Sep 14, 2015

கோவா

இரண்டு நாட்கள் நடைபெற்ற பப்ளிஷிங் நெக்ஸ்ட் நிகழ்வு கோவாவில் நிறைவடைந்தது. இந்தியா முழுவதிலுமிருந்து ஏகப்பட்ட பதிப்பாளர்கள் வந்திருந்தார்கள். ராஜ்கமல் பிரகாஷன், யாத்ரா, ஹார்பர் கோலின்ஸ் போன்ற பிரசித்தி பெற்ற பிரசுரங்களின் ஆட்கள் குவிந்திருந்தார்கள். தமிழிலிருந்து காந்தி கண்ணதாசன், காலச்சுவடு கண்ணன், கிழக்கு பதிப்பகத்தின் சத்யநாராயணா ஆகியோர் கலந்து கொண்டார்கள். பதிப்பாளர்கள் மட்டுமில்லாமல் நிறைய எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். இந்தப் பெருந்தலைகளின் குழாமில் பொடியன் என்றால் நான்தான். தன்னடக்கமாக இதைச் சொல்லவில்லை. முதல் ஒன்றரை நாட்களுக்கு யாருமே மதிக்கவில்லை. இரண்டு முக்கியமான காரணங்கள்- அவர்கள் மதிக்கக் கூடிய அளவுக்கு கவனம் பெறும் செயல் எதையும் நான் செய்திருக்கவில்லை என்பது முதல் முக்கியமான காரணம். சொட்டை விழுந்திருக்கிறதே தவிர உருவத்தில் - ஐம்பத்தைந்து கிலோ- சிறுவனைப் போலத்தான் தெரிகிறேன் என்பதை இரண்டாவது காரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

கண்ணன், காந்தி கண்ணதாசன், சத்யா போன்றவர்களிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தேன். இவர்களும் இல்லையென்றால் நொந்து போயிருக்கக் கூடும். முதல் நாள் இரவே ஒரு வடக்கத்திக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரை எனக்குத் தெரியாதுதான். இருந்தாலும் ‘உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று உடான்ஸ்ஸூடன் தொடங்கினேன். இரண்டு வாக்கியங்கள் பேசியவர் அந்தப் பக்கம் ஒரு பெண்மணி வந்தவுடன் அப்படியே கத்தரித்துவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கும் அந்த மனிதனை முறைத்துக் கொண்டே திரிந்தேன். இதையெல்லாம் மனைவியிடம் சொல்ல முடியுமா? 

அறைக்கு வந்தவுடன் ‘என்ன சொல்லுறாங்க உங்க ஆளுங்க?’ என்று கேட்டாள். ‘அதை ஏன் கேட்கிற...அவ்வளவு மரியாதை’ என்று சொல்லி வைத்திருந்தேன். அவளும் நம்பிக் கொண்டாள். 

சின்னோமோன்டீல் என்னும் பதிப்பகத்தின் லியோனார்ட் பெர்ணாண்டஸ்தான் நிகழ்வின் ஏற்பாட்டாளர். இளைஞர். பங்கேற்பாளர்கள் அத்தனை பேருக்கும் விமான பயணச்சீட்டு, நட்சத்திர விடுதியில் தங்குவதற்கான அறை என்று ஏகப்பட்ட செலவு பிடிக்கும் காரியம் இது. ஸ்பான்ஸர்கள் இருக்கிறார்கள் என்றாலும் கையிலிருந்தும் பெருந்தொகையைச் செலவழிக்கிறார் என்று சொன்னார்கள். கோவா என்பது வெறும் கூத்துக்கு மட்டுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லி புரிய வைக்கிறார்கள். கோவாவின் மாநில மைய நூலகத்தில்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரமாண்டமான நூலகம் அது. 

முதல் நாள் காலை நிகழ்வு தொடங்கியது. அப்பொழுதும் அதே நிலைமைதான். எந்த அறிமுகமும் கிடைத்திருக்கவில்லை. அருகில் ஒரு நேபாள பெண்மணி அமர்ந்திருந்தாள். நானாகவே பேச்சுக் கொடுத்தேன். பதிலுக்கு ‘நீங்க என்ன செய்யறீங்க?’ என்றாள். கொஞ்சம் பந்தாவாகச் சொன்னேன். நம்பிக் கொண்டவள் தன்னிடமிருந்த விசிட்டிங் கார்ட் ஒன்றைக் கொடுத்தாள். ‘சக்ஸஸ்’ என்று நினைத்துக் கொண்டேன்.

