Dec 28, 2015

தண்ணீர்

ஊரில் திருவாதிரை விரதம் கொண்டாடுவதாகவும் தம்பதி சமேதகராக வந்துவிடச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்கள். இப்படியொரு விரதத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர நேரில் பார்த்ததில்லை. பூஜை முடிந்த பிறகு மனைவி கணவனின் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்றார்கள். ‘ச்சே ச்சே நானெல்லாம் சமதர்மராஜா’ என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் உள்ளுக்குள் ஆசை இல்லாமல் இல்லை. கெத்தாக நின்று ‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க’ என்று பந்தா காட்டலாம் என்றுதான் மனதுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது. கிளம்பிச் சென்றோம். பெரிய விருந்து. நூறு பேருக்கும் குறைவில்லாமல் கூடியிருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது.

முப்பது வருடங்களில் விழாக்களும் பண்டிகைகளும் வெகுவாக மாறிவிட்டன. எனக்கு நினைவு தெரிந்து மாமன் ஊரில் தோட்டத்துக் கருப்பராயனுக்கு கிடா வெட்டுவார்கள். நள்ளிரவில் கிடாயை வெட்டி தோலுரித்து  ஆட்டுத் தலையை தீயில் வாட்டி ஆட்டுக்காதைத் தின்னக் கொடுப்பார்கள். கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதற்காகவே தூங்காமல் விழித்திருப்பேன். செம்மண் புழுதி பறக்கும் அந்தத் தோட்டத்தில் கன்னிமார் சாமிகள் என்று ஏழு கற்களை நட்டு வைத்திருப்பார்கள். கருப்பராயன் சற்றே பெரிய கல். அதுதான் சாமியாக இருந்தது. காளியாத்தா, மாரியம்மன், கருப்பராயன் என்று எப்பொழுதாவது மட்டுமே கவனிக்கப்படும் ஏழைச் சாமிகளாக இருந்தன. ஆளாளுக்கு தோட்டங்காடுகளில் உழைத்துக் கிடந்தார்கள். கடவுள்களை கவனிக்கும் தருணங்களில் கிடாய் வெட்டினார்கள். பொங்கல் வைத்தார்கள். பறை அடித்தார்கள். ஆடினார்கள். கொண்டாடித் தீர்த்தார்கள். அந்தக் கொண்டாட்டங்களின் முகம் வெகுவாக மாறிவிட்டது.

விநாயகர் சதுர்த்தியும் வரலட்சுமி விரதமும் திருவாதிரை நோன்பும் கருப்பராயனுக்கான இடத்தை வெகுவாகப் பிடித்துக் கொண்டது மாதிரிதான் தெரிகிறது. கருப்பராயனுக்கு இன்னமும் பொங்கல் வைக்கிறார்கள்தான். ஆனால் பெரும் கூட்டம் எதுவும் வருவதில்லை. ஆனால் வரலட்சுமி விரதத்தில் இத்தனை பேரை அழைத்து சாம்பார், ரசம், பாயசம், வடை என்று விருந்து வைத்து வட்ட வட்டமாக கூடி அமர்ந்து மொக்கை போடுகிறார்கள். எனக்கு சலிப்பாக இருந்தது. விருந்துக்கு என டேபிள், நாற்காலிகளை வாடகைக்கு எடுத்து வந்து அதன் மீது காகிதத்தை விரித்துவிட்டு வாழை இலை போட்டு ஒவ்வொரு இலைக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் வைத்து- இப்படி எல்லாவற்றிலும் நாசூக்கான தன்மை வந்துவிட்ட பிறகு கொண்டாட்ட மனநிலை என்பது இல்லாமல் போய்விட்டது. உணவு உண்ணும் போது கூட ஒருவிதமான நளினத்தைக் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. போலித்தனமாக பேச வேண்டியிருக்கிறது. மேம்போக்காக புன்னகைக்க வேண்டியிருக்கிறது. நாகரிகம் நம்மை படுத்தியெடுக்கிறது. 

கருப்பராயன்தான் நல்ல சாமி என்றும் வரலட்சுமி விரதத்தையும் திருவாதிரை நோன்பையும் கொண்டாட வேண்டியதில்லை என்றும் சொன்னால் தடியெடுத்து வந்து சாத்திவிடுவார்கள். 

