Nov 6, 2015

செல்லாயுதம்

இருபது வருடங்களுக்கு முன்பாக கூட பெரும்பாலான பெற்றோர்கள் ‘குழந்தைங்களுக்கு பணத்தோட அருமை தெரியணும்’ என்பார்கள். பக்கத்து வீட்டுப் பையன் நூறு ரூபாய்க்கு செருப்பு அணிகிறான் என்பதற்காக தம் வீட்டுக் குழந்தைக்கும் அதே அளவிலான விலையில் செருப்பு வாங்கிக் கொடுக்கத் தயங்குவார்கள்.  ‘இன்றைக்கு செருப்பு கேட்டால் வாங்கிக் கொடுக்கிறோம். நாளைக்கு பைக் கேட்பான். வாங்கித் தர முடியுமா?’ என்று அப்பா கடுப்பாகப் பேசினால் ‘நம் வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொடுத்தால் போதும்’ என்று அம்மா அதற்கு ஒத்து ஊதுவார். பொருளாதார முரண்பாடுகள் நிறைந்த இந்தியச் சூழலுக்கு அது சரியான வளர்ப்பு முறையாகவும் இருந்தது. பெரும்பாலான குழந்தைகள் தாங்கள் வளரும் போதே குடும்பச் சூழலை புரிந்து கொண்டவர்களாக வளர்ந்தார்கள். 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலகமயமாக்கல் என்ற பெயரில் ஒரு குண்டைப் போட்டார்கள். நூறு கோடி மக்கள் நிறைந்த இந்தியச் சந்தை உலக நாடுகளுக்காக திறந்துவிடப்பட்டது. பொருட்கள் குவியத் தொடங்கின. கார்போரேட்கள் கால் வைத்தார்கள். மத்திய மற்றும் வசதியான குடும்பங்களில் முன்பிருந்ததைக் காட்டிலும் பணப்புழக்கம் அதிகமானது. இதெல்லாம் சேர்த்து குழந்தை வளர்ப்பு முறையிலும் பெரும் மாறுதல்களைக் கொண்டு வந்தன. வசதி படைத்தவர்கள் கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் வாங்கித் தரத் தொடங்கினார்கள். வசதி இல்லாதவர்கள் விட்டேனா பார் என்று சிரமப்பட்டாவது பொருட்களை வாங்கினார்கள். அதுவரையிலும் ‘தேவைக்கு ஏற்ப மட்டும் பொருட்களை வாங்க வேண்டும்’ என்கிற நம்முடைய இந்திய மனநிலை தலைகீழாக மாறி ‘பொருட்களை வாங்கிக் கொண்டு அதன் தேவையை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற நுகர்வோர் கலாச்சாரத்தை வந்தடைந்தது. consumerism. எங்கள் அப்பா ஒரு பேனாவை வாங்கி தேயத் தேய எழுதுவார். அப்படி ஒரு பேனாவை வருடக்கணக்கில் வைத்திருந்த முந்தைய தலைமுறையிலிருந்து வெகுவாக மாறி வருடத்திற்கு மூன்று செல்போன்களை மாற்றுகிறவர்களாகியிருக்கிறோம். ஆறு வயதுக் குழந்தை செல்போனில் உள்ளே புகுந்து வெளியே வருகிறது. யாருடைய உதவியும் அதற்குத் தேவையில்லை. நம்முடைய செல்போனில் நமக்குத் தெரியாத ஒரு அம்சமாவது நம் குழந்தைக்குத் தெரியும். ‘எம் பையனுக்கு செல்போன்ல எல்லாமே தெரியும்’என்று யாராவது சொல்லும் போது சற்று பதற்றமாக இருக்கிறது. செல்போன் என்பது வெறும் கருவி மட்டுமில்லை இருண்ட உலகம் அது. யாராக இருந்தாலும் வகை தொகையில்லாமல் உள்ளே இழுத்துக் கொள்ளும். 