காலை நிகழ்வுகள் அருமையாக இருந்தன. குறிப்பெடுப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் ஏகப்பட்ட விஷயங்கள் கிடைத்தன. மதிய நிகழ்விலும் கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் மனைவி மற்றும் குழந்தைகளை- மகியும் தம்பியின் மகன் யுவநந்தனும் வந்திருந்தார்கள்- எங்கேயாவது அழைத்துச் செல்லவில்லையென்றால் தலையில் இருக்கும் நான்கு முடிகளுக்கும் பிரச்சினை ஆகிவிடக் கூடும் என்பதால் ஒரு பைக்கை வாடைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரு நாள் வாடகை வெறும் இருநூற்றைம்பது ரூபாய்தான். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சுற்றிக் கொள்ளலாம். பெட்ரோல் நம் செலவு. பிகினி இல்லாத பீச் ஒன்றுக்கு சென்று திரும்பினோம். முதல் நாள் பொழுது அப்படி முடிந்தது.

இரண்டாம் நாள் நிகழ்வின் கடைசி நிகழ்ச்சிதான் நான் கலந்து கொள்ள வேண்டிய உரையாடல். 

கோவாவில் ஆளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்தால் பேருந்தில் நகர்வலம் அழைத்துச் செல்கிறார்கள். காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்தால் மாலை ஐந்தரை வரைக்கும். நல்லதாகப் போய்விட்டது. வேணிக்கும் குழந்தைகளுக்கும் டிக்கெட் எடுத்து பேருந்தில் ஏற்றிவிட்டாகிவிட்டது. இல்லையென்றால் அவர்களும் நிகழ்வுக்கு வந்துவிட்டால் சிரமமாகிவிடும். ஊரே சிரித்தாலும் கூட பரவாயில்லை. வீட்டில் இருப்பவர்கள் சிரித்துவிடக் கூடாது என்பதில் அவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறேன்.

இரண்டாம் நாள் நிகழ்வுகளில்தான் காந்தி கண்ணதாசன், கண்ணன் எல்லாம் கூட்டத்தைக் கவர்ந்தார்கள். மொழிபெயர்ப்பில் இருக்கக் கூடிய சிக்கல்கள், படைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதில் சந்திக்கக் கூடிய சவால்கள், பதிப்புத்துறையின் எதிர்காலம், சமூக ஊடகங்கள் என ஏகப்பட்ட தலைப்புகளில் நிறைய ஆளுமைகள் பேசினார்கள். கண்ணன் மொழிபெயர்ப்பு குறித்து அற்புதமான உரையை வழங்கிவிட்டு அமர்ந்தார். பதிப்பு, எழுத்து என இருக்கக் கூடியவர்களுக்கு மிக முக்கியமான உரையாடல்கள் அவை. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வு தமிழ் பதிப்பாளர்களிடையே இன்னமும் கவனம் பெற்றிருக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம்தான். அது இருக்கட்டும்.

இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதுதான் ‘எதைப் பற்றி பேச வேண்டும்’ என்கிற செய்திகளை மண்டைக்குள் ஓட்டிக் கொண்டிருந்தேன். மாலை நெருங்க நெருங்க படபடப்பு அதிகமாகியிருந்தது. இவ்வளவு செலவு செய்து நம்மை அழைத்திருக்கும் போது அதற்கு ஓரளவுக்காகவது பதிலீடு செய்யும்படியாக நம்முடைய பேச்சு இருக்க வேண்டும் என்கிற படபடப்பு அது. இப்படியான வாய்ப்புகள் கிடைக்கும் போது அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையையும் அடக்கியிருந்தது.

பப்ளிஷிங் நெக்ஸ்ட் மாதிரியான நிகழ்வுகளில்தான் நெட்வொர்க்கிங் உருவாகிறது. திரிபுராவைச் சார்ந்தவர் தமிழ்நாட்டுக்காரர் ஒருவரைச் சந்தித்து தொடர்பை வளர்க்கிறார். மலையாளியும் பெங்காலியும் பேசிக் கொள்கிறார்கள். மராத்தியும் காஷ்மீரியும் விசிட்டிங் கார்டுகளை பரிமாறிக் கொள்கிறார்கள். என்னிடம் விசிட்டிங் கார்ட் இல்லை என்பது வேறு விஷயம். அதுவரை என்னிடம் யாரும் சும்மாவாச்சும் கூட கேட்டிருக்கவுமில்லை நானும் யாரிடமும் விசிட்டிங் கார்டை வாங்கியிருக்கவில்லை. 

