Apr 11, 2015

குடிகார நாய்கள்

இன்று ஒரு வேலையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்திற்கு வர வேண்டியிருந்தது. ஒரு குழந்தைக்கு தாலஸீமியா நோய். இந்த நோய் இருப்பவர்களுக்கு ரத்தச் சுரப்பு இருக்காது. எலும்பு மஜ்ஜையை மாற்றியாக வேண்டும். அதுவும் இளம்பிராயத்திலேயே மாற்றிவிட வேண்டும். எப்படியும் முப்பது லட்ச ரூபாய் தேவைப்படுகிற காஸ்ட்லி அறுவை சிகிச்சை இது. குழந்தையின் அப்பா மார்கெட்டில் சுமைத் தொழிலாளியாக இருக்கிறார். இதுவரை பலமுறை அழைத்துப் பேசிவிட்டார். முகவரியை வாங்கிக் கொண்டு ஆவணங்களை அனுப்பி வைத்திருந்தார். எவ்வளவு தொகை தர முடியும் என்கிற எந்த உத்தரவாதத்தையும் அவருக்குத் தரவில்லை. அது குறித்து இன்னும் சில விவரங்கள் தேவைப்படுறது. அதற்காகக் கிளம்பி வந்திருக்கிறேன்.

ஓசூர் பேருந்து நிலையத்தில் சேலம் பேருந்தில் ஏறினேன். அரசுப் பேருந்துதான். மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. பேருந்தில் ஆட்கள் அதிகமாக இல்லை. ஓட்டுநர் வந்து விளக்குளை எரியவிட்ட அடுத்த சில நிமிடங்களில் ஒரு குழு ஏறியது. ஏழு பேர்கள். சிலர் இரவு ஃபேண்ட் அணிந்திருந்தார்கள். சிலர் அரைக்கால் ட்ரவுசர். ஒருவர் வேஷ்டி. நண்பர்கள் குழாம் போலிருந்தது. குழாமின் சிறப்பம்சம்- அத்தனை பேரும் குடித்திருந்தார்கள். மற்றவர்கள் யாரும் வாயைத் திறக்க முடியவில்லை. அவ்வளவு அராஜகம். ஆளாளுக்கு மூன்று பேர் அமரும் இருக்கைகளில் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டார்கள். வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் சேரத் தொடங்கியது. பலரும் கீழே இறங்கிவிட்டார்கள். பதறியபடி பேருந்துக்குள் வந்து பார்த்த நடத்துநர் முன் இருக்கையொன்றில் படுத்திருந்தவனிடம் சற்று உரக்கக் கத்தினார். அவ்வளவுதான். எழுந்து அமர்ந்து கொண்டார்கள். 

பேருந்து ஓசூர் பேருந்து நிலையத்தைத் தாண்டிய பிறகு நடத்துநர் ஒவ்வொருவருக்கும் பயணச் சீட்டு கொடுத்துக் கொண்டு வந்தார். அவன் அருகில் வரும் வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவனிடம் டிக்கெட் கேட்ட அடுத்த விநாடி எகிறத் தொடங்கிவிட்டான். ‘ஆச்சா போச்சா...நான் யார் தெரியுமா? இப்பவே அமைச்சருக்கு ஃபோன் பண்ணட்டுமா’ என்று உதார் நீண்டு கொண்டே போனது. அவனது நண்பர்களும் எழுந்து பிரச்சினை நடந்த இடத்திற்கு அருகில் சென்ற போது நடத்துநர் பம்மத் தொடங்கிவிட்டார். மற்ற பயணிகளும்தான். பயம் இருக்கத்தானே செய்யும்? ஒருத்தர் இரண்டு பேர் என்றால் எதையாவது சொல்லலாம். ஏழு பேர்களும் நம் பக்கம் திரும்பினால் என்ன செய்வது? அதுவும் இரவு நேரம். நடத்துநர் அந்த இடத்தைவிட்டு நகர முயன்றார். தங்களின் போதையின் கெத்தைக் காட்டுவதற்காக அவரை நகரவே விடவில்லை. ஒரு கட்டத்திற்கு மேலாக நடத்துநரை போய்யா வாய்யா என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் போடா வாடா என்று பேசத் தொடங்கினார்கள். ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டாரே தவிர தனது இருக்கையைவிட்டு நகரவில்லை. நடத்துநர் சற்று வயதானவர். நாற்பத்தைந்தைத் தாண்டியிருப்பார். மீசை நரைத்திருந்தது. நீலநிறச் சட்டை அணிந்திருந்தார். குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களாவது பணியில் இருந்தால்தான் நீல நிறச் சட்டை. தனது நீண்ட அனுபவத்தில் பார்த்த அத்தனை சூட்சமங்களையும் பயன்படுத்தி அவர்களை குளிர்விக்க முயன்று கொண்டிருந்தார். எதுவும் வெற்றியடைவதாகத் தெரியவில்லை.

‘எங்க அண்ணன் மாவட்டச் செயலாளர். இப்பவே உன்னை சஸ்பெண்ட் செய்ய வைக்கிறேன்’ என்று பேசிக் கொண்டிருந்தபோது பேருந்தில் இருந்த ஒரு பெரியவர் அமர்ந்தபடியே ‘அட விடுங்கப்பா..அவர்தான் சும்மா இருக்காரே’ என்று கேட்டார். அது நடத்துநருக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். ‘ஏன் சத்தம் போடுறீங்க...மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும்ல’ என்று கேட்டுத் தொலைந்துவிட்டார். அரைக்கால் ட்ரவுசர் அணிந்திருந்தவன் அறை வீசிவிட்டான். கண்ணாடி தெறித்து விழுந்தது. பேருந்தில் இருந்தவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். நடத்துநர் சுதாரிப்பதற்கு ஒன்றிரண்டு நிமிடங்கள் பிடித்தன. கீழே விழுந்த கண்ணாடியை ஒருவர் தேடி எடுத்துக் கொடுத்தார். ஒரு பக்கக் கண்ணாடி உடைந்திருந்தது. தெறித்த வேகத்தில் இருக்கையின் கைப்பிடியில் அடித்திருக்கக் கூடும்.

