Dec 15, 2015

கோழிக் கூடு

வீட்டில் ஐந்தாறு கோழிகள் இருக்கின்றன. என்னுடைய வேலைதான். பண்ணைக் கோழிகளில் கண்ட கண்ட ஊசியைக் குத்துகிறார்கள் என்பதால் வீட்டிலேயே கோழி வளர்க்க வேண்டும் என்ற ஆசையின் விளைவு. இப்படி ஏதாவது எடக்கு மடக்காக ஆசைப்பட்டால் வீட்டில் இருக்கிறவர்கள் கதறுவார்கள். இப்படித்தான் லவ் பேர்ட்ஸ் வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டு ஒரு கூண்டு வாங்கி அதில் இரண்டு குஞ்சுகளை- பீப் சப்தமெல்லாம் தேவையில்லை- குருவிக் குஞ்சுகளை விட்டு வைத்திருந்தேன். முதல் பத்து நாட்களுக்கு ஆசையாக இருந்தது. அதன் பிறகு அத்தனை வேலைகளையும் அப்பா தலையில் கட்டிவிட்டேன். அவர்தான் தீனி வைக்க வேண்டும். தண்ணீர் வைக்க வேண்டும். அவ்வப்போது கூண்டையும் கழுவ வேண்டும். திடீரென்று ஒரு நாள் குஞ்சுகளைக் காணவில்லை. பறக்கவிட்டுவிட்டாரா என்று தெரியவில்லை. அலுவலகம் முடித்து மாலையில் வீடு திரும்பிய போது இரண்டு குருவிகளும் செத்துப் போனதாகச் சொல்லி வாயை அடைத்துவிட்டார். அவர் வயதுக்கு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியுமா? ‘எப்படி ரெண்டும் ஒரே நாள்ல செத்துப் போகும்’ என்று மண்டைக்குள் இன்னமும் குடைந்து கொண்டேயிருக்கிறது. 

அதன்பிறகாக மீன் தொட்டி.

எங்கள் ஊரில் வாய்க்காலில் தண்ணீர் வற்றாமல் ஓடிக் கொண்டிருப்பதால் அவ்வப்போது கெண்டையும் ஜிலேபியும் பிடித்து வந்து வளர்ப்பது வழக்கம். யாராவது கேட்டால் ரோஸ்ட் போடுவதற்காக வளர்ப்பதாகச் சொல்லியிருக்கிறேன். ஆசையாக வளர்த்து ரோஸ்ட் போட விரும்பிய கிராதகன் நான். ஒரு நாள் எங்கேயோ கிடைத்த பிராந்தி பாட்டில் நிறைய மீன்களைப் பிடித்து வைத்திருந்தேன். என்னிடம் இருந்த மீன்களின் எண்ணிக்கையைப் பார்த்த ஊளைமூக்கு சரவணனுக்கு பொறாமை சுடர் விட்டிருக்க வேண்டும். வெயிலில் வைத்தால்தான் மீன் நன்றாக வளரும் என்று கிளப்பிவிட்டுவிட்டான். ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்றெல்லாம் கேள்வி கேட்காத மேதையாக நான் இருந்த காலம் அது. அவனாகவே ‘செடி மாதிரிதாண்டா மீனும்’ என்றான். அவனை நம்பி வெயிலில் வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டேன். திரும்ப வந்தால் அத்தனை மீன்களும் சிதைந்து போய்க் கிடக்கின்றன. ‘என்ன ஆகியிருக்கும்’ என்று விரலை விட்டால் கொப்புளிக்காத குறைதான். அத்தனை சூடு ஏறிக் கிடந்தது. மேலுலகம் சென்றால் எனக்கு சிறிய எண்ணெய்க் கொப்பரையும் சரவணனுக்கு மிகப்பெரிய கொப்பரையும் உண்டு என்று நினைத்துக் கொண்டேன். இப்படி மீன் வளர்ப்போடு விட்ட குறை தொட்ட குறை உண்டென்பதால் பெங்களூரில் வீடு கட்டியவுடன் மீன் தொட்டி வாங்க வேண்டும் என்று தலை கீழாக நின்றேன். அப்பொழுதே வீட்டில் எல்லோருக்கும் ஒரு பதற்றமிருந்தது. இவன் எப்படியும் அடுத்தவர்களுக்குத்தான் வேலையைத் தள்ளிவிடுவான் என்று மாற்றி மாற்றிப் பேசினார்கள். சத்தியம் செய்து மீன் தொட்டியை வாங்கி வைத்தேன். முதல் இரண்டு மாதங்களுக்கு எல்லாமும் சரியாகத்தான் போயின. அதன் பிறகு மெதுமெதுவாகத் தம்பிக்கு பொறுப்புகளைத் தள்ளிவிட்டேன். அதுவும் ஆரம்பத்தில் மீன் தொட்டியின் மோட்டாரை மட்டும் கழுவித் தரச் சொன்னதை நம்பிக் கழுவிக் கொடுத்தான். அடுத்தடுத்த முறைகளில் தண்ணீரை மாற்றும் போது வாளியைக் கொண்டு போய் வெளியில் ஊற்றிவரச் சொன்னேன். அதையும் செய்தான். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளைத் அவனுக்குக் கொடுத்துவிட்டு நான் இலாவகமாகத் தப்பித்துவிட்டேன்.

