Apr 10, 2015

ஹேப்பி பர்த்டே

மூன்றாவது வகுப்பு படிக்கும் வரைக்கும் என்னுடைய பிறந்தநாளின் போது தம்பிக்கும் புதுத் துணியெடுத்துவிடுவார்கள். அவனுடைய பிறந்தநாளின் போது எனக்கும் புதுத்துணி கிடைத்துவிடும். அதில் ஒரு செளகரியம் என்னவென்றால் பிறந்தநாளின் போது ஆசிரியர்கள் அடிக்க மாட்டார்கள். அதனால் தம்பியிடமிருந்து கொஞ்சம் சாக்லேட் வாங்கிக் கொண்டு போய் ஆசிரியருக்கு மட்டும் கொடுத்துவிடுவேன். ஈஸ்வரி டீச்சருக்கும் அப்படித்தான் கொடுத்து வைத்திருந்தேன். 

அன்றைய தினம் வீட்டுப்பாடம் எழுதியிருக்கவில்லை. இத்தகைய வீட்டுப்பாடம் எழுதாத டிக்கெட்டுகளை டீச்சர் மர ஸ்கேல் வைத்து அடிப்பார். பிறந்தநாள் என்று சொல்லி வைத்திருப்பதால் தப்பித்துவிடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அய்யம்பாளையம் செந்தில்குமார் போட்டுக் கொடுத்துவிட்டான். ‘டீச்சர் இன்னைக்கு இவனுக்கு ஹேப்பி பர்த்டே இல்லை..’. அருகில் அழைத்து டீச்சர் விசாரணையைத் துவக்கினார்.

இப்படியான சூழலை அதுவரை எதிர்கொண்ட அனுபவம் இல்லாததால் ‘ஏப்ரல் பத்து எனக்கு ஹேப்பி பர்த்டே டீச்சர்...அப்புறம் டிசம்பர் மாசத்துல இன்னொருக்கா பொறந்தேன்’ என்று அப்பொழுதே பொய் சொல்லிப் பழகியிருந்தேன். டீச்சருக்கு சிரிப்பு வந்துவிட்டது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை- அடிக்காமல் விட்டுவிட்டார். 

இது முந்தாநாள் நடந்தது போலத்தான் இருக்கிறது. இன்றோடு முப்பத்து மூன்று வருடங்களை விழுங்கியாகிவிட்டது. ‘பிறந்தநாள் கொண்டாட மாட்டேன். நேற்று போல் இன்றும் ஒரு நாள்’ என்றெல்லாம் படம் ஓட்டப் போவதில்லை. சில வருடங்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டு திரிந்தேன். அதில் ஒரு பந்தா. அப்புறம் திடீரென்று தலையில் இடி இறங்கியது போன்ற ஞானோதயம். ஒரேயொரு முறைதான் பிறக்கிறோம். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது சாதாரண நாளாக இருக்கலாம். என்ன இருந்தாலும் நமக்கு ஸ்பெஷல்தானே? அதனால் கொண்டாடிவிட வேண்டியதுதான்.

சங்கல்பங்கள் இல்லாத பிறந்தநாளா? நேற்றிரவு நிறைய எடுத்திருக்கிறேன்.

