Dec 23, 2015

சகாயம்

தேர்தலுக்கு இன்னமும் நான்கைந்து மாதங்கள் கூட முழுமையாக இல்லை. ஆனால் அதிமுக அரசு இவ்வளவு மெத்தனமாகச் செயல்படுகிறது என்றால் இரண்டே விஷயங்கள்தான் காரணமாக இருக்க முடியும்- இந்த முறை தோல்வியடைந்தால் பரவாயில்லை என்கிற மனநிலை. அதற்கு வாய்ப்பு இல்லை. அல்லது கடைசி நேரத்தில் மக்கள் மறந்துவிடுவார்கள் என்கிற நினைப்பு. வாக்குக்கு இவ்வளவு ரூபாய் என்று நிர்ணயம் செய்து பட்டுவாடா செய்தால் இரட்டை இலையில் குத்தித் தள்ளிவிடுவார்கள் என்கிற அசாத்திய நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதிமுகவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறடிக்கும் வேலையை மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்டவர்கள் கச்சிதமாக வேலை செய்துவிடுவார்கள் என்கிற சூழலும் உருவாகிக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது.

மக்கள் நலக் கூட்டணிக்குத் தான் செல்லவிருப்பதாக விஜயகாந்த் சொல்வதெல்லாம் பூச்சாண்டிதான். கருணாநிதியின் நுட்பம் இது. ‘அங்க போயிடுவாரோ’ என்கிற பயத்தை உண்டாக்கினால் பேரம் நடத்துவதற்கு செளகரியமாக இருக்கும். அடுத்த ஓரிரு நாட்களில் பதறியடித்துக் கொண்டு பா.ஜ.க தலைவர்கள் கேப்டனின் வீட்டை முற்றுகையிட்டார்கள். விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதில் தங்களுக்குத் தயக்கமில்லை என்பதான செய்திகள் கசிந்தன. எதிர்பார்த்ததுதான். ஓடுகிற குதிரைகளில் தான் தனிக்குதிரையாக இருக்க வேண்டும் என விஜயகாந்த் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

வெள்ளம், ஸ்டிக்கர் உள்ளிட்ட இன்னபிற விவகாரங்களில் அதிமுகவுக்கு திமுக பரவாயில்லை என்கிற மாதிரியான சூழல் இருந்தாலும் திமுகவின் மீதான வெறுப்பு முழுமையாக நீங்கிவிட்டதாகவெல்லாம் தெரியவில்லை. திமுகவுக்கு வலுவான கூட்டணி தேவையாக இருக்கிறது. காங்கிரஸை மட்டும் வைத்துக் கொண்டு சமாளிப்பது சாத்தியமில்லை. விடுதலைச் சிறுத்தைகளும் விலகிவிட்டார்கள். தேர்தலுக்குத் தேர்தல் மாநாடு நடத்தி தங்கள் வலுவைக் காட்டி பெட்டி வாங்கும் சாதிக் கட்சிகளில் பெரும்பாலானவை தங்களது கூட்டத்தை வாக்குகளாக மாற்றும் வலுவில்லாதவைதான்.

ஓர் உளவுத்துறை அதிகாரியிடம் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இத்தகையவர்களைச் சந்திக்கும் போது முதல் கேள்வியாக ‘அடுத்த முறை யாருக்கு வாய்ப்பிருக்கிறது?’ என்றுதான் கேட்கிறேன். ஆனால் அவரால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை இருந்தாலும் எதிர்கட்சிகள் வலுவாக இல்லாமல் சிதறிக் கிடக்கும் சூழலில் deciding factor என்று கருதப்படுகிற மக்களின் அலை எந்தப் பக்கம் திரும்பும் என்று கணிக்க முடியவில்லை என்றார்.