இப்பொழுதெல்லாம் அவன்தான் மொத்த வேலைகளையும் செய்கிறான். ஒவ்வொரு முறை மீன் தொட்டியைக் கழுவும் போது கண்டபடி திட்டுகிறான். ‘உனக்கு எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு’ என்று அவன் கேட்பது வரைக்கும்தான் இங்கு எழுத முடியும். அதன் பிறகு அவன் பேசுவதையெல்லாம் பீப் ஒலிகளால் நிரப்பிக் கொள்க. காதில் பஞ்சை வைத்தாலும் கூட தாக்குப் பிடிக்க முடிவதில்லை. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறேன். அவன் மீன் தொட்டியைக் கழுவும் போதெல்லாம் அம்மாவோ அப்பாவோ அருகில் இருந்தால் போதும் என்று காட்டு மாரியாத்தாவை வேண்டாத நாள் இல்லை. கொஞ்சம் வசையும் திட்டும் குறையும் அல்லவா?

இந்த லட்சணத்தில்தான் கோழிக் கதை. கோழி வளர்ப்பதால் பெரிய வீடு என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பெங்களூரில் பெரிய வீடு கட்டுவதற்கு ரெட்டியாகப் பிறந்திருக்க வேண்டும். சிறிய வீடுதான். ஆனால் வீட்டு மொட்டை மாடியில் ஐந்தாறு கோழியை வளர்ப்பதற்கு ஏற்ப ஒரு இடத்தைத் தயார் செய்து வைத்திருந்தேன். அப்பொழுதே இவர்களுக்கு சந்தேகம்தான். எதற்கு கூடு என்று திரும்பத் திரும்பக் கேட்டார்கள். புறாக்கள் வந்து தங்கிக் கொள்ளும் என்று சொன்னதை அவர்கள் நம்பவில்லை. ‘ஒரு மனுஷனே உள்ளே படுக்கலாம் போலிருக்குதே’ என்றார்கள். ‘அதுக பாவம்...வசதியா காலை நீட்டித் தூங்கட்டும்’ என்று பதில் சொன்னதைக் கேட்டுக் கண்டபடி முறைத்தார்கள். ‘அம்மா..இவன் ஏதாச்சும் நாய் நரின்னு கொண்டு வந்தான்னா அவனை வீட்டுக்குள்ளேயே விடாதீங்க’ என்று பற்களை கடித்துக் கொண்டே தம்பி சொன்னான். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றேன்.

கூடு கட்டிய சில நாட்களில் ஒரு முகூர்த்த நாளாகப் பார்த்து சந்தாப்புராவிலிருந்து ஐந்து கோழிகளை வாங்கி வந்துவிட்டேன். சந்தைப் புரம் என்பதன் கன்னட வடிவம்தான் சந்தாப்புரா. பெரிய சந்தை அது. கோழியுடன் வந்ததைப் பார்த்து வீட்டிற்குள்ளேயே விடவில்லை. அவர்களுக்கு இருந்த கடுப்பில் என்னையும் கோழிகளோடு சேர்த்துத் துரத்திவிடுவார்கள் போலிருந்தது.  ‘அய்யோ நம்புங்க..நான் பார்த்துக்கிறேன்’ என்று போராடி கோழிகளுக்கும் குறிப்பாக எனக்கும் வீட்டிற்குள் இடம் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கோழிகள் பெரிதாகிவிட்டன. அப்பாதான் தீனி வைக்கிறார். அது பெரிய வேலை இல்லை. வெளியில் நின்றபடியே தூவினால் போதும். தண்ணீர் வைப்பது கூட சிரமமான காரியமில்லை. அதையும் அவர்தான் செய்கிறார். ஆனால் கூண்டைக் கழுவுகிற வேலை இருக்கிறதே! அட சாமி. அதை மட்டும் என்னிடம் தள்ளிவிடுகிறார்கள். கழுவிவிட்டு வந்தால் இரண்டு வேளை சோறு உள்ளே இறங்காது. என்னதான் குளித்தாலும் மூக்கைவிட்டு நாற்றம் போவதில்லை. நின்று கொண்டு கழுவ முடியாது. மேலே தலை இடிக்கும். குந்த வைத்து அமர்ந்துதான் கழுவ முடியும். கால் வலி கடுகடுக்கும். ஆனால் ஒருவரும் கருணையே காட்டுவதில்லை. மாதம் ஒரு நாள் ‘போய் கோழிக் கூட்டைக் கழுவிவிடு’ என்று பாட்டுப்பாட ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களை எப்படியாவது சமாளித்துவிடுவேன் என்பதால் மகியையும் யுவியையும் உசுப்பேற்றிவிடுகிறார்கள். ‘அப்பா கோழிக்கூட்டைக் கழுவலாம்’ ‘பெரீப்பா கோழிக் கூட்டைக் கழுவலாம்’ என்று அவர்கள் கொத்தித் தள்ளிவிடுகிறார்கள். தப்பிக்கவே முடிவதில்லை. ஒரு கர்ச்சீப்பை முகத்தில் கட்டிக் கொண்டு உள்ளே புகுந்தால் பஜனை நடப்பது மாதிரிதான். நொந்து போய்விட வேண்டும். கர்ச்சீப்பைக் கட்டியிருப்பதால் எச்சில் கூட துப்ப முடிவதில்லை. ரணகளம்தான். சீக்கிரமாக ஐந்து கோழிகளையும் ரோஸ்ட் போட்டால் மட்டுமே எனக்கு விடிவுகாலம் வரும் போலிருக்கிறது.

