Oct 19, 2015

ஜாம்பி

சனிக்கிழமையன்று தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்த போது கையில் பெரும் கத்தியும் முகத்தை மறைத்தபடி தலையில் ஒரு முக்கோண வடிவிலான பெட்டியையும் மாட்டிக் கொண்டு ஒருவன் நெருங்கிக் கொண்டிருந்தான். அவன் நடையை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கால்களை இழுத்து இழுத்து கத்தியை நிலத்தில் உரசியபடியே நடந்து வந்தான். பார்த்தவுடனேயே பதறினாலும் அவன் விளையாட்டுக்காகச் செய்கிறான் போலிருக்கிறது என்று சற்று ஆசுவாசமாக இருந்தேன். ஆனால் அவனது நடை எந்தவிதத்திலும் மாறவில்லை. அதே இழுப்பில் அதே ரிதத்தில் கத்தியை உரசிக் கொண்டே வந்தான். அந்தச் சாலையில் ஆட்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். பயம் ஆரம்பித்தது. வேகமாக நடக்க ஆரம்பித்தேன். அவன் சட்டையணிந்திருக்கவில்லை. இடுப்பில் வேஷ்டி மாதிரி துணியைச் சுற்றியிருந்தான். எப்படியும் துப்பாக்கி இருக்காது என்ற நம்பிக்கையிருந்தது. ஆனாலும் இந்த ஊரில் யாரை நம்புவது? துப்பாக்கி என்பது சாதாரணக் காரியம். எடுத்து டமால் டூமில் என்று வேடிக்கை காட்டினால் ஏர்-ஆம்புலன்ஸில்தான் தூக்கிப் போட்டு அனுப்பி வைப்பார்கள். சட்டைப்பையில் பாஸ்போர்ட் பிரதி கூட இல்லை. அடையாளம் கண்டுபிடிக்கவே வாரக் கணக்கில் ஆனாலும் ஆகிவிடும். அதனால் ஓடுவதும் தெரியாமல் நடப்பதும் தெரியாமல் இடுப்பை ஆட்டி ஆட்டி இடத்தை அந்த இடத்திலிருந்து தப்பியிருந்தேன்.

சைக்கோ போலிருக்கிறது. 

ஜாம்பிஸ் பற்றி நம் ஊரில் அதிகமாக பேசிக் கொள்வதில்லை. வெளிநாடுகளில் புத்தகங்கள் எழுதுகிறார்கள். படங்கள் எடுக்கிறார்கள். ஜாம்பிக்களைப் பற்றிய நல்ல படங்களாகத் தேடினால் குறைந்தது நூறாவது தேறும் போலிருக்கிறது. Rammbock என்ற ஜெர்மனியப் படம் ஒன்று. 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒரு மணி நேரப் படம்தான். முறிந்து போன தனது காதலைப் புதுப்பித்துவிடலாம் என்று நாயகன் தனது காதலியைத் தேடி பெர்லின் நகரத்துக்குள் வருகிறான். வந்த இடத்தில் அவள் இருப்பதில்லை. ‘யோவ் என் ஆளு இந்த வீட்டில்தான் இருந்தாள்..பார்த்தியா?’ என்று கேட்கும் போது அந்த வீட்டில் இருப்பவன் ஜாம்பியாக மாறியிருப்பான். ஜாம்பிக்கள் நடைபிணங்களாகத் திரிபவர்கள். அடுத்தவர்களைப் பிடித்து கடித்து வைத்துவிடுவார்கள். கடி வாங்கியவனும் ஜாம்பியாக மாறி மற்றவர்களின் கழுத்தைத் தேடத் தொடங்குவார்கள். அந்த அபார்ட்மெண்ட்டில்- அபார்ட்மெண்ட்டில் மட்டுமில்லை- பெர்லின் நகர் முழுக்கவும் ஏகப்பட்ட ஜாம்பிக்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியிலும் வானொலியிலும் தொடர்ந்து அறிவிப்பு செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஜாம்பியாக இன்னமும் மாறாதவர்கள் ஜாம்பிக்களிடமிருந்து தப்பிக்க வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இதுதான் கதை. வெகு சுவாரஸியமான படம். இணையத்திலேயே கிடைக்கிறது.

இந்தப் படத்தை எதற்குச் சொல்கிறேன் என்றால் முதல் பத்தியில் சொன்ன முக்கோண மண்டையன் சைக்கோ இல்லை. ஜாம்பி. ஆனால் உண்மையான ஜாம்பி இல்லை. அப்படி அலங்காரம் செய்திருந்தான். அவன் மட்டுமில்லை டென்வர் நகரில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேர்கள் ஜாம்பிக்களாக மாறியிருந்தார்கள். பெருங்கூட்டம். அதுவொரு ஜாம்பி திருவிழா. Zombie crawl என்று பெயர். வருடாவருடம் நடத்துகிறார்கள். இது பத்தாவது வருடம். அப்படியொரு நிகழ்வு நடக்கப் போகிற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால்தான் முக்கோண மண்டையனைப் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். அவனும் என்னை மிரட்டுவதற்காக அப்படி நடையை மாற்றாமல் நடந்திருக்கிறான். கேடிப்பயல்.

