Jul 22, 2015

கேள்வியும் பதிலும்

செந்தில்குமார் இலண்டனில் வசிக்கிறார். அவ்வப்போது அலைபேசியில் பேசுவதுண்டு. ஆனால் அதிகமாக கேள்வி எதுவும் கேட்டதில்லை. ‘எப்படி இருக்கீங்க’ ‘நான் நல்லா இருக்கிறேன்’ வகையறா உரையாடல்தான். நேற்று சில கேள்விகளை அனுப்பி வைத்து அதற்கு பொதுவெளியில் பதில் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஏதேனும் உள்குத்து இருக்கிறதா என்று தெரியவில்லை. 

                                                                         (1)

நீங்கள் உண்மையாக நடந்தது போலவே எழுதும் பெரும்பாலான சம்பவங்கள் கற்பனைதானே? கற்பனையாக எழுதும் போது காவல்துறையை இழுத்தால் பிரச்சினை வராதா?

இப்படியொரு சந்தேகமா? 

திரேதா யுகத்தின் இரண்டாவது பாகத்தில் நீங்கள் ராமராக பிறந்து சீதையை நெருப்பில் இறக்கியிருக்கக் கூடும் என நினைக்கிறேன். சீதை எவ்வளவு துன்பப்பட்டிருப்பாளோ அதே அளவிலான வேதனையை என் கற்பு குறித்து சந்தேகப்படும்போது நானும் அடைகிறேன் என்று சொல்வதெல்லாம் எனக்கே அதிகப்பிரசங்கித்தனமாகத்தான் தெரிகிறது. இருந்தாலும் இது போன்ற வாய்ப்பு திரும்பத் திரும்பக் கிடைக்காது என்பதால் பயன்படுத்திக் கொள்கிறேன்.

பெரும்பாலும் கழுவிய மீன்களிலிருந்து நழுவும் மீனாகவே இருப்பதால் எதிர்வீட்டு பெண்ணைக் கையைப் பிடித்து இழுக்காத வரைக்கும் பிரச்சினை எதுவும் வராது என்ற நம்பிக்கையிருக்கிறது. 

நெருப்பில் இறங்குவதெல்லாம் சாத்தியமில்லை. வேண்டுமானால் இந்த ஸ்கிரீன்ஷாட்டை காட்டி என்னை நிரூபிக்கலாம்.

                                       
                                                                          (2)

விவசாயம் செழிக்க எதை மாற்ற / என்ன மாற வேண்டும்?

நிறைய இருந்தாலும் என் சுண்டைக்காய் மூளைக்கு நீர் வள மேலாண்மைதான் முக்கியமானதாகத் தெரிகிறது. காய்ந்த நிலங்களின் பரப்பு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அரசாங்கத்தின் கணக்குப்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 69% நிலம் வறண்டதாக இருக்கிறது. நிலத்தடி நீர் மட்டமும் அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. நம்மிடம் - குறிப்பாக தமிழகத்தில் நீர்வள மேலாண்மை என்பதே இல்லை. கர்நாடகாக்காரர்கள் கூட விவரமானவர்களாக இருக்கிறார்கள். ஆங்காங்கே பெரிய குளங்களை வெட்டி மழைக்காலத்தில் நீரை நிரப்பி வைக்கிறார்கள். அதனால் அணைக்கு செல்லும் நீரின் அளவு குறைகிறது. இப்படியெல்லாம் சேமிக்காமல் நேரடியாக அணைக்கு அனுப்பினால் அது தமிழகத்துக்குத்தான் செல்லும் என்பதால் பல டி.எம்.சி தண்ணீரை இப்படித்தான் மிச்சம் பிடிக்கிறார்கள். குளத்தில் நீர் நிரம்புவது மட்டுமில்லாமல் நிலத்தடி நீர் மட்டமும் உயர்கிறது. ஆனால் தமிழகத்தில் அப்படியில்லை. பவானி ஆற்றிலிருந்து வெட்டப்பட்டிருக்கும் கீழ் பவானி கால்வாயின் வடக்குப் பகுதி முழுவதும் பச்சை பசேல் என்றிருக்கும் அதன் தெற்கு புறம்- கால்வாயிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தாண்டினால் போதும்- காய்ந்து கருவாடாகிக் கிடக்கும். ஒரே மாவட்டத்தின் ஒரு பகுதி நஞ்சையாகவும் இன்னொரு பகுதி பாலையாகவும் கிடக்கிறது. தமிழகம் முழுவதுமே இதுதான் நிலைமை. சரியான திட்டமிடல் மூலமாக கடலில் கலக்கும் தண்ணீரை மிச்சப்படுத்தி பிற பகுதிகளுக்கு குழாய்களின் வழியாகக் கொண்டு செல்வதற்கான சாத்தியங்களை யோசிக்கலாம். 