இப்படி எந்த அலையும் இல்லாத சமயங்களில் யாராவது புது ஆள் வந்துவிட மாட்டாரா என்று ஒரு கூட்டம் யோசிக்கத் தொடங்குகிறது. ட்ராபிக் ராமசாமி வந்தாலும் பரவாயில்லை; சகாயம் வந்தாலும் பரவாயில்லை என்று பேச்சை ஆரம்பிக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரி சகாயத்தை முதலமைச்சர் ஆக்கிவிடலாம் என்று அந்தக் கூட்டம் நம்புகிறது. டெல்லி போன்ற சிறிய, படித்தவர்கள் அதிகமாக வாழ்கிற, நகர்ப்புற மாநிலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டிலும் அதே ஃபார்முலாவில் சாத்தியமாகும் என்று நம்ப வேண்டியதில்லை. சென்னையிலும் கோவையிலும் திருச்சியிலும் வாக்களிப்பவர்கள் மட்டும் வாக்காளர்கள் இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவாகிற அறுபத்தைந்து சதவீத வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் கிராமப்புறத்தில் வாழ்கிற எளிய மக்களின் வாக்குகள். இவர்களிடம் சகாயம் மாதிரியானவர்களைக் கொண்டு சேர்ப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.

தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் வார்டுகள் வரைக்கும் ஆழமாக வேரூன்றியிருக்கும் திமுக அதிமுக என்ற பெரும் டைனோசர்களை மீறி சகாயத்தின் பேனரைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைவது லேசுப்பட்ட காரியமில்லை. சகாயம் மாதிரியானவர்கள் அரசியலுக்கு வருவது நல்லதுதான். இல்லையென்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் நடைமுறைச் சாத்தியங்கள் என்று பல விஷயங்கள் இருக்கின்றன. 

சமீபகாலமாக தமிழகத் தேர்தலில் காசு மிக முக்கியமான காரணியாக மாறியிருக்கிறது. காசு வாங்கிக் கொண்டு சத்தியம் வாங்குவதற்கு லட்சக்கணக்கில் கரைவேட்டிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் பல கோடி ரூபாய்களை புழங்கவிடுகிறார்கள். பெரும் கட்சிகளுக்கு எதிராக யார் தலையெடுத்தாலும் அவர்களது அந்தரங்கம் வரை அலசி நாறடிக்கும் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். களத்திலும் சரி; இணையத்திலும் சரி- இவர்களையெல்லாம் சமாளிப்பதற்கு சகாயம் போன்ற மனிதர்களிடம் என்ன ஆயுதம் இருக்கிறது?

மூன்றே மாதங்களில் மக்கள் திரள்வதும், அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதும் தமிழ் சினிமாக்களில் மட்டும்தான் சாத்தியமான ஓன்று. ஆனால் உண்மையான நிலவரம் கொடூரமானது. கருணையற்றது. எத்தகைய மனிதரையும் தனது குதிங்காலில் நசுக்கி விட்டுச் சென்றுவிடும். அரசியல் மாற்றங்கள் உண்டாக வேண்டிய காலத்தில்தான் வாழ்கிறோம். ஆனால் அதை இவ்வளவு அதிரடியாகச் செய்ய முடியாது.

ஊடகங்களின் அசுரபலம், உளவுத்துறையின் தலையீடுகள் போன்ற பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ‘நான் அடுத்த முதல்வர்’ என்று பேசுவது காசு படைத்த கனவுப்பிரியர்களுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால் சகாயம் மாதிரியான நேர்மையான அதிகாரிகளுக்கு சுலபமில்லை.  அவர் ஒன்றும் சம்பாதித்துக் குவித்து வைத்திருக்கும் அதிகாரி இல்லை. அரசியல் கைவிட்டுவிட்டாலும் கூட குடும்பத்தை நடத்திவிடலாம் என்கிற வசதியான மனிதரும் இல்லை. வேலையை விட்டுவிட்டு வந்து களத்தில் நின்றால் தேரை இழுத்து தெருவில் விட்டமாதிரி விட்டுவிட்டு போய்விடுகிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். இந்தத் தேர்தலில் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை. அடுத்த தேர்தலுக்கு அச்சாரம் போடலாம் என்று வெளியிலிருந்து பேசுவதற்கு நன்றாகத்தான் இருக்கும். அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர்தான் சமாளிக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் பயமூட்டுகிற அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆனால் அவரைப் போன்ற நல்ல மனிதருக்காக பயப்பட வேண்டியிருக்கிறது.

