Apr 23, 2015

வெளியில் பெயர் தெரிய வேண்டாம்

இன்று இரண்டு சந்தோஷமான செய்திகள். 

ஒரு பெண்மணியின் கல்விச் சான்றிதழ்களை பிடித்து வைத்துக் கொண்டு கல்லூரிக்காரர்கள் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சொன்னது ஞாபகம் இருக்கக் கூடும். அந்தப் பெண் உண்மையில் மதுரை இல்லை. கோவையைச் சார்ந்தவர். எந்த ஊர், எந்தக் கல்லூரி என்கிற விவரத்தையெல்லாம் எழுதினால் அந்தப் பெண்ணுக்கு பிரச்சினையாகிவிடும் வாய்ப்பிருக்கிறது என்பதால் மதுரைக்காரர் என்று எழுதியிருந்தேன். அதன் பிறகு பின்னணியில் நிறையக் காரியங்கள் நடந்தன. அத்தனை வேலையையும் ஒரு அதிகாரி பார்த்துக் கொண்டார். தமிழக அரசில் முக்கியமான பதவியில் இருப்பவர். அரசு அதிகாரிகளின் வழியாக கல்லூரி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அந்த நிர்வாகம் நேற்று சான்றிதழ்களைத் திரும்பக் கொடுத்துவிட்டது.

அதிகாரி தனது பெயரைச் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதுவும் சரிதான். இது தமிழ்நாடு முழுவதுமான பிரச்சினை. நிறையப் பேர் இந்தப் பிரச்சினையில் சிக்கியிருக்கக் கூடும். அத்தனை பேருக்கும் உதவுவது சாத்தியமில்லை என்பதால் மற்ற விவரங்களை எழுத விரும்பவில்லை. அந்த அதிகாரிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதே சமயம் இதை ஒரு விழிப்புணர்வாக எடுத்துக் கொள்ளலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரிஜினல் சான்றிதழ்களை நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை. அதைப் பணியில் சேரும் போதே தெளிவாக எடுத்துச் சொல்லிவிடலாம். அப்படியும் அழுத்தம் கொடுத்தால் வண்ணப் பிரதி (கலர் ஜெராக்ஸ்) எடுத்து அதன் மீது லேமினேஷன் செய்தால் ஓரளவுக்கு ஏமாற்ற முடியும். அதற்கும் வாய்ப்பில்லையென்றால் நிறுவனத்தில் சான்றிதழ்களைக் கொடுத்திருப்பதற்கான அத்தாட்சிக் கடிதத்தை வாங்கிக் கொண்டு பிறகு ஒப்படைக்கலாம். அவர்களிடம் நாம் ஒப்படைக்கும் சான்றிதழ்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அதில் அவர்களின் கையொப்பமும் முத்திரையும் அவசியம். ‘அதெல்லாம் முடியாது’ என்று அவர்கள் சொன்னால் வேலையைத் தவிர்த்துவிடுவதுதான் உத்தமம். இல்லையென்றால் இப்படி சிக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்.

சான்றிதழ்களை மீட்டுத் தருவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்துக் கொடுத்த தமிழக அரசின் அதிகாரிக்கு மனப்பூர்வமான நன்றி. வேறு வழி எதுவும் தெரியாத அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு மிகப்பெரிய உபாயத்தைச் செய்திருக்கிறார் அவர். அந்தப் பெண் நேற்று அழைத்துப் பேசினார்.

இரண்டாவது செய்தி-

கிருஷ்ணா என்கிற குழந்தையின் பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவிக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது எனச் சொல்லியிருந்தேன். ஒவ்வொரு மாதமுக் கொடுக்க வேண்டிய தொகையான தலா இரண்டாயிரம் ரூபாயைத் தானே கொடுத்துவிடுவதாகவும்- அதுவும் மூன்று வருடத்திற்கான தொகையையும் இப்பொழுதே அனுப்பி வைத்துவிடட்டுமா என்று கேட்டு ஒரு அன்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். எழுபத்து இரண்டாயிரம் ரூபாய். ‘உங்கள் இஷ்டப்படி அனுப்புங்கள்’ என்று பதில் அனுப்பியிருக்கிறேன்.

அவரும் பெயரை வெளியிடக் கூடாது என்று சொல்லிவிட்டார். நல்லவர்களில் பெரும்பாலானவர்கள் அனானிமஸாகவே இருக்க விரும்புகிறார்கள் என்று நினைத்தபடியே தூங்கினால் நள்ளிரவு தாண்டிய பிறகு வயிற்று வலி. 

