Jul 21, 2015

சிலிண்டரை பார்த்தீங்களா?

நேற்று காலையில் வீட்டில் எல்லோரும் அலறிய போது தூங்கிக் கொண்டிருந்தேன். ஐந்தரை மணி இருக்கும். சுதாரித்த போது வீட்டில் என்னவோ திருடு போயிருக்கிறது என்று புரிந்தது. பையன்களின் சைக்கிளைத் திருடிவிட்டார்களோ என்று பதறினேன். நல்லவேளையாக கியாஸ் சிலிண்டர்கள். ‘இதைப் போய்த் திருடுவாங்களா?’ என்று யோசித்துக் கொண்டே கீழே இறங்கிப் போனால் ‘டேய் நாங்க எதை வேணும்ன்னா திருடுவோம்’ என்று ஷூ, காலுறை, செருப்பையெல்லாம் திருடிச் சென்றிருந்தார்கள். மற்றவர்களின் செருப்புகள் என்றால் கூட விட்டுவிடலாம். என்னுடைய செருப்பைக் கூடத் திருடியிருந்தார்கள். அநேகமாக இரண்டு மூன்று வருடங்களாக அதைப் போட்டுத் தேய்த்திருந்தேன். பஞ்சத்தில் அடிபட்ட திருடர்கள் போலிருக்கிறது. கிடைத்தது லாபம் என்று மூட்டை கட்டியிருக்கிறார்கள்.

வீட்டின் கீழ்தளத்தில் சிலிண்டர்களுக்கென ஒரு கம்பி வலை அமைத்து அதற்கு பூட்டு போட்டு வைத்திருந்தோம். எட்டிக் குதித்தவர்கள் பூட்டை திறந்து அந்தப் பூட்டையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். ஒரு சிலிண்டர் பாதி தீர்க்கப்பட்டிருந்தது. இன்னொன்று முழுமையாக நிரப்பட்டிருந்தது. விடிந்தும் விடியாததுமாக 100 ஐ அழைத்ததும் அவர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்கச் சொன்னார்கள். எலெக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையம். உள்ளே நுழையும் முன்பாகவே ஒரு காவலர் விசாரித்தார். 

‘படுபாவிப் பசங்க சார்..சிலிண்டரைத் தூக்கிட்டு போய்ட்டாங்க’ என்றதற்கு சிரித்தார்.

இந்தப் போலீஸ்காரர்களே இப்படித்தான். அடுத்தவன் பிரச்சினை இவர்களுக்கு சிரிப்பாக போய்விட்டது என்று நினைத்தபடியே உள்ளே சென்றேன்.

சப் இன்ஸ்பெக்டர் கண்களாலேயே ‘என்ன?’ என்றார். அதே வாக்கியத்தை அதே தொனியில் சொன்னேன்.

‘எந்த ஏரியா?’

‘ஏ.ஈ.சி.எஸ் லே-அவுட் சார்’

‘சிவராஜ்...இல்லி நோடி..’ என்று இன்னொரு போலீஸ்காரரை அழைத்தவர்  ‘மூன்றாவது புகார்’ என்றார். 

‘இப்போத்தான் உங்க ஏரியாவிலிருந்து இரண்டு பேர் வந்துவிட்டு போனார்கள்...அஞ்சு சிலிண்டர் காணோம்ன்னு’ அவர் சொல்லி முடிக்கும் போது நம்மை விட சுறுசுறுப்பானவர்கள் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன். எனக்கு முன்பாகவே புகார் அளித்திருக்கிறார்கள்.

‘அப்படியா சார்?’ என்று கேட்ட போது சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆற்றில் தனியாக விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் போது இன்னொருவரும் நம்மோடு சேர்ந்து தத்தளித்தால் துணைக்கு கம்பெனி இருக்கிறது என்று கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் அல்லவா? 

நான் சந்தோஷப்படுவதை கவனித்தவர் ‘எங்க வேலை செய்யறீங்க?’ என்றார். 

டிராபிக் போலீஸாக இருந்தாலும் சரி; சட்டம் ஒழுங்கு போலீஸாக இருந்தாலும் சரி. மென்பொருள் துறையில் வேலை செய்கிறேன் என்று சொல்லவே மாட்டேன். நாமாகவே அவர்களின் எதிர்பார்ப்பை கூட்டிவிட்டது போல ஆகிவிடும்.

‘மார்கெட்டிங் சார்...அக்வா கார்ட்’ 

‘தேறாது’ என்று அவர் நினைத்திருக்கக் கூடும். 