இந்தச் சமூகம் உணர்ச்சிவசப்படும் சமூகம். விதவிதமான உணர்ச்சிகளுக்குத் தன்னைத் தொடர்ந்து உட்படுத்திக் கொள்கிறது. அப்படியான ஒரு உணர்ச்சிவசப்படுதலின் இன்னொரு பரிமாணம்தான் சகாயத்தை முதல்வராக்குவோம் என்கிற கோஷம். இவர்களது உணர்ச்சி படுவேகமாக வடிந்துவிடக் கூடியது. மிகச் சுலபமாகத் திசை மாறக் கூடியது. இவர்களை நம்பி களமிறங்குமளவுக்கு சகாயம் விவரமில்லாதவர் அல்ல என்று நம்புகிறேன். 

சகாயம் மாதிரியானவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள். நிதி ஆதாரம், திரைக்குப் பின்னாலிருந்து வேலை செய்யக் கூடிய வலுவான அணி, ஊடகங்களின் ஆதரவு போன்றவற்றை பக்காவான திட்டமிடலுடன் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் வேலை செய்யக் கூடிய இளைஞர் குழுக்களைத் தயார் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் பாஸிடிவ்வான எண்ணம் உருவாக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் அடுத்த மூன்று மாதங்களில் சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம். இவை குறித்து சகாயத்துக்கும் தெரிந்திருக்கும். ஒருவேளை களத்தில் இறங்கினால் வென்றுவிட வேண்டும். சொல்லி அடிக்கும் கில்லி மாதிரி. தோற்று திரும்பிச் சென்றால் ‘சகாயத்துக்கு நடந்த மாதிரிதான் நடக்கும்’ என்று தவறான முன்னுதாரணமாக்கிவிடுவார்கள். அதன் பிறகு இந்தத் தமிழகம் இன்னும் பல வருடங்களுக்குக் காத்திருக்க வேண்டியிருக்கும்.

13 எதிர் சப்தங்கள்:

Bonda Mani said...

அடுத்ததாக நாம் தமிழர் கட்சி பற்றி எழுதுங்கள்.
நன்றி.

Gurunathan said...

I wrote an article on this.

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29842-2015-12-09-05-32-33

சேக்காளி said...

https://www.facebook.com/kilimookku/posts/1738017759751405?pnref=story

"சுதந்திரம்" said...

1. "குதிங்காலில் நசுக்கி விட்டுச் சென்றுவிடும்". குதி காலில் என்பதை 'குதிங்காலில்' என்கிற 'எழுத்து மருவிய சொல்லாக' உருவாக்கப்பட்ட ஒரு சொல்லை (சொல் மரபு அல்லாத புதிய சொல்லை) மிகவும் பய பக்தியோடு பயன்படுத்தியதை.... "பாதங்களில் நசுக்கி விட்டுச் சென்றுவிடும்". என்று எளிமைப்படுத்தியிருக்கலாம்.

2. பூனை இடப்பக்கம் போனால் என்ன, வலப்பக்கம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று விட்டு விடாமல் அரசியல் பூனையின் வாலை பிடித்து இழுப்பது........ அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.

ssankaran said...

After a long time, this is a very good post.

மகேஸ் said...

சகாயம் அரசியலுக்கு வந்தால் அவருக்கு கசாயம் தான் பரிசாகக் கிடை க்கும்.

பொன்.முத்துக்குமார் said...

