Jun 12, 2015

சண்டை

நேற்று பனஸ்வாடியில் குடியிருக்கும் அலுவலக நண்பர் ஒரு செய்தியைச் சொன்னார். கொலைச் செய்தி. ‘எங்க ஏரியாலதான்...பேப்பர் படிக்கலையா’ என்றார். கொலைச் செய்திதான் தினமும் வருகிறதே? இது இல்லாவிட்டால் இன்னொன்று. அதனால் பெரிய சுவாரஸியத்தைக் காட்டவில்லை. ஆனால் இது அப்படியான செய்தி இல்லை. கணவனை மனைவி கொன்றிருக்கிறாள். கொலைக்கு அவளைப் பெற்றவர்களும் உதவியிருக்கிறார்கள். படித்த வசதியான குடும்பம். திட்டமிட்டுதான் தீட்டியிருக்கிறார்கள். ஆனாலும் சிக்கிவிட்டார்கள். அத்தனை பேருக்கும் ஓரிரு நாளில் போலீஸார் விலங்கு மாட்டிவிட்டார்கள். 

இப்பொழுதெல்லாம் போலீஸார் விவரமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சங்கிலி பறிப்புத் திருடர்களைத்தான் விட்டுவிடுகிறார்கள். ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிடுகிறார்கள் போலிருக்கிறது. திருடனைப் பிடிக்கிறார்களோ இல்லையோ- சங்கிலியணிந்து போகும் பெண்களிடம் ‘சங்கிலியை கழட்டி வெச்சுட்டு வந்துடுங்க...அப்புறம் எங்ககிட்ட கம்ப்ளைண்ட் கொடுக்க வராதீங்க’ என்று எச்சரிக்கை வேண்டுமானால் விடுகிறார்கள். காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் பெண்கள் எல்லோரும் வெற்றுக் கழுத்தோடுதான் நடக்கிறார்கள். இல்லையென்றால் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடக்கிறார்கள். பெங்களூரில் நடைபயிற்சியில் இருந்த சுவாரஸியமே போய்விட்டது.

அது இருக்கட்டும். இந்தக் கொலை வழக்கில் போலீஸாரை விடவும் செத்துப் போனவனின் தம்பிதான் படு விவரம். கதையை முழுமையாகச் சொல்லிவிடுகிறேன்.

கணவன் மனைவி இரண்டு பேரும் ஆந்திராக்காரர்கள். மனைவிக்கு இன்னொருவனுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அவனும் சொந்தகாரன்தான். அந்தக் காதலனுக்கு இவளை விட வயது குறைவு. இருபத்தைந்து கூட ஆகவில்லை போலிருக்கிறது. வேகமான காதல். காதலின் வேகத்தில் அமெரிக்காவில் குடியேறிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். கணவன் தடையாக இருப்பான் அல்லவா? தூக்க மருந்தைக் கலந்து கொடுத்து மண்டையிலேயே ஒரு போடு. கதையை முடித்துவிட்டார்கள். இந்தக் காதல் ஜோடியுடன் அவளின் பெற்றவர்களும் இணைந்து பிணத்தை கோலார் மாவட்டத்திற்கு எடுத்துச் சென்று ஒரு ஏரியில் வீசியிருக்கிறார்கள். அதோடு விட்டிருந்தால் கொஞ்ச நாட்களுக்கு இழுத்துக் கொண்டிருந்திருக்கும். அறிவாளியாக நினைத்துக் கொண்டவள் கணவனின் தம்பியை அழைத்து ‘உங்க அண்ணன் ஊருக்கு வந்தாரே பத்திரமா வந்து சேர்ந்துவிட்டாரா?’ என்று கேட்டிருக்கிறாள். திருமணம் ஆனதிலிருந்து இதுவரைக்கும் ஒரு முறை கூட அவள் இப்படி ஃபோன் செய்ததில்லையாம். மூக்கு வியர்த்தவன் ‘அண்ணியை நாலு போடு போடுங்க’ என்றிருக்கிறான். துருவியிருக்கிறார்கள். கொலை நடந்த இரவில் இந்தப் பெண்ணின் செல்போன் சிக்னல் கணவனின் பிணம் கிடந்த ஏரிக்கு அருகில் பதிவாகியிருக்கிறது. சோலி சுத்தம்.

இதெல்லாம் போலீஸ் தரப்பு கதைகள். 

