Sep 10, 2015

சினிமா

ரஷ்யாவில் போலீஸ்காரர்கள் படு மோசமானவர்களா என்று தெரியவில்லை. சிக்குகிற பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் வன்புணர்வதாக ஒரு படத்தில் காட்டியிருந்தார்கள். படத்தில் இருப்பதையெல்லாம் அப்படியே நம்ப முடியாதுதான். ஆனால் நம்மை நம்ப வைக்கும்படியான, ஒரு வகையில் அறிவுஜீவித்தனமான படம் அது. Twilight Portrait. செருப்பு அறுந்து விட வீட்டுக்கு நடந்து செல்கிறாள் நாயகி. ஒரு காரை நிறுத்தி வழி கேட்கிறாள். காரில் இருப்பவர்கள் பையை பறித்துக் கொண்டு போய்விடுகிறார்கள். நொந்து போய் நடந்து கொண்டிருப்பவளை மூன்று போலீஸ்காரர்கள் கடத்திச் சென்று சீரழித்துவிடுகிறார்கள். அதன் பிறகு ஆளே மாறிவிடுகிறாள். இவள் இப்படி மாறிப் போனதன் காரணம் தெரியாத கணவன் ‘உனக்கு ரெஸ்ட் வேணும் போல இருக்கு...அம்மா வீட்டுக்கு போய்ட்டு வா’ என்கிறான். அம்மா வீட்டுக்குச் செல்லாமல் தன்னை வன்புணர்ந்த போலீஸ்காரனுடன் சில நாட்கள் தங்குகிறாள். அவன் அவளோடு உறவு கொள்ளும் போதெல்லாம் ‘ஐ லவ் யூ’ என்கிறாள். எப்படியும் அவன் கதையை முடித்துவிடுவாள் என்று நினைத்துக் கொண்டேதான் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

இலக்கியத்தில் Reader's space பற்றிச் சொல்வார்கள். கதையோ, கட்டுரையோ, கவிதையோ- வாசித்து முடித்த பிறகு தான் வாசித்தது குறித்து வாசகன் யோசிப்பதற்கான இடம் அது. அதே போலத்தான் நல்ல சினிமாவில் பார்வையாளனுக்கான இடம் என்று இருக்கும். ‘ஏன் இப்படி நடந்தது?’ ‘இவன்/இவள் செய்தது சரியா?’ ‘அந்தப் பாத்திரம் ஏன் அப்படி நடந்து கொண்டது?’ போன்ற கேள்விகளை எழுப்பும். இந்த ரஷ்யப்படம் அப்படியானதுதான். இணையத்திலேயே கிடைக்கிறது. 

தினமணி ஆன்லைனில் எழுதி வந்த செல்லுலாய்ட் தொடர் முடிந்துவிட்டது. 

இருபத்து மூன்று வாரங்கள் வெளி வந்த தொடர். வாரம் ஒரு படம். கிட்டத்தட்ட அத்தனை வாரங்களும் வியாழக்கிழமையன்று காலையில்தான் கட்டுரையை அனுப்பினேன். அவர்கள் பத்து மணிக்குள் பிரசுரித்தாக வேண்டும். வேண்டுமென்றே தாமதம் செய்யவில்லை. அறக்கட்டளை வேலைகளின் காரணமாக பெரும்பாலான சனி, ஞாயிறுகளில் ஏதாவதொரு வேலை வந்துவிடுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் கைவசம் இருந்தால் முதல் நாள் படம் பார்த்து அடுத்த நாள் கட்டுரை எழுதிவிட முடியும் என்கிற நம்பிக்கையில்தான் அவர்கள் கேட்டவுடன் ஒத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. அத்தனை படங்களும் சமீபத்திய படங்களாக இருக்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்ததுதான் பிரச்சினையாகப் போய்விட்டது. திங்கட்கிழமையன்று முதல் படத்தைப் பார்ப்பேன். சில சமயங்களில் முதல் படமே நன்றாக அமைந்துவிடும். பிரச்சினையில்லை. கட்டுரை எழுதுவதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் இருக்கும். ஆனால் பல சமயங்களில் படம் மொக்கையாகிவிடும். அடுத்த படத்தை பார்த்தாக வேண்டும். ஆனால் ஒரே நாளில் இரண்டு படங்களைப் பார்க்க முடியாது. தூங்கி எழுந்து அடுத்த நாள் வேலைக்குச் செல்ல வேண்டும்; நிசப்தத்திற்கு கட்டுரை எழுத வேண்டும். அதனால் செவ்வாய்க்கிழமை இரண்டாவது படம் பார்க்க வேண்டியிருக்கும். பல சமயங்களில் புதன்கிழமையன்றும் படம் பார்க்க வேண்டியதாகப் போய்விடும். புதன்கிழமையன்று படம் பார்த்து அதே இரவில் கூட கட்டுரையும் எழுதி அனுப்பியிருக்கிறேன்.  

கட்டுரைகளுக்கு அந்தத் தளத்தில் எப்படி வரவேற்பு இருந்தது என்று தெரியவில்லை. அவர்கள் பாஸிட்டிவாகத்தான் சொன்னார்கள். அப்படித்தான் சொல்வார்கள். நம்பிக் கொள்ள வேண்டியதுதான். அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வர இரண்டு பிரசுரங்களில் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். யாராவது அந்தத் தொடரை வாசித்திருந்தால் பத்து நிமிடங்கள் ஒதுக்கி அவை குறித்த உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டால் தன்யனாவேன். 

வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்ப்பது நல்ல அனுபவம். ரஷ்யாவையும் அர்ஜெண்டினாவையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு எவ்வளவு பேருக்குக் கிடைக்கும் என்று தெரியாது. ஆனால் அந்தந்த மொழிப்படங்கள் தங்களது நிலத்தையும் அந்நிலத்தின் மனிதர்களையும் காட்டிவிடுகின்றன. உலக வரலாறுகளின் மைக்ரோ கூறுகளையும், வெவ்வேறு நாடுகளின் தனிமனித சிக்கல்களையும் இன்னபிற சமாச்சாரங்களையும் குறுக்குவெட்டாகவோ அல்லது நீள்வெட்டாகவோ புரிந்து கொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன. ஒளிப்பதிவு, இசை, கேமிரா கோணங்கள் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். எனக்கு அவை அவசியமானவையாகவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு திரைப்படத்தின் வழியாகவும் விதவிதமான மனிதர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அன்பு நிறைந்தவர்களையும், வன்முறையாளர்களையும், காமுகர்களையும், இச்சை மிகுந்தவர்களையும், அப்பாவிகளையும், அசுர குணம் நிறைந்தவர்களையும் திரைப்படங்கள் காட்டுகின்றன. அதற்காகவே மனம் வெவ்வேறு படங்களைத் தேடுகிறது.

The bridge on the river kwai, The city of god போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் தந்த அனுபவத்துக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத அனுபவங்களைத்தான் The desert மாதிரியான உலகம் சிலாகிக்க மறந்த படங்களும் தந்தன.  அதனால் அயல்படங்களை வகைதொகையில்லாமல் பார்த்துவிட வேண்டும். ஆரம்பத்தில் IMDB தளத்தில் எவ்வளவு தரப்புள்ளிகள் வழங்கியிருக்கிறார்கள் என்று பார்த்து படங்களைத் தேர்ந்தெடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன். சில நல்ல படங்களை யாருமே கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார்கள். யாராவது நண்பர்கள் பரிந்துரைத்து பார்க்கும் போது அற்புதமான படமாக இருக்கும். அதன் பிறகு தரப்புள்ளிகளை மனம் நம்புவதிலை. அதனால் அந்தந்த சமயத்தில் என்ன மாதிரியான மனநிலை இருக்கிறதோ அந்த வகையிலான படங்களைப் பார்த்துவிடுவது வாடிக்கையாகியிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் தலைப்பில் ஒவ்வொரு வாரமும் கட்டுரை என்பது கடினமான காரியம். தொடர் எழுதுவதற்கு ஒரு சுய ஒழுங்கு வேண்டும். அதுவும் ஒற்றைக் கட்டுரையிலேயே கூட ஆரம்பிக்கும் போது ஒரு விஷயத்தைச் சொல்லி போது இன்னொரு விஷயத்தில் கொண்டு போய் நிறுத்தும் என்னைப் போன்ற தான்தோன்றியான மனநிலை வாய்த்தவர்கள் வானம் ஏறி வைகுண்டத்தை பிடிப்பது மாதிரிதான்.

4 எதிர் சப்தங்கள்:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

என்றுமே சிங்கம் கூண்டுக்குள் வசிக்க விரும்பாது கூட்டமாக வந்தாலும் ,தனியே வந்தாலும் தன் வேலையை தான் விரும்பி பார்த்தால் மட்டுமே சாத்தியம் .நீங்களும் அப்படித்தான் இதுவும் கடந்து போகும் என்பதாய் எதாவது செய்து கொண்டே இருங்கள் எல்லாமே நல்லா வரும்

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

என்றுமே சிங்கம் கூண்டுக்குள் வசிக்க விரும்பாது கூட்டமாக வந்தாலும் ,தனியே வந்தாலும் தன் வேலையை தான் விரும்பி பார்த்தால் மட்டுமே சாத்தியம் .நீங்களும் அப்படித்தான் இதுவும் கடந்து போகும் என்பதாய் எதாவது செய்து கொண்டே இருங்கள் எல்லாமே நல்லா வரும்

Anonymous said...

"ஒளிப்பதிவு, இசை, கேமிரா கோணங்கள் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். எனக்கு அவை அவசியமானவையாகவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு திரைப்படத்தின் வழியாகவும் விதவிதமான மனிதர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது."

ஆம் அண்ணா. தங்கள் கூற்று எனக்கு மிகவும் ஒத்துபோகும்.

தங்களின் பட பதிவின் வாயிலாக நானும் அந்த படத்தை பார்த்த அனுபவம் வந்துவிடும்.
ஆனால் தங்களால் எப்படி, ஒருமுறை பார்த்தே இப்படி எல்லாம் யோசிச்சு,ரசிச்சு எழுத முடிகிறது?

அருமை. (புத்தக வடிவில் வாசிக்க காத்திருப்பவனில் ஒருவன்)

சேக்காளி said...

//இரண்டு பிரசுரங்களில் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்//
யாத்தாடி!!!!!!!!!!!!!!