ஆனால் சமீபகாலத்தில் விவசாயத்திற்கென தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட நீர் வள மேலாண்மைத் திட்டம் என்று எதைச் சொல்வீர்கள்? எனக்குத் தெரிந்து எதுவுமேயில்லை. 

வேறொரு நீர்வளத் திட்டத்தைத்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் நான் மூடுகிறேன். நீ மூடு என்றெல்லாம் பேசுவார்கள். தேர்தல் முடிந்தவுடன் திறந்துவிட்டுவிடுவார்கள். 25000 கோடி ரூபாய் பிஸினஸ் அது. 

                                                                               (3)

பள்ளி மாணவர்களுக்கு குறிப்பாக 10  மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அடுத்து என்ன படிக்க வேண்டும், அவர்கள் என்னவாக விரும்புகிறார்களோ அதுக்கு எது எப்படி படிக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு குழு அமைத்து மாணவர்களுடன் விவாதிக்க முடியுமா?

இப்படியொரு திட்டம் யோசனையில் இருக்கிறது. ஆனால் இதைச் செயல்படுத்த நிறைய ஆள்பலம் வேண்டும். தமது நேரத்தை ஒதுக்கக் கூடிய தன்னார்வலர்கள் தேவை. ஒரு பள்ளியின் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடையே ஒரு பொறியாளர், ஒரு மருத்துவர், ஒரு ஆடிட்டர் என குழுவாக அமர்ந்து தத்தமது துறையின் நல்லது கெட்டதைப் பற்றி informal ஆக பேச வேண்டும். மாணவர்களின் கேள்விகளுக்கு பதில்களைச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளியில் இதைத் தொடங்கினால் கூட போதும். ஆனால் உடனடியாகச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. சோதனை முயற்சியாக இவ்வாண்டு ஒன்றிரண்டு பள்ளிகளில் செயல்படுத்தலாம் என்று திட்டமிருக்கிறது. ஒரு வடிவத்திற்கு வந்தவுடன் விரிவாக எழுதுகிறேன்.

                                                                                (4)

உங்களைப் பார்த்தால் எனக்கு ஜூனியர் பாக்யராஜாகத் தெரிகிறது. உங்களுக்கு பிடித்தமான வேலை எது என்று சொல்ல முடியுமா?

கேள்வியின் முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. ஆனால் இணைத்துப் பார்த்தால் விவகாரமானதாகத் தெரிகிறது.
சமையல் செய்வது பிடித்தமான வேலை. சைவத்தில் முருங்கைக் காய் சாம்பாரைத் தவிர மற்ற அனைத்தும் பிடிக்கும்.

                                                                                (5)

பிற மொழிப்படங்களை திருட்டு விசிடியிலும், ஆன்லைனிலும் பார்த்துவிட்டு எழுதுகிறீர்கள். உங்கள் புத்தகத்தை இப்படி திருட்டுத் தனமாக வாசித்தால் உங்களுக்கு வருத்தமாக இருக்காதா?

