Aug 6, 2015

ஐ.ஏ. எஸ்

உமேஷ் மதுரைக்காரர். இருபத்து நான்கு வயதாகிறது. படித்து வளர்ந்ததெல்லாம் சேலத்தில். கல்லூரிப் படிப்பை கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முடித்துவிட்டு மத்திய அரசுப்பணிகளுக்கான தேர்வெழுதி அகில இந்திய அளவில் 77வது ரேங்க் வாங்கிவிட்டார். செப்டெம்பர் ஏழாம் தேதியிலிருந்து டேராடூனில் பயிற்சி தொடங்கவிருக்கிறது. ஐ.ஏ.எஸ் பயிற்சி. அடுத்த வருடம் ஏதாவதொரு மாநிலத்தில் துணைக் கலெக்டராக பதவி ஏற்பார். ஓரிரு வருடங்களில் அதே மாநிலத்தில் மாவட்ட ஆட்சியாளராகவும் ஆவார். வழக்கமான நேர்காணல்களிலிருந்து விலகி சில கேள்விகளைக் கேட்க வேண்டும் எனத் தோன்றியது.  அவை இந்தத் தேர்வை எழுத விரும்பும் மற்ற மாணவர்களுக்கு ஏதாவதொரு வகையில் பயன்பட வேண்டும் என எதிர்பார்த்தோம். பயன்படும் என நினைக்கிறேன்.


1) உங்களுடைய சில நேர்காணல்களை வாசிக்கும் போது பாஸிடிவ் திங்கிங் பற்றி பேசியிருந்தீர்கள். உங்களுடைய அனுபவத்திலிருந்து ஒரு உதாரணம் தர முடியுமா?

பாஸிடிவ் திங்கிங் என்றால் எனக்கு உடனடியாக ஞாபகம் வரும் விஷயம் இது தான் - 2013இல் எனது இரண்டாவது முயற்சியில் நான் முதல்நிலை தேர்வில் (Prelims) தோல்வி அடைந்தேன். அப்போது என் மனதில் ஓடிய எண்ணம் : "நல்லவேளை முதல்நிலை தேர்விலேயே தோல்வி அடைந்தேன். ஒரு வேளை மெயின்ஸ் தேர்வில் தோல்வியடைந்திருந்தால் தேர்வின் முடிவு தெரிவதற்கும் அடுத்த ஆண்டுத் தேர்வுக்கும் இடையில் ஆறு மாதம்தான் கால இடைவெளி இருந்திருக்கும். இப்பொழுது பரவாயில்லை. அடுத்த வருட தேர்வுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இன்னும் நன்றாக படிக்கலாம்"  என்பது தான். வாழ்க்கை பி.வாசு படம் போல் சுமாராக இருந்தாலும் அதில் இருக்கும் இளையராஜா பாடலுக்காக அதை கொண்டாடும் அளவுக்கு ரொம்ப positive thinker நான்.

2) நம்முடைய வளர்ப்பு முறையிலேயே ஒருவிதமான எதிர்மறைச் சிந்தனையை குழந்தைகளுக்கு ஊட்டிவிடுகிறோம். இல்லையா? எல்லாவற்றிலும் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பயத்தை உருவாக்கிவிடுகிறோம். 'எதுக்கு ரிஸ்க்’ என்கிற மனநிலை நம்மிடையே பொதுவானது. அந்த மனநிலையை உடைப்பதுதான் ஐ.ஏ.எஸ் மாதிரியான தேர்வுகளில் இருக்கக் கூடிய மிகப்பெரிய சவால் என்று தோன்றுகிறது.....

பெற்றோர்களைச் சொல்லி தவறில்லை. ஆனால் அவர்கள் ஒன்றை நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.ஒரு வருடமாக IAS தேர்வுக்கு படிக்கும் ஒரு மாணவி இந்தியாவில்  எந்த தேர்வையும் சந்திக்கும் மனத்திடத்தையும் திறமையும் நிச்சயம் பெற்றுவிடுவார். Bank, TNPSC, SSC  என்று பலதரப்பட்ட நல்ல வாய்ப்புகள் உள்ளன. எனவே, பெற்றோர்கள் நிச்சயம் தங்கள் பிள்ளைகள் IAS தேர்வு எழுத பெரிதும் ஊக்கப்படுத்தலாம். எனது பெற்றோர் கொடுத்த சுதந்திரம்தான் என்னை உருவாக்கியிருக்கிறது. இங்கு அத்தனை பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு சுதந்திரமும் அந்தச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாத பக்குவத்தையும் கொடுத்தால் நல்லன நடக்கும்.

3) சிவில் சர்வீஸ் இண்டர்வியூ எப்படி இருந்தது? கேட்கப்பட்ட கேள்விகளில் உங்களுக்கு சுவாரஸியமானது என்று எதைச் சொல்வீர்கள்?