சமீபத்தில் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்தது. பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். பிரச்சினை சிக்கலானது. ஏழெட்டு மாதங்களாகவே அவனிடம் ஒரு செல்போன் இருந்திருக்கிறது. மாநகரங்களில் பள்ளி மாணவர்கள் தமக்கெனெ செல்போன் வைத்திருப்பது இயல்பானதுதானே? அதனால் பெற்றவர்களும் அதிகமாகக் கண்டுகொள்ளவில்லை. எந்நேரமும் அதையே நோண்டிக்கொண்டிருக்கிறான் என்று எப்பவாவது விசாரிக்கும் போதெல்லாம் வாட்ஸப் என்றோ ஃபேஸ்புக் என்றோ அல்லது விளையாடுகிறேன் என்று சொல்லியோ சமாளித்திருக்கிறான். வீட்டில் இருப்பவர்களும் நம்பிவிட்டார்கள். இந்தச் சமயத்திலேயே அவன் படிக்கும் பள்ளியின் நிர்வாகத்தினர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருக்கிறார்கள். யாரோ சிலர் தங்கள் பள்ளி ஆசிரியைகளை ஆபாசமான கோணங்களில் படம் எடுத்து அதை வாட்ஸப்பில் பரப்பிவிடுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். விசாரணை பள்ளி வளாகத்திலேயே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது. கடைசியில் விலங்கு இவன் கையில் விழுந்திருக்கிறது. 

வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் இவன் சில ஆசிரியைகளை படம் எடுத்திருக்கிறான். அதோடு நில்லாமல் அவற்றை வாட்ஸப் வழியாக சில நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கிறான். வாட்ஸப்பும் அனுமார் வாலும் ஒன்று அல்லவா? பற்றி எரியத் தொடங்கிவிட்டது. அந்தப் படங்கள் ஊர் தாண்டி கடல் தாண்டி கண்டம் தாண்டி பறந்து கொண்டிருக்க இவனுடைய வாழ்க்கை தண்டமாகிவிட்டது. ஆசிரியைகள் மனது வைத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டால் பையன் தப்பிக்கலாம் என்றார்கள். ஆனால் ஆசிரியைகள் என்ன முடிவெடுப்பார்கள் என்று தெரியாது. குடும்பத்தினர் கெஞ்சிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். கெஞ்சாமல் விட முடியுமா? படித்த குடும்பம். நல்ல வசதி. ஒரே பையன். வயதுக் கோளாறு. கையில் வசமாக செல்லாயுதம் சிக்கியிருக்கிறது. பையன் மாட்டிக் கொண்டான்.

எங்கே பிரச்சினை இருக்கிறது? ‘பத்தாம் வகுப்பு பையனுக்கு எதுக்குய்யா செல்போன் வாங்கிக் கொடுத்தீங்க?’என்று பெற்றவர்களைக் கேட்டால் ‘அவங்க க்ளாஸ்ல எல்லோருமே வெச்சிருக்காங்க..இவன் கேட்டா எப்படி முடியாதுன்னு சொல்லுறது?’ என்பார்கள். ‘அதுக்கு எதுக்கு ஸ்மார்ட் ஃபோன்? பேசற அளவுக்கு பேஸிக் மாடல் வாங்கிக் கொடுத்தா போதுமே’ என்றால் ‘மூணாயிரத்துக்கே நல்ல ஃபோன் கிடைக்குதே’ என்கிறார்கள். அதுதான் பிரச்சினை. இங்கு கார்போரேட் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிகழ்கிறது. பத்து ரூபாய்க்கு ஒரு நிறுவனம் பற்பசையை விற்றால் அடுத்த நிறுவனம் ஒன்பது ரூபாய்க்கு பற்பசையில் வண்ணமும் சேர்த்துத் தருகிறது. இவர்கள் இரண்டு பேரையும் காலி செய்ய மூன்றாவது நிறுவனம் எட்டு ரூபாய்க்கு தருவதாகச் சொல்லி வண்ணத்தோடு நறுமணத்தையும் சேர்த்துத் தருகிறார்கள். பற்பசைக்கே அப்படியென்றால் எலெக்ட்ரானிக் பொருட்களில் கேட்க வேண்டுமா? பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு அலைபேசியை வாங்கினால் அதில் ஆயிரக்கணக்கான மென்பொருட்களைத் தருகிறார்கள். பல நூறு வசதிகளைத் தருகிறார்கள். இவற்றில் முக்கால்வாசி நமக்கு அவசியமேயில்லாததாக இருக்கும். இருந்தாலும் பெருமைக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ ‘சும்மாவாவது’ வைத்துக் கொள்வோம். 