‘உட்காருங்க..வர்றேன்’ என்று சொல்லிவிட்டு தம் அடிக்கக் கிளம்பினார். எனக்கு முன்பாக வந்து சென்றவர்களின் புகார்கள் அந்த மேசை மீதுதான் இருந்தன. சிலிண்டர் புகாரிலிருந்த அலைபேசி எண்ணைத் திருட்டுத்தனமாக குறித்துக் கொண்டு வெளியே வந்தேன்.

‘சார்...கோபால ரெட்டிகாரா?’

‘அவுனு..மீரு எவரு?’

‘சார்..நா பேரு மணிகண்டன்...’ என்று தொடங்கி விவரத்தைச் சொன்னவுடன் அவருக்கும் சந்தோஷம்.

‘ஓ..நிறைய பேரு வீட்டுல அடிச்சிருக்காங்களா?’ என்றார். வார்த்தைகளில் சந்தோஷம் கொப்புளித்தது.

நம்மை வைத்து அடுத்தவர்கள் சந்தோஷப்பட விடக் கூடாது.

‘எங்க வீட்டுல ரெண்டுதான் சார்...உங்க வீட்டுல மூணாமே?’ என்றேன்.

‘ஆமாப்பா’ என்று அவருடைய பலூனில் காற்று இறங்கியது.

காவல் நிலையத்தில் புகார் அளிப்பதைப் பற்றி பேசிவிட்டு ‘கம்ப்ளைய்ண்ட் வாங்குறதுக்கு காசு கேட்பாங்களா சார்?’ என்றேன்.

‘லேது..லேது’ என்றார். 

நிம்மதியாக இருந்தது. கிளம்பும் போது சட்டைப்பையில் எடுத்து வைத்திருந்த ஐநூறு ரூபாய் தப்பிவிடும்.

மீண்டும் காவல் நிலையத்துக்குள் தைரியமாக நுழைந்தேன். அப்பொழுது இன்னொருவர் புகார் எழுதிக் கொண்டிருந்தார். அவரும் சிலிண்டர் கேஸாக இருக்க வேண்டும் என்று திருட்டுத்தனமாக எட்டி விழுந்து பார்த்தேன். இல்லை. வேறு காரணம். அவருடைய தந்தை இறந்துவிட்டார். வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள். சொந்த மாநிலத்துக்கு உடலை எடுத்துச் செல்வதற்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு காவல் நிலையத்தில் அனுமதி வேண்டி கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். அவருடைய கண்கள் வீங்கியிருந்தன. இரவு முழுவதும் தூங்காமல் இருந்திருக்கக் கூடும். தனியாக வந்திருந்தார். அப்பா இறந்து கிடக்கும் போது காவல் நிலையத்தில் தனியாக நிற்பது பரிதாபமானது. கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப விரும்பினேன்.

திரும்ப வந்த ஆய்வாளர் ‘புகார் எழுதிக் கொடுங்க’ 

வெள்ளைத்தாள், எழுதுகோல் எல்லாம் தயாராக இருந்தன. அவருடைய அனுமதியுடன் எனக்கு முன்பு வந்தவர்கள் அளித்திருந்த புகாரை வாங்கி ஈயடிச்சான் காப்பி. வேலை முடிந்தது. புகாரை வாங்கிக் கொண்டு ஆய்வாளர் அதே சிவராஜை அழைத்தார்.

‘ஓகி ஸ்பாட் நோடி’ என்றார். சிவராஜ் என்னைப் பார்த்து ‘வண்டியில் வந்திருக்கீங்களா?’ என்றார். அரைகுறைத்தமிழ்.

‘ஆமா சார்..பைக்’

‘சரி வாங்க போலாம்’ என்றவர் பின்னால் அமர்ந்து கொண்டார். அவர் குற்றப்பிரிவு காவலர். அதனால் சீருடை இல்லை. இதை அவரேதான் சொன்னார். அவர்கள் எந்நேரமும் வண்ண உடைகளில் இருந்து கொள்ளலாமாம்.

‘எங்க ஏரியாவுல ஒரு கொலை நடந்துச்சே சார்....கொஞ்ச நாளைக்கு முன்னாடி....தண்ணி லாரிக்காரரைத் துரத்திட்டு வந்து வெட்டினாங்க’ என்று ஆரம்பிக்கவும் உற்சாகமாகிவிட்டார்.

‘நான் அந்த டீமுதான்...திருவண்ணாமலை போய் புடிச்சோம்...அங்க போய் ஒளிஞ்சிருந்தானுக’ என்று கதையை ஆரம்பித்தார். விட்டால் சொல்லிக் கொண்டே இருப்பார் போலிருந்தது. பேச்சைத் திசை திருப்ப வேண்டியிருந்தது.

‘ரெண்டு சிலிண்டர் சார்..வீணாப் போச்சு...புடிச்சுடலாமா சார்?’

