Nov 4, 2015

படிகம்

நம்மைச் சுற்றிலும் நாம் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம்தான் கவனிக்காமல் விட்டுவிட்டு ‘இங்க எதுவுமே இல்லை’ என்று நினைத்துக் கொள்கிறோம். ‘இந்த ஊர்ல ஒண்ணுமே இல்லை’ என்பதில் ஆரம்பித்து ‘இப்போவெல்லாம் யார் சார் புஸ்தகம் படிக்கிறாங்க’ என்பது வரை மிகப்பெரிய புலம்பல் அல்லது விரக்தி பட்டியலைத் தயாரிக்கலாம். தமிழில் வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை மிகக் கணிசமாக அதிகமாகியிருக்கிறது என்பதுதான் உண்மை. கவிதை, கட்டுரை, சிறுகதை என்று எல்லாவிதமான எழுத்துக்களையும் வாசிக்கிறார்கள். புத்தகங்கள் விற்றுத் தீர்கின்றன. தமிழில் வெளியான முக்கியமான படைப்பு என்று நாம் நினைக்கக் கூடிய எந்தவொரு எழுத்தையும் மிகத் தீவிரமாக வாசித்து முடித்திருக்கும் ஒரு பெருங்கூட்டத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். வீட்டைவிட்டு வெளியிலேயே செல்லாதவர்களும் தான் இடம்பெறாத எந்தவொரு நிகழ்வையும் பொருட்படுத்த விரும்பாதவர்களும்தான் தானாக ஒன்றைக் கருதிக் கொண்டு தீர்ப்பு எழுதிவிடுகிறார்கள்.

சமீபத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதரைச் சந்தித்த போது பெங்களூரில் இலக்கியக் கூட்டம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்றார். பற்களை நறநறத்துக் கொண்டேன். என் துளி அறிவுக்குத் தெரிந்தே கூட நான்கைந்து கூட்டங்கள் நடக்கின்றன. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக வாரம் தவறாமல் ஒருமுறை கூடி கம்பராமாயணப் பாடல்களை படித்து அவற்றை சலனப்பட பதிவாகவும் செய்து யூடியூப்பிலும் ஏற்றியிருக்கிறார்கள். ராமாயணத்தை முடித்துவிட்டு இப்பொழுது இப்பொழுது சிலப்பதிகாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். பாரதியின் பாடல்களையும் இப்படி வாசிக்கிறார்கள். இது ஒரு மிகச் சிறந்த உதாரணம் என்பதற்காக இதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இவை தவிர இலக்கியம் சார்ந்த உரையாடல்களும் அவ்வப்போது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சரி அவரை விட்டுவிடலாம்.

படிகம் என்றொரு சிற்றிதழ் வந்து கொண்டிருக்கிறது. நவீன கவிதைக்கான சிற்றிதழ். எவ்வளவு இதழ்கள் வந்திருக்கின்றன என்று தெரியவில்லை. கைவசம் இரண்டு இருக்கிறது. பெங்களூரில் கடந்த வாரம் நடைபெற்ற வெங்கட் சாமிநாதன் நினைவுக்கூட்டத்தில் ஸ்ரீனிவாசன் கொடுத்தார். சிற்றிதழ்கள், கவிதைத் தொகுப்புகள், புத்தகங்கள் என்று இலக்கியம் சார்ந்த எந்தவொரு விஷயமும் ஸ்ரீனியின் வழியாகத்தான் பெங்களூருக்குள் வருகிறது என்று தோன்றும். ‘கண்டராதித்தனுடைய திருச்சாழல் தொகுப்பு கிடைக்குமா ஸ்ரீனி?’ என்று கேட்டால் ஓரிரு வாரத்திற்குள் எங்கிருந்தாவது வாங்கிச் சேர்த்துவிடுவார். அவர் இதையெல்லாம் எந்தப் பிரதிபலனும் பார்க்காமல்தான் செய்கிறார். எந்தக் கூட்டத்திற்கு வந்தாலும் அவருடைய தோளில் ஒரு பை இருக்கும். அந்தப் பைக்குள் புத்தகங்களும் சிற்றிதழ்களும் நிரம்பியிருக்கும். படிகம் பிரதிகளையும் அவர்தான் கொடுத்தார். 

இதழ் நாகர்கோவிலிருந்து வருகிறது. ரோஸ் ஆன்றா ஆசிரியர்.

கவிதைகள், கவிதை சார்ந்த கட்டுரைகள், கவிஞர்களின் நேர்காணல், கவிதை விமர்சனங்கள் என்று முழுமையாக நவீன கவிதை பற்றி மட்டுமே பேசுகிறது. விரும்புபவர்கள் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு இதழ்களை வாங்கிக் கொள்ளலாம். வாசிக்க ஆரம்பிக்கும் வரைக்கும்தான் கவிதை என்பது புதிர். வாசிக்கத் தொடங்கிவிட்டால் அதுவொரு தனியின்பம். நவீன கவிதைகளுக்கென இதழ் என்பது போன்ற முயற்சிகள் மிக அவசியமானவை. அரிதானவையும் கூட. பொருளாதார அல்லது புகழ் உள்ளிட்ட எந்தவிதமான லெளகீக பிரதிபலன்களும் எதிர்பாராத இத்தகைய முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ரோஸ் மன்றோவுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

கண்டராதித்தனின் ஒரு கவிதை -

நீண்டகாலம் நண்பனாக இருந்து
விரோதியானவனை வெளியூர்
வீதியில் சந்திக்க நேர்ந்தது
பதற்றத்தில் வணக்கம் என்றேன்
அவன் நடந்து கொண்டே
கால் மேல் காலைப்
போட்டுக் கொண்டே போனான்

தொடர்புக்கு:
படிகம்- கவிதைக்கான இதழ்
4/184 தெற்குத் தெரு
மாடத்தட்டுவிளை
வில்லுக்குறி - 629 180

அலைபேசி: 98408 48681
மின்னஞ்சல்: padigampublications@gmail.com

3 எதிர் சப்தங்கள்:

Dhanapal said...

அண்ணா ,
அந்த சிலப்பதிகாரக்கூட்டம் எங்கு நடக்கிறது? (பெங்களூரில் ).
மகா பாரதமும் தெரிந்து கொள்ள ஆசை.
ராமாயணம் மனதில் பதிகின்ற அளவிற்கு மகாபாரதம் ஒட்ட மறுக்கின்றதே. ஏன் ?

Vaa.Manikandan said...

சில்க் போர்டுக்கு அருகில் ஒரு அலுவலகக் கட்டிடத்தில் ஒவ்வொரு வாரமும் வகுப்பு நடைபெறுகிறது. உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை vaamanikandan@gmail.com க்கு அனுப்பி வையுங்கள். முழு முகவரியை வாங்கி அனுப்பி வைக்கிறேன்.

நன்றி.

kamalakkannan said...

இதுக்கு என்னங்க அர்த்தம் ?

//அவன் நடந்து கொண்டே
கால் மேல் காலைப்
போட்டுக் கொண்டே போனான்//