மாலை ஐந்து மணிக்கு மேடையேற்றினார்கள். முதல் சில வினாடிகளிலேயே தாகம் எடுத்து நீரை அருந்தத் தொடங்கியிருந்தேன். நாக்கு தமிழகக் காவிரியைவிட வேகமாக வறண்டு கொண்டிருந்தது. ரசனா ஆத்ரேயா என்னும் எழுத்தாளர், க்ராஸ்வேர்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஜெயா என்னும் பதிப்பாளர்- இவர் ஐஐடியில் பி.டெக் பிறகு ஐஐஎம்மில் எம்.பி.ஏ முடித்தவர் ஆகியோர் என்னோடு அமர்ந்திருந்தார்கள். லியோனார்ட்தான் ஒருங்கிணைப்பாளர். ஒவ்வொருவராகக் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார். படு சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாமும் அதே மாதிரி முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டாம் எனத் தோன்றியது. எல்லோரையும் சிரிக்க வைத்துவிட வேண்டும் என அந்த வினாடியில் முடிவு செய்து கொண்டேன். நம்மை அறிவாளி என்று காட்டிக் கொள்வதைவிடவும் மனதில் பட்டதை உண்மையாகப் பேசிவிட வேண்டும் என்கிற நினைப்பு பொறி தட்டியிருந்தது. நான்கு பேரில் என்னைத்தான் கடைசியாகக் கேள்வி கேட்டார்.

‘கண்ட புஸ்தகத்தைப் படிச்சுட்டு படிப்பைக் கோட்டை விடுறான்னு அம்மா திட்டினாங்க....இப்போ குடும்பத்தைக் கண்டுக்கிறதில்லைன்னு பொண்டாட்டி திட்டுறா’ என்று ஆரம்பித்தேன். சிரிக்கத் தொடங்கினார்கள். சில நிமிடங்கள்தான். கூட்டம் நம் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள வெகுநேரம் ஆகவில்லை. என்னுடைய ஆங்கிலத்தில் சில இலக்கணப் பிழைகள் இருக்கும்தான். ஆனால் நான் பேசுவதை எதிரில் இருப்பவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்கிற நம்பிக்கை வந்துவிட்டால் சமாளித்துவிடுவேன்.

‘ஓர் எழுத்தாளர் ஒரே சமயத்தில் ஒரு புத்தகத்தை பதிப்பாளர் மூலமாக வெளியிட்டு இன்னொரு புத்தகத்தை சொந்த வெளியீடாகவும் போடலாமா?’ என்று ஒருங்கிணைப்பாளர் கேட்டார். 

‘ஏன் முடியாது? ஒரு புத்தகம் நல்லா விக்கும்ன்னு தெரிஞ்சா சுயமா வெளியிட்டு விடலாம்...ஒருவேளை விற்காதுன்னு தெரிஞ்சா பதிப்பாளர் தலையில் கட்டிவிடலாம்’ என்றேன். கைதட்டினார்கள்.

‘ஏன் எழுத்தை முழுநேரத் தொழிலாக எடுத்துக் கொள்ள முடியாது?’ என்று கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி வினவினார்.

‘எடுத்துக்கலாம்தான். ஆனா பாருங்க...பெங்களூரில் வீடு கட்டியிருக்கோம். இருபத்தேழு லட்ச ரூபாய் வங்கிக் கடன் இருக்கு. எழுதறேன் பேர்வழின்னு சோத்துக்கு லாட்டரி அடிச்சா வீட்டுக்காரி பையனைக் கூட்டிட்டு அப்பன் வீட்டுக்கு போய்ட்டா என்ன செய்யறது சொல்லுங்க’ என்றேன். உண்மையைத்தான் சொன்னேன். எதையுமே மறைக்கவில்லை. மனதுக்குள் என்ன தோன்றியதோ அதை வெளிப்படையாகப் பேசினேன்.

‘ஒருவேளை சினிமாவில் எதையாவது செய்து சம்பாதித்தால் இது பற்றி யோசிக்கலாம்’ என்று சொன்னதற்கு கூட்டத்திலிருந்த ஒருவர் ‘காமெடி ட்ரை செய்யப் போறீங்களா?’ என்றார். குரலையும் தொனியையும் மாற்றாமல் தலையைத் தடவிக் காட்டியயபடியே ‘வில்லனாக முயற்சிக்கிறேன்’ என்றேன்.