‘அதெல்லாம் கஷ்டம்..எப்.ஐ.ஆர் வாங்கிட்டு போய் கியாஸ் கம்பெனியில கொடுங்க...ஒரு சிலிண்டருக்கு இரண்டாயிரம் ரூபாய் கேட்பாங்க...புதுசு வாங்கிக்குங்க’

‘மறுபடி திருட வந்தாங்கன்னா என்ன சார் பண்ணுறது?’

‘வீட்டைச் சுத்தி இரும்பு க்ரில் போடுங்க’

‘சூப்பர் ஐடியா சார்’ - நக்கலாகச் சொல்கிறேன் என்று அவர் புரிந்திருக்கக் கூடும். அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

வீட்டிற்கு முன்பாக நின்றவுடன் ‘சொந்த வீடா?’ என்றார். வேலையை மாற்றிச் சொல்லலாம். வீட்டை மாற்றிச் சொல்வது நல்லதுக்கில்லை. 

‘அப்பா கட்டின வீடு சார்...நாங்களும் அவங்க கூடவே இருக்கோம்’

‘அப்பா வீடுன்னாலும் சொந்த வீடுதானே?’

‘அந்த மாதிரியும் வெச்சுக்கலாம்’ - அவர் ஒரு முறை முறைத்துவிட்டு கோபால் ரெட்டியின் வீட்டுக்கு அழைத்தார். கோபால் ரெட்டி வீட்டில் இல்லை. அவருடைய மகள்தான் கதவைத் திறந்தார். விவரங்களைச் சொல்லிவிட்டு அவர்களுடைய எதிர்வீட்டு சிசிடிவியில் இந்தக் காட்சிகள் பதிவாகியிருப்பதாகச் சொன்னார். காவலர் பெரிய சுவாரஸியத்தைக் காட்டவில்லை.

‘ஒரு பென் ட்ரைவ்ல போட்டுக் கொண்டு வந்து கொடுங்க’ என்று சொல்லிவிட்டு தனது ஜீப்பை வரச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

இரண்டு பேர்கள் வந்திருக்கிறார்கள். கோபால் ரெட்டியின் வீட்டில் நடந்த திருட்டு சினிமா காமெடி போல் இருந்தது. வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி எட்டிக் குதித்திருக்கிறார்கள். இருபது நிமிடங்கள் வரை உள்ளேயே இருந்திருக்கிறார்கள். சிலிண்டர் அறையின் பூட்டைத் திறந்து ஒரு சிலிண்டரை தோள் மீது வைத்துக் கொண்டு இன்னொரு சிலிண்டரை தூக்கிக் கொண்டு வரும் போது கவனித்தால் ரெட்டி வீட்டார் கேட்டை பூட்டாமலேயே தூங்கியிருக்கிறார்கள். ‘இது தெரியாம ரிஸ்க் எல்லாம் எடுத்துக் குதிச்சேனே’ என்று நினைத்தவன் கேட்டைத் திறந்து வெளியேறி இருளுக்குள் இரண்டு சிலிண்டர்களையும் வைத்துவிட்டு வந்து மீண்டும் சிலிண்டர்களைத் தூக்கிச் சென்றிருக்கிறான். 

எங்கள் வீட்டுத் திருட்டு எங்கும் பதிவாகவில்லை. ஐந்து+இரண்டு. ஏழு சிலிண்டர்கள். எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டிலும் எட்டிக் குதித்திருக்கிறார்கள். அங்கு சிலிண்டர்கள் எதுவும் சிக்கவில்லை என்பதால் கடுப்பாகியிருப்பார்கள் போலிருக்கிறது. டிடிஹெச் ஆண்டனாவைக் கழற்றி எடுத்துக் கொண்டார்கள். இப்படி வரிசையாக சோலியை முடித்துக் கொண்டு அவர்கள் சென்றிருக்கிறார்கள் என்று சொன்னவுடன் இந்தக் கட்டுரை முடிந்துவிட வேண்டும்தான். ஆனால் இன்னும் ஒரு செய்தி இருக்கிறது.

மாலையில் கோபால் ரெட்டியைச் சந்தித்து ‘சிலிண்டர் கிடைச்சுடுமா சார்?’என்றேன். அவருடைய உறவினர் காவல்துறையில் இருக்கிறாராம். அவர் மூலமாக விசாரித்திருக்கிறார்.

‘பெங்களூர்ல இந்தத் திருட்டு ரொம்ப அதிகம் சார்...பெரிய ப்ளாக் மார்கெட் இருக்கு....இரண்டு வாரத்துக்கு முன்னாடிதான் டெபுடி கமிஷனர் குவார்ட்டர்ஸ்லேயே புகுந்து தூக்கிட்டு போய் இருக்கானுக..அதையே தேடிட்டுத்தான் இருக்காங்களாம்’ என்றார்.  