// கடைசி நேரத்தில் மக்கள் மறந்துவிடுவார்கள் என்கிற நினைப்பு. வாக்குக்கு இவ்வளவு ரூபாய் என்று நிர்ணயம் செய்து பட்டுவாடா செய்தால் இரட்டை இலையில் குத்தித் தள்ளிவிடுவார்கள் என்கிற அசாத்திய நம்பிக்கையில் இருக்கிறார்கள் //

உண்மை இதுதான். ஒவ்வொரு முறை வாக்களிக்கும்போதும் ‘எனது வாக்கு வீணானாலும் பரவாயில்லை, ஒரு கொள்ளையனுக்கோ, பொறுக்கிக்கோ, குற்றவாளிக்கோ, மொள்ளமாறிக்கோ, முடிச்சவிக்கிக்கோ வாக்களிக்கமாட்டேன்’ என்ற உறுதியோடு நாம் வாக்களித்திருந்தால் இன்று ‘எவர் வருவார் நம்மை மீட்க’ என்று பரிதாபமாக அலைந்துகொண்டிருக்கமாட்டோம்.

இதெல்லாம் முதல்வன் பட பஞ்சதந்திர கதையை நிஜவாழ்வில் எதிர்பார்க்கும் நடுத்தரவர்க்க மனப்பான்மை.

அவ்வளவு ஏன், இப்போது சகாயம் வரவேண்டும் என்று பொங்கும் நேர்மைத்திலகங்களில் எத்தனை பேர் இதுவரை நேர்மையாளனுக்கு மட்டுமே (அது சுயேச்சையாக இருந்தாலும் சரி) வாக்களித்திருந்திருப்பார்கள் ? அல்லது 49-ஓ பயன்படுத்தியிருந்திருப்பார்கள் ?

ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் வானத்திலிருந்து குதித்தவர்களா என்ன ? கூசாமல் காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் நம்மிடமிருந்து தோன்றும் நமது பிரதிநிதிகள் நம்மைத்தானே பிரதிபலிப்பார்கள் ?

அன்பே சிவம் said...

'' சொல்லி அடிக்கும் கில்லி மாதிரி.//
இப்போ எனக்கு தெரிந்து இப்படிப்பட்ட தலைவர்கள் யாரும் தென்படவில்லை.

''சகாயம் மாதிரியானவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள்.//
ஆம் அவர்போன்ற 'மணி'தர்கள் தேர்தல் அரசியலுக்கப்பார்பட்டு மக்களின் நல்வாழ்வுக்கு தேவையானதை சிந்தித்து (உண்மையிலேயே நல்லாட்சி தர விரும்பும் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு) வழிகாட்டினால் போதும்.

''நான் அடுத்த முதல்வர்’ என்று பேசுவது காசு படைத்த கனவுப்பிரியர்களுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால் சகாயம் மாதிரியான நேர்மையான அதிகாரிகளுக்கு சுலபமில்லை.//

அவர் இன்னும் தேர்(வுக்கு)தலுக்கு தயாராகவே இல்லை. ஆனால் இணையத்தில் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் பேர்வழி என்று பொங்குவது விநோதமாக உள்ளது.

நம் இணைய புலிகள் சாரி.. சிங்கங்கள் சாரி.. குதிரைகள் சாரி.. யானைகள்.. சாரி சாரி எதோ ஒன்று நினைப்பதுபோல் இணையத்தால் மட்டுமே ஒரு நாட்டில் முதல்வரை, பிரதமரை அல்லது ஜனாதிபதியை உருவாக்க முடியுமென்றால் இந்நேரம் பில்கேட்ஸும் இன்னபிற தொழிலதிபர்களும்தான் உலகை ஆண்டுகொண்டிருப்பர்.

Bala said...

From one of your recent posts:
www.nisaptham.com/2015/12/blog-post_91.html

"குடிசைவாசிகளில் பத்துப் பேர்கள் வேடிக்கை பார்த்தால் ஒருவர் மட்டும் சலனமுறுகிறார். அந்த ஒருவர் மட்டும் கீழே கிடக்கும் இரண்டு பாலித்தீன் பைகளை எடுத்து ஆர்வலர்களின் பைகளில் போட்டார். மற்றவர்கள் எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. வேறு சில குடிசைவாசிகள் சுத்தம் செய்து கொண்டிருப்பவர்களை அழைத்து ‘அந்த இடத்தில் குப்பை இருக்கிறது. இந்த இடத்தில் குப்பை இருக்கிறது’ கையை நீட்டினார்கள். சுத்தம் செய்து கொடுக்க வேண்டுமாம்.