ஐந்து பேர்கள் நேர்காணல் நடத்தினார்கள். ஒவ்வொருவரும் தலா ஐந்து நிமிட நேரம் கேட்டார்கள். நேர்காணலில் கல்லூரி viva போல மிகவும் Technical-ஆன கேள்விகள் கேட்கப்பட்டன. Wifi, Hacking மாதிரியான கேள்விகள். எனக்கு பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. நேர்காணலில் ‘இவனுக்கு என்ன தெரியும்’ என்பதைவிடவும் பதில் தெரியாத கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்கிறான் என்பதைத்தான் கவனிக்கிறார்கள். பதில் தெரியாத கேள்விகளால் நடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதால் பதில் தெரிந்த கேள்விகள் கேட்கப்பட்ட போது படு ஜாலியாக பதிலளிக்க முடிந்தது.

என்னுடைய Hobby கிரிக்கெட் பார்ப்பது என்று நான் குறிப்பிட்டு இருந்ததால், IPL-இல் இருந்து 5 நிமிடங்களுக்கு மேலாக கேள்விகளைக் கேட்டார்கள். நான் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே நேர்முகத் தேர்வுக்கு தயார் ஆனேன். நான் படித்தது உதவவில்லை, ஆனால் பார்த்த Kohli விளாசல்கள் உதவின. எத்தனை லோதாக்கள் குறை கூறினாலும் உரக்க சொல்வேன் - வாழ்க IPL.

4) சிவில் சர்வீஸில் விருப்பப்பாடம் என்று ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டுமில்லையா? நீங்கள் எந்தப் பாடத்தைத் படித்தீர்கள்? அதைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?.

நான் தேர்ந்தெடுத்த விருப்பப்பாடம் Political  Science and International Relations.2004 இல் பொதுத் தேர்தல் நடந்த போது எனக்கு 13 வயது. ஆனால் அப்பொழுதே ஜூனியர் விகடன் முதல் அவுட்லுக் வரை எல்லாவற்றிலும் தேர்தல் செய்தி படிக்கும் அளவிற்கு நமது ஜனநாயக அமைப்பு மற்றும் தேர்தல்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு. பின்னர், ராமச்சந்திர குஹா அவர்களின் புத்தகங்களைப் படித்து இந்தப் பாடம் மீது மேலும் காதல் வந்தது. IAS தேர்வில் இந்த பாடத்தை optional-ஆக எடுத்தேன் எனக் கூறுவதை விட இந்த விருப்பப் பாடம் இருந்ததால்தான் IAS தேர்வு மீதே தனிக் காதல் ஏற்பட்டது என்றே சொல்லாம் 

5) தோல்வி அடைந்துவிடக் கூடும் என்ற பயமில்லாமல் இருந்தீர்களா? எதற்காகக் கேட்கிறேன் என்றால் இந்த பயம் இருந்தால் ‘இது இல்லையென்றால் அடுத்த ஆப்ஷன் என்ன’ என்று மனம் யோசிக்கத் தொடங்கிவிடும். அது பெரிய தடைக்கல் அல்லவா?

தோல்வி பயம் என்ற ஒன்று என்னை ஆட்கொள்ளாமல் இருந்ததற்கு என் குடும்பத்தினரும், நண்பர்களுமே காரணம். சுற்றி எல்லாருமே நல்லவர்களாக இருந்தால் நல்லதே நடக்கும் என்பதற்கு என் வெற்றியே ஒரு உதாரணம். மேலும் இந்தப் பயணத்தில் பின்னணி இசையாக எனக்கு இருந்தது என் ரஹ்மானின் இசையே.  ‘தொடு வானம் தொட போகும் போது தூரம் தூரம் போகும் இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும்’ ‘இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்’  ‘எந்நாளும் உன் காதல் அது வாழும் சத்தியமே! தொலையாதே எந்த இருளிலும் மறையாத’ ‘வானே என் மேல் சாய்ந்தாலுமே நான் மீண்டு காட்டுவேன்’ என்று என் குரு ரஹ்மான் என்னுடன் எப்பொழுதும் இருந்ததால் தோல்வி பயம் என்னை சீண்டவில்லை. இந்தத் தேர்வுக்கு தயாராகும் மற்ற மாணவர்களும் இப்படி ஒரு external பற்றுதல் வைத்திருந்தால் தேவை இல்லாத எண்ணங்கள் அண்டவே அண்டாது.

6) ஒரு நாளைக்கு பத்து மணி நேரங்கள் படித்ததாகவும் பதினைந்து மணி நேரங்கள் படித்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். அவ்வளவு உழைப்பைக் கோரக் கூடிய தேர்வுதானா இது?

எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதை விட அந்த நேரத்தில் எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம். 35 பந்துகளிலும் century அடிக்கலாம், 270 பந்துகளிலும் அடிக்கலாம். சேவாக் ஆகவும் இருக்கலாம், கவாஸ்கர் ஆகவும் இருக்கலாம் - இந்தியா போட்டியில் வெல்ல வேண்டும். அது தான் முக்கியம்    

7) பெண் நண்பிகள், காதலி என்று யாராவது இருக்கிறார்களா? இதுவொரு மிகப்பெரிய கவனச்சிதறல் என்று ஒரு சாரார் சொல்வார்கள். இதுவொரு மிகப்பெரிய உந்துசக்தி என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள். எனக்குத் தெரிந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தக் கேள்விக்கு ‘நான் சொக்கத் தங்கம்’ என்கிறார்கள். அதனால் கேட்க வேண்டியதாக இருக்கிறது. உண்மையைச் சொல்லுங்கள்.

காதலி என்பவள் உந்துசக்தியும் அல்ல. கவனச்சிதறலும் அல்ல. அவள் நம் சக பயணி. என் அம்மா இந்த வரியை படிக்கும் போது துணுக்குறாமல் இருக்க இதோடு நிறுத்தி கொள்கிறேன் 

8) இந்த சமூகத்தின் அடிப்படையான பிரச்சினைகள் என்று எதைக் கருதுகிறீர்கள்?

நிச்சயம் ஏழை - பணக்கார ஏற்றத்தாழ்வு தான். மற்ற நாடுகளிலும் ஏழைகள் உண்டு ஆனால் அவர்கள் ஒரு life of dignity-ஆவது வாழ முடிகிறது. நமது நாட்டில் ஏழைகளுக்கு அந்தக் குறைந்தபட்ச  பாக்கியம் கூட இல்லை. ஏழைகளும் பணக்காரர்களும் தனித்தீவுகளாக, இரண்டு இந்தியாக்களாக வாழ்வதே நமது சமுதாயத்தின் தலையாய பிரச்சினை. Equality லிபர்ட்டி மற்றும் fraternity - இதில் fraternity குறைந்து வருவதே நமது மிக பெரிய சவால்.

9) சாதிய வேறுபாடுகள் பிரச்சினை இல்லையா?

நிச்சயமாக பிரச்சினைதான். ஒருவேளை என் வளர்ப்பு முறையானது சாதிய நுண்பிரச்சினைகளை அடையாளம் காட்டவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் கேட்டவுடன் ஏழை-பணக்காரர் பிரச்சினைதான் பிரதானமாகத் தெரிந்தது. 2012 ஆம் ஆண்டில் வட இந்தியாவில் திடீரென மின் தடை ஏற்பட்டது. ஊடகங்கள் தலைகீழாகக் குதித்தன. அப்பொழுது அமார்த்தியா சென் எழுதிய விஷயம் மிக முக்கியமானது. ‘ஆறு மணி நேர மின் தடைக்கு இவ்வளவு பேசுகிறீர்களே இந்தியாவில் மின்சாரமே இல்லாமல் வாழும் இருபது கோடிக்கும் அதிகமானவர்களைப் பற்றி எப்பொழுது எழுதப் போகிறீர்கள்?’ என்று எழுதியிருந்தார். invisibility of poverty பற்றி யோசிக்கிறேன்.

10) உங்களுக்கான லட்சியம் என்று எதைச் சொல்வீர்கள்? இருபதாண்டுகளுக்குப் பிறகு உங்களை என்னவாக பார்க்க விரும்புகிறீர்கள்?

எனக்கான தற்போதைய லட்சியம் -10 வருடங்கள் கழித்து நீங்கள் இதே போல் நேர்காணல் ஒன்று என்னுடன்  செய்ய வேண்டும், அதற்கு நேர்மையாக, தைரியமாக  பதில் சொல்லும் அளவு இந்த 10 வருட  பணி இருக்க வேண்டும் என்பதே.  எனது ஆசான் திரு.சுஜாதா அவர்கள் ஒரு முறை இந்தியாவின் எதிர்காலம் இளம் IAS அதிகாரிகளிடம் உள்ளதாக எழுதி இருந்தார். IAS-இல் சேரும் என்னை போன்ற இளம் தலைமுறையினர் காணும் சிறு சிறு கனவுகளினால் இந்தியாவின் துயில் நீங்க வேண்டும் என்பதே லட்சியம். கனவு என்றும் சொல்லலாம்.

11) உங்களுடைய எல்லா நேர்காணல்களிலும் எழுத்தாளர் சுஜாதா இருக்கிறார்...