இதற்கு மேல் என்ன இருக்கிறது? 

‘ரொம்ப சந்தோஷம் சார்’ என்று சொல்லிவிட்டு வந்து இண்டேன் நிர்வாகத்தினரை அழைத்து ‘அடுத்து என்ன செய்யணும்’ என்றேன்.

‘அய்யோ...தேவுடா....இன்னொரு கேஸா?’ என்றுதான் அந்தப் பெண்மணி பேச்சையே ஆரம்பித்தாள்.

16 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//சார்...கோபால ரெட்டிகாரா?’
‘அவுனு..மீரு எவரு?’
‘சார்..நா பேரு மணிகண்டன்...’//
(கோவைசரளா குரலில்) புள்ள என்னமா கன்னடம் பேசியிருக்கு.

சேக்காளி said...

//பூட்டை திறந்து அந்தப் பூட்டையும் எடுத்துக் கொண்டு//
திறந்து தான் அந்த பூட்டையும் எடுத்து போனார்கள் என்று எப்படி முடிவெடுத்தீர்கள் மணி?

சேக்காளி said...

//வெள்ளைத்தாள், எழுதுகோல் எல்லாம் தயாராக இருந்தன.//
அப்டியா? ன்னு ஆச்சரியப் பட்டேன்.அப்புறமா தான் புரிந்தது அது கர்நாடக மாநிலம் என்று.

சேக்காளி said...

//அய்யோ...தேவுடா....இன்னொரு//
இனி முதற்கொண்டு பதிவுகள் கன்னடத்தில் வெளியாகலாம்.வாசகர்கள் ஆயத்தமாய் இருக்கவும்.

Vaa.Manikandan said...

சத்தம் எதுவும் கேட்கவில்லை என்பது முதல் காரணம். அறுத்திருந்தால் அல்லது வெட்டியிருந்தால் துகள்களாவது கிடைத்திருக்கும். சுத்தமாக இருந்தது. அதனடிப்படையில்தான் திறந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டோம் :)

Vaa.Manikandan said...

யோவ்...அதெல்லாம் தெலுங்கு வார்த்தைகளய்யா :)

சேக்காளி said...

//அதனடிப்படையில்தான் திறந்திருக்கிறார்கள் என்று நினைத்து//
நம்பரு கெடைச்சா குறிச்சு வச்சுக்கோங்க. வீட்டு சாவிய எங்கேயாவது மறந்து விட்டுட்டு வந்தீங்கன்னா ஒதவி கேக்க வசதியா இருக்கும்.

சேக்காளி said...

//யோவ்...அதெல்லாம் தெலுங்கு வார்த்தைகளய்யா//
அப்ப அடுத்த பதிவு தெலுங்குல தானா?

Jai said...

Puthu veedu katti kudi vanthu oru masathula night naalu mani irukkum... Thanni oothara satham.. Malai penja ippadi satham varathae-nu ninaichu... Jannal valiya partha kulai-la thanni pokuthu... Oooo.."Plumber sariya PVC pipe ottala pola" appadinu kathavai thiranthu poi partha 3 stainless steel tap-a kaanom... Enna koduma saravan?

venkat, hosur said...

Great writing sir.

kaniB said...

எங்க வீட்ல அக்குவகார்ட் வேலை சரியாய் செய்யல வந்து கொஞ்சம் பாருங்கன்னு அந்த போலீஸ்காரர் சொல்லியிருந்தா மாட்டிக்கிட்டுருப்பீங்களே அண்ணா...

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

எப்படியாவது ஒரு பிரச்சனை வந்து எழுத வைத்து விடுகிறதே சார் .

ஆரூர் பாஸ்கர் said...

//அப்பா வீடுன்னாலும் சொந்த வீடுதானே?’
‘அந்த மாதிரியும் வெச்சுக்கலாம்’ - // ரசித்தேன், வாய் விட்டு சிரித்தேன்.
-ஆரூர் பாஸ்கர்

Kannan said...

இவ்வளவு கதைகள் படித்தும் பல முறை நீங்கள் எழுதுவது நிஜமா, கற்பனையா என்று சந்தேகம் வருகிறது..நீங்கள் உண்மையாகவே "இடுக்கண் வருங்கால் நகுக" ஆளா இருக்கீங்க?

Vinoth Subramanian said...

//பூட்டை திறந்து அந்தப் பூட்டையும் எடுத்துக் கொண்டு//
So they had a key for your lock? Sir? you could have put number lock right? So, I believe, the gang will be visible in news channel soon because its a typical gang. Got new cylinder?

ADMIN said...

திருடுபோனது சிலிண்டர்ங்கிறதால..அலட்டிக்காம எழுதியிருக்கீங்களோ...!??