Apr 27, 2015

எதுக்கு ஆயா உனக்கு இவ்வளவு கோபம் வருது?

‘டேய் பசங்களா....இந்தப் பக்கம் வந்தீங்கன்னா மண்டையை உடைச்சுப் போடுவேன்’ என்று அந்த ஆயா கத்திக் கொண்டேயிருக்கும். வெள்ளாட்டுக்கார ஆயா. எங்கள் ஊரிலிருந்து வெகுதூரத்தில் வாய்க்கால் ஓரமாக அவருடைய வீடு இருந்தது. அதை வீடு என்று சொல்ல முடியாது. குடிசை. நாவல் மரங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் சீஸனில் கற்களை எடுத்து வீசும் பையன்களின் முரட்டுத்தனத்தால் குடிசையும் பதம் பார்க்கப்படும். குடிசைக்குள் எதையாவது செய்து கொண்டிருக்கும் ஆயா அவசர அவசரமாக வெளியே வந்து தாய்கோழி, தேவதையின் பசங்களா என்று எதையாவது சொல்லித் திட்டுவார். அவருக்கு அப்பொழுதே எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் ஆயாவுக்கு உடம்பில் தெம்பு அதிகம். இல்லையென்றால் வயலுக்குள் தன்னந்தனியாக சோறாக்கித் தின்று காலத்தை ஓட்ட முடியுமா?

ஆயா வெள்ளைச் சேலைதான் கட்டியிருக்கும். விதவைகள்தான் வெள்ளைப் புடவை அணிவார்கள் என்பதால் நிச்சயமாக திருமணம் ஆகியிருக்க வேண்டும். ஆனால் கேட்டால் பதில் சொல்ல மாட்டார். ஒரு நாள் சரவணன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் ‘ஆயா உங்க ஊட்டுக்காரருக்கு என்னாச்சு?’ என்று கேட்டுவிட்டான். ஆயா எதுவுமே சொல்லவில்லை. காது கேட்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்தவன் எங்களிடம் திரும்பி ‘கெழவிக்கு காது கேட்கலையாட்ட இருக்குது...நம்மளையே இந்தப் போடு போடுறா...புருஷனை என்ன போடு போட்டிருப்பா?’ என்றான். அது ஆயாவுக்கு காது கேட்டுவிட்டது. 

‘அடேய்.....வப்பானோளிக்கு பொறந்தவனே...’ என்று கத்திக் கொண்டே சல்லைக் கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். சல்லைக்கத்தி என்பது நீண்ட மூங்கில் குச்சியின் நுனியில் சிறு கத்தியைக் கட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கத்தி வளைந்திருக்கும். கீழே நின்றபடியே மரத்திலிருந்து காய்கள் பறிப்பதற்கும் கிளைகளை ஒடிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆயாவின் வேகத்தைப் பார்த்து சரவணன் திகிலைடந்துவிட்டான். நாங்களும்தான். சிக்கினால் பின்பக்க சதையை கிழவி கிழித்து எடுத்தாலும் எடுத்துவிடும். ஒரே ஓட்டமாக ஓடி வாய்க்காலுக்குள் குதித்து விட்டோம். எட்டாவது ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த வயது. ட்ரவுசரோடு நாங்கள் தறி கெட்டு ஓடியதைப் பார்த்ததும் கிழவிக்கு சிரிப்பு வந்துவிட்டது. கொஞ்சம் பெருமையும் கூட. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வந்து மோரி மேல் அமர்ந்து கொண்டார். ‘நீங்க எப்படி மேல வர்றீங்கன்னு பார்க்கிறேன் இருங்கப்புனுகளா’ என்றார். ஆயா நகர்வது போலத் தெரியவில்லை.

‘எதுக்கு ஆயா உனக்கு இவ்வளவு கோபம் வருது?’ என்றான். 

‘எம்புருஷன் எப்படிச் செத்தா உனக்கு என்னடா? நீ இன்னொருக்கா என்னையைக் கட்டி போறியா?’ என்ற ஆயாவின் கேள்வியை சரவணன் எதிர்பார்க்கவில்லை.