இவர்கள் கும்பிடட்டும் என்று அறைக்குள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துக் வைத்துக் கொண்டேன். சூழலியலாளர் நக்கீரன் எழுதிய புத்தகம் அது. முப்பது பக்கங்களுக்குள்தான் இருக்கும். ‘கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்’ என்பது புத்தகத்தின் பெயர். நூல் முழுக்கவும் Virtual water பற்றித்தான் பேசுகிறார். ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் இருபது ரூபாய் என்றுதானே கணக்கு பார்க்கிறோம். ஆனால் அந்த ஒரு லிட்டர் தண்ணீரை பாட்டிலில் அடைப்பதற்கு மறைமுகமாக எவ்வளவு லிட்டர் தண்ணீரை செலவு செய்கிறோம் என்று ஒரு கணக்கு இருக்கும் அல்லவா? பாட்டில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீரிலிருந்து சுத்திகரிப்பு செய்வது வரை ஏகப்பட்ட லிட்டர் தண்ணீரை செலவழித்துத்தான் ஒரு லிட்டர் தண்ணீரை பாட்டிலில் அடைக்கிறார்கள். இப்படி செலவழிக்கப்படுகிற தண்ணீருக்கு வெர்ச்சுவல் நீர் என்று பெயர். கண்களுக்குத் தெரியாத நீர்.

ஒரு கார் தயாரிக்க லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. இரும்பை உருக்குவதிலிருந்து தொழிற்சாலையைக் கழுவுவது வரை தேவையான நீர் அது. ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. கோழி வளர்ப்பதற்குக் கூட நூறு லிட்டர் தண்ணீர் தேவை. இப்படி எல்லாவற்றிலுமே நாம் செலவழிக்கிற நீரின் அளவு கோடிக்கணக்கான லிட்டர்கள் இருக்கின்றன. ஆனால் அதை நாம் நேரடியாக உணர்வதில்லை. 

இந்தியாவின் டெட்ராய்ட் என்று ஸ்ரீபெரும்புதூரில் ஆரம்பிக்கப்பட்டிரும் வாகனத் தொழிற்சாலைகள் தினந்தோறும் செலவழிக்கும் நீரை வைத்துக் கொண்டு பல நூறு ஏக்கர் பரப்பில் விவசாயம் நடத்தலாம். ஆனால் நமக்கு கார் மட்டும்தான் கண்களுக்குத் தெரியும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை தூக்கி வீசும் செல்போன் தயாரிப்புக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. அடுக்கிக் கொண்டே போகலாம்.

காலங்காலமாக தண்ணீர் என்பது மறுசுழற்சி ஆகிக் கொண்டேயிருந்தது. ஆனால் நம்முடைய காலத்தில்தான் மறுசுழற்சிக்கே வழியில்லாதபடிக்கு அழித்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகள் விவரமாகிவிட்டன. அவர்கள் தங்களது நீர் வளத்தை காப்பதற்காக வெர்ச்சுவல் வாட்டர் ட்ரேடிங்கில் இறங்கிவிட்டார்கள். ஒரு நாடு கோதுமை உற்பத்தியில் கொடி கட்டிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கோதுமை உற்பத்திக்கு அதிகப்படியான நீர் தேவை. கிட்டத்தட்ட ஒரு டன் கோதுமைக்கு ஆயிரத்து ஐநூறு கன மீட்டர் நீர் தேவைப்படுகிறது. இவ்வளவு தண்ணீரை நிலத்திலிருந்து உறிஞ்சினால் அவர்களின் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் செல்லத் தொடங்கும். பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு இந்த சங்காத்தமே வேண்டாம் என்று கோதுமை விளைச்சலை குறைத்துவிட்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இப்படி அடுத்த நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் வழியாக தங்கள் நாட்டு நீர்வளத்தைக் காத்துக் கொள்வதன் பெயர் ‘வெர்ச்சுவல் வாட்டர் ட்ரேடிங்’. 

இந்தியா போன்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சி தேவை என்பதற்காக பொருட்களை ஏற்றுமதி செய்வதன் வழியாக வரக் கூடிய நிதி ஆதாரத்தை மட்டுமே வளர்ச்சியின் அளவுகோலாக பார்த்துக் கொண்டிருக்கும் போது ‘அட அப்படியில்லை...அவன் நூறு ரூபாயைக் கொடுக்கிறான்னு கணக்கு பார்க்காத..அதுக்கு எவ்வளவு தண்ணியை நாம வீணடிச்சிருக்கோம்ன்னு பாரு’ என்கிறார் நக்கீரன். பெப்ஸிக்காரன் ஆலை அமைப்பதும் இதனால்தான். பெல்ஜியம் கண்ணாடிக்காரன் தொழிற்சாலை கட்டுவதும் இதனால்தான்.

வெர்ச்சுவர் நீரின் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது.

