லிக்கட்டு என்றார்கள்; சகாயத்தை அரசியலுக்கு அழைத்தோம்; அப்புறம் தாரை தப்பட்டை; இப்பொழுது ரோஹித் வேமுலா. ஒரு வாரம் கழித்து பேசியதையெல்லாம் சீண்டுவதேயில்லை.

யாரையும் குற்றம் சுமத்தவில்லை. கிட்டத்தட்ட அத்தனை பேரும் இப்படித்தான் இருக்கிறோம். எல்லாவற்றையும் ஒன்றிரண்டு நாள் பேசிவிட்டு எவனாவது கிடைத்தால் கும்மிவிட்டு எப்பொழுதும் போலத்தான் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். எதில் முழுமையான தீர்வு காணப் போகிறோம்?

13 எதிர் சப்தங்கள்:

radhakrishnan said...

முற்றிலும சரிதான் மணி.எதையும் நம்பித்தொடரமுடியாது.வாழ்த்துக்கள்

Soundar said...

மிகவும் சரி. நிறைய ஆய்வுகள் பெரு நிறுவனங்களின் பொருளாதார உதவியுடன் தான் நடக்கிறது அல்லது அந்த நிறுவனங்கள் தான் நடத்துகிறது. A2 Milk என்னும் UK / Australia நிறுவனம் எத்தகைய மாடுகளில் இருந்து A2 பால் கொள்முதல் செய்கிறது என்பது தெளிவில்லை ஆனால் அவர் கனுக்கு A2 என்று வியாபரம் செய்ய மட்டும் அதிகம் முயல்கிறார்கள். நம்மூர் நெல்லூர் ஓங்கோல் அமெரிக்கா மற்றும் பிரேசிலில் அதிக பால் தேவைக்காக பயன்படுவதாய் சொல்லபடுகிறது. ஆனால் இங்கு அதற்கான முயற்சிகள் விவசாயிகளிடம் குறைவே.

kavignar said...

good post

gokul said...

////எல்லாவற்றிலும் உணர்ச்சிவசப்படுவதால் எதையும் நாம் சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு நாளும் உணர்ச்சிவசப்படுவதற்கு நமக்கு ஏதாவது தேவையாக இருக்கிறது. வெள்ளம் வந்தது. எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டோம். வெள்ளம் வடிந்த போது அது குறித்தான உணர்ச்சியும் வடிந்து போனது. அடுத்த வருடம் வெள்ளம் வந்தாலும் இதே நிலைமைதான் இருக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பது பற்றியெல்லாம் யோசித்தோமா? சிம்புவை தூக்கில் போட வேண்டும் என்றார்கள்; அடுத்த நாள் ஜல்லிக்கட்டு என்றார்கள்; சகாயத்தை அரசியலுக்கு அழைத்தோம்; அப்புறம் தாரை தப்பட்டை; இப்பொழுது ரோஹித் வேமுலா. ஒரு வாரம் கழித்து பேசியதையெல்லாம் சீண்டுவதேயில்லை.

யாரையும் குற்றம் சுமத்தவில்லை. கிட்டத்தட்ட அத்தனை பேரும் இப்படித்தான் இருக்கிறோம். எல்லாவற்றையும் ஒன்றிரண்டு நாள் பேசிவிட்டு எவனாவது கிடைத்தால் கும்மிவிட்டு எப்பொழுதும் போலத்தான் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். எதில் முழுமையான தீர்வு காணப் போகிறோம்?///

நான் உட்பட, ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த கேள்விகள் சவுக்கடி.... பிரச்னைகள் வரும்பொழுது, பொங்கி எழுவதும், புதிய பிரச்னைகள் உருவாகும்பொழுது பழையதை மறப்பதும் காலங்காலமாகவே மக்களின் இயல்பிருப்பாகவே மாறிவிட்டது... மாற்றம் தேவை... அதை செயல்படுத்துவது யார் என்பதுதான் தற்போதைய கேள்வி...!

SANTHA said...

யாரையும் குற்றம் சுமத்தவில்லை.// இதுதான் பிரச்சனையா? தவறாக இருக்கும்போது கண்டிக்காமல் விட்டதும் காரணமாக இருக்கலாம் தானே.

Anonymous said...

மணிகண்டன் சார்,

நாட்டு பசுவுக்கும், சீமை பசுவுக்கும் இவ்வளவு வித்தியாசமா? நம்பவே முடியவில்லை. பெரும்பாலும் பிராணிகள் வளர்ப்பு என்பது இப்பொழுது கொட்டகையில்தான் என்று முடிவாகிவிட்டது. ஆடு, மாடு, கோழி, காடை, வாத்து என நாம் அன்றாடம் உண்ணும் அத்தனை மாமிசமும் எந்தளவுக்கு இயற்கையானது என்பதை நம்மால் உறுதிபடுத்த முடியவில்லை.
உடையார்பாளையம் மற்றும் மீன்சுருட்டி போன்ற ஊர்களில் நடக்கும் சந்தைக்கு ஆடு வாங்குவதற்கு செல்லும்போது, சுற்றவட்டார ஊர்களில் உள்ளவர்கள் அனைவரும் மேய்ச்சல் ஆடுகளையே வாங்குவார்கள். ஆனால் அங்கு சில ஆடுகள் வரும், அவை பக்கத்திலேயே போக முடியாது அவ்வளவு நாற்றம் அடிக்கும். ஏனென்று விசாரித்ததில் அவைகள் அனைத்தும் புண்ணாக்கு போன்ற தீவனங்களை போட்டு வளர்த்தவை என்றும் அவைகள் அனைத்தும் சென்னை கசாப்பு கடை வியாபாரிகள்தான் வாங்குவார்கள் என்றும் சொன்னார்கள்.