நேற்று ஒன்பது மணிக்கு மேலாக Baise Moi என்றொரு ப்ரெஞ்ச் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மிகச் சிறந்தபடம் என்று யாரோ எழுதியிருந்தார்கள். படத்தின் பெயரை வைத்தே பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். பெயருக்கு என்ன அர்த்தம் என்று கூகிளைக் கேட்டுக் கொள்ளுங்கள். நல்ல கதைதான். இரண்டு பெண்கள். ஒருத்தி நீலப்பட நடிகை. இன்னொருத்தி நீலப்பட பிரியை. நடிகை தன்னிடம் பாசமாக இருக்கும் ஒரேயொரு மனிதனைக் கொன்றுவிட்டு அவனிடமிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வருகிறாள். இன்னொருத்தி தன்னுடைய அறைத் தோழியைக் கொன்றுவிட்டு வெளியேறுகிறாள். இரண்டு பேரும் சந்தித்துக் கொள்கிறார்கள். எதிர்ப்படுபவர்களைக் கொன்று பணத்தைப் பறிக்கிறார்கள். கார் திருடுகிறார்கள். துப்பாக்கி விற்பவனைக் கொன்று துப்பாக்கிகளைக் கைப்பற்றுகிறார்கள். செக்ஸ் க்ளப்பில் கண்டபடி சுட்டுக் கொல்கிறார்கள். பிடித்த ஆணாக இருந்தால் கசமுசா செய்கிறார்கள். இல்லையென்றால் கொன்று வீசுகிறார்கள். படம் முழுவதும் காமமும் வன்முறையும்தான். அதை அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார்கள். unsimulated sex- நடிகர்களை உறவு கொள்ளச் சொல்லி நேரடியாக படம் பிடிப்பது.  படம் நெடுக கசமுசாவாக நிறைந்து கிடக்கிறது. பதினெட்டு வயதுக்கு மேல் ஆகியிருப்பின் ‘பார்த்துவிடலாம்’ என்ற ஆசை இருந்தால் மட்டும் பார்க்கவும். பார்த்துவிட்டு ‘இவன் சொல்லிப் பார்த்தோமே’ என்று சபிக்கக் கூடாது என்பதுதான் நான் விதிக்கும் ஒரே முக்கியமான நிபந்தனை.

பிறந்தநாளன்று அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற படமா இது? 

படத்தை அறிமுகப்படுத்துவதற்காக எழுதவில்லை. ஆனால் முதல் சங்கல்பம் இது குறித்துதான் எடுத்து வைத்திருக்கிறேன். ‘இனிமேல் கசமுசா படங்களைப் பார்க்கவே கூடாது’. இந்தப் படம்தான் கட்டக் கடைசி. பதினொன்றே முக்காலுக்குள் முடித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிறந்தநாளின் போது புது மனிதன் ஆகிவிட வேண்டும் என்று அவ்வளவு வெறி- கண்ட வெறி இல்லை; நல்ல வெறிதான். படம் பதினொன்றரைக்கு முடிந்துவிட்டது. போய் தலையோடு மூழ்கி சாமியைக் கும்பிட்டுவிட்டு நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு வந்தேன்.

ஆனால் ஒன்று - இந்த உறுதியை மட்டும் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே வருடம் தவறாமல் எடுத்து வருகிறேன். இருபது வருடங்களாக கடைபிடிக்க முடியாத உறுதியை இந்த வருடமா காப்பாற்றப் போகிறேன்? 

சரி விடுங்கள்.

முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த வருடம் தகுதிக்கு மீறி நிறையக் கிடைத்திருக்கின்றன. பட்டியலைத் தனித்தனியாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதற்காகவே கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடவுள் என்றால் விநாயகனும் முருகனும் ஏசுவும் அல்லாவும் என்றும்தான் அர்த்தம் இல்லை.

இந்த வருடம் அடைய விரும்பும் இலக்கு என்று எதுவும் இல்லையா என்று கேட்டால் துல்லியமான பதிலைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. போகிற போக்கில் போய்க் கொண்டேயிருக்க வேண்டியதுதான். நம் வேலையை ஒழுங்காகச் செய்து கொண்டிருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய அத்தனையும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஓர் ஆழ்மன ஆசையுண்டு. ‘நமக்கென்று எந்த ரகசியமும் இல்லாத ஒரு இடத்தை அடைந்துவிட வேண்டும்’. இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ரகசியம் இல்லையென்று ஜிமெயில் பாஸ்வேர்டைக் கொடுக்க முடியுமா? எல்லோருக்கும் கொடுக்க முடியாதுதான் ஆனால் அதில் மறைத்து வைக்க எதுவும் இல்லை என்று ஒரு நினைப்பு வர வேண்டும். அப்படி எல்லாவற்றிலும் ரகசியம் எதுவும் இல்லை என்ற நிலையை அடைவது ஒரு ஏகாந்தம். அப்படியொரு வெளிப்படையான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு பெரிய வேண்டுகோள் எதுவும் இன்றைக்கு இல்லை.

ஆசிர்வாதங்களினால் மட்டுமே வளர்ந்து கொண்டிருக்கிறேன். சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் இதயபூர்வமான நன்றி.