Apr 27, 2015

ஏப்ரல் மாதத்தில்

நிசப்தம் அறக்கட்டளையின் ஏப்ரல் மாத நடவடிக்கை குறித்தான விவரங்கள் இவை.

மார்ச் 30 ஆம் தேதியன்று கணக்கில் இருந்த தொகை நான்கு லட்சத்து நாற்பதாயிரத்து அறுநூற்று நாற்பத்தெட்டு ரூபாய். (விவரங்களை இணைப்பில் பார்க்கலாம்). ஏப்ரல் மாத இறுதியில் அந்தத் தொகை ஐந்து லட்சத்து பதினோராயிரத்து நானூற்று ஐம்பத்தாறு ரூபாயாக இருக்கிறது.


வரிசை எண்: 7 லிருந்து 10 வரையிலான காசோலைகளில் ஒன்று திரு.ஹரிஹரன் அனுப்பியது. ஒன்று திருமதி. விலாசினி அனுப்பிய காசோலை. மற்ற இரண்டும் திருமதி.விஜயா கொடுத்த காசோலைகள். வரிசை எண் 18  வருண் ராமநாதன் என்கிற குழந்தையின் பங்களிப்பு. அவரது தாத்தா வழியாக அனுப்பி வைத்திருக்கிறார்.

இவை தவிர தினமணியில் எழுதும் செல்லுலாய்ட் சிறகுகள் தொடருக்காக ஒரு காசோலை வந்திருக்கிறது. அறக்கட்டளையின் பெயரில் அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தேன். ஆனால் இன்னமும் வங்கியில் செலுத்தாமல் வைத்திருக்கிறேன்.

இவையெல்லாம் வரவுக் கணக்குகள்.

உதவி என்று பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் அறக்கட்டளையின் கணக்கிலிருந்து எண்பத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. விஷ்ணுபிரியா என்கிற கல்லூரி மாணவியின் கட்டணத்திற்காக பன்னிரெண்டாயிரம் ரூபாயும் (வரிசை எண்: 21) , ராகவர்ஷினி என்ற குழந்தையின் ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக எழுபதாயிரம் ரூபாயும்(வரிசை எண்: 27) அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

இவை தவிர இரண்டு காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இன்னமும் பணத்தை எடுத்துக் கொள்ளவில்லை. 

ஒரு காசோலை குணசேகருக்கு. அவர் சென்னையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தவர். நாற்பத்தைந்து வயதாகிறது. கடும் அழுத்தம் தரக் கூடிய வேலை என்கிறார்கள். அழுத்தத்தின் காரணமாகவோ என்னவோ மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சுய நினைவை இழந்துவிட்டார். முதலில் ஹைதராபாத்தில் சிகிச்சையளித்திருக்கிறார்கள். இப்பொழுது சோழிங்கநல்லூரில் இருக்கும் க்ளோபல் மருத்துவமனையின் நியூரோ பிரிவின் ஐசியூவில் இருக்கிறார். இதுவரையிலும் பல லட்ச ரூபாய் மருத்துவச் செலவு ஆகியிருக்கிறது. குணசேகருக்கு ஒரே மகன். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். குணசேகர் மட்டும்தான் குடும்பத்தின் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தவர். இனி அவரால் இந்த வேலையைச் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். சொந்த ஊரில் ஜீவனத்துக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும். நண்பர்கள் உதவிக் கொண்டிருக்கிறார்கள். இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று பணம் புரட்டியிருக்கிறார்கள். இருபத்தைந்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்று சொல்லியிருந்தார்கள். மருத்துவமனையின் பெயருக்கு காசோலை அனுப்பப்பட்டிருக்கிறது. 

இன்னொரு காசோலை மணிகண்டனுக்கு. மணிகண்டன் நாமக்கல் பக்கத்தில் இருக்கும் ஒரு குக்கிராமத்தைச் சார்ந்தவர். அம்மா, அப்பா இரண்டு பேருமே விவசாயக் கூலிகள். வயிற்றைக் கட்டி பையனை படிக்க வைத்துவிட்டார்கள். மணிகண்டன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.ஸி முடித்துவிட்டு பிறகு பெங்களூர் IISC யில் இளநிலை ஆராய்ச்சியாளராக இருந்தவர். இப்பொழுது ஜெர்மனியில் பி.ஹெச்.டிக்கான ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறார். ஆதி திராவிடர்களுக்கான கல்வி உதவித் தொகையில் படித்துக் கொண்டிருந்த மணிகண்டனுக்கு சில சிக்கல்களின் காரணமாக உதவித் தொகை நின்று போய்விட்டது. அதனால் மணிகண்டனுக்கு ஏற்கனவே உதவியிருக்கிறோம். நிசப்தம் தளத்தில் எழுதியதன் வழியாக கிட்டத்தட்ட நான்காயிரம் யூரோக்கள் நிதி கொடுக்கப்பட்டது. அப்பொழுது அறக்கட்டளை தொடங்கப்பட்டிருக்கவில்லை. மணிகண்டனின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் அனுப்பினார்கள்.

இப்பொழுது மணிகண்டன் தனது ஆராய்ச்சியை படிப்பை ஜெர்மனியில் நீட்டிப்பதற்காக சில அதிகாரிகளைச் சந்திக்க சென்னை வந்திருக்கிறார். கல்வி உதவித் தொகையை நீட்டிப்பதுதான் முக்கிய நோக்கம். அவர் இந்தியா வந்து செல்வதற்காக உதவி தேவைப்பட்டிருக்கிறது. விமான பயணச்சீட்டுக்காக முப்பதாயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறேன். வந்து போவதற்கெல்லாம் உதவி செய்வதில்லை என்பதால் இந்தத் தொகை கடனாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்களில் திருப்பித் தந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். மணியின் மீது நம்பிக்கையிருக்கிறது. இரண்டு மாதங்கள் என்பது நெருக்கடிகளின் காரணமாக மூன்று மாதங்கள் ஆகக்கூடுமே தவிர வந்துவிடும்.

இப்போதைக்கு உடனடியாகத் தர வேண்டிய தொகை குழந்தை கிருஷ்ணாவுக்கான பராமரிப்புத் தொகை. அந்தக் குழந்தையின் வீட்டுக்கு இந்த வாரம் செல்வதாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் இயலவில்லை. நத்தக் காடையூர் சென்று வர எப்படியும் முக்கால் நாள் ஆகிவிடும் என்றார்கள். நேரம் கிடைக்கவில்லை என்பதால் அடுத்த வாரத்தில்தான் கிருஷ்ணாவுக்கான காசோலைகளை வழங்க வேண்டும். .அடுத்த வாரம் மூன்று நாட்கள் விடுமுறை இருக்கிறது. சனிக்கிழமையன்று நேரில் சந்தித்துக் கொடுத்துவிடுகிறேன்.

இயன்றவரையிலும் எந்தத் தொய்வுமில்லாமல் அறக்கட்டளையின் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விவரங்களைச் சரி பார்க்காமல் எதையும் செய்வதில்லை என்பதால் சில சமயங்களில் தாமதமாகிவிடுகிறது. 

மற்றபடி வழக்கம்போலவே அத்தனை தகவல்களும் வெளிப்படையாக இருக்கின்றன. எந்தச் சந்தேகமிருப்பினும் கேட்கலாம். அறக்கட்டளை குறித்தான வேறு ஏதேனும் கேள்விகள் இருப்பினும் கேட்கவும். விரிவாக பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. 

அனைவருக்கும் நன்றி.

vaamanikandan@gmail.com