Nov 19, 2015

ஒரு கை

தினேஷ் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். ஊட்டி தேயிலைத் தொழிலாளரின் மகன். அம்மாவும் அப்பாவும் எஸ்டேட்டில் வேலை செய்கிறார்கள். முதுகெலும்பின் அதீத வளர்ச்சி காரணமாக கூன் விழத் தொடங்கியது. அவன் மெல்ல மெல்ல குறுகிக் கொண்டே போக வளர்ந்த எலும்பு உள்ளுறுப்புகளையெல்லாம் நசுக்கியிருக்கிறது. வலி அதிகரித்துக் கொண்டேயிருக்கவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். பெங்களூர் நாராயண ஹிருதயாலையாவில் அனுமதித்திருந்தார்கள். மருத்துவமனையிலேயே அறை எடுத்துத் தங்குவதெல்லாம் சாத்தியமில்லாத காரியம். ஏகப்பட்ட செலவாகிவிடும். வெளியில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார்கள். சந்தித்து ஐம்பதாயிரம் ரூபாய் நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து கொடுத்துவிட்டு வந்தோம். அறுவை சிகிச்சை முடிந்து ஊருக்குச் சென்றிருந்தார்கள்.


விதி வலியது. சில நாட்களில் வாந்தி எடுத்திருக்கிறான். பெங்களூர் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். சமிக்ஞைகளைக் கேட்ட மருத்துவர்கள் உள்ளூரிலேயே மருத்துவரிடம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். ஓரிரண்டு நாட்களில் வாந்தி அதிகரித்திருக்கிறது. அதுவரை நடந்து கொண்டிருந்தவன் கால்கள் வீக்கம் அடைய நடக்க முடியாமல் சுருண்டுவிட்டான். தினேஷின் அம்மா அலைபேசியில் அழைத்து கதறினார். ‘நடந்து கொண்டிருந்த பையனால் இப்பொழுது நடக்கக் கூட முடியலைங்கண்ணா’ என்றார். அவர் என்னை விட வயதில் மூத்தவராகத்தான் இருக்கக் கூடும். அண்ணா என்றுதான் அழைப்பார். என்ன செய்வதென்று தெரியவில்லை. நாரயண ஹிருதயாலயாவில் விசாரித்த போது மீண்டும் அழைத்து வரச் சொன்னார்கள். செலவுக்கு அவர்களிடம் வழியில்லை. தயங்கினார்கள். இது போன்ற சூழல்களில் இவர்களைப் போன்ற மனிதர்களுக்கு உதவுவதுதான் அறக்கட்டளையின் நோக்கம். ஆனால் அந்தச் சமயம் அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. 

அறக்கட்டளையின் காசோலையில் கையொப்பமிட்டு தம்பியிடம் கொடுத்துச் சென்றிருந்தேன். அவர்களை அழைத்து அமெரிக்கா செல்வதாகவும் தேவைப்படும் போது தம்பியைத் தொடர்பு கொள்ளச் சொல்லி அவனது எண்ணைக் கொடுத்துச் சென்றிருந்தேன். அங்கிருந்தபடியே மருத்துவமனையில் விசாரித்த போது தினேஷின் அம்மா அப்பாவிடம் இருக்கும் தொகையைவிடக் கூடுதலாக ஐம்பதாயிரம் தேவைப்படும் என்று சொல்லியிருந்தார்கள். தம்பியிடம் தகவல் சொல்லியிருந்தேன். தொகையை எழுதி அவர்களிடம் சேர்த்திருந்தான். இரண்டாவது ஐம்பதாயிரம் இது.

தினேஷூக்கு இரண்டாவது அறுவை சிகிச்சையும் முடிந்துவிட்டது. அதன் பிறகு அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. மலைச்சொல் அமைப்பின் பால நந்தகுமார்தான் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். அவரைக் கேட்டால் தினேஷ் எப்படி இருக்கிறான் விசாரித்துச் சொல்லிவிடுவார். ஆனால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தொடர்பு கொள்ளவில்லை. நலம் பெற்றிருந்தால் அவர்களுக்கு நம்மிடம் பேசுவதற்கு எந்தச் சங்கடமும் இருக்காது. ஒருவேளை நிலைமை மோசமாகியிருந்தால் கிளறிவிடுவது போல ஆகிவிடக் கூடும். ஆனால் தினேஷ் பற்றிய ஞாபகம் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருந்தது.

