Oct 16, 2015

எப்படி இருந்தது?

குளிர் இருக்கும் என்று பயமூட்டியிருந்தார்கள். அந்த விமானத்திலேயே ஜெர்கின் அணிந்து சென்ற ஒரே கூமுட்டை நானாகத்தான் இருந்தேன். இறங்கிய போது உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தது. மினியாபோலிஸ் விமானநிலையத்தில் ஆனந்த் காத்திருந்தார். ‘வீடு பக்கம்தான்...ஒண்ணும் பிரச்சினையில்லை’ என்றார். அதையும் நம்பிக் கொண்டிருந்தேன். அவரது வீட்டுக்கும் விமானநிலையத்துக்குமிடையில் கிட்டத்தட்ட நூற்றியிருபது கிலோமீட்டர்கள்.  ‘இதெல்லாம் ஒண்ணுமேயில்ல’ என்று சொல்லிச் சொல்லியே நிறைய வேலைகளைச் செய்கிறார். மதியம் கோ.முருகேசனின் வீட்டில் விருந்து, இரவில் ஆனந்த் வீட்டில் கோழி பிரியாணி அடுத்த நாள் யசோதாவின் வீட்டில் விருந்து என்று ஆளாளுக்குத் தாங்கினார்கள். தகுதிக்கு மீறித் தாங்குகிறார்கள் என்று கூச்சமாகத்தான் இருந்தது.

மினியாபோலிஸ், டென்வர் என்று நகரத்துக்கு நகரம் தாவுவதில் சுவாரஸியமேயில்லை. அத்தனை சாலைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கின்றன. இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பதைப் போலத்தான் - இந்தியாவிலாவது குறுக்கே யாராவது வருவார்கள். நமக்கு திக் திக்கென்றாகும். இங்கே அதுவுமில்லை. வேகத்தைக் கூட குறைப்பதில்லை.

முதல் நாள் மதிய உணவை முடித்துவிட்டு மினியாபோலிஸ் தமிழ்ப்பள்ளியில் வெகுநேரம் கழிந்தது. அங்கிருந்து கிளம்பும்போது ‘ஒரு வரலாற்று ஆய்வு மையம் இருக்கு...போலாமா?’ என்று ஆனந்த் கேட்டார். இரண்டு முறை தலையை ஆட்டினேன். ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அதுவொரு குட்டி நகரம். நாங்கள் சென்றிருந்த போது பூட்டிவிட்டார்கள். ஆனால் பக்கத்தில் ஒரு மயானம் இருப்பதாகவும் அங்கு ஏதோ நிகழ்ச்சி நடப்பதாகவும் சொன்னார்கள். மயானமா என்று யோசனையாகத்தான் இருந்தது. ஆனால் பூங்கா மாதிரி வைத்திருக்கிறார்கள். அங்கேயே பிஸ்கட், ரொட்டி என்றெல்லாம் கொடுத்தார்கள். தட்டையும் நீட்டினார்கள். சுடுகாட்டில் எதையாவது தின்றால் பேய் பிடித்துக் கொள்ளும் என்று பின்வாங்கிவிட்டேன். அதுவும் அமெரிக்கப் பேய். ஆண் பேயாக இருந்தால் அதைவிடப் பிரச்சினை. ஆனந்தும் பம்மிவிட்டார்.

அதுவொரு சுவாரஸியமான நிகழ்ச்சி. 