டயட் என்ற பெயரில் நாக்கு செத்துக் கிடக்கிறது. இப்படியே விட்டால் எடுத்து அடக்கம் செய்துவிடலாம் போலிருக்கிறது என்பதால் நேற்று வீட்டுக்கு போகிற வழியில் வண்டியை நிறுத்தி சில பல சிக்கன் துண்டுகளை உள்ளே தள்ளிவிட்டேன். இரவு மூன்று மணிக்கு வயிறு வலித்தது. எழுந்து அமர்ந்து புத்தகம் ஒன்றைப் புரட்டிவிட்டு மின்னஞ்சலைத் திறந்த போதுதான் இன்னொரு நண்பரிடமிருந்தும் அதே மாதிரியான மின்னஞ்சல்- அவரது மனைவியும் நிசப்தம் தளத்தைப் பார்ப்பதாகவும், பணம் கொடுத்தவர்களின் பட்டியலில் இருக்கும் தனது பெயரைக் கண்டுபிடித்துவிட்டார் என்பதால் அடுத்த முறை கண்டிப்பாக பெயரை மறைத்துவிடவும் என்று கோரியிருந்தார். எனக்கு இருக்கும் பிரச்சினைதான் இந்த உலகின் சகலமான ஆண்களுக்கும் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் எவ்வளவு ஆனந்தம் தெரியுமா? ஆனந்தத்தில் மொத்த வயிற்று வலியும் போய்விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் நகைச்சுவைக்காக எழுதினாலும் பெயரை மறைத்துக் கொண்டு உதவும் நல்லவர்களை நினைத்தால் நெகிழ்ச்சியாக இருக்கிறது. எதுவுமே செய்யாமல் விளம்பரம் தேடிக் கொள்பவர்களைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போன நம்மைப் போன்றவர்களுக்கு இதெல்லாம் மிகப்பெரிய ஆறுதல். சத்தமேயில்லாமல் உதவும் மனிதர்களின் மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகவாவது இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது. 

மூன்றாவது செய்தி- 

தினமணியில் வெளியாகும் கட்டுரைகளை பத்து நாட்கள் கழித்துத்தான் நிசப்தத்தில் பதிவேற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று யோசித்தால் எளிமையான காரணமாகத்தான் தெரிகிறது. ‘உன் கட்டுரையை ஒருத்தனும் படிக்கறதில்லை’ என்பதைத்தான் நாசூக்காகச் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது.  அப்படியெல்லாம் விட்டுவிட முடியுமா? எப்படியாவது ஆட்களைக் கொண்டு போய் இறக்கி நம் கெத்துக் காட்டியே தீர வேண்டும். ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை. அவர்களே ஐடியாவும் கொடுத்திருக்கிறார்கள். ஏதாவது உசுப்பேற்றும் விதமான ஒரு பத்தியை மட்டும் நிசப்தத்தில் எழுதி ‘மேலும் வாசிக்க தினமணி இணையத் தளத்துக்குச் செல்லுங்கள்’ என்று இணைப்பைக் கொடுத்துவிடச் சொல்லியிருக்கிறார்கள். செம ஐடியா. உங்களையெல்லாம் ஏமாற்றப் போகிறேன்.

இன்று வெளியாகியிருக்கும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி- 

அலுவலக நண்பர் ஒருவர் இருக்கிறார். மாலை ஏழு மணிக்கு மேல் கோடி ரூபாய் கொடுத்தாலும் அலுவலகத்தில் இருக்கமாட்டேன் என்று காலையில் வந்தவுடனே சொல்லிவிடுவார். அவருடன் பழகிய ஆரம்ப நாட்களில் உண்மையாகத்தான் சொல்கிறார் என நினைத்துக்கொள்வேன். ஆனால், ஆறரை மணிவரைக்கும் நகர்வதற்கான எந்த அசைவும் இல்லாமல் கணினியை வெறித்துக்கொண்டிருப்பார். ‘கிளம்பலையா?’ என்று யாராவது கேட்டுவிடக்கூடாது. கேட்டால் அவ்வளவுதான். பதறத் தொடங்கிவிடுவார். வேலையும் முடிந்திருக்காது. கிளம்ப வேண்டும் என்கிற ஆசையும் வடிந்திருக்காது. பினாத்திக்கொண்டே இருப்பார். அவருக்கான பிரச்னை மிக எளிமையானது. ஒவ்வொரு நாளும் அவரது மனைவி ‘இன்று சீக்கிரம் வந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டு அனுப்பிவைப்பாராம். இவரும் மண்டையை ஆட்டிவிட்டு வந்துவிடுகிறார். ஆனால், வேலை இழுத்துப் பிடித்துவிடுகிறது. அலுவலகத்தில் வந்து வீராப்பாக சவால் விடாமலாவது இருக்கலாம். ஒவ்வொருவரிடம் சொல்லி வகையாக மாட்டிக்கொள்கிறார்.

மேலும் வாசிக்க தினமணி தளத்துக்குச் செல்லுங்கள்.

அப்பாடா!