எப்படி வருத்தமாக இருக்கும்? நான் எழுதுவதைக் கூட இப்படி கள்ள மார்க்கெட்டில் வாங்கி வாசிக்கிறார்களே என்று சந்தோஷமாகத்தான் இருக்கும்.

8 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//ஆனால் இதைச் செயல்படுத்த நிறைய ஆள்பலம் வேண்டும்//
பரிட்சார்த்த முயற்சியாக youtube,whatsapp போன்றவற்றில் முயற்சிக்கலாமே.
1.மருமகனுக்கு மாமன் கொடுத்த மது விருந்து
2.மாணவி பண்ணிய ரகளை
இரண்டு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்களை நேரில் எத்தனை பேருக்கு தெரியும்?.ஆனால் அது சம்பந்தப் பட்ட வீடியோக்கள் வரவிருக்கிற தேர்தல் வாக்குறுதிகளையே மாற்றியிருக்கிறதல்லவா.

சேக்காளி said...

//கடலில் கலக்கும் தண்ணீரை மிச்சப்படுத்தி பிற பகுதிகளுக்கு குழாய்களின் வழியாகக் கொண்டு செல்வதற்கான சாத்தியங்களை யோசிக்கலாம்//
வெவசாயம் செழிக்க வழி கேட்டா கடல் காய்ஞ்சு போக வழி சொல்லக்கூடாது.

சேக்காளி said...

//நான் எழுதுவதைக் கூட இப்படி கள்ள மார்க்கெட்டில் வாங்கி வாசிக்கிறார்களே என்று சந்தோஷமாகத்தான் இருக்கும்.//
அன்றைக்கு என்னடா ன்னா தலைகவசம் இல்லாம புத்தக கண்காட்சிக்கு போயிருக்கீங்க.இப்ப என்னடா ன்னா கள்ளச் சந்தை(மார்க்கெட் அல்ல) வாசிப்பு சந்தோசமா இருக்கு ங்கறீங்க.
வர வர போக்கே சரியில்ல மணியா.
ஆமா கோவா வுக்கு ஆன்மீக சுத்துலா போனத பத்தி ஒண்ணும் எழுதலியே?.பக்தி பரவசத்துல அங்க நடந்ததெல்லாம் மறந்து போச்சா? இல்ல வீட்டம்மா ஒண்ணா இருந்த பதட்டத்துல ஒண்ணுமே மனசுல பதியலயா?.

Balu Mysore said...

யாரு மணி சார் இந்த சேக்காளி? நீங்க படிக்கும் போது உங்க வாத்தியார் கூட இந்த அளவுக்கு உங்கள பெண்டு நிமித்தி இருக்க மாட்டாரு.. மனுஷன் ஒரு லைன் ஒரு எழுத்து விடாம படிச்சுட்டு பிரிச்சு மேயிறாரு..

Anonymous said...

intha senthilkumar kuda karpana thana?

dhana said...

மணி அண்ணா ,
அவரு கேட்ட முதல் கேள்விய நான் ரொம்ப நாள் முன்னாடியே கேக்கணும்னு நினச்சேன் . ஆனா பொக்குன்னு போய்ருவீங்க / ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டீங்கன்னு கேக்கல . இந்த மாதிரி அப்பப்ப நிறைய கேள்விகள் தோணுது.
கடைசியா நானும் ஒரு தடவ...
நிசமாலுமே வா ..ண்ணா

சேக்காளி said...

Balu Mysoore //யாரு மணி சார் இந்த சேக்காளி?//
ஒங்கள தான கேக்குறாங்க.சொல்லுங்க.

Vinoth Subramanian said...

//நான் எழுதுவதைக் கூட இப்படி கள்ள மார்க்கெட்டில் வாங்கி வாசிக்கிறார்களே என்று சந்தோஷமாகத்தான் இருக்கும்.//
Wow!!! What a positive thinking?