அந்த ஊரில் பிரபலமாக இருந்து மண்ணுக்குள் சென்ற மனிதர்களை நினைவுபடுத்துகிறார்கள். அந்த பிரபலத்தைப் போலவே ஆடையணிந்து அவரது கதையைச் சொல்கிறார்கள். அதைப் பார்க்க அவ்வளவு கூட்டம். அப்படியென்னய்யா பிரபலம் என்றால் கல்லூரியில் பேராசிரியராக இருந்த பெண்மணி, நகரத்தின் முக்கிய தொழிலதிபராக இருந்தவர் என்றெல்லாம் சொன்னார்கள். ‘எவ்வளவு பணம் கொடுக்கணும்?’ என்றேன். எட்டு டாலர். ஐநூறு ரூபாயைத் தாண்டுகிறது. ‘சொன்னாக் கேளுங்க...ஏதாச்சும் கிளுகிளுப்பான கதைன்னா கூட காசு கொடுக்கலாம்...இதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று இழுத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நம் ஊரில்தான் கக்கனைக் கூட மறந்துவிடுகிறோம். இந்த ஊரில் புண்ணாக்கு விற்றவர் பருத்திக் கொட்டை விற்றவரையெல்லாம் தொழிலதிபராக்கி நினைவுபடுத்துகிறார்கள்.

நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்லாததற்கு காரணம் இருக்கிறது. டேனியல் ஃபிஷர் மணிக்கூண்டு டென்வர் நகரில் பிரபலம். அதன் கீழ் தளத்தில் ஒரு நைட் க்ளப் இருக்கிறது. டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால் மேடையில் ஒருவர் நகைச்சுவைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார். அத்தனையும் பச்சை மஞ்சள் ஜோக்குகள். அவர் ஒரு வரியை முடிப்பதற்குள்ளாகவே ஜில்ல்ல்ல்ல் என்று சிரிக்கிறார்கள். என்னுடைய ஆங்கில அறிவைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. ‘டேய் எனக்கு ஒரு எழவும் புரியலடா...அமைதியா இருங்கடா’ என்று கறுவிக் கொண்டே அமர்ந்திருந்தேன். நாம் கறுவுவதையெல்லாம் எவன் மதிக்கிறான்? ‘கொடுக்கிறதையும் கொடுத்துட்டு குருட்டுத் தேவிடியாகிட்ட போன கதை’ என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘ஒரு ஸீனாவது வந்துவிடாதா?’ என்று சாந்தி தியேட்டரில் டிக்கெட் வாங்கி வாயைப் பிளந்து கொண்டு அமர்ந்திருப்பதைப் போல ஆகிவிட்டது. ‘ஒரு ஜோக்காவது புரியற மாதிரி சொல்லுடா’ என்று எவ்வளவுதான் கெஞ்சினாலும் அந்த பபூன் ஆசாமி கண்டுகொள்ளவேயில்லை. எல்லோரும் சிரித்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்கள். நான் காசு போனதை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்.

அந்தக் கதை இருக்கட்டும்.

அடுத்தநாள் பிளைமவுத் நூலகத்தில்தான் உரையாடல். வேட்டி பைக்குள்தான் இருந்தது. ஆனால் அதைக் கட்டிக் கொண்டு அமெரிக்க வீதிகளில் நடந்தால் சிரிப்பார்களோ என்று யோசனையாகவே இருந்தது. நல்லவேளையாக நிகழ்ச்சிக்கு முருகேசனும் வேட்டியணிந்து வந்திருந்தார். ‘அதெல்லாம் பிரச்சினையில்லை...கட்டிக்குங்க’ என்றார். நூலகத்திலேயே வேட்டிக்கு மாறிவிட்டேன். இரண்டு முறை நூலகத்தை வலம் வந்தேன். அமெரிக்க விடலை குழாமொன்று பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. அதிலிருந்த பெண்தான் நிறையப் பேசிக் கொண்டிருந்தாள். ‘என்ன சொல்லிச் நக்கலடித்திருப்பாள்’ என்று கண்டபடி கற்பனை செய்து கொண்டிருந்தேன். அதுவும் சுவாரஸியமாகத்தான் இருந்தது.