இப்படி தேவைக்கு அதிகமாகக் கிடைப்பவனவற்றை நம் சுதந்திரத்துக்கான சிறகுகள் என்று நினைக்கிறோம். அப்படியில்லை. நினைப்புதானே பிழைப்பைக் கெடுக்கும்? இவை சுதந்திரமும் இல்லை சுண்ணாம்புக்கட்டியும் இல்லை. நம்மைச் சுற்றி அமைக்கப்படும் வலைப்பின்னல்கள். சுடர்விட்டு எரியும் விளக்கை நோக்கி விட்டில் பூச்சிகள் வந்து விழுவதைப் போல நாம் தொழில்நுட்பம் என்கிற நெருப்புக் குழிக்குள் விழுந்து கொண்டிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி தேவையே இல்லை என்று சொல்லவில்லை. தேவைதான். ஆனால் நம்முடைய மனம் பக்குவமடையும் வேகத்தைக் காட்டிலும் பன்மடங்கு வேகத்தில் தொழில்நுட்ப வசதிகள் வந்து குவிகின்றன. பத்தாம் வகுப்பு பையனும் பொண்ணும் மனதளவில் துறுதுறுவென்று இருக்கும் சமயத்தில் கையளவு செல்போனில் இணையம் எல்லாவற்றையும் கொண்டு வந்து கொட்டுகிறது. இந்த வயது நல்லதைத் தேர்ந்தெடுக்கும் என்று சொல்ல முடியாது. கெட்டதைத்தான் தேர்ந்தெடுக்கும். காலங்காலமாக எதையெல்லாம் விதிகள் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறோமோ அதை மீறத்தான் மனம் முயற்சிக்கும். இந்த வரையறை உடைப்புகளும் விதிமுறை மீறல்களும்தான் அடுத்த தலை முறைக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரும் சவால். ஒரு பக்கம் மனதுக்குள் குப்பைகள் சேர்ந்து கொண்டேயிருக்க அதை வெளியேற்ற வழி தெரியாமல் தவிக்கும் மனநிலைதான் இளந்தலைமுறையின் மிகப்பெரிய மன அழுத்தம். அது இயல்பான வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது.

சரி இதையெல்லாம் எப்படி சமாளிப்பது? 

குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கித் தர வேண்டியதில்லை. நாமாக இருந்தாலும் சரி நம் குழந்தைகளாக இருந்தாலும் சரி. நமக்கான தேவைகள் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். அந்தத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும்படியான பொருட்களை வாங்கினால் போதும். விலை சல்லிசாக இருக்கிறது என்பதற்காக கண்டதையெல்லாம் வாங்கிக் குவிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து வெளியில் வர வேண்டும். இது பெரியவர்களுக்கு ஓரளவு இயலக்கூடிய காரியம்தான். புரிதல் இருந்தால் தொழில்நுட்ப மற்றும் நுகர்வியல் அடிமைத்தனத்திலிருந்து விலகிவிடலாம். ஆனால் குழந்தைகளிடம் அது சாத்தியமில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அல்லது மாணவியிடம் திடீரென்று ‘இனி நீ ஸ்மார்ட்ஃபோனைத் தொடக் கூடாது’ என்றால் கடுப்பாகிவிடுவார்கள். ‘எங்க அம்மாவும் அப்பாவும் மோசம்’ என்று நினைக்கத் தொடங்குவார்கள். அதனால் அவர்களிடம் பேசத் தொடங்க வேண்டும். ‘தேவைக்கு மிஞ்சிய எதுவுமே அவஸ்தைதான்’ என்பதை பெற்றோர்-மகன் என்கிற உறவிலிருந்து விலகி நண்பர்கள் என்ற நிலையிலிருந்து உணர்த்த வேண்டும். இதை கண்டிப்பாகச் சொல்லாமல் கனிவாகச் சொல்லும் போது நிச்சயமாக புரிந்து கொள்வார்கள். ஒரே மாதத்தில் அவர்களை விடுவித்துவிட வேண்டும் என்கிற அவசரமில்லாமல் மெல்ல மெல்ல உணர வைப்பதுதான் சாலச் சிறந்தது. ஆனால் நிச்சயமாகச் செய்தாக வேண்டும். ஏனென்றால் ஒரு தலைமுறையே கண்களைக் கட்டிக் கொண்டு நூற்றியிருபது கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறது. அது அறிவற்ற செயல் மட்டுமில்லை அபாயகரமான செயலும் கூட.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடரின் ஒரு கட்டுரை)

