Apr 23, 2015

யார் சிறியர்?

ஒரு விருது அறிவித்தால் போதும் ஆளாளுக்கு புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். ‘அவன் மாஃபியா இவள் சோஃபியா’ என்று கூவத் தொடங்குகிறார்கள். இங்கு இலக்கியவாதி என்று சொல்லித் திரிபவர்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள்? தம் பின்னால் நான்கைந்து கைத்தடிகள் வேண்டும், தனக்கென ஒரு இலக்கிய வட்டம், ஊர் ஊராகச் சுற்ற விரும்பினால் செலவு செய்வதற்கு பத்து அடிமைகள். நாம் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். ஆனால் எந்தத் தயக்கமுமில்லாமல் அடுத்தவனை நோக்கி ‘இவன் மாஃபியா’ என்று பேசிவிட வேண்டும். மாஃபியாவை ஒழிப்போம்தான் ஆனால் அதை இன்னொரு மாஃபியா தலைவன் சொல்லக் கூடாது. 

ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று புரியவில்லை. 

தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை வைத்துக் கொண்டு ரிட்டையர்ட் ஆனவர்களுக்கு மரியாதை செய்கிறேன் பேர்வழி அந்த விழாவுக்கு சினிமாக்காரனையும் புகழ்பெற்றவனையும் அழைத்து வைத்து அதன் வழியாக மொத்த வெளிச்சத்தையும் தன் மீது விழச் செய்யும் ஒரு ஆளுமையாக இருந்து கொண்டு ‘அரிப்புக்கு எழுதுகிறார்கள்’ என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டுமே. இன்றைய தேதியில் விநாயகமுருகனும், போகன் சங்கரும் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உரையாடலை உருவாக்குகிறார்கள். கொம்ப மகராசன்களையும் எந்த தயக்கமும் இல்லாமல் பகடி செய்கிறார்கள். அதுதானே உங்கள் பிரச்சினை? எப்பொழுது வாய்ப்புக் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டியது. வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு மொத்து மொத்துகிறீர்கள். இல்லையா?

இந்த அதிரடியான உலகத்தில் இளம் எழுத்தாளனின் முன்னால் இருக்கும் மிகப்பெரும் சவால் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்வதுதான். ஏறி மிதித்துக் கொண்டு போய்விடக் கூடிய புல்டோசர்களாக தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் காண்டாமிருகங்களுக்கு முன்பாக நின்று ஆடுகிறார்கள். அதற்காகவாவது விருது அளிக்கட்டும். ராஜமார்த்தாண்டன் விருதைத் தவிர இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விருது வேறென்ன இருக்கிறது? விருது வேண்டாம். மூத்த எழுத்தாளர்கள் மனமுவந்து எத்தனை இளம் எழுத்தாளரகளை ஊக்குவிக்கிறார்கள்? நம் திண்ணையைப் பிடித்துக் கொள்வார்கள் என்று பம்மிக் கொண்டுதானே இருக்கிறார்கள்? இந்த லட்சணத்தில் ஒரு கேங்கை உருவாக்குகிறார்கள் என்று பேசுகிறார்கள்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அஜயன்பாலாவுக்கு விருது கொடுத்தார்கள். தமிழ் மகனுக்குக் கொடுத்தார்கள். சுகுமாரன், அழகிய பெரியவன், ஜோ டி க்ரூஸ், கலாப்ரியா, ரமேஷ் ப்ரேதன் என்று சுஜாதா விருது வாங்கியவர்களின் பட்டியலில் எத்தனை பேர் மனுஷ்ய புத்திரனின் கேங்கில் சொம்படித்துக் கொண்டிருக்கிறார்கள்? விருது என்பது ஒரு கவனமுண்டாக்குதல் மட்டும்தான். ஐந்து வருடங்களுக்கு முன்பாக நோபல் பரிசு வாங்கியவரை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறோமா என்ன? சாதாரண வாசகனுக்கு அவ்வளவுதான் அந்த விருதின் முக்கியத்துவம். நோபல் பரிசுக்கே அவ்வளவுதான். மற்ற இலக்கிய விருதுகளைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?

பரபரப்புக்காவும், வெளிச்சம் தன் மீது விழ வேண்டும் என்பதற்காகவும் எதை வேண்டுமானாலும் பேசலாம். சமூக ஊடகங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அடித்துக் கொண்டிருக்கட்டும் என்று போகிற போக்கில் தட்டிவிட்டுப் போக வேண்டியதுதான். தான் மட்டுமே யோக்கியம், தான் கொடுக்கும் விருது மட்டுமே உத்தமம் என்கிற வெற்றுப் பரப்புரை. இதில் சுஜாதா வேறு சிக்கிக் கொள்கிறார். சுஜாதாவின் பெயரில் ஒரு விருது கொடுத்துதான் அவரை ஐகான் ஆக்க வேண்டுமா என்ன? அந்த இடத்தை அவர் அடைந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிடவில்லையா? சுஜாதா யார், சுந்தர ராமசாமி யார், நகுலன் யார் என்று வாசிக்கிறவனுக்குத் தெரியும். ஆனால் அதை ஏன் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்? சுஜாதா இலக்கியவாதியே இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் சொல்கிற இவரே இலக்கியவாதி இல்லையென்று இன்னொரு நான்கு பேர்கள் உங்களைச் சொல்வார்கள். சொல்கிறார்கள். இதுதானே காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது? யார் இலக்கியவாதி என்பதை வாசகன் முடிவு செய்யட்டும் விடுங்கள்.

தமிழில் இலக்கியவாதிகளைப் போன்ற கேடுகெட்ட மனநிலை கொண்டவர்களைப் பார்க்கவே முடியாது. பொறாமை, வன்மம், வயிற்றெரிச்சல், புகழ் போதை என்கிற வெறிபிடித்துத் திரிகிறவர்கள் அவர்கள். தனது இடம் காலியாகிவிடும், தன்னைத் தவிர பெரியவனில்லை என்கிற பயம் பீடித்த நோய்மையுடையவர்கள்தான் இலக்கிய பீடாதிபதிகள். தங்களது எழுத்திலும் செயல்பாட்டிலும் அதைத்தான் திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். 

ஒரு எழுத்தாளனுக்கு விருது கொடுக்கப்படுவது என்பது அவனுக்கான கவனத்தை உருவாக்குதல். தொடர்ந்து இயங்குவதற்கான உற்சாகத்தை ஊட்டுதல். அதைச் செய்கிறார்கள். பாராட்டாவிட்டாலும் ஓரிரு நாட்கள் அமைதியாக இருக்கலாம். அவனை விமர்சிப்பதாக இருந்தால் இன்னொரு நாள் தனியாக விமர்சிக்கலாம். அவனது புத்தகத்தை எடுத்து வைத்து பக்கம் பக்கமாகக் கிழித்துத் தொங்கவிடலாம். யார் வேண்டாம் என்கிறார்கள்? அதைவிட்டுவிட்டு ஒரு படைப்பாளிக்கு விருது அறிவிக்கப்படும் போது ‘அது நொட்டை இது நொட்டை’ என்று சொல்லி அவனுக்கு காயத்தை உண்டாக்குவதைப் போன்ற சிறுமைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.