திருப்பூரில் நொய்யல் நதி ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுது சாக்கடை. சாக்கடை என்று கூடச் சொல்ல முடியாது. பனியன் தொழிற்சாலையும் சாயப்பட்டறையும் வைத்து அந்த நதியைச் சாவடித்துவிட்டார்கள். அந்தப் பகுதியில் விளையும் இளநீரில் கூட கசப்பேறிக் கிடப்பதை உணரலாம். ஒரு நதியைக் கொன்று பனியனையும் ஜட்டியையும் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அவர்கள் டாலர்களைக் கொண்டு வந்து கொட்டிவிட்டு நோகாமல் நோம்பி கும்பிட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். நாம் ‘டாலர் நகரம்’ என்று வெட்டிப் பெருமை பேசிக் கொண்டு நாறிக் கிடக்கிறோம். இதேதான் வாணியம்பாடி, ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் பாலாற்றைத் தொலைத்துவிட்டு ‘நாங்கள் தோல் பதனிடும் தொழிலில் கிங்’ என்று பினாத்திக் கொண்டிருக்கிறோம். 

மேற்கத்திய நாடுகள் டாலர்களைக் கொடுத்துவிட்டு அவர்களது தேசத்தைக் காத்துக் கொள்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் டாலர்களுக்கு ஆசைப்பட்டு நம் தேசத்தின் நீரைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ளும் போது இன்னமும் பல நதிகள் செத்துப் போயிருக்கக் கூடும். நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் சென்றிருக்கக் கூடும். மறுசுழற்சி செய்யவே முடியாத பல கோடி லிட்டர் தண்ணீரை வீணடித்திருப்போம். 

இப்படியான புத்தகங்களை வாசிக்கும் போது நடு மண்டையில் நான்கு முடிகள்  நட்டுக் கொள்கின்றன. நிஜமாகவே நான்கு முடிகள்தான். என் தம்பியின் அலுவலகத்தில் ஒருவர் இருக்கிறார். சங்கர்பாபு என்று பெயர். அவர் என்னைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லிவிட்டு ‘இவனுடைய அண்ணன் தான்’ என்று சொல்லியிருக்கிறார். எதிரில் இருந்த மனிதர் அமைதியாக இருந்திருக்கலாம். ‘வயதானவரா?’ என்று கேட்டிருக்கிறார். சங்கர்பாபு அவரிடம் ‘வயசெல்லாம் ஆகலை...இவரைப் பாருங்க..இவர் மண்டையில் ரெண்டு பக்கமும் முடி இல்லைன்னா எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார்’ என்றாராம். என் தம்பிக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. வீட்டில் வந்து ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சிரிக்கிறான். தம்பியின் தலை சீக்கிரம் நரைக்கட்டும் என்று தோட்டத்துக் கருப்பராயனை வேண்டியிருக்கிறேன்.

அது போகட்டும். 

நக்கீரன் எழுதியிருப்பதையெல்லாம் யாரிடமாவது பேச வேண்டும் எனத் தோன்றியது. அந்தக் கூட்டத்தில் யாராவது சிக்குவார்கள் என்று துழாவத் தொடங்கியிருந்தேன். ‘ஏங்க.... ஆசிர்வாதம் வாங்கணும்...வந்து நில்லுங்க’ என்றாள் உமையாள். கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு ‘ம்ம்..சீக்கிரம் சீக்கிரம்’ என்றேன். நான் ஆசி வழங்கும் கெத்தை யாராவது பார்க்கிறார்களா என்று மிதப்பாக ஒரு பார்வையை ஓட்டிய போது டைனிங் டேபிளில் தண்ணீர் பாட்டில்களை வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியிருந்தது.

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//‘ஏங்க.... ஆசிர்வாதம் வாங்கணும்...வந்து நில்லுங்க’ என்றாள் //
நானும் கிளைமேக்ஸ் சுல சொதப்பத்தான் போறீர் என நினைத்தேன்.
ஆனாலும் ஜெயிச்சுட்டீரய்யா.

Anonymous said...

alert('attacked')

Jaikumar said...

ஞாயிறன்று கறி வாங்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தை கொண்டு போனால் கடைக்காரர் முதல் வாங்க வந்தவர்கள் வரை எதோ பார்க்காத ஜந்துவை போல் பார்க்கிறார்கள். ஆனாலும் விடவில்லை.
அலுவலகத்துக்கு ஸ்டீல் பாத்திரத்தில் சாப்பாடு கொண்டு போனாலும் இதே தான் நடக்கிறது.

Unknown said...

//என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ளும் போது இன்னமும் பல நதிகள் செத்துப் போயிருக்கக் கூடும். நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் சென்றிருக்கக் கூடும். மறுசுழற்சி செய்யவே முடியாத பல கோடி லிட்டர் தண்ணீரை வீணடித்திருப்போம். // பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, இதுபோன்று நிறைய இயற்க்கை வளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். இதை சரி செய்வதற்கு என்று ஏதாவது பண்ணலாம் என்றால் எதுவும் செய்ய முடியாமல் தெரியாமல் வாழ்நாளை வீணடித்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கையில் வருத்தமே. நன்றி வாழ்க வளமுடன்

Vinoth Subramanian said...

Very useful!!!