அது intentional இல்லை. பெற்றவர்கள் சுதந்திரத்தைக் கொடுத்தார்கள். ஆனால் புத்தகங்களையும் வாசிப்பையும் சொல்லிக் கொடுத்தவர் சுஜாதாதான். அவர்தான் ஜெயமோகன் மனுஷ்யபுத்திரனில் ஆரம்பித்து பில் ப்ரைசன், டான் ப்ரவுன் வரை சகலரையும் அறிமுகப்படுத்தினார். ஒருவேளை சுஜாதாவிலிருந்து ஆரம்பிக்காமல் நான் நேரடியாக ஜெயமோகனை வாசிக்க ஆரம்பித்திருந்தால் வேறு மாதிரி ஆகியிருக்கக் கூடும்.

12) உங்களுடனான இந்த நேர்காணலின் வழியாக உங்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. படித்த பெற்றோர்கள், நல்ல பள்ளி, சிறந்த கல்லூரி- ஒரு வகையில் வசதியான உயர் நடுத்தரக் குடும்பம். உங்களைப் போன்ற இத்தனை வசதிகளும் கிடைக்காத மாணவர்களுக்கு இந்தத் தேர்வு என்பது சாத்தியமான ஒன்றா?

நிச்சயமாக சாத்தியம்தான். பள்ளிப் பருவத்தில் தொடர்ந்து செய்தித்தாள்களை வாசித்து வந்தால் போதும். கல்லூரி வரும் போது பிற புத்தகங்களை நோக்கிப் பயணிக்கலாம். இப்பொழுது அரசாங்கமே நிறைய பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. அவற்றின் தேர்ச்சி சதவீதமும் நன்றாக இருக்கிறது. குடும்பச் சூழல் என்பதெல்லாம் ஒரு தடைதான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் இதெல்லாம் உடைக்கவே முடியாத தடைகள் இல்லை. தடைகளை உடைப்பவன்தான் வெற்றியாளன் ஆகிறான். ‘உடைக்க முடியும்’ என்கிற தைரியத்தை உருவாக்கிவிட்டால் போதும்.

13 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Thambi pinrapa.. i like your answer about girl friend ;)

சேக்காளி said...

//எனக்கான தற்போதைய லட்சியம் -10 வருடங்கள் கழித்து நீங்கள் இதே போல் நேர்காணல் ஒன்று என்னுடன் செய்ய வேண்டும், அதற்கு நேர்மையாக, தைரியமாக பதில் சொல்லும் அளவு இந்த 10 வருட பணி இருக்க வேண்டும் என்பதே//
லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் உமேஷ்.

Unknown said...

congrats sir, I am also preparing for upsc exam. your answers really encouraging me to face this exam well. positive thinking...that's the only manthra of success..
all the best sir

Anonymous said...

Real good read, thanks for sharing it...

Mahesh said...

muthalil umesh avarukku vazthukkal 24 vayathil thanathu latchiyathai saathithu vittar.

kelvikal and pathilkal ellam nichayam upsc exam prepare pannupavarukalukkum. parents kum helpful aa irukkum sir.

Unknown said...

Nice interview, Really useful to students and whom preparing all type exams.

பகவான்ஜி said...

உமேஷின் சாதனைக்கு ,சமீபத்தில் மதுரையில் விருது வழங்கப் பட்டது ,அந்த விழாவில் அவர் பேசியது நன்றாக இருந்தது ,உங்களின் பேட்டியை போன்றே :)

Vinoth Subramanian said...

Nice interview. Nice answers. Congratulations sir... Very inspirational.

ilavalhariharan said...

உமேஷின் கனவுகள் நனவாக வாழ்த்துகள்.....இன்றைய அரசியல் சூழலில் அவருடைய நேர்மறை சிந்தனைகள் வெற்றியடைய வேண்டும். எந்தச் சூழலிலும் அவர் நோக்கம நழுவாதிருக்க வேண்டும். நல்ல கேள்விகள..சிறந்த பதில்கள். அவருடைய இலக்கிய ஆர்வம் பிரமிப்பூட்டுகிறது...நன்றி மணிகண்டனுக்கு...பாராட்டுகள் உமேஷக்கு.

Dr. Venkateswari R said...

நல்ல ஆக்கப் பூர்வமான சிந்தனை ;

தொடரட்டும் இந்த வெற்றிப் பயணம்!!

Nagarajan said...

உமேஷின் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர்கிறது .இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் நேர்காணல்.
உங்கள் சீரிய சிந்தனைகள் இந்தியாவை வளப்படுத்தட்டும் . மனம்நிறைந்த வாழ்த்துக்கள் .

Nazar said...

வாழ்த்துகள் உமேஷ் :)

Anonymous said...

Congrats and All The Best Umesh..

-Sam