ஓட்டுநரை வண்டியை எடுக்கச் சொன்னார். வண்டி கிளம்பியது. அப்பொழுதும் அவர்கள் ஓய்ந்தபாடில்லை. நொய் நொய் என்று பேசிக் கொண்டேயிருந்தார்கள். வழக்கமான பாதையை விட்டு வண்டி விலகிப் பயணித்தது. எத்தனை பேர்கள் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. ஓட்டுநர் சாமர்த்தியசாலி. அடுத்த சில நிமிடங்களில் பேருந்து காவல் நிலையத்தின் எல்லைக்குள் நுழைந்துவிட்டது. நுழைந்த வேகத்தை கவனித்திருக்க வேண்டும். புயல் வேகம். அவர்களுக்கு நிலைமை பிடிபடுவதற்குள் வண்டியை நிலை சேர்த்திருந்தார்.   ஓட்டுநர் எழுந்து வந்து ‘இறங்குங்க பேசிக்கலாம்’ என்றார். அப்பொழுதுதான் அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும். ‘போலீஸ் ஸ்டேஷன்னா பயந்துடுவோமா?’ என்றான். ஓட்டுநருக்கு அவ்வளவு கோபம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ட்ரவுசர் அணிந்திருந்தவனின் பின்புறமாக எட்டி உதைத்தார். மற்ற ஆறு பேரும் அதிர்ச்சியாகிவிட்டார்கள். பேருந்தில் சிலர் கையைத் தட்டினார்கள். ‘அமைதியா இருந்தா ஏறி மிதிப்பீங்களா? குடிகார நாய்களா...’ என்றார். இப்பொழுது அவர்களில் ஒருவன் முரட்டுத்தனத்தைக் காட்டுவதற்குள் இரண்டு காவலர்கள் பேருந்துக்குள் ஏறிவிட்டார்கள்.

ஏழு பேரையும் கீழே இறக்கி நிலையத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். நடத்துநர் பயணிகளிடம் வந்து ‘கால் மணி நேரம் ஆகும். பொறுத்துக்குங்க’ என்றார். காவல் நிலையத்திற்குள் நான்கைந்து பயணிகளை வரச் சொன்னார்கள். சாட்சி கையொப்பமிடச் சொன்னார்கள். ஐந்து பேர் கையொப்பமிட்டோம். அவர்களில் ஒருவன் யாருக்கோ ஃபோன் செய்வதாகச் சொன்னான். காவலர்கள் அனுமதிக்கவில்லை. ‘இருங்க செஞ்சுக்கலாம்’ என்றார்கள். என்னவோ சொல்ல முயன்ற போது ஒரு காவலர் கடுமையைக் காட்டினார். அமைதியடைந்துவிட்டார்கள்.

நாங்கள் கிளம்பிய பிறகு அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தண்டிக்கிறார்களோ இல்லையோ- ஒருவிதத்தில் சந்தோஷமாக இருந்தது. ஆம்னி பேருந்துகளாக இருந்தாலும் சரி, அரசுப் பேருந்துகளாக இருந்தாலும் சரி எப்படியும் ஒன்றிரண்டு பேராவது போதையோடுதான் வண்டிக்குள் ஏறுகிறார்கள். பெரும்பாலும் அவர்களை யாருமே எதுவுமே கேட்பதில்லை. இதில் என்ன சந்தோஷம் என்று தெரியவில்லை. பக்கத்தில் உட்கார முடியாது. சாய்ந்து கொண்டே வருவார்கள். எழுப்பிவிட்டால் சொருகிய கண்களோடு பார்ப்பார்கள். மீறிப் பேசினால் சண்டைக்கு வருவார்கள். எப்படியோ தொலைந்து போகட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

இதைப் பேசிக் கொண்டிருப்பதில் என்ன பலன் இருக்கப் போகிறது? தனிமனிதன் சீரழிந்து போவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் சமூகமே உருவாக்கி வைத்திருக்கும் போது குடித்துவிட்டு வருபவனை வசைபாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது? பேருந்து நிலையங்களுக்கு அருகிலேயே சாராயக் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். குடித்துவிட்டு ஏறுகிறார்கள். குடிப்பதும், தான் குடித்திருக்கிறேன் என்பதைப் பெருமையாகக் காட்டிக் கொள்வதும் சாதாரண விஷயம் ஆகிவிட்டது. அந்தப் பெருமையின் காரணமாகத்தானே ‘நான் இவனாக்கும் என் மாமன் அவனாக்கும்’ என்று பீற்றிக் கொள்கிறார்கள். ஒழுங்குமுறையில்லாமல் குடிக்கிறார்கள். ஒழுக்கம் என்பது வெறும் தனிமனிதனை மட்டும் சார்ந்ததில்லை. அவன் வாழும் சூழல், சந்தர்ப்பங்கள், சமூகம் உள்ளிட்டவற்றையும் சார்ந்திருக்கிறது. இவற்றையெல்லாம் ஓரளவாவது காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அரசாங்கமே நாறிக் கொண்டிருக்கும் போது யாரைச் சொல்லி என்ன பயன்?