Dec 28, 2015

விருது

சென்னை இலக்கியத் திருவிழா விருது என்றவொரு விருதை நேற்று அறிவித்திருந்தார்கள். மூத்த எழுத்தாளருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் இளம் எழுத்தாளருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்குகிறார்கள். இந்த வருடம் மூத்த எழுத்தாளருக்கான விருது பாவண்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாவண்ணன் அர்பணிப்பு உணர்வு கொண்ட எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு என எழுத்தின் எல்லா வடிவத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். அவருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

இளம் எழுத்தாளருக்கான விருது மனுஷிக்கு (மனுஷி பாரதி) வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி இளம் எழுத்தாளருக்கான விருது வழங்கும் போது அந்த எழுத்தாளர் இதுவரை என்ன எழுதியிருக்கிறார்? தமிழ் இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு என்ன? எதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்பனவற்றை ஒன்றிரண்டு வரிகளிலாவது அறிவிக்கலாம். மனுஷி ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு வந்த ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ என்ற தொகுப்பு. அதன் பிறகு சில இதழ்களில் அவருடைய கவிதைகளை வாசித்ததுண்டு. வேறு ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரை தகுதியில்லாதவர் என்று சொல்லவில்லை. ஒருவேளை என்னுடைய அறியாமையாக இருக்கலாம். அறியாதவர்களுக்கு தெரியப்படுத்தவாவது விருது பெறும் எழுத்தாளரின் பங்களிப்பைத் தெரிவிக்க வேண்டுமல்லவா?

இளம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவதே அவர் மீதான ஒரு கவனத்தை உருவாக்கவும் மற்ற இளம் படைப்பாளிகளுக்கு ஒரு வழிகாட்டலாகவும்தானே?  இப்பொழுதெல்லாம் விருதை அறிவிக்கும் போது ‘இன்னாருக்கு விருது வழங்கப்படுகிறது’ என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்கிறார்கள் அல்லது இவர்களையெல்லாம் பரிசீலித்தோம் என்று பட்டியலைப் போட்டு அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு ரேங்க் கொடுத்து அதில் முதல் ரேங்க் பெற்ற இவருக்கு விருது வழங்கப்படுகிறது என அறிவித்து மற்றவர்கள் முகத்தில் சாணத்தை அள்ளிப் பூசுகிறார்கள். இரண்டுமே சரியான அணுகுமுறை இல்லை. 

இந்த விருது புகழ் பெற்ற விருது இல்லைதான். விலாவாரியாக விமர்சனம் செய்ய வேண்டியதில்லைதான். எனினும், தமிழ்ச் சூழலில் விருது வழங்குதலில் மிகப்பெரிய அரசியல் உண்டு. அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. தனிமனிதன் செய்கிற காரியத்திலேயே ஆயிரத்தெட்டு அரசியல் இருக்கும் போது ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டில் அரசியல் இருக்காதா? அதனால்தான் ஒவ்வொரு விருது வழங்கும் போதும்- அது எந்த விருதானாலும் சலசலப்பு எழுவது வாடிக்கையாகியிருக்கிறது. அத்தகைய சலசலப்பை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதை எழுதவில்லை. ஆனால் பெரும்பாலான விருதுகள் ஏன் விடைகள் இல்லாத வினாக்களுடனேயே வழங்கப்படுகின்றன என்பது குழப்பமாக இருக்கிறது.

வெளிப்படைத்தன்மையில்லாத எந்தவொரு விருதுத் தேர்வும் காலப்போக்கில் மதிப்பிழந்து குப்பையாகிவிடும். நூறு சதவீத கறார்த்தன்மையுடன் விருது வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உண்டு. மறுக்கவில்லை. ஆனால் திடீரென்று ஒரு இளம்படைப்பாளி மீது வெளிச்சத்தை பாய்ச்சும் போது குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மையாவது இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறு எதுவுமில்லை என நினைக்கிறேன்.

