Dec 22, 2015

வெளிச்சம்

‘அப்புறம்?’ - நேற்று தொலைபேசியில் அழைத்த ஒரு மனிதர் இப்படித்தான் ஆரம்பித்தார். எடுத்தவுடனேயே அப்புறம் என்றால் என்ன பதிலைச் சொல்வது என்று குழப்பம்.  எதிர்முனையில் யாரென்றே தெரியவில்லை.

‘சொல்லுங்க’ என்றேன்.

‘நீங்க என்னவெல்லாம் செய்யறீங்க?’ இது அடுத்த கேள்வி. தினமும் பல் துலக்குகிறேன். குளிக்கிறேன். சாப்பிடுகிறேன் என்று சொல்லலாம் என்று தோன்றியது. 

‘என்ன சார் கேட்கறீங்க?’ 

‘உங்க ட்ரஸ்ட்ல என்னவெல்லாம் செய்யறீங்க?’ 

‘ப்லாக்ல எல்லாமே இருக்கு..படிச்சுப் பாருங்க...ஏதாச்சும் சந்தேகம் இருந்தா ஃபோன் செய்யுங்க..சொல்லுறேன்’

‘நெட்ல படிக்கிறதுக்கு எனக்கு பொறுமை இல்லை’. அவர் சொன்னவுடன் எனக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. தினகரன் வசந்தம் இதழில் நேர்காணலைப் படித்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் தேடினாராம். அலைபேசி எண் கிடைத்திருக்கிறது. அழைத்துவிட்டார். பேசும் போதே அவ்வளவு மிதப்பாக பேசினார். அரசியல்வாதி போலிருக்கிறது. தான் சொல்லுகிற மனிதர்களுக்கு உதவ முடியுமா என்பதற்காக அழைத்திருந்தார். 

வேறு சில அழைப்புகளும் வந்திருந்தன. ஆனால் அவை இது போன்ற சுவாரஸியமான உரையாடலாக இல்லை. கடந்த இரண்டு நாட்களில் எழுபது மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. பெரும்பாலான மின்னஞ்சல்கள் உதவி கேட்டு வந்தவை. சில வாழ்த்துச் சொல்லி. வசந்தம் இதழில் நேர்காணல் வந்தவுடன் இவ்வளவு கோரிக்கைகள் வரக் கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. கே.என்.சிவராமனுக்கு, யுவகிருஷ்ணாவுக்கும் நன்றி. வந்திருக்கும் மின்னஞ்சல்கள் எல்லாவற்றுக்கும் இனிமேல்தான் பொறுமையாக பதில் எழுத வேண்டும். கோரிக்கைகளைச் சலிக்க வேண்டிய வேலையும் இருக்கிறது. 

திடீரென்று வெளிச்சம் விழுந்திருக்கிறது. வசந்தம் இதழ் நேர்காணலை வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை. சற்றே பரவலாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னையிலும் கடலூரிலும் வந்த வெள்ளம் இந்த வெளிச்சத்தைப் பாய்ச்சிச் சென்றிருக்கிறது. தன்னடக்கமாகச் சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்- இது தகுதிக்கு மீறிய அங்கீகாரம். 

சென்னையிலும் கடலூரிலும் எவ்வளவோ பேர் களத்தில் இறங்கிப் போராடியிருக்கிறார்கள். முகம் தெரியாத மனிதர்கள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார்கள். சாலைகளில் சாரை சாரையாக நிவாரண வண்டிகள் சென்று கொண்டேயிருந்தன. அவர்களில் யாருடைய அடையாளமும் நமக்குத் தெரியாது. மழை பெய்து கொண்டிருந்த ஓர் நள்ளிரவில் மேல்மருவத்தூர் சாலையோரக் கடையில் நின்று கொண்டிருந்த போது திருப்பூரில் இருந்து வண்டி பிடித்து சென்னை சென்று நிவாரணப் பணிகளைச் செய்துவிட்டுத் திரும்பிய ஒரு குழுவினரைப் பார்த்தோம். அந்த நேரத்திலும் அவ்வளவு உற்சாகமாக இருந்தார்கள். திண்டுக்கல்லில் இருந்து கண்பார்வையற்ற ஒரு குழுவினர் லாரி ஒன்றில் வழிநெடுகவும் பொருட்களைச் சேகரித்து அதை சென்னையில் விநியோகித்தார்கள். வெற்றி மாதிரியான தன்னார்வலர்கள் குடிசைப்பகுதிகளிலேயே உழன்றார்கள். இப்படி எத்தனையோ மனிதர்கள் சத்தமில்லாமல் செய்திருக்கிறார்கள். இத்தகைய மனிதர்களை யாருக்குமே தெரிவதில்லை. தெரியப்போவதுமில்லை. அவர்களும் எதையும் எதிர்பார்க்கவில்லை.