அவளை விசாரித்தால் ஆயிரம் கதைகள் இருக்கக் கூடும். அவன் சரியில்லை, குடித்தான், மிரட்டினான், உதைத்தான் என்று எதையாவது சொல்வாள். வீட்டில் இந்தக் கதையை எங்கள் அம்மாவிடம் சொன்னால் ‘அவன் ஏதாச்சும் கிரிமினலா இருக்கும்....இல்லைன்னா பெத்தவங்களே அவ கூட சேர்ந்து கொலையைச் செஞ்சிருக்க மாட்டாங்க’ என்கிறார். என்ன கண்றாவியோ தெரியவில்லை. எவ்வளவுதான் கிரிமினலாக இருந்தாலும் விவாகரத்து வாங்கிவிடலாம். காவல்துறையில் புகார் செய்திருக்கலாம். ‘தொலைந்து போடா நாயே’ என்று கழட்டிவிட்டிருக்கலாம். ஆனால் சர்வசாதாரணமாகக் கொன்று வீசி விடுகிறார்கள். 

ஏன் குடும்ப உறவுகளை இப்படி விகாரமாக்கிக் கொள்கிறோம்? நாம் விகாரமாக்குவதில்லை. ஆனால் நம்மையுமறியாமல் அது விகாரமாக மாறுவதற்கு அனுமதித்துவிடுகிறோம்.

கணவன் மனைவிக்கிடையில் சண்டை வரும் போது எதிராளியை தூங்கவிட்டுவிட வேண்டும் என்பார்கள். அப்படி அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களது முகத்தைப் பார்க்கச் சொல்வார்கள். நெகிழ்ந்துவிடுவோம்.  தூங்கும் போது எல்லோருமே குழந்தைகள்தான். ‘ச்சே பாவம்’ என்ற எண்ணம் வந்தால் சண்டை வடிந்துவிடும். ஆனால் பிரச்சினை என்னவென்றால்- பெரும்பாலும் நம் எதிராளியை தூங்க அனுமதிக்கவே மாட்டோம். ‘என்னைக் கடுப்பாக்கிட்டு நீ நிம்மதியா தூங்குறியா?’ என்பதுதான் நம்முடைய பிரச்சினையாக இருக்கும். அதனால்தான் சண்டைகளில் நாம் வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசிக் கொண்டேயிருப்போம். ‘தவறு உன் மீதுதான்’ என்று நிரூபித்துவிட வேண்டும் என்ற வெறியேறும். ஆள் மாற்றி ஆள் சண்டை பிடித்த பிறகு அவள் எப்பொழுது தூங்கிப் போனாள் என்பது நமக்குத் தெரியாது. நாம் எப்பொழுது தூங்கினோம் என்று அவளுக்குத் தெரியாது. அடுத்த நாள் எழும் போது அதே வன்மமும் பகையும் மனக்குகையின் ஏதாவதொரு மூலையில் ஒளிந்து கிடக்கும். இப்படி துளித்துளியாக அதிகரிக்கும் பகைமைதான் மிகப்பெரிய விரிசலை உருவாக்குகிறது. ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் இடையில் மிகப்பெரிய சுவரை எழுப்பிக் கொள்கிறோம். சமூகத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் அன்பை தொலைத்து நாட்களை நகர்த்துகிறோம்.

பேருந்தில் இரவுப்பயணம் செய்பவர்கள் கவனித்திருக்கலாம். யாரென்றே தெரியாத மனிதராக இருக்கும். ஆனால் தூங்கும் போது அப்பிராணியாகத் தெரிவார்கள். அந்த முகத்தைப் பார்க்கும் நம்மையுமறியாமல் கருணை சுரக்கும். முகம் தெரியாத மனிதனுக்காகவே கருணை காட்டும் நமக்கு நம்மோடு வாழும் கணவன் மீதும் மனைவி மீதும் கருணை சுரக்காதா என்ன? அதனால்தான் குடும்பத்தில் உருவாகும் எதிராளியை தூங்க அனுமதியுங்கள் என்கிறார்கள். பகைமை உறங்கும். பிரச்சினைகளின் வீரியம் நீர்த்துப் போகும். தூங்கும் வரைக்கும் பிரச்சினையில்லை. இருவிழிகளும் திறக்கும்போதுதான் நமக்குள்ளான மிருகம் விழித்துக் கொள்கிறது. 

இப்படி அன்பு புதைக்கப்பட்ட குடும்ப உறவுகளில்தான் வெளியாட்கள் தலையெடுக்கிறார்கள். ‘வறண்டு கிடந்த என் பாலையை மீட்டெடுத்து சோலையாக்க வந்தவன்/வந்தவள்’ என்று நம்பத் தொடங்குகிறார்கள். இந்த புதிய உறவுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிலர் முடிவெடுக்கிறார்கள். எல்லாம் சிதைந்து போகிறது. 