சென்னை இலக்கியத் திருவிழா பரிசு என்பதனை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் சொல்லவில்லை. இளம் படைப்பாளிகளுக்கான விருது என்று வழங்கப்படுகிற கிட்டத்தட்ட அத்தனை விருதுகளையும் மனதில் வைத்துக் கொண்டுதான் சொல்கிறேன். 

அதே சமயம் இளம் படைப்பாளிகளுக்கு விருது வழங்குவதை மனப்பூர்வமாக ஆதரிக்க வேண்டும். அடுத்த தலைமுறை படைப்பாளிகளை எந்தவிதமான மனச்சாய்வுமில்லாமல் பாராட்டக் கூடிய மூத்த எழுத்தாளர்கள் அருகிவிட்ட சூழல் இது. தங்களுக்கான இடம் காலியாகிவிடுமோ என்று பதறி பாய்ந்து கொண்டிருக்கிற மூத்த எழுத்தாளர்கள் நிறைந்து கிடக்கிறார்கள். தமக்குப் பின்னால் வரக் கூடிய படைப்பாளிகள் எழுதுவதையெல்லாம் வாசித்து கை தூக்கிவிடுவதற்கான மனநிலை பெரும்பாலானவர்களிடமில்லை. இத்தகைய சூழலில் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை கவனித்து அவர்களுக்கு விருது கொடுத்து உற்சாகமூட்டக் கூடிய அமைப்புகளை நிச்சயமாகப் பாராட்டலாம். ஆனால் அதே சமயம் அந்த விருதானது மற்ற இளம் படைப்பாளிகளை உற்சாகமூட்டுவதாக இருக்க வேண்டும். ‘ச்சே...எல்லாம் பாலிடிக்ஸ்’ என்று வெறுப்படையச் செய்வதாக இருக்கக் கூடாது. 

பொதுவாகவே எந்தவொரு விருதாக இருந்தாலும் அந்த விருதுக்கு ஆயுள் உண்டு. 2013 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது என்று கேட்டால் முக்கால்வாசிப்பேர் விக்கிப்பீடியாவில் துழாவுவோம். நோபல் பரிசுக்கே அந்த நிலைமைதான். ஆனால் அந்த குறிப்பிட்ட படைப்பாளி மீதான கவனத்தை உருவாக்குகிறது அல்லவா? அது முக்கியம். ஆலிஸ் முன்றோவை ஏகப்பட்ட பேர் தேடிப் பார்த்திருப்பார்கள். அவரது படைப்பை வாசித்திருப்பார்கள். விருப்பமிருக்கிறவர்கள் தொடர்வார்கள். மற்றவர்கள் விட்டுவிட்டு தங்களது வேலையைப் பார்க்கத் தொடங்குவார்கள். இது கிட்டத்தட்ட அத்தனை விருதுகளுக்கும் பொருந்தும். நோபல் பரிசு பல லட்சம் பேர்களிடம் நம் பெயரைக் கொண்டு சேர்க்கும் என்றால் மற்ற விருதுகள் அதனதன் வீரியத்திற்கு ஏற்ப தேடுகிறவர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்கின்றன. பிறகு மெல்ல அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிடும்.

சென்னை இலக்கியத் திருவிழா விருது மனுஷியின் மீது கவனத்தை உருவாக்கியிருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். ரவி சுப்ரமணியனும், தமிழச்சி தங்கபாண்டியனும் விருது வழங்கும் குழுவில் நடுவர்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேர் மீதும் மரியாதை உண்டு என்றாலும் இவற்றைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. தனிமனிதன் செய்கிற காரியத்திலேயே ஆயிரத்தெட்டு அரசியல் இருக்கும் போது ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டில் அரசியல் இருக்காதா?//
?

Manushi said...

வணக்கம். உங்கள் பதிவுக்கு முதலில் என் அன்பும் நன்றியும்.
குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் - மித்ர வெளியீடு
முத்தங்களின் கடவுள் - உயிர்மை வெளியீடு
ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகள் (அச்சில்) - உயிர்மை வெளியீடு.
இவை தவிரவும் சிறுகதைகள் சில வெளியாகியுள்ளன. தொகுப்பு வரவில்லை.