8 எதிர் சப்தங்கள்:

சரவணன் சேகர் said...

வழக்கம் போல .. தெளிவான பார்வை மணி அண்ணா..
விலை குறைவோ அதிகமோ தேவையில்லாமல் வாங்கி குவிப்பது நம் சமூகத்தின் வியாதி ஆகிவிட்டது... அதிலும் குறைச்சலான விலை எனில் அது விசமாகவே இருந்தாலும் ஒரு ரெண்டு லிட்டர் வாங்கி வைக்கிற நிலைக்கு போயிட்டிருக்கோம்

Ram said...

your details are nice. This is not only for kids. Most of the people are victim of consumerism. Mobile version is keep on updating and people keep on purchasing latest product in the market. If someone don't get it, they say as outdated or miser. Reading, traveling, sports make kid proactive and trigger thinking power.

By west wishes for your blogs !

Siva said...

//சமீபத்தில் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்தது. பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.//

அடங்கொன்னியா, முன்னாடியெல்லாம் ஜெயில்லதான் திருட்டுத்தனமாக செல்போன் யூஸ் பண்ணுனாங்க. இப்ப சிறுவர் சீர்திருத்த பள்ளி வரைக்கும் செல்போன் வந்தாச்சா? அதுவும் பெங்களூர்லா பெற்றோரே அங்க சேர்த்து விட்டுறுவாகளா? ஆமா அவன் ஏற்கனவே சிறுவர் சீர்திருப்பள்ளில இருக்கான்...அவனை விலங்கு மாட்டி எங்க அனுப்புவாங்க?

Vaa.Manikandan said...

அப்படி அர்த்தம் வருகிறதா? செல்போனில் படம் எடுத்து பரப்பிய பிறகுதான் அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் படம் எடுக்கவில்லை.

இரா.கதிர்வேல் said...

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். உங்களுடைய http://www.nisaptham.com/2014/10/blog-post_11.html கட்டுரையை படித்தபின்பு நானும் ஸ்மார்ட் போன் வாங்கவில்லை. என்னுடைய வலைப்பூவில்(http://gnutamil.blogspot.in/2015/10/karbonn-a12_23.html) உங்களுடைய கட்டுரையைத்தான் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். நான் ஐ.டி துறையில் Python/Django Developer ஆக பணிபுரிவதால் நண்பர்கள் அவ்வப்போது ஸ்மார்ட் போன் வாங்கச்சொல்லி வற்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் உங்களுடைய கட்டுரையில் சொல்லியிருக்கும் கருத்துக்கள் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டன். சுதந்திர மென்பொருளின் தந்தை ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்கள் செல்போன் பயன்படுத்துவதில்லை. அதற்கு அவர் சொல்லும் விளக்கம் அனைத்து செல்போன்களும் நம்மை Track செய்கின்றன அதனால் privacy பாதிக்கப்படுகிறது. என்கிறார். அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சரி, சாதாரண நோக்கிய போனாக இருந்தாலும் சரி. அனைத்துமே பயனருடைய தகவலை தன்னுடைய முதலாளிக்கு அனுப்பி வைத்துவிடுகிறது. நீங்கள் ஏன் செல்போன் பயன்படுத்துவதில்லை என கேட்டதற்கு ரிச்சர்ட் ஸ்டால்மன் கூறியது "Because cell phones can track my location or my conversation with anyone. Most cellular phones, even if they are not smart phones, do have a processor running software and that (proprietary) software is malware, because it will send information about its users’ locations on remote command — and it has a back-door, so it can be remotely converted into a listening device. Almost all software has bugs — but this software is itself a bug. "

நீங்கள் ஏற்கனவே செல்போன் பற்றி எழுதிய கட்டுரைக்கு மேலும் வலுசேர்ப்பதாக இந்த கட்டுரை அமைந்துள்ளது. மகிழ்ச்சி.