ஃபேஸ்புக்கையும், வலைப்பதிவையும் நான் பயன்படுத்திக் கொண்டேன். பணம் கொடுத்தவர்களுக்கு விவரங்கள் தெரிய வேண்டும் என்பதற்காக அறக்கட்டளையின் வழியாக என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தொடர்ச்சியாக பதிவு செய்ய வேண்டியிருந்தது. இது ஒருவகையில் என்னை நானே தூக்கிப் பிடித்துக் கொள்ளும் self projection ஆக மாறிவிட்டது. நிறையப் பேர் கவனிக்கவும் ‘இவன் செய்கிற வேலை பிரமாதம்’ என்கிற ரீதியிலான பிம்பம் உருவாகிவிட்டது. உண்மையில், நாம் செய்கிற செயல்களை விளம்பரம் செய்து கொள்ள வேண்டும் என்கிற நினைப்பில் அவற்றைச் செய்யவில்லை. பத்து நாட்களாக மனம் ஒரு வகையிலான கொந்தளிப்பில் இருந்தது. கொந்தளிப்பை துக்கம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அப்படியெதுவுமில்லை. தொகையின் அளவு, எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்கிற வினா போன்றவை உண்டாக்கிய கொந்தளிப்பு அது. என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையைக் கையாண்டதில்லை. ஏதாவது தவறான பெயர் வந்துவிடக் கூடாது என்கிற பதற்றமும் கூடச் சேர்ந்து கொண்டது. வெளிப்படையாக எழுதிவிடுவதுதான் எல்லாவற்றுக்கும் வடிகாலாக இருக்கும் என்பதுதான் ஒவ்வொன்றையும் எழுதுவதற்கான முதன்மையான காரணம். அது மேலும் கவனத்தை ஈர்த்துவிட்டது.

இத்தகைய வெளிச்சத்தை வெறுப்பதாகக் காட்டி பந்தா எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் சற்று கூச்சமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்குச் செல்ல வேண்டிய கிரெடிட்டை ஒருவனாக கபளீகரம் செய்வதான கூச்சம் இது. அடுத்தவர்கள் நம்மை கவனிப்பது பெரிய காரியமில்லை. தொடர்ந்து செயல்படும் போது கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் அந்தக் கவனத்தையும் விழுகின்ற வெளிச்சத்தையும் சரியாகக் கையாளும் பக்குவம் நமக்கு வந்திருக்கிறதா என்பதுதான் முக்கியம். தலையில் பெரிய பானையைச் சுமந்து கொண்டு நடப்பது மாதிரிதான். ஆசிட் பானை. அங்கீகாரங்களும் கவனிப்புகளும் நம்முடைய மனதில் சஞ்சலத்தை உருவாக்கிவிடக் கூடாது. நாளைக்கு இன்னொரு வேலையைச் செய்யும் போது அவர்கள் கவனிப்பார்களா இவர்கள் கவனிப்பார்களா என்று கவனம் சிதறிவிடக் கூடாது. சாதாரண மனித மனம்தானே? இதையெல்லாம் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இத்தகைய சஞ்சலங்களைக் கையாளுவதைத்தான் பக்குவம் என்கிறேன். எந்தவொரு புகழும் நம் பாதையை மாற்றிவிடக் கூடாது. ‘இது எல்லாமே கொஞ்ச நேரப் புகழ்தான்’ என்கிற நினைப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க மனதைப் பழக்க வேண்டும். பழக்கிவிடலாம்.

8 எதிர் சப்தங்கள்:

MAnoj said...

Anna we have into these type of activities quite longer na oru chinna 0.1 ila 0.01 sandegamo ila pirachanayo vandale avlo dan seetu kattu madiri sarukkiruvomso be care ful na we always with you ....

சேக்காளி said...

//இத்தகைய சஞ்சலங்களைக் கையாளுவதைத்தான் பக்குவம் என்கிறேன்//
நிச்சயமாக அந்த பக்குவம் உங்களுக்கு வரும்.

சேக்காளி said...

//இது தகுதிக்கு மீறிய அங்கீகாரம்//
சிலர் வெளிப்படுத்திக் கொள்ளாததால் அவர்களுக்கு கிடைக்காமலிருக்கலாம்.இதில் அவர்கள் தவறும் இல்லை.அங்கீகரிப்பவர்களின் தவறும் இல்லை.ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ளது தகுதிக்கு மீறியதாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் தவறாக கிடைத்தது அல்லவே.உயரிய நோக்கத்தோடு உழைப்பவர்களுக்கு இத்தகைய அங்கீகாரம் கூட வழங்காமல் அவர்களை எப்படித்தான் உற்சாகப்படுத்துவது?

Gurunathan said...

//அடுத்தவர்கள் நம்மை கவனிப்பது பெரிய காரியமில்லை. தொடர்ந்து செயல்படும் போது கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் அந்தக் கவனத்தையும் விழுகின்ற வெளிச்சத்தையும் சரியாகக் கையாளும் பக்குவம் நமக்கு வந்திருக்கிறதா என்பதுதான் முக்கியம்.//

Vinoth Subramanian said...

More responsibility will help to get more respect from more people.

MV SEETARAMAN said...

handling a trust needs a proper accounting, auditing which are mandatory. what is more important is openness & commitment. Purpose is to be always is the decisive factor. have clear idea on what are the area of concentration. you may periodically review. have good advisers to help you,people need help. identification of the beneficiary is not a big challenge, but you should not be fooled. never get into political arena. Politics is always partisan. best wishes.

Paramasivam said...

நீங்கள் கூறுவது போல் பலரும் இந்த நல்ல பணியில் இருந்தார்கள். உங்களையும் சேர்த்து. அதே போல் பாராட்டுகளும் எல்லோருக்கும். உங்களையும் சேர்த்து. ஆதலால் தொடரட்டும் உங்கள் பணி. எங்களின் மிக சிறு பங்களிப்புடன். வாழ்த்துக்கள்.

RAJ said...

அன்புள்ள மணி அவர்களுக்கு ,

நீங்கள் வெளிப்படையாக இருக்கிறீர்கள் . இதனால் உங்கள் அற கட்டளைக்கு நிறைய பேர் பண உதவி செய்வார்கள் , அதே சமயம் அந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை சில பேர் அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பார்கள் . எனவே கவனமுடன் செயல் படவும் .
நன்றி