சனிக்கிழமையன்று என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இந்திய முகஜாடையில் சுற்றுவர்கள் பத்து பேரைப் பார்த்தால் அதில் ஏழு பேர் ஏழுகொண்டலவாடாவின் கொல்ட்டிகளாகத்தான் இருக்கிறார்கள். ‘ஏவண்டி பாகுண்ணாரா?’ என்கிறார்கள். என்னுடன் வந்திருக்கும் கொல்ட்டி அந்த கோஷ்டியில் ஐக்கியமாகிவிட்டார். அதனால் முடிந்தவரைக்கும் தனியாகத்தான் சுற்றுகிறேன். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். நாம் செய்கிற சேட்டையெல்லாம் நாம் வெளியில் சொன்னால் தவிர யாருக்கும் தெரியாது அல்லவா?

காலையில் ஒன்பது மணிக்கு குளித்து தயாராகிவிட்டேன். இதுதான் இந்த ஊரில் கடைசியான வார இறுதி நாட்கள். அடுத்தவாரம் பெங்களூர் வாரி அணைத்துக் கொள்ளும். கொலராடாவுக்கு திரும்ப வருவேனா என்று தெரியாது. அதனால் முடிந்தவரைக்கும் சுற்றிவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன். உள்ளூர் தொடரூர்தியில் எட்டு டாலருக்கு டிக்கெட் எடுத்தால் ரவுண்ட் ட்ரிப் அடித்துக் கொள்ளலாம். அந்தப் பயணச்சீட்டை வைத்துக் கொண்டு தொடரூர்தியின் கடைசி நிறுத்தம் வரைக்கும் சென்று திரும்ப வரலாம். பயணச்சீட்டு எடுத்துக் கொள்வது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டும்தான். இதுவரைக்கும் ஒரு முறை கூட கடைசி நிறுத்தம் வரைக்கும் சென்றதேயில்லை. ஏதாவது அழகான கட்டிடம் அல்லது பெண்ணை எந்த நிறுத்தத்தில் பார்க்கிறேனோ அந்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவேன். அப்படித்தான் ஒரு நிறுத்தத்தில் இறங்கியிருந்தேன். அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் நடந்தால் நகரத்தின் முக்கியமான பதினாறாவது தெரு வரும். எட்டுக் கிலோமீட்டர் என்பது சற்று தொலைவுதன. ஆனால் மெதுவாக நடக்கலாம். எந்த அவசரமும் இல்லை. நம்மை யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. கால் வலிக்கிற இடத்தில் அமர்ந்து கொள்வது ஏதேனும் மரத்தின் கீழாக இருக்கும் பெஞ்ச்சில் படுத்துக் கொள்வது என்று ஊரை பராக்கு பார்த்தபடியே பதினாறாவது தெருவை அடைந்த போது கால்களில் வலி கிண்ணெண்று இருந்தது. மூட்டுக்கு மட்டும் வாய் இருந்திருந்தால் கதறியிருக்கும். மூன்று மணி நேரங்கள் நடந்திருந்தேன். அந்த மூன்றாவது மணி நேரத்தில்தான் முக்கோண மண்டையனின் தரிசனம். அவனிடமிருந்து தப்பித்து பதினாறாவது தெருவுக்குள் நுழைந்தால் அந்தத் தெரு முழுவதும் ஜாம்பிக்களால் நிரம்பியிருந்தது.