இன்று தினேஷின் அம்மா அழைத்திருந்தார். ‘தினேஷோட அம்மா பேசறங்கண்ணா’ என்றவரால் பேசவே முடியவில்லை. தழுதழுத்தார். ‘தினேஷ் எப்படி இருக்கிறான்’ என்றேன். நன்றாக இருக்கிறான் என்று அழுது கொண்டே சொன்னார். அது போதும். பிசியோதெரபி கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது அதைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். பரிசோதனைக்காக மீண்டும் பெங்களூர் வர வேண்டியிருக்கிறது. நிறைய முன்னேற்றம் தெரிகிறதாம். அவனை முழுமையாக நடக்க வைத்துவிடுவது என்கிற வைராக்கியத்தில் இருப்பதாகச் சொன்னார். ஏழை அம்மாவின் வைராக்கியம் அது. இருக்கிற குன்றிமணித் தங்கத்தையும் விற்று சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கையிருப்பு என்று எதுவுமே இல்லை.

‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இருக்காது...நடந்துடுவான்’ என்றேன். அதற்கு மேல் அழத் தொடங்கிவிட்டார்.

சந்தோஷத்தின் காரணமான அழுகைதான். அவருடைய சந்தோஷம் நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். ‘ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணா’ என்றார். நன்றிக்கு உரித்தானவர்கள் உலகம் முழுக்கவும் இருக்கிறார்கள் என்பது அவருக்கும் தெரியும். ‘அத்தனை பேருக்கும் நன்றி சொன்னதாகச் சொல்லிவிடுங்கள்’ என்றார். நிச்சயம் சொல்லிவிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

‘உங்க ஒவ்வொருத்தருக்கும் தினேஷ் கடமைப்பட்டிருக்கிறான்’ என்றார். எனக்கு அழுகை வந்துவிட்டது. அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ‘பெங்களூர் வரும் போது சொல்லுங்க’ என்று சொல்லித் துண்டித்துவிட்டேன்.

அப்பாவிச் சிறுவன் அவன். அவன் யாருக்கும் கடமைப்பட வேண்டியதில்லை. அவனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் விதியிடமிருந்து மீண்டு வந்தால் அது போதும். மருந்து மாத்திரை ஊசி அறுவை என்று மருந்துவத்தின் கசந்த நெடியில் பால்யத்தைத் தொலைத்துவிட்டு கட்டிலில் கிடக்கிறான். அவனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று தங்களின் எல்லாவிதமான சந்தோஷங்களையும் புதைத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள் அவனைப் பெற்றவர்கள். அவர்களுக்கு நாம் உதவியிருக்கிறோம்.

மிகச் சிறிய உதவி என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அது அப்படியில்லை. உதவியில் சிறு உதவி பெரிய உதவி என்றெல்லாம் எதுவுமில்லை. உதவி என்பதே ஒரு எளிய குடும்பத்தின் பெரும்பாரத்தை இறக்கி வைக்க கை கொடுப்பது மாதிரிதான். இப்பொழுது தினேஷின் குடும்பத்துக்கு ஒரு கையைக் கொடுத்திருக்கிறோம். இறைவன் இன்னொரு கையைக் கொடுத்து தூக்கிவிட்டுவிடுவான் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எளிய மனிதர்களின் உள்ளத்தில் சிறு புன்னகையை வரவைத்திருக்கும் அத்தனை பேருக்கும் நெகிழ்ச்சியுடனான நன்றி.

4 எதிர் சப்தங்கள்:

Unknown said...

மிகச் சிறிய உதவி என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அது அப்படியில்லை. உதவியில் சிறு உதவி பெரிய உதவி என்றெல்லாம் எதுவுமில்லை. உதவி என்பதே ஒரு எளிய குடும்பத்தின் பெரும்பாரத்தை இறக்கி வைக்க கை கொடுப்பது மாதிரிதான்.

krish said...

மிகவும் நன்றி,நெகிழ்ச்சியான நிசப்தம்.

சேக்காளி said...

Vinoth Subramanian said...

God will never deceive him, when people like you are out there. Good!!! Great!!!