கூட்டம் முடிந்தவுடன் நிறையப் பேர் கை குலுக்கினார்கள். கிட்டத்தட்ட நாற்பது விசிட்டிங் கார்டுகள் பாக்கெட்டுக்குள் சேர்ந்திருந்தது. மிகுந்த நிறைவாக இருந்தது. என்னிடம் கார்ட் கேட்டவர்களிடம் ‘தீர்ந்துவிட்டது’ என்று கூசாமல் பொய் சொன்னேன்.

சில நிமிடங்களில் மனைவி அழைத்தாள். ‘எப்படி பேசுனீங்க?’ என்றாள். ‘எல்லோரும் பாராட்டினாங்க’ என்றேன். முந்தின நாள் உண்மையைச் சொல்லியிருந்தாள் அவளுக்கு இது சந்தோஷமாக இருந்திருக்கக் கூடும். ‘அப்படியா? நாங்க ஊர் சுத்திட்டு வந்துட்டோம்...ஜாலியா இருந்துச்சு’ என்றாள். அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

ஹோட்டலின் வராந்தாவில் வேணியுடன் பேசிக் கொண்டிருந்த போது ‘இன்னைக்கு சாயந்திரம் அவர் முதல் ஸ்டார்ன்னா நீங்கதான் இரண்டாவது ஸ்டார்’ என்று ப்ரிண்ட் இந்தியாவின் ஆசிரியர் ராமு ராமநாதன் அவளிடம் சொன்ன போதுதான் என்னவோ நடந்திருக்கிறது என்று உணரத் தொடங்கினாள். எனக்கும் சந்தோஷமாக இருந்தது.

‘என்னைப் பத்தியும் பேசுனீங்களா?’ என்றாள்.

சிரித்து வைத்தேன். அவர் சென்ற பிறகு ‘எப்பவுமே என்னைக் காலை வாரித்தான் நீங்க கைதட்டு வாங்குவீங்க...என்ன பேசுனீங்கன்னு சொல்லுங்க’ என்றாள். இதுவரைக்கும் பதில் சொல்லாமல் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். 

அவளுக்கு சந்தோஷமளிக்கக் கூடிய இன்னொரு விஷயம் இருந்தது. ‘பேசியதைக் கேட்டுட்டு ஜெய்ப்பூரில் இதே மாதிரியான நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள்’ என்று வாய் வரைக்கும் வந்துவிட்டது. அழைத்திருக்கிறார்கள்தான். ஆனால் இப்பொழுதே சொல்லிவிட்டால் பெட்டியை தயார் செய்ய ஆரம்பித்துவிடுவாள். நிகழ்வு நெருங்கும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று மனதுக்குள்ளேயே அமுக்கிக் கொண்டேன்.

8 எதிர் சப்தங்கள்:

Mahesh said...

ரொம்ப சுருக்கமா/அழகா உங்க நடையில் கோவாவில் நடந்ததை எழுதி இருந்தீங்க அருமை சார்.

அரவிந்தன் said...

அன்பின் மணி!

வாழ்த்துகள்!!!

On a lighter note,

இதை படிக்கும்போது கல்யாண பரிசு தங்கவேல் காமெடி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை :)

சேக்காளி said...

//நம்மை அறிவாளி என்று காட்டிக் கொள்வதைவிடவும் மனதில் பட்டதை உண்மையாகப் பேசிவிட வேண்டும்//
இப்பிடி தானேய்யா நம்மளையும் பிடிச்சு போட்டிருக்கேரு.

சேக்காளி said...

// தலையைத் தடவிக் காட்டியயபடியே ‘வில்லனாக முயற்சிக்கிறேன்’//
அப்ப அவார்டு அரவிந்த் சாமிக்கு கெடையாதா?

P.SURESH. Thiruvarur said...

All the best. Keep coming bro

Unknown said...

என்னிடம் கார்ட் கேட்டவர்களிடம் ‘தீர்ந்துவிட்டது’ என்று கூசாமல் பொய் சொன்னேன் #செம காமெடி

Bommiah said...

if there is video, please upload

Anonymous said...

வாழ்த்துகள் அண்ணா...

"‘எப்பவுமே என்னைக் காலை வாரித்தான் நீங்க கைதட்டு வாங்குவீங்க...என்ன பேசுனீங்கன்னு சொல்லுங்க’ என்றாள்.

சிரித்து வைத்தேன்.

இப்பொழுதே சொல்லிவிட்டால் பெட்டியை தயார் செய்ய ஆரம்பித்துவிடுவாள்."


அருமை அண்ணா...