உற்சாகமான திருவிழா அது. வரிசையாக ஆட்கள் நடந்து கொண்டேயிருந்தார்கள். அந்தத் தெரு இரண்டு கிலோமீட்டர் நீளமுடையது. இந்த முனையிலிருந்து அந்த முனை வரைக்கும் அவ்வளவு கூட்டம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று ஒருவர் பாக்கியில்லை. விதவிதமான ஆடைகள். விதவிதமான அலங்காரங்கள். இதுவரையிலும் எந்த ஊருக்கும் நான் நிழற்படக் கருவியை எடுத்துச் சென்றதேயில்லை. முடிந்தவரைக்கும் மண்டைக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றும். கேமிராவை எடுத்துக் கொண்டு திரிந்தால் இதைப் படம் எடுக்கலாமா அதைப் படம் எடுக்கலாமா என்றுதான் மனம் திரியும். அதிலேயே நினைப்பு இருந்தால் ஊரையும் அந்த ஊரின் மனிதர்களையும் எப்படி கவனிப்பது? ஆனால் நேற்றுதான் நம்மிடமும் ஒரு நிழற்படக் கருவி வேண்டுமென விரும்பினேன். அலங்காரம் ஒரு பக்கம் இருக்கட்டும். அத்தனை பெண்கள். அத்தனை அழகிகள். அத்தனையும் மிஸ். ஆளாளுக்குத் துணியைக் கிழித்துக் கொண்டு திரிந்தார்கள். அந்த கிழிசலின் வழியாக அவர்கள் செயற்கையாக உருவாக்கியிருந்த ரத்தக்காயத்தைப் பார்க்க வேண்டும். வெறும் இரண்டு கண்களை வைத்துக் கொண்டு எத்தனையைத்தான் மண்டைக்குள் ஏற்றுவது? 

இப்படியான ஒரு கொண்டாட்ட மனநிலை நம்மிடம் இல்லையென்றுதான் தோன்றுகிறது. தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று கொண்டாடுகிறோம்தான். ஆனால் எந்தப் பாகுபாடுமில்லாமல் ஊரே திரண்டு கொண்டாடும் ஒரு நிகழ்வு இல்லை. 'இது அவனுக்கானது..அது அவனுக்கானது’ என்று பிரித்து வைத்திருக்கிறோம். ஜாம்பித் திருவிழாவில் எல்லோரும் சகஜமாகப் பேசுகிறார்கள். அடுத்தவர்களை மிரட்ட முயற்சிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். ஒன்றிரண்டு காவலர்கள் மட்டும் நின்றிருந்தார்கள்- அவர்களும் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடும் நிகழ்வில் காவலர்கள் இல்லாமல் தள்ளுமுள்ளு இல்லாமல் ஒரு நிகழ்வை நம்மூரில் நினைத்துப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. நடுத்தெருவில் இசையை அலற விட்டிருந்தார்கள். விருப்பமிருக்கிறவர்கள் ஆடலாம். ஏகப்பட்ட பேர்கள் இணை இணையாக ஆடிக் கொண்டிருந்தார்கள். மூச்சு சூடேறிக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் தெருவில் மேடையமைத்து wrestling நடத்திக் கொண்டிருந்தார்கள். பங்கேற்ற ஆண்கள் அத்தனை பேரும் இத்தினியூண்டு துணியை அணிந்து கொண்டு தொலைக்காட்சியில் நடிப்பதைப் போலவே மேடையில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சண்டையிடுவதைவிடவும் கூட்டம் கூட்டமாக நின்று அவர்களைப் பற்றி நக்கல் அடித்துக் கொண்டிருந்தவர்களின் பேச்சைக் கேட்பது சுவாரஸியமாக இருந்தது. வாய்ப்புக் கிடைத்த இடத்தில் எல்லாம் காதை நீட்டிக் கொண்டிருந்தேன். கஞ்சா புகை தெரு முழுவதும் நிரம்பிக் கொண்டிருந்தது.

ஜாம்பி வேடமணிந்த ஏதாவது பெண் என்னை மிரட்டுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டே நடந்தேன். அப்படி மிரட்டியவுடன் ‘இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? எதுக்கு இப்படி வேஷம் போடுறீங்க’ என்று பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால் முதலில் மிரட்டிய முக்கோண மண்டையனைத் தவிர வேறு யாருமே மிரட்டுவதாகத் தெரியவில்லை. கடைசியில் ஒரு குழந்தையிடம் நானே ‘ப்ப்பே’ என்றேன். அதுவும் திருப்பிச் சொன்னது. அவ்வளவுதான். மீண்டும் அதே எட்டுக் கிலோமீட்டர்கள் நடந்து வந்து ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டேன். காற்று வெகு குளிர்ச்சியாக இருந்தது.

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//ஏதாவது அழகான கட்டிடம் அல்லது பெண்ணை எந்த நிறுத்தத்தில் பார்க்கிறேனோ அந்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவேன். அப்படித்தான் ஒரு நிறுத்தத்தில் இறங்கியிருந்தேன்.//
காரணம் கட்டிடமா அல்லது பெண்ணா?

சேக்காளி said...

//ஆனால் எந்தப் பாகுபாடுமில்லாமல் ஊரே திரண்டு கொண்டாடும் ஒரு நிகழ்வு இல்லை//
யாரு சொன்னா? நயன்தாரா திருச்சிக்கு வந்த போது என்ன நடந்ததுன்னு மறந்துட்டீங்களே மணி.

Anonymous said...

https://gma.yahoo.com/1-killed-4-injured-shooting-zombicon-florida-125925038--abc-news-topstories.html