இந்த ஆந்திரக்காரர்களின் பிரச்சினை என்று தெரியவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் இங்கு யார்தான் பத்தரை மாத்து தங்கம்? எல்லோரிடமும்தான் கச்சடா இருக்கிறது. மனநல ஆலோசகர்களிடம் பேசினால் ‘கணவன் மனைவிக்கிடையில் சண்டை வராமல் இருக்க சாத்தியமே இல்லை. ஆனால் வருகிற சண்டையை எவ்வளவுக்கு எவ்வளவு தீர்த்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது’ என்கிறார்கள். அப்படி விரைவில் தீர்க்கப்படாத சண்டைகள்தான் கடைசியில் ஆட்களைத் தீர்ப்பதில் போய் நிற்கிறது. 

பெருநகரங்களில் வசிக்கும் தம்பதியினரிடம் நடத்தப்பட்ட சர்வே ஒன்று கண்ணில்பட்டது. எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பொதுவாகவே திருமணமான மூன்றாவது மாதத்திலிருந்து கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் வெடிக்கத் தொடங்குகின்றன என்பதுதான் சர்வே முடிவு. அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி. பெரியவர்கள் ஏற்பாடு செய்த திருமணமாக இருந்தாலும் சரி. தனிக்குடும்பம் என்பது இன்றைக்கு வந்ததில்லை. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாகவே தலையெடுத்துவிட்டது. பிரச்சினை தனிக்குடும்பம் என்பதில் இல்லை. முந்தய தலைமுறையில்- முப்பதாண்டுகளுக்கு முன்பாக- தனிக்குடும்பம் என்று இருவர் மட்டுமே இருந்தாலும் கூட கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினை எழும் போது பிரச்சினைகளைச் சொல்லித் தீர்வு காண்பதற்கு அல்லது குறைந்தபட்சம் தனது மனச்சுமைகளை இறக்கி வைப்பதற்கு யாராவது தோள் கொடுத்தார்கள். பெண்கள் அம்மாவிடம் பகிர்வதும் ஆண்கள் நண்பர்களிடம் பகிர்வதும் இயல்பாக இருந்தது.

இன்றைக்கு அது அருகிப் போய்விட்டது. திருமணமான பதினைந்தாவது நாளில் நகரங்களில் குடியேறிவிடுகிறார்கள். தீராத காமமும் பெருங்காதலும் முதல் மூன்று மாதங்களை நகர்த்திவிடுகின்றன. அதன் பிறகு மெல்ல மெல்ல பிரச்சினைகளும் சண்டைகளும் தலை தூக்குகின்றன. அக்கம்பக்கத்தில் யாரையும் தெரியாது. என்ன சிக்கல் என்பதை அம்மா அப்பாவிடம் கூட பகிர்ந்து கொள்வதில்லை. ‘அம்மாவை ஏன் டென்ஷன் படுத்தணும்’ என்றோ ‘நாமே சமாளித்துக் கொள்ளலாம்’ என்றோ ‘இந்தக் காலத்தில் எவனை நம்புவது’ என்றோ ஏதோவொரு காரணத்தினால் தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார்கள்.

இப்படி புதைக்கப்படும் சச்சரவுகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து சுமக்க முடியாத சுமையாகிவிடுகின்றன. இந்தச் சுமை இருவருக்குமிடையில் அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. உறவுகள் வெவ்வேறு பாதையில் நகரத் தொடங்குகின்றன. மனம் சஞ்சலப்பட்டு அலை மோதுகிறது. இந்த சஞ்சலமும் அலைமோதலும் உருவாக்கும் உறவு சார்ந்த அழுத்தத்தை எல்லோராலும் தாங்க முடிவதில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

5 எதிர் சப்தங்கள்:

Vinoth Subramanian said...

//கணவன் மனைவிக்கிடையில் சண்டை வரும் போது எதிராளியை தூங்கவிட்டுவிட வேண்டும் என்பார்கள்.// Is it so? good idea! as of now I don't know sir. Thank you so much!

சேக்காளி said...

//கணவன் மனைவிக்கிடையில் சண்டை வரும் போது எதிராளியை தூங்கவிட்டுவிட வேண்டும் என்பார்கள்//
அதுனால தான் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வச்சாங்களோ என்னவோ?

சேக்காளி said...

//பெங்களூரில் நடைபயிற்சியில் இருந்த சுவாரஸியமே போய்விட்டது.//

TR said...

இதே கதை வேற மாதிரி .....
http://www.vikatan.com/news/article.php?aid=47909

Paramasivam said...

பிரச்சினை எழும் போது பிரச்சினைகளைச் சொல்லித் தீர்வு காண்பதற்கு அல்லது குறைந்தபட்சம் தனது மனச்சுமைகளை இறக்கி வைப்பதற்கு யாராவது தோள் கொடுத்தார்கள். பெண்கள் அம்மாவிடம் பகிர்வதும் ஆண்கள் நண்பர்களிடம் பகிர்வதும் இயல்பாக இருந்தது.//
இது தான் காரணமாகவும் இருக்கலாம்.