நூலகத்தில் ஒரு அறையை ஒதுக்கித் தந்திருந்தார்கள். வட்டமாக அமர்ந்துதான் பேசத் தொடங்கினோம். வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நிசப்தம் வாசிக்கிறவர்கள். அதனால் பெரிய சிரமம் இருக்கவில்லை. ‘இவன் இப்படித்தான்’ என்று தெரிந்து வைத்திருந்த மாதிரியிருந்தது. இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வெகுதூரத்திலிருந்து வந்திருந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. முருகேசனும் ஆனந்தும் கூட அதைத்தான் சொன்னார்கள். இடைவிடாமல் எழுதிக் கொண்டேயிருப்பதால் ஏதாவது பயன் இருக்கிறதா என்று யாராவது அடிக்கடி கேட்கிறார்கள். அவர்களுக்குச் சொல்ல எனக்கு உடனடியாக பதில் கிடைக்காது. சிரித்துக் கொண்டு பேச்சை மாற்றிவிடுவதுதான் இதுவரை வழக்கம். இனியும் அப்படித்தான்.


‘நமக்கு இன்னும் காலம் இருக்கிறது என்று நம்பி எல்லாவற்றையும் தள்ளி வைத்துக் கொண்டேயிருந்தால் காலம் முடியும்போது எதையுமே செய்யாமல் செத்திருப்போம்’என்பார்கள். சுணக்கமே இருக்கக் கூடாது. கொஞ்சம் ஏமாந்தாலும் இந்த உலகம் நம்மை ஏறி மிதித்தபடி போய்க் கொண்டேயிருக்கும். எவ்வளவு போட்டி? எவ்வளவு வேகமான ஓட்டம்? ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், ஓவியர்கள் என்று குவிந்து கிடக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் கணக்கிலடங்காத ஆட்கள். அத்தனை பேரும் முத்திரை பதிக்கிறார்களா என்ன? வெறித்தனமான உழைப்பையும் மொத்த அர்பணிப்பையும் கொடுப்பவன் மட்டுமே நிமிர்ந்து நிற்கிறான். மூச்சுத் திணற வைக்கும் இந்தப் பெருங்கூட்டத்தில் தம் கட்டி மேலே எழுந்து தனது தலையை உலகுக்குக் காட்டி முத்திரை பதித்த அத்தனை பேரின் வரலாற்றிலும் கடும் உழைப்பு இருக்கும். ஏகப்பட்ட அவமானங்கள் இருக்கும். துடைத்தெறிந்துவிட்டு எழுந்து நின்று தோள்களை முறுக்குபவனைத்தான் காலம் கொண்டாடுகிறது. 

வான்கா- உலகின் மிக முக்கியமான ஓவியர்களின் பட்டியலை எடுத்தால் தவிர்க்க முடியாத பெயர். மிகச் சிரமமான வாழ்க்கை. வறுத்தெடுக்கும் வறுமை. தனக்கான துறை எதுவென்று கூட முழுமையான புரிதல் இல்லாத குழப்பம், உடல்நிலைச் சிக்கல்கள், மனநிலை பாதிப்பு என அத்தனையையும் தாண்டி வெறியெடுத்து வரையத் தொடங்கிய போது அவர் தனது வாழ்நாளின் கடைசி பத்தாண்டுகளில் இருந்தார். சரியான துறையைத் தேர்ந்தெடுக்கும் வரைக்கும் நமக்கான அடையாளம் என்று எதுவும் இருக்காது. சரியாகத் தேர்ந்தெடுத்த பிறகு வெற்றி தோல்வி என அத்தனையும் நம் கையில்தான். சுழன்றடிக்க வேண்டும். வான்கா அப்படியான மனிதர். வரைந்து தள்ளினார். இரண்டாயிரத்துக்கும் அதிகமான படங்களை வரைந்திருந்தாலும் அவர் உயிரோடு இருக்கும் வரை இந்த உலகம் கண்டுகொள்ளவேயில்லை. சொற்பமான படங்களை மட்டுமே விற்று விலை பார்த்தார். ஆனால் அதற்காகவெல்லாம் அவர் கவலைப்பட்டு முடங்கியிருந்தால் அடையாளமில்லாமல் காணாமல் போயிருப்பார். நமக்கான அங்கீகாரமும் அடையாளமும் நமக்கான இடமும் நாம் உயிரோடு இருக்கும் போது வந்தால் சந்தோஷம். இல்லையென்றாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. உழைப்பை மட்டும் நிறுத்திவிடக் கூடாது என்பதற்கு வான்கா உதாரணம். எந்த மாலையும் தானாக கழுத்தில் விழுவதில்லை என்பது மட்டுமே நிதர்சனம்.