குடிசைவாசிகளில் வீட்டுக்கு ஒருவர் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வந்தாலும் கூட பத்து நிமிடங்களில் ஒரு வீதி சுத்தமாகிவிடும். ‘அவன்தான் குப்பை போடுறான். இவன்தான் குப்பை போடுறான்’ என்று அடுத்த வீட்டுக்காரர்களை நோக்கி விரல் நீட்டுவதோடு அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இத்தகைய மெத்தனத்தோடு இருக்கும் இவர்களுக்கு எவ்வளவுதான் சுத்தம் செய்து கொடுத்தாலும் அடுத்த வாரமே குப்பையை நிரப்பி வைத்துக் கொள்வார்கள் என்றுதான் நம்புகிறேன். விழிப்புணர்வு வந்திருக்கும் என்றெல்லாம் தோன்றவில்லை."

Vinoth Subramanian said...

// அவரைப் போன்ற நல்ல மனிதருக்காக பயப்பட வேண்டியிருக்கிறது.// True. Same fear. Delhi is different from tamilnadu. I think Mr. Sagayam does not need to do any sacrifice.

Vinoth Subramanian said...

// தேர்தலுக்குத் தேர்தல் மாநாடு நடத்தி தங்கள் வலுவைக் காட்டி பெட்டி வாங்கும் சாதிக் கட்சிகளில் பெரும்பாலானவை தங்களது கூட்டத்தை வாக்குகளாக மாற்றும் வலுவில்லாதவைதான்.// nan kandupidichittune!!!

Uma said...

இந்த மூன்று மாதங்களில் வேண்டாம். எப்படியும் அடுத்த 5 வருடங்களிலாவது மக்கள் மத்தியில் சகாயம் போன்ற நேர்மையானவர்கள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் பணியை இளைஞர்கள் செய்யலாமே.
இப்போது சமூக வலைத்தளங்கள் டீக்கடை பெஞ்ச் போல . இங்கு பதிவிடப்படும் விஷயங்கள் தின இதழ்களிலிருந்து காலை வாக்கிங் போகும் 60 வயதுப் பெண்கள் வரை விவாதப் பொருளாகின்றன
கொஞ்சம் மெனக்கிட்டால் நல்லதொரு மாற்றம் ஆட்சியில் வரும்தானே.

Anonymous said...

I disagree with your post. Please don't just ask others to lag behind and live in their comfort zone. An ant in a desert goes for a five minute food search despite knowing that the temperature outside will burn at the sixth minute. We can do better than that and cheer up folks. We have seen both Jayalalitha and Karunanithi (J&K); we cannot just have only two options to choose our Chief Minister. I am sure if Anna known him his character, he would have kicked him off at the beginning. The third parties in TN are being clowns for them; they pick different jokers every single game. Best example we have seen in the last election was Vijayakanth, poor guy though, thrown out of his den badly. Now he has been coined as a drunkard and a stand up comedian. It’s really a big shame for the third parties in TN. They just exist to split votes and to dilute the newcomers. I personally feel that 3 months is more than enough if there is going to be big change mean to happen. Let me rephrase the previous sentence, we had 25 years of J&K rule, is that not enough to think who has done the best for the people in TN. Answer is NONE, that simple. Karunanithi raised a big family and asking his heirs to rule the state whilst Jayalalitha making slaves for her, it a big shame that the men in her group are the slaves from the wonderful lamp of Aladdin’s, poor Nanjil Sambath. All we need to communicate to the people is, there is an alternative available in your hands and all you just need to do is to point out your forefinger and value your vote. People, please DO GET MONEY from BOTH the parties, it’s yours and it’s the only time they will give you back. DO MAKE FALSE PROMISES like J&K have done over the years. Be aware that, both J&K are waiting, they know that people are angry, the one who meets the people first will get the blame and the other will join the people to add fuel into the fire. For god sake, don't please don't share negative thoughts, it better stay away if you don’t believe in wonders.