”தளிர் சுரேஷ்” said...

அலைபேசியை கையாளும் குழந்தைகள் அதிகம்! பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது! அருமையான கட்டுரை! நன்றி!

Anonymous said...

SIMPLY BRILLIANT.AS USUAL TIMELY AND RELAVANT. GLOBOLASITATION HAS CONVERTED US FROM A SAVING ECONOMY TO A SPENDING ECONOMY. OUR EVALUATION SYSTEMS HAVE CHANGED.
FROM VALUING PERSONS BASED ON EDUCATION/VALUES/HONESTY ETC WE VALUE PEOPLE BASED ON MATERIAL POSSESSIONS SUCH AS CAR/CELLPHONE/EATING OUT/ PARTIES ETC. ALL MOST ALL THE TIMES IT IS THE PARENTS/RELATIVES WHO SPOIL THE CHILDREN.
IT IS OUR HYPOCRISY/DESIRE TO SHOW OFF THAT OUR CHILDRE ARE MORE WEALTHY/HAVE MORE GADGETS IS THE MAIN CAUSE
PREVIOUSLY IT WAS MARKS NOW IT IS HIGH COST GADGETS.
THE REALLY RICH PARENTS ARE COST/TIME CONSCIOUS. RECENTLY I HAD GONE TO A VERY VERY REPUTED SCHOOL IN CHENNAI. THE PARKING LOT WAS FULL WITH TWO WHEELERS MORE THAN 50 CC WHICH REQUIRE A DRIVING LICENCE.
SO I ASKED THE PRINCIPAL HOW HE IS AIDING LAW BREAKING SINCE ALMOST ALL STUDENTS MUST BE LESS THAN 18 THE AGE FOR A DRIVING LICENCE.
HE TOLD HE HAD A PARENTS MEET WHERE ALL THE PARENTS DEFENED THEIR CHILDREN AND CALLED HIM A HILER. ONE PARENT WENT ON TO ASK THE POLICE THEMSELVES ARE KEEPING QUIET WHY ARE BEHAVING LIKE THIS.
IT SEEMS OTHER PARENTS LOOKED AT HIM AS A HERO.
HE WENT ON TO ADD MOST OF THE WELL TO DO CHILDREN COME BY SCHOOL BUS. SAME IS THE STORY WITH CANTEEN. WE PAMPER OUR CHILDREN WITH POCKET MONEY WHILE MANY WELL TO DO CHILDREN CARRY HOME FOOD.
THEY SIMPLY IGNORE THEIR FRIENDS COMMENTS AND FOCUS ON GROWTH.
WE TAKE PRIDE IN EATING OUT AND BOAST TO OTHERS THE MONEY WE HAVE SPENT/THE RESTAURENT WE HAVE GONE.
EVEN A MILDLY FAMOS EATING PLACE TODAY COSTS MORE THAN RS.1000. OUR CHILDREN LATER JOIN THIS RACE,
IT IS RACE NOBODY WINS BUT THE TRADER. WE LOSE AT HEAVY COST.MORE THAN MONEY WE LOSE OUR CHILDRENS FUTURE.

WE ARE A SOCIETY BROUGHT UP WITH THE CULTURE" PODHUM ENDRA MANAME PON SEYYUM
MARUNDHU'.
OURS WAS A PHILOSOPHY OF CONTENTMENT NOT OF COMPARISON/COMPETITION.
IN THE NAME OF PRIVCY LET US NOT SPOIL OUR CHILDREN.
AFTER GETTING TRAPPED THE SAME CHILDREN TURN BACK AND COMPLAIN MYPARENTS/TEACHERS FAILED IN THEIR DUTIES TO CORRECT ME.
WITH CARE AND CONCERN,
M.NAGESWARAN.

Bagath said...

உங்களுக்கு ஏன் இளைஞர்கள் மீது இவ்ளோ கடுப்பு? சே என்ன உலகமப்பா இது.. வயிற்றெரிச்சல் வேறென்ன