‘அதுக்கு என்ன ஆயா...நீ சரின்னு சொல்லு...கட்டிக்கிறேன்...ஆனா ஒண்ணு...வருஷம் ஒரு குழந்தை பெத்து போட்டுறோணும்..சரியா?’என்றான். எங்களுக்கு பயங்கரமாக சிரிப்பு வந்துவிட்டது. இதைச் சொல்லும் போது சரவணனுக்கு பதினான்கு வயது கூட ஆகியிருக்கவில்லை. ஜட்டி போடாமல் ட்ரவுசர் போட்டுத் திரிந்த பருவம். ஆனால் அப்பொழுதே எங்களுக்கு பலான பலான விவரங்கள் தெரியும். வாய்க்கால் மேட்டில் யார் ஒளிகிறார்கள் என்பதிலிருந்து கரும்புக் காட்டுக்குள் யார் நுழைகிறார்கள் என்பது வரை மோப்பம் பிடித்து வைத்திருப்போம். 

ஆயாவுக்கு மறுபடியும் சிரிப்புதான். அது தனிமையின் சிரிப்பு. யாரிடமும் பேசுவதற்கு வாய்ப்பில்லை. இப்படி யாராவது நக்கலாக பேசினாலும் கூட அது ஆயாவுக்கு சந்தோஷமாகத்தான் இருந்திருக்கக் கூடும். சல்லைக் கத்தியை நிலத்தில் நட்டு வைத்தபடி பிடித்துக் கொண்டு ‘நீ மேல வா...அறுத்து மீனுக்கு வீசறேன்’ என்று அமர்ந்து கொண்டார். 

சரவணனும் விடுவதாகத் தெரியவில்லை. ‘கெழவி...உனக்கு வேண்டாம்ன்னா விட்டுடு....அறுத்துவீசிட்டா நான் எங்க போய் தேடுவேன்’ என்று கேட்டு எக்கனைக்கு தக்கனையாக இரண்டு பேரும் பேசிக் கொண்டேயிருந்தார்கள். அப்பொழுது அந்தி சாயும் நேரம். ‘போங்கடா பொழப்பு கெட்டவனுகளா’ என்று சொல்லிவிட்டு தனது வெள்ளாடுகளை ஓட்டி வரச் சென்றுவிட்டார். ஆயா பற்றி நிறையக் கதைகள் உண்டு. வெகு மூர்க்கமாக இருந்த காலத்தில் தண்ணிவாக்கியாக இருந்திருக்கிறாராம். வாய்க்காலின் நீரை வயல்களுக்கு மடை மாற்றிவிடும் வேலை. தண்ணீர் பாய்ச்சுபவர் என்பதுதான் மருவி தண்ணிவாக்கியாகிவிட்டது. பெரும்பாலும் ஆண்கள்தான் இந்த வேலையைச் செய்வார்கள். ஆனால் ஆயா செய்திருக்கிறார். 

குடும்பம், குழந்தை என்று எதுவும் இல்லை. தனிக்காட்டு ராணி. கடைசி காலத்தில் வெள்ளாடு மேய்த்தபடி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். கடைசிக் காலம் என்பது இருபது வருடங்களுக்கு முன்பாக. 
ஆயா பற்றிய ஒரு கதை வெகு பிரசித்தமாகியிருந்தது. ஆயா மூர்க்கமாக இருந்த காலத்தில் வயல்வெளிக்குள் நெல் திருட வந்த எவனோ ஒருவன் ஆயாவின் குடிசைக்குள் நுழைந்துவிட்டான். வாட்டசாட்டமாக பெண்ணொருத்தி இருக்கிறாள் என்கிற நினைப்புதான் அவனுக்கு. வந்திருந்தவன் போதையில் இருந்திருக்கிறான். குடிசையின் படல் அசைவின் சத்தத்திலேயே எவனோ நுழைந்துவிட்டான் என்பதை மோப்பம் பிடித்துக் கொண்ட ஆயா பதற்றமேயில்லாமல் படுத்திருக்கிறார். உள்ளே நுழைந்தவன் மெதுவாக ஆயாவின் மீது பரவவும் அதுவரை காத்திருந்த ஆயா எந்தச் சத்தமுமில்லாமல் தலையணைக்குக் கீழாக இருந்த கருக்கு அரிவாளை எடுத்து குரல்வளையை அறுத்துவிட்டார். அந்த இரவில் கேட்ட அவனது கதறல் சத்தம் வெகு தூரத்திற்கு கேட்டிருக்கிறது. ஆனால் யாரும் வரவில்லை. இரவோடு இரவாக பெரிய தக்கையில் அவனது உடலைக் கட்டி ஆற்றில் விட்டுவிட்டாராம். அவ்வளவுதான். அந்தக் காலத்தில் ஒரு விசாரணையும் இல்லை. இருந்தாலும் ஆயா மீது மற்றவர்களுக்கு பயம் வந்துவிட்டது. யாரும் முகம் கொடுத்துக் கூட பேசத் தயங்கியிருக்கிறார்கள். அதுவே கூட ஆயாவுக்கு தனிமையைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. 

அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லையென்றும் ஆயாவாகவே கிளப்பிவிட்ட வதந்தி என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் வனாந்திரமான வயல்வெளியில் ஒரு பெண்மணி குடிசை அமைத்து வாழ்வது சாதாரணக் காரியமில்லை. என்னதான் தைரியமான பெண்மணியாக இருந்திருந்தாலும் எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்திருக்கக் கூடும். கண்டவனெல்லாம் கண் வைத்திருக்கக் கூடும். அதற்காகவே கூட இப்படியான பிம்பங்களைத் தன்னைச் சுற்றி உருவாக்கி வைத்திருக்கலாம். எவனும் யோசிப்பான் இல்லையா? ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்கிற வயது எங்களுக்கு இல்லை. ஒரு கிழவியை சீண்டும் சந்தோஷம்தான். அந்த வருடத்தின் முழு ஆண்டுத் தேர்வு முடிந்த பிறகு பெரும்பான்மையான நாட்களில் வாய்க்காலில் குளித்து ஆயாவிடம் எதையாவது பேசிவிட்டு வருவோம். ஆயாவுக்கும் அது ஓரளவு மனத் திருப்தியைக் கொடுத்திருக்கக் கூடும். 

வெள்ளாடு வழியாக ஆயாவுக்கு ஓரளவுக்கு வருமானம் இருந்தது. சிலுவாடு தொகை வைத்திருந்திருக்கக் கூடும். எவ்வளவு வைத்திருந்தார் என்றெல்லாம் தெரியவில்லை.

நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று ஆயாவை யாரோ கொன்றுவிட்டதாகச் சொன்னார்கள். அப்பொழுது என்னிடம் சைக்கிள் இருந்தது. சரவணனும் நானும் சைக்கிளை வேக வேகமாக மிதித்தோம். நாங்கள் சென்ற போதே கூட்டம் கூடியிருந்தது. குடிசைக்குள் பிணம் கிடந்தது. போலீஸார் எங்களை அருகில் விடவில்லை. சிறுவர்கள் என்பதால் மற்ற பெரியவர்களும் எங்களை விரட்டினார்கள். யாரோ ஆயாவின் கழுத்தை அறுத்துவிட்டு பணத்தை திருடிவிட்டுச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். எவ்வளவு தொகை என்பதெல்லாம் தெரியவில்லை. ஆயாவின் பிணம் வெகு கோரமாக இருந்தது. வாயைத் திறந்தபடி ரத்தம் உறைந்து கிடந்த முகம். தலை முடி பரட்டையாகக் கிடந்தது.  இந்த முறை குடிசையின் படல் அசைவுச் சத்தத்தை ஆயாவால் கண்டுபிடிக்க முடியவில்லை போலிருக்கிறது என்று தோன்றியது. ஒருவேளை கண்டுபிடித்திருந்தாலும் கழுத்தை அறுக்குமளவுக்கு ஆயாவின் உடலில் வலுவில்லாமல் போயிருக்கக் கூடும்.

‘பாவம்’ என்று இருவரும் சொல்லிக் கொண்டோம். 

வீட்டுக்குக் கிளம்பலாம் என்று நினைத்த போது சரவணன் ‘வாய்க்கால்ல குளிக்கலாமா?’ என்றான் . சற்று தொலைவுக்குச் சென்று மற்றவர்களின் கண் படாத இடத்தில்  வாய்க்காலில் இறங்கினோம். குளிக்கவே பிடிக்கவில்லை. ஆயாவின் நினைப்பாகவே இருந்தது. ஆயாவின் நினைப்பு என்பதைவிடவும் ஆயாவின் பிணம் பற்றிய நினைப்பு அது. ‘போலாம்’ என்று கிளம்பினோம். வெள்ளாடுகளை என்ன செய்தார்கள் என்று கவனிக்கவில்லை. சட்டையை அணிந்து கொண்டு வாய்க்கால் கரையோரமாகவே சைக்கிளை மிதித்தோம். அன்றைய தினம் மட்டும் வாய்க்காலில் ரத்தம் ஓடுவதாக தெரிந்தது.