அதுவும் ஏதாவது சந்தோஷமாகச் சொல்லும் போது இந்த ரணகளத்தை நினைவுபடுத்திவிடுகிறார்கள். இன்று காலையில் ‘இந்த வாரமும் சென்னை போறேன்’ என்றேன். அம்மாவும் அப்பாவும் கோரஸாக ‘எதுக்கு?’ என்றார்கள். ‘சுத்தம் பண்ணுறதுக்கு’ என்றேன். அதுவரை எங்கே இருந்தான் என்று தெரியவில்லை. படுவேகமாக வெளியில் வந்து ‘முதல்ல கோழிக் கூட்டைச் சுத்தம் பண்ணுடா’ என்கிறான் தம்பிக்காரன். ‘ஊட்டுல ஒரு வேலை செய்ய மாட்டானாமா....ஊருக்கு சேவகம் பண்ணுறானாமா’ என்று முனகுகிறான். என்ன பதிலைச் சொல்வது? எதைச் சொன்னாலும் ஆளாளுக்குக் கடித்து வைத்துவிடுவார்கள். ‘சனிக்கிழமை கழுவி விடுறேன்’ என்று சொல்லி வைத்திருக்கிறேன். அநேகமாக வெள்ளிக்கிழமையே பேருந்து ஏறிவிட வேண்டும். 

12 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//பீப் சப்தமெல்லாம் தேவையில்லை//
அந்த பாட்டை(பாடலை)கேட்டுட்டாராமாம்.
இதுக்கெல்லாம் ஒரு பதிவாய்யா.நெம்ப ஆடாதேரும்.எவண்டா கேப்பான் னு ஆடுனவுங்க ஆட்டத்த மழ வந்து நிப்பாட்டிருக்கு.சாக்குரத.

Anonymous said...

Ayayo, unga veetla irukavanga itha padicha neega matikuveengale!!

Avargal Unmaigal said...

உங்க வீட்டுகாரங்களுக்கு ஒரு அட்வைஸ். மணிகண்டனை ஒரு நாய் வாங்கி வளர்க்க சொல்லுங்க அதன் பின் அவர் ஊர் சுற்றப் போவது குறைந்து போகும் அதை விட்டு பிரிந்து போக அவருக்கு மனசே வராது

அன்பே சிவம் said...

வொய் பிளட் சேம் பிளட்.?

இப்படித்தான் எங்க ஊட்டுலயும், ஊருலையும். மா- (பீப். சவுண்டு)-ம் கப்பலேறிக்கிட்டே இருக்கு.

Mahalingam said...

Mani ..Ore commode thaan..

ADMIN said...

"கோழி யாரு வாங்கிட்டு வந்து விட்டா..."
"நான்தான்"
"அப்போ நீங்கதான் கோழிக்கூண்டை கழுவணும்"
"ஙே...!!!!"

சார் ஏதாவது புரியதா?

Unknown said...

sirichu sirichu vai valikkuthu :)

சுப இராமநாதன் said...

>>>>>>> மேலுலகம் சென்றால் எனக்கு சிறிய எண்ணெய்க் கொப்பரையும் சரவணனுக்கு மிகப்பெரிய கொப்பரையும் உண்டு என்று நினைத்துக் கொண்டேன்.

:-)

Unknown said...

‘அதுக பாவம்...வசதியா காலை நீட்டித் தூங்கட்டும்’ என்று பதில் சொன்னதைக் கேட்டுக் கண்டபடி முறைத்தார்கள். ‘அம்மா..இவன் ஏதாச்சும் நாய் நரின்னு கொண்டு வந்தான்னா அவனை வீட்டுக்குள்ளேயே விடாதீங்க’ என்று பற்களை கடித்துக் கொண்டே தம்பி சொன்னான்.

Anonymous said...

அண்ணா உங்களால் எப்படி இப்படி எழுத முடிகிறது.
வடிவேல் சொல்வது போல், "இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு".
அருமை...

Ponchandar said...

ஹ...ஹ...ஹா......
வெள்ளிக்கிழமை ஞாபகப்படுத்தறேன் பஸ் ஏறுவதற்கு ! ! !!

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹ்......ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா ன்ற மாதிரி இருக்குதே...