வான்காவின் ஓவியங்களில் ‘ஆலிவ் ட்ரீ’ பிரசித்தி பெற்ற தொடர் ஓவியம். இதே தலைப்பில் பதினெட்டு ஓவியங்களை வரைந்திருக்கிறார். அந்த ஓவியத்தில் ஒன்றை மினியாபோலிஸில் தோட்டமாக வடிவமைத்திருக்கிறார்கள். டென்வர் விமான நிலையத்திலேயே ஒருவர் சொல்லியனுப்பினார். ‘இடது பக்கம் ஸீட் கிடைத்தால் நீ அதிர்ஷ்டக்காரன்’ என்று. அப்படித்தான் போலிருக்கிறது. இருக்கை எண் 37 பி. இடது பக்கம். டென்வரில் ஏறி அமர்ந்ததிலிருந்தே தூங்கிவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். இரண்டு மணி நேரப் பயணம் முடித்து விமானத்திலிருந்து கீழே இறங்கும் போது வான்காவின் ஓவியம் தெரிந்தது. ஆயிரக்கணக்கான தாவரங்களை சரியாக நட்டு கத்தரித்து வான்காவின் ஓவியத்தைக் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தச் சந்தோஷம் அடுத்த இரண்டு நாட்களுக்கும் பெருகிக் கொண்டேதான் இருந்தது.

டென்வருக்குத் திரும்பும் போது மினியாபோலிஸ் விமானநிலையத்திலிருந்து நடந்ததையெல்லாம் வேணியிடம் விவரித்தேன். ‘ரொம்ப பீத்திக்காதீங்க...இப்போத்தான் முளைக்கவே ஆரம்பிச்சிருக்கீங்க’ என்ற பதில் வந்தது. அதே காரணம்தான். இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

6 எதிர் சப்தங்கள்:

ஆர். அபிலாஷ் said...

வன்கா பற்றி moon and the six pence என்றொரு நல்ல நாவல் இருக்கிறது

சேக்காளி said...

கோழி குருடுனாலும் கொழம்பு ருசியா இருந்தா சரிதானே.

Vinoth Subramanian said...

// ஏகப்பட்ட அவமானங்கள் இருக்கும். துடைத்தெறிந்துவிட்டு எழுந்து நின்று தோள்களை முறுக்குபவனைத்தான் காலம் கொண்டாடுகிறது. //
True. Wonderful words. much needed words for all.


பிரகாஷ் குமார் said...

எப்படி உழைக்க வேண்டும் என்றும், எப்படி சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தை பதிவினை படித்த அனைவருக்கும் இதைவிட சிறந்த ஒன்று எதுவுமில்லை, வெற்றியடைய காட்டும் வழி.

Ravi said...

Usually they don't tease others as easily or frequently here compared to India. That's one of the good things about this country. So I'm sure they were not teasing about your appearance though dhoti would've been amusing to their eyes.

நாடோடிப் பையன் said...

வழக்கம் போல ரசிக்கும் படியான பதிவு. நன்றி.

அரிஜோனா பக்கம் வந்தீங்க என்றால், கொஞ்சம் சொல்லுங்க. நான் அமெரிக்காவின் இன்றும் ஒரு நல்ல பக்கத்தை காண்பித்து தரேன்.