மேய்ச்சல் ஆடுகளின் விலையை ஒப்பிடும்போது தீவன ஆடுகளின் விலை கிட்டதட்ட 40 சதவீதம் குறைவு. இதெல்லாம் எப்படிதான் சென்னை மக்கள் சாப்பிடுகிறார்களோ என்று நினைத்தேன். காலக் கொடுமை என்னவென்றால், இப்பொழுது சென்னையில் நானே அந்த மாமிசத்தைதான் வாங்குகிறேன். கசாப்பு கடையில் தொங்கும் ஆட்டின் வால் முடியை உற்று நோக்கினால் உங்களுக்கு தெரியும் அது எந்தளவுக்கு முரட்டுதனமான முடியை கொண்டிருக்கிறது என்று. நானே ஆட்டு தோலில் உப்பு வைத்திருக்கிறேன் என்பதால் சொல்கிறேன், என்னால் வித்தியாசத்தை உணர முடிகிறது.

இளவயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு, கிட்னி கோளாறுகள் வருவது நான் அன்றாடம் உண்ணும் உணவால்தானே தவிர இயற்கையாக அல்ல. பசுமை புரட்சி என்று வயல்களை நாசமாக்கினார்கள், வெண்மை புரட்சி என்று பாலை நாசாமாக்கினார்கள், இன்னும் என்ன புரட்சி செய்ய காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நம் தலைமுறை அறிவியலின் ஒரு சாபக்கேடு. நம்முடைய அடுத்த தலைமுறையை நோயாளிகளாக மாற்றுவதற்கான் அத்தனை சாத்தியகூறுகளையும் நாம் உருவாக்கிவிட்டோம். இதிலிருந்து வெளியேறுதல் என்பது மிகப் பெரிய முதலாளித்துவத்தை ஒரு சாமானியனாக எதிர்ப்பது போன்றது. எந்த அறிவியலை கொண்டு நம்மை நம் சமூகத்தை நோயாளி சமூகமாக மாற்ற நினைக்கிறார்களோ, அதே அறிவியலை கொண்டு நாமும் நம்மை காத்து கொள்ளவேண்டும்.

வாய் வழியே உட்கொள்ளும் பண்டங்கள், மாமிசங்கள், தண்ணீர், மருந்துகள், என அனைத்தும் மீண்டும் அறிவியல் சோதனைக்கு உட்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் தெரியும் நாம் உண்பது உணவா இல்லை விஷமா என்று.

சோதனைகளை நீங்கள் உங்கள் அறக்கட்டளையின் வாயிலாக செய்து அதில் குறைகளை இங்கே பதிவிட்டால் அதன் மூலம் மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி வரும், நம் அடுத்த தலைமுறை நமை வாழ்த்தும்.

நீங்கள் செய்வீர்களா மணிகண்டன். பக்கபலமாக நாங்கள் நிற்கிறோம்.

Anonymous said...

Good post...

chisa said...

Many documentary films are available in USA about this COW milk, chicken poultry, which clearly shows how the corporate companies are hiding those stuffs and how bad for health. They are trying to threaten the small business people where they grow chicken and Cow naturally. You can watch "Food Inc", "30 days Mcdonald Food" documentaries. No American president can stop this, for example Obama is trying to reduce Cool drink beverages in USA becos of high sugar content, you know how much pressure he got indirectly, now, those sales are going down becos of people have awareness. So each and every individual should understand and stop using it, this is the only way to avoid all these things. Before that, most of the world population would have some kind of serious health issues. That is the truth.

Unknown said...

ஆயுர்வேத மருத்துவம் பாலை நோயாளிகள் உணவு என சொல்கிறது நம்முதாய பழயஉணவு பழக்கத்தில் மோர் தான் அதிகம். முடிந்தவரை பாலை தவிர்ப்பது நலம்.

Anonymous said...

its true

Anonymous said...

http://www.velichaveedu.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D8/

Check the above site, A2 is almost sold as twice as the price of A1.

Rajesh said...

If you look at it philosophically, மனிதன், சாவதற்கு ஏதாவது காரணம் வேண்டும். முன்னர் சாப்பாட்டிற்காக இப்போது சாப்பாட்டினால்.

Unknown said...

எருமை பால் A1 பாலா A